எது நடந்துவிடக் கூடாது என்று பயந்தனரோ, அது நடந்தே விட்டது.
''இப்ப என்ன பண்றது, அத்த... இத எப்படி சரி செய்யிறது, எனக்கு ஒண்ணும் தோண மாட்டேங்குதே,'' என்றாள், சாரதா.
''எப்படியாவது இத சரி பண்ணியே ஆகணும். இல்லன்னா, நம் பொண்ணு வாழ்க்கை தான் வீணாப்போகும்,'' என்றார், மாமியார் நாராயணி.
''இவதான் பிடிவாதம் பிடிக்கறான்னா, உங்க மகன் அதான், என் புருஷனும் இப்ப சேர்ந்து ஆடிக்கிட்டு இருக்கார்,'' என்றாள், சாரதா.
''நீ கவலப்படாத, உம் பொண்ணுக்கு, இந்த கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் சரி வராது. அதிரடிதான் சரி வரும். நீ என்ன பண்ற, நம் வீட்ல இருக்கற எல்லா புகைப்பட ஆல்பத்தையும் எடுத்துகிட்டு வா சீக்கிரம்,'' என்றார்.
மாமியார் கொடுத்த தைரியத்தில், வீட்டில் இருந்த பழைய - புதிய ஆல்பங்களை எல்லாம் தேடி எடுத்து வந்து, அவரின் அருகில் வைத்தாள், சாரதா.
''சாரதா... அவங்க உள்ள வரும்போது, நாம ரெண்டு பேரும் ஆளுக்கொரு ஆல்பத்த பார்த்து, பேசிகிட்டும், முக்கியமா சிரிச்சுக்கிட்டும் இருக்கணும். சரியா? அவகிட்ட எதுவும் பேசக் கூடாது. நல்லா ஞாபகம் வெச்சுக்க, நீ கண்ண கசக்கவே கூடாது. இல்லன்னா, உன் பொண்ணு வாழ்க்கை அவ்ளோதான்,'' என்றார், நாராயணி.
''சரி அத்த,'' என்றாள், சாரதா.
சாரதா - வெங்கடாசலத்தின் ஆசை மகள், அனுஷா.
பல ஆயிரக்கணக்கானோர் வேலை பார்க்கும் பெரிய ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளி, வெங்கடாசலம்.
அழகும், அறிவும் நிரம்பப் பெற்ற பெண், அனுஷா.
கணினி பாடத்தில் பொறியியல் மேற்படிப்பு முடித்து, ஓ.எம்.ஆரில், பெரிய கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். உருகி உருகி காதலித்து, தன்னுடன் பணிபுரியும் ப்ரவீணை திருமணம் செய்து, ஆறு மாதங்களாகிறது.
எல்லாரும் அனுஷாவிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்த்திருக்கையில், ப்ரவீணிடம் சண்டை போட்டு, பிறந்தகம் வந்து விட்டாள், அனுஷா. வந்ததோடு நில்லாமல், தனக்கும், கணவனுக்கும் சரிபட்டு வராது என்று, விவாகரத்துக்கும் விண்ணப்பிக்க பிடிவாதம் பிடிக்கிறாள்.
மகளுக்கு புத்தி சொல்லி, கணவனுடன் சேர்த்து வைக்காமல், மகள் பேச்சைக் கேட்டு, அவளுடன் வக்கீலை சந்திக்கச் சென்றுள்ளார், அப்பா.
அதற்குத்தான் சாரதாவும், வெங்கடாசலத்தின் அம்மா நாராயணியும், காலை முதல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ப்ரவீணுக்கு, தாய் - தந்தை, ஒரு தங்கை. அளவான, அன்பான, கொஞ்சம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அனுவும் - ப்ரவீணும் அன்பாக குடும்பம் நடத்தினர். அவன் பெற்றோர், அனுவை, தன் மகளாகவே பாவித்தனர்.
தங்கை ப்ரீதாவின் பிறந்தநாளுக்கு, திருமணத்துக்கு முன், எப்படி அன்பாக பரிசளிப்பானோ, அதே போல, இந்த ஆண்டும், தங்க நெக்லெஸ் வாங்கிக் கொடுத்தான், ப்ரவீண். அது, அனுவுக்கு பிடிக்கவில்லை.
இத்தனைக்கும், தங்கையிடம் பரிசை கொடுப்பதற்கு முன்பே, அதே போல, அனுவுக்கு ஒரு நெக்லெஸ் வாங்கியதை, தன் கையாலேயே அவளுக்கு அணிவித்தும் விட்டான். ஆனால், அனுவால் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.
'நானும், உன் தங்கையும் ஒன்றா... உனக்கு, நான் மட்டும் தான் முக்கியமாக இருக்க வேண்டும். அவளுக்கு நீ பரிசு வாங்குவது பற்றி ஏன் என்னிடம் கூறவில்லை? எனக்கு வாங்கும் அளவு அவளுக்கும் வாங்க வேண்டுமா? நீ, இனி இப்படி செய்யக் கூடாது. அதனால், நாம் தனிக் குடித்தனம் போகலாம். உன் பெற்றோரை, தங்கையை விட்டு என்னுடன் வா...' என்று, பிடிவாதம் பிடித்தாள்.
'பெற்றோரையும், தங்கையையும் விட்டு வர முடியாது...' என்று கூறி, மறுத்து விட்டான், ப்ரவீண்.
தன்னை, அவன் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணி கோபித்து, பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள். வந்த பின், கணவன், தன்னைக் காண வரவில்லை; சமாதானம் செய்யவில்லை; போன் செய்யவில்லை என்று, குற்றங்களாக அடுக்கி, விவாகரத்து வரை கொண்டு சென்று விட்டாள்.
நாராயணியும், சாரதாவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவள் தன் பிடிவாதத்தை தளர்த்தவில்லை. அவள் பிடிவாதத்தை தளர்த்த, அப்பா வெங்கடாசலமும் இடம் கொடுக்கவில்லை. மகளுக்கு ஆதரவாக, வக்கீலைப் பார்த்து, ப்ரவீணுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு, வீடு திரும்பினர்.
அவர்கள் இருவரும் வீட்டுக்குள் வரும்போது, நாராயணியும், சாரதாவும் ஒன்றாக அமர்ந்து ஆல்பங்களை பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தனர்.
இவர்களின் சிரிப்பு, அனுவுக்கு கடுப்பாக இருந்தாலும், ஒன்றும் பேசாமல் அவர்களருகே வந்து அமர்ந்தாள்.
மனைவியிடம், ''சாப்பாடு ரெடியா... செம பசி,'' என்றார், வெங்கடாசலம்.
அவரை கவனிக்காமல், ஒரு புகைப்படத்தை தன் மாமியாரிடம் காட்டி, ''அத்த, இதுல பாருங்க... நம் அனு, எவ்ளோ அழகா இருக்கால்ல,'' என்றாள், சாரதா.
''அவ அழகுக்கு என்ன குறை... என் பேத்தி, இந்த வீட்டோட இளவரசியாக்கும்,'' என்றார்.
மனைவியின் பாராமுகத்தில் கடுப்பான வெங்கடாசலம், தன் மகளின் பெருமையை பேசியதை கண்டு, மனம் சமாதானமாகி, அவளருகில் வந்து அமர்ந்தார்.
''பாரு, எம் பேத்தி ரெண்டாங்க்ளாஸ் படிக்கறச்சே வாங்கின பரிசுகள். படிப்பில், விளையாட்டில், பாட்டு, நடனம் எல்லாத்துலயும் அவதான் முதல். எல்லா பரிசுகளையும் கைல பிடிக்க முடியாம பிடிச்சுகிட்டு எவ்ளோ அழகா போட்டோவுக்கு, 'போஸ்' குடுக்கறா, அனுக்குட்டி... நீ அப்பலேர்ந்தே சமத்துடீ,'' என்று கூறியபடி, தன்னருகில் இருந்த அனுவை அணைத்து, உச்சி முகர்ந்தார், நாராயணி.
ஆரம்பத்தில் கடுப்பாக இருந்த அனுஷாவும், வெங்கடாசலமும், இப்போது ஆர்வமாகி, ஆளுக்கொரு ஆல்பத்தை எடுத்து பார்த்தனர்.
ஒவ்வொன்றிலும் இருக்கும் அனுஷாவின் படத்தைப் பற்றியும், அவள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனை தடங்கல்கள் வந்தாலும் எவ்வளவு போராடி வெற்றிக் கனியை பறித்திருக்கிறாள் என்று பேசி, அவளை புகழ்ந்து தள்ளினர். அடுத்து, அனுஷாவின் நிச்சயதார்த்த ஆல்பமும், திருமண ஆல்பமும் அவர்கள் கையில் குடியேறியது.
''எம் பேத்தி க்ரேட் தான். பாரு, தன்னோட, 'லவ்'ல கூட எவ்ளோ போராடி ஜெயிச்சிருக்கா,'' என்றார், நாராயணி.
''ஆமா, அத்த... 'லவ்'ல ஜெயிச்சு கல்யாணமும் பண்ணிகிட்டா. சூப்பர்.''
''ஆனா, அனு... 'லவ்'ல போராடி ஜெயிச்ச நீ, ஏன், 'லைப்'ல போராடல? உனக்கு, உங்க வீட்ல போராட வேண்டிய அவசியமே இல்லை. ஏன்னா, அவங்க எல்லாரும், உன் மேல எவ்ளோ அன்பு வெச்சிருக்காங்க... உனக்கு நெஜமாவே அது புரியலையா?'' என்று கேட்டாள், நாராயணி.
அமைதியானாள், அனுஷா.
''பேஸ்புக்ல, 500க்கும் மேற்பட்ட, 'ப்ரண்ட்ஸ்' வெச்சிருக்கற உன்னால, உன் நாத்தனார் கூட, 'ப்ரண்டா' நடந்துக்க முடியலையா, அனு. அதுவும் அவ சின்ன பொண்ணு. இப்பதான் காலேஜ் படிக்கறா. அவ கூட நீ சண்டை போடறது உனக்கே சில்லியா தெரியல?'' என்றாள், சாரதா.
''பாவம், என் பேத்தி. அவளும் என்ன மாதிரி கிழவியான பிறகு, தன் பேரன் - பேத்தியோட ஆல்பத்த பார்த்து, இன்னிக்கு நா எப்படி சந்தோஷப்படறேனோ அது மாதிரி அவளால சந்தோஷப்படவே முடியாது. அவ வாழ்க்கையில இதுக்கெல்லாம் குடுப்பினை இல்ல போல.
''ஹூம்... என்ன செய்ய, நாந்தான் எஸ்.எஸ்.எல்.சி., பெயில். ஆனா, என் பேத்தி, பெரிய படிப்பு படிச்சவ. அதனால, என்னை விட ரொம்ப நல்லா வாழ்ந்து, தன் பேரன் பேத்திகளுக்கெல்லாம் பாடம் சொல்லிக் குடுத்து, ரொம்ப அறிவாளியான ஜெனரேஷன உருவாக்குவான்னு நெனச்சேன்...
''பாவம்டீ அனு, நீ. உனக்கு இன்னும் குழந்தையே வரல... அதுக்குள்ள உன் பேரன் - பேத்தி வரைக்கும் கனவு கண்டுட்டேன்... சே, நா ஒரு மக்கு. நீ போம்மா, நாளைக்கு உனக்கு, 'ஸ்டேட்டஸ் கால்' இருக்குல்ல... 'மேரீட்டல் ஸ்டேட்டஸ்' பத்தியெல்லாம் யோசிக்க உனக்கு ஏது நேரம்? நீ போய், 'ரெஸ்ட்' எடும்மா,'' என்று, அனுவிடம் நீளமாக பேசினார், நாராயணி.
அத்தனையையும் கேட்ட அனுஷாவுக்கு, பாட்டி, 'பளார் பளார்' என்று, தன்னை அறைந்த மாதிரி இருந்தது. தான் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்து கொண்டுள்ளோம் என்று புரியத் துவங்கியது. ஆனாலும், இன்னும் அவள் தன், 'ஈகோ'வை விடவில்லை. குழம்பிய மனதுடன் தன் அறைக்குச் சென்றாள்.
அவள் அகன்றதும், ''என்னம்மா... ஒரேடியா அனுவ புகழற மாதிரி புகழ்ந்து, கடைசில இப்படி கீழ போட்டு மிதிக்கறீங்க?'' என்றார், வெங்கடாசலம்.
''யாருடா மிதிச்சா... நானா, இல்ல நீயா?''
''நானா... அவ இந்த வீட்டு இளவரசிம்மா.''
''ஏண்டா, நா தெரியாமதான் கேக்கறேன்... அனு, இந்த வீட்டுக்கு இளவரசின்னா, அந்த வீட்டுக்கு குயின். அது ஏன் உன் மரமண்டைக்கு புரியமாட்டேங்குது?''
''அந்த வீட்டு குயின்னு சொல்றீங்க... ஆனா, அவள யாரும் மதிக்கலயே.''
''ஏன் மதிக்கல... மதிக்காம தான் மாப்பிள்ளை அவளுக்கு நெக்லெஸ் வாங்கி தந்தாரா?''
''அவ லட்ச லட்சமா சம்பாதிக்கிறா... அவ காச எடுத்து அவளுக்கே வாங்கி குடுத்தா அவளுக்கு கோபம் வராதா?''
''அவ காசுல வாங்கினதுன்னு உனக்குத் தெரியுமா... உம் பொண்ணு சொன்னாளா, அவ காசில வாங்கினதுன்னு?''
''பின்ன வேற எப்படி வாங்கினானாம் அந்தப்பய?''
''டேய், வேணாம்... வார்த்தையை விடாத. அவர், நம் வீட்டு மாப்பிள்ளை. மரியாதை,'' என்றார்.
''சரிம்மா... அவர், அனு காசில வாங்கலேன்னே வெச்சுப்போம்... ஆனா, தன் தங்கைக்கு வாங்கப் போறேன்னு ஏன் அனுகிட்ட சொல்லல?''
''எதுக்கு சொல்லணும்ங்கறேன்... அவர் தங்கைக்கு, தன் சம்பாத்தியத்துல வாங்க, யாரோட, 'பர்மிஷன்' வேணும்? அப்படிதான், உன் தங்கைக்கு, நீ வாங்கும்போது உம் பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு வாங்கறியா? ஆனா, அவர் தன் தங்கைக்கு வாங்கும்போது, நம் அனுவுக்கும் வாங்கியிருக்கார்.''
''ஏம்மா, நம் அனுவும், அவர் தங்கையும் ஒண்ணா?''
''ஆமா... இந்த வீட்டுக்கு அனு இளவரசின்னா, அந்த வீட்டுக்கு அந்த பொண்ணு, ப்ரீதா தானே இளவரசி. அப்ப ரெண்டு பேரும் சமம்தானே. நம் அனுவ, உன்னை விட அதிகமா நேசிக்கிறார்; மதிப்பா வெச்சிருக்கார். புரிஞ்சுக்கோ,'' என்றார், நாராயணி.
''இத, ஒத்துக்க முடியாது.''
''சரி, சாரதாவுக்கு முதல் முதலா, உன் சம்பாத்தியத்துல எப்ப நகை வாங்கிப் போட்ட... என் புருஷனும், நானும் என் மருமகளுக்கு போட்டத கணக்கில் சேர்க்காத,'' என்றார், நாராயணி.
''ஞாபகம் இல்லேம்மா.''
''நா சொல்றேண்டா... அனுவோட மூணாவது பிறந்த நாளுக்கு செயின் வாங்கும்போது, முதல் முதலா, சாரதாவுக்கு சின்னதா, மெல்லிசா ரெண்டு பவுன்ல ஒரு செயின் வாங்கிப் போட்ட... உனக்கு கல்யாணமாகி, குழந்தை பிறந்து, அதுக்கு மூணு வயசாகும்போது... அதாவது, கல்யாணமாகி கிட்ட தட்ட நாலு வருஷம் கழிச்சு...
''இத்தனைக்கும் நீ பரம்பரை பணக்காரன். அப்படியிருந்தும் நீ, அவளுக்கு நாலு வருஷம் கழிச்சுதான் நகை பண்ணி போட்டிருக்க. ஆனா, உன் மாப்பிள்ளை, கல்யாணம் பண்ணி ஆறு மாசத்துக்குள்ள, தன் சொந்த சம்பாத்தியத்துல, உன் மகளுக்கு ஆறு பவுன்ல நெக்லெஸ் பண்ணி போட்டிருக்கார்.
''அதுவும், தன் தங்கைக்கும், மனைவிக்கும் நடுவுல எந்த பாரபட்சமும் பார்க்காம, இத பண்ணியிருக்கார். ஒரேயடியா அவர் இவ்ளோ செலவு செய்யிற அளவுக்கு பரம்பரை பணக்காரரும் கிடையாது. அப்ப அவர், உன் மகளை மதிப்பா பார்த்துக்கறாரா, அன்பா நடத்தறாரா இல்லையா... சொல்லுடா?''
திணறினார், வெங்கடாசலம்.
''பெத்த பொண்ணு, புருஷனோட சண்டை போட்டுட்டு வந்தா, நல்ல புத்தி சொல்லி பொண்ணை மாப்பிள்ளையோட சேர்த்து வெக்கறத விட்டுட்டு... லுாசு மாதிரி, விவாகரத்துக்கு விண்ணப்பிச்சுட்டு வந்திருக்கியே, நீயெல்லாம் என்ன அப்பன்? படிச்சவன்தானே நீ...
''பொண்ணு வாழ்க்கையில மண் அள்ளி போட்டுட்டு வந்து நிக்கற... இனிமே, எப்படி அவ நிம்மதியா இருப்பா. சரி... சொந்த புத்திதான் இல்ல. எங்க சொல் பேச்சாவது கேட்டியா?''
மனதில் உள்ள ஆற்றாமை அனைத்தையும், தன் மகன் மீது ஆத்திரமாக கொட்டித் தீர்த்தார், நாராயணி.
நிதர்சனத்தை உணர்ந்து, பேச்சிழந்து நின்றார், வெங்கடாசலம்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அனு, அழுகையுடன் ஓடி வந்து, பாட்டியை கட்டி அணைத்து கதறினாள்.
''சாரி நாநீ... நா தப்பு பண்ணிட்டேன்; இப்ப என்ன பண்றது, நா ப்ரவீணோட சேர்ந்து வாழறேன்; அவர்கிட்ட மன்னிப்பு கேக்கறேன்... என்ன மன்னிக்கலன்னா, அவர் கால்ல விழுந்தாவது என்னை ஏத்துக்க சொல்றேன். என்னை மன்னிச்சுடு நாநீ,'' என்றாள்.
தன் பேத்தியின் கண்களை துடைத்து, ''கிளம்பு, இப்பவே உன் புருஷன் வீட்டுக்கு. போய் முகத்தை கழுவி, பொட்டு வெச்சுகிட்டு வா,'' என்று கூறி, பேத்தியை அனுப்பி வைத்தார்.
மகனிடம், ''இங்க பாருடா, அனுவ கூட்டிட்டு போய், அவ புருஷன் வீட்ல விட்டுட்டு, மாப்பிள்ளை, சம்பந்திங்க, அந்தப் பொண்ணு ப்ரீதாகிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டு தான் வரணும்... புரிஞ்சுதா? சாரதா... போகும்போது மஞ்சள், குங்குமம், வெத்தல பாக்கு, தேங்கா, பூ, பழம், கொஞ்சம் ஸ்வீட்டு எல்லாம் வாங்கிட்டு போ,'' என்றார்.
ஐந்து நிமிடங்களில் தயாராகி ஓடி வந்தாள், அனுஷா. மூவரும் வீட்டிற்கு வெளியே வரவும், ப்ரவீண், வீட்டு வாசலில் வந்து இறங்கவும், சரியாக இருந்தது.
வாசலில், ப்ரவீணைப் பார்த்த அனுஷா, ஓடிப் போய் அவனை அணைத்து, ''ப்ரவீண், சாரிடா... நா தப்பு பண்ணி, உன்னை ரொம்ப கோபப்படுத்திட்டேன்... உன்னோட, 'ட்ரூ லவ்'வ புரிஞ்சுக்காம தப்பு தப்பா பேசிட்டேன்... அத்தை, மாமா, ப்ரீதாவோட அன்ப புரிஞ்சுக்காம போய்டேண்டா... சாரிடா,'' என்று கதறினாள்.
வக்கீலிடமிருந்து நேரடியாகவே விவாகரத்து நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவன், கோபத்துடன் அதில் கையொப்பமிட்டு, அவள் முகத்தில் விட்டெறியவே அங்கு வந்திருந்தான். ஆனால், தன்னைக் கண்டதும் ஓடி வந்து மன்னிப்பு கேட்கும் அனுஷாவை அவன் எதிர்பார்க்கவில்லை.
''ஹேய் அனு... நீ அழாத, என்ன நீ புரிஞ்சிகிட்டாலே போதும். எனக்கு, உன் மேல கோபம் இல்லம்மா... நமக்குள்ள என்ன சாரி வேண்டியிருக்கு... விடுடா,'' என்று கூறி, அவளை அணைத்து, ஆறுதல்படுத்தினான்.
தன் மருமகனிடம் மன்னிப்பு கேட்டார், வெங்கடாசலம்.
தன் கையிலிருந்த விவாகரத்து நோட்டீஸை கிழித்துப் போட்டான், ப்ரவீண்.
அதைக் கண்ட நாராயணியும், சாரதாவும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அன்னபூரணி தண்டபாணி