அன்புள்ள சகோதரி —
எங்கள் அப்பாவுக்கு இரண்டு மனைவியர். மூத்த மனைவி இறந்ததும், அவரின் தங்கையை திருமணம் செய்து கொண்டார். மூத்த மனைவிக்கு, ஒரு மகன். இரண்டாவது மனைவிக்கு, நான்கு மகள்கள். நாங்கள் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள்.
எங்களோடு பாசமாய் இருப்பது போல நடிப்பான், அண்ணன்; ஆனால், எங்களிடமிருந்து தாமரை இலை தண்ணீர் போல ஒதுங்கி நிற்பான்.
அண்ணனுக்கு திருமணமானது. மனைவியுடன் தனிக்குடித்தனம் போய் விட்டான். எங்கள் நால்வருக்கும் வரிசையாய் திருமணமானது. விசித்திரமான காரணங்களை கூறி, எங்களது திருமணங்களுக்கு, வராமல் இருந்து விட்டான், அண்ணன்.
எங்களுக்கு குழந்தைகள் பிறந்தன. திருமணம் ஆகி, 12 ஆண்டுகள் ஆன பின் தான், அண்ணனுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. இடையில், எங்கள் அப்பா இறந்து போனார்.
எங்கள் குழந்தைகள் வளர்ந்து, படித்து, வேலைக்கும் போயினர். வரன்கள் பார்க்க ஆரம்பித்தோம். அண்ணனிடம் போனோம்.
'அண்ணே... எங்க திருமணத்துக்கு தான், சாக்கு போக்கு சொல்லி, வராம இருந்துட்ட. எங்க பிள்ளைகள் திருமணங்களையாவது முன்நின்று நடத்திக் கொடு. எங்க மேல ஏதாவது தவறு இருந்தா, எங்களை மன்னிச்சிரு...' என்றோம்.
அண்ணனும், அண்ணியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
'ஒரு பிரச்னையும் இல்லை. உங்கள் பிள்ளைகள் திருமணத்தை, மொத ஆளா நின்று நடத்திக் கொடுப்பேன்...' என்றான், அண்ணன்.
திருமண அழைப்பிதழில் அவன் பெயரை பிரதானமாக போட்டோம். இருந்தும், வினோதமான காரணங்களைக் கூறி, எங்கள் பிள்ளைகளின் திருமணங்களுக்கு வராமல் இருந்து விட்டான்.
கடைசி தங்கையின் மகளுக்கு திருமணமான அன்று, உண்மையிலேயே, 'ஹார்ட் அட்டாக்' வந்து, மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகி, மூன்றாவது நாள் இறந்தும் போனான்.
'சொந்த பந்தங்களின் திருமணங்களுக்கு போகாமல் சண்டித்தனம் பண்ணினான். இப்ப, மகன் - மகள் திருமணங்களை பார்க்காமலேயே பரிதாபமாக செத்துட்டான் அண்ணன்...' என, 'உச்' கொட்டினோம்.
அண்ணனின் மரணத்துக்கு பின், அண்ணி மிகவும் நடுங்கி விட்டாள். மகளுக்கு வரன் பார்த்து, திருமண ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தாள்.
எங்களிடம் வந்து, 'உங்க கைய, காலா நினைச்சு மன்னிப்பு கேட்கிறேன். உங்க திருமணத்துக்கு வராததுக்கு, என் மகளை பழி வாங்கிடாதீங்க. திருமணத்தை நீங்க தான் அண்ணனோட ஸ்தானத்துல நின்று நடத்திக் கொடுக்கணும்...' என்றார்.
'கடந்த, 10 ஆண்டுகளில், எங்கள் உறவுகளில் நடந்த, 20க்கும் மேற்பட்ட திருமணங்களில் ஒன்றுக்கு கூட, எங்கள் அண்ணன் போனதில்லை; எங்க திருமணங்களுக்கும், பிள்ளைகள் திருமணங்களுக்கும் வரவில்லை. பழி வாங்க சரியான சந்தர்ப்பம், ஒட்டு மொத்தமா அண்ணன் மகள் திருமணத்தை பகிஷ்கரிப்போம்...' என, எங்கள் அம்மாவுடன் சேர்ந்து முடிவெடுத்தோம். எங்கள் முடிவு சரியானதா கூறுங்கள், சகோதரி.
—இப்படிக்கு,
அன்பு சகோதரி
அன்பு சகோதரிக்கு —
ஒரு நண்பரின் திருமணத்திற்கோ, நண்பரின் குழந்தைகள் திருமணத்திற்கோ போகாவிட்டால், ஏதேனும் நியாயமான காரணங்களை கூறி, அவப்பெயரிலிருந்து தப்பித்து விடலாம்.
உறவினர்களின் திருமணங்களில் கலந்து கொள்வது கட்டாயக் கடமை.
அப்படி நாம், உறவினர் திருமணங்களுக்கு போகாமல் இருந்து விட்டால், நான்கு தலைமுறைக்கு பெரும் குற்றமாக அது சொல்லிக் காட்டப்படும்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அப்பா மீது, உங்கள் அண்ணனுக்கு பெரும் கோபம். திருமணம் செய்து கொண்டதோடு நில்லாமல், நான்கு தங்கைகளை பெற்று, தன் மேல் கூடுதல் பாரத்தை சுமத்தி விட்டார் என்ற எரிச்சலும், உங்கள் அண்ணனுக்கு இருந்திருக்கிறது.
நேரடியாக அப்பாவை பழி வாங்க முடியாமல், உங்களது திருமணம் மற்றும் குழந்தைகள் திருமணத்தை, சாதுர்யமாக தவிர்த்து பழி வாங்கியிருக்கிறார், உங்கள் அண்ணன். கூடுதலாய் உறவுகளின் மேலிருந்த நம்பிக்கை அற்றுப்போய், அவர்களது திருமணத்துக்கும் போகாமல் இருந்திருக்கிறார்.
திருமணங்களுக்கு போகாமல் இருந்தால், கூட்டத்தை தவிர்க்கலாம். மொய் செலவை குறைக்கலாம். தேவையற்ற உறவினர்களின் முகங்களை பார்க்காமல் தவிர்க்கலாம் என, உங்கள் அண்ணன் எண்ணியிருக்க கூடும்.
உங்களது இல்ல திருமணங்களுக்கு அண்ணன் வராது இருந்ததற்கும், மகன் - மகள் திருமணத்திற்கு முன், அவர் இறந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதெல்லாம் மனிதர் செய்யும் கற்பிதங்கள்.
உங்களோடு, உங்கள் அம்மாவும் சேர்ந்து, அண்ணனின் பிள்ளைகளை தண்டிப்பது, விவேகமல்ல. அண்ணனும், அண்ணியும் தவறு செய்ததாகவே வைத்துக் கொள்வோம். அவர்களின் குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்...
நீங்கள், அவர்களின் திருமணங்களுக்கு போகாவிட்டால், அண்ணனின் குழந்தைகள் ஏங்கிப் போவர். பழிவாங்கல் அடுத்த தலைமுறைக்கும் தொடரும்.
அண்ணன் மகள் திருமணத்திற்கு, நான்கு சகோதரிகளும் போய், முழு மனதாய் கலந்து கொள்ளுங்கள். 'உங்கப்பனும், அம்மாவும் எங்க திருமணத்துக்கு வரல, எங்க பிள்ளைகள் திருமணத்துக்கும் வரல. ஆனா, நாங்க உன் திருமணத்துக்கு வந்திருக்கோம் பாரு...' என, சொல்லிக் காட்டாதீர்கள்.
எக்காரணத்தை முன்னிட்டும், உங்கள் அண்ணியிடம், 'எங்கள் திருமணங்களுக்கு எதனால் வராமல் இருந்தீர்கள்...' எனக் கேட்டு, அவரை தர்மசங்கடப்படுத்தாதீர்கள். பதிலாய் பல பொய்களும் வரும், பழைய வன்மம் தலை துாக்கும்.
திருமணமான பின், அண்ணன் மகளையும், அவளது இளம் கணவனையும் உங்கள் நால்வரின் வீடுகளுக்கு கூப்பிட்டு, விருந்து உபசரியுங்கள்.
அண்ணன் மகனுக்கு வரன் பார்க்கும் முயற்சியில் அண்ணி இறங்கும்போது, நீங்கள் உடன் இருந்து உதவுங்கள். உறவில் ஏதேனும் பெண் இருந்தால், அவனுக்கு கட்டி வையுங்கள்.
நிலையற்ற உலகில் குரோதமும், பழிவாங்கலும் இல்லாத வாழ்க்கை வாழப் பழகுவோம்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.