உயிரோடு உறவாடு... (19)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2021
00:00

முன்கதை சுருக்கம்: போனில் அழைத்த தமிழ்ச்செல்வியிடம் பேசி முடித்து, ஹோட்டலுக்கு சென்றான், ரிஷி. அங்கு வந்த, 'லிவிங் டுகதர்' பெண், மைத்ரேயி, 'நான் உன்னுடன் வந்து தங்கி கொள்ளவா...' என, கேட்க, திகைப்பில் ஆழ்ந்தான்.

திகைத்த ரிஷி, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், மைத்ரேயியையே பார்த்தபடி இருந்தான். இடையில் அவள், சாம்பார் வடை தீர்ந்து போய், ரிஷிக்கு, ஆனியன் ரவா வந்து சேர்ந்தது. நல்ல பசி வேறு. ஆனால், ஒரு எதிர்பாராத கேள்வியை மைத்ரேயி கேட்டதில், ரிஷியிடம் விதிர்ப்பு. பசி போய் விட்டிருந்தது.
''ஏய் என்னாச்சு... நான் என்ன படுக்கைக்கா கூப்பிட்டேன். எதுக்கு இப்படி ஒரு, ஷாக்?'' என்று, அவனை திரும்பவும் துாண்டினாள், மைத்ரேயி.
இது, முன்பை விட கூடுதல் அதிர்ச்சியை தந்தது, ரஷிக்கு.
''மிஸ் மைத்ரேயி... வாட் ஈஸ் திஸ்... எப்படி இப்படியெல்லாம் உங்களால பேச முடியுது,'' என்று, தோசையை பிய்த்துக் கொண்டே கேட்டான்.
''எப்படி?'' என, அவனைப் பார்த்து கேட்டவள், அதே வேகத்தில், சர்வரை அழைத்து, ''எனக்கும் ஒரு ஆனியன் ரவா,'' என்றாள்.
சர்வர் விலகவும், ''கமான் எப்படி?'' என்று, திரும்பத் துாண்டினாள்.
''எப்படின்னா... என்னத்த சொல்ல, என் கூட பெருசா உங்களுக்கு எந்த பழக்கமும் கிடையாது. நான் யார், எப்படிப்பட்டவன்னு எதுவுமே தெரியாது. அப்படியிருக்க, எப்படி என் கூட வந்து, 'ரூம் மேட்'டா இருக்கணும்ன்னு கேட்கத் தோணிச்சு?'' என்றான்.
''எனக்கு, இப்ப அப்படி ஒரு நெருக்கடி... அந்த ரமேஷ்கிட்ட நான், சவால் விட்டிருக்கேன். உன்னை விட, சிறப்பான ஒரு இளைஞனை, 'கேச்' பண்ணி, உன் முன்னாலயே அவன் பைக்ல உக்கார்ந்து போய் காட்டறேன்னு... சோ, அதனால தான் கேட்டேன். அப்புறம், 'மீடியா'ல வேலை பார்க்கறதால, உங்க மேல ஒரு நம்பிக்கை. தட்ஸ் ஆல்,'' என்றாள்.
''எதுக்கு இப்படி ஒரு அசட்டுத்தனமான, சவால் எல்லாம்... ரமேஷ் என்ன உங்ககிட்ட தப்பா எதாவது நடந்துக்க பார்த்தாரா?''
''கிழிச்சான்... 'செக்ஸ்' எனக்கு ஒரு மேட்டரே கிடையாது. ஒரு ஆண் தான், ஒரு அழகான பொண்ணு குனிஞ்சா, நிமிர்ந்தா, 'சைட்' அடிக்கணுமா?
''ஐ கேன் ஆல்சோ... நாட் ஒன்லி மை செல்ப்... எனக்கு தெரிஞ்சு இப்ப பெரும்பாலான பெண்களுமே நல்லா, 'சைட்' அடிக்கிறாளுங்க. அதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது, மிஸ்டர் மீடியா. நான் பளிச்சுன்னு, வெளிப்படையா சொல்றேன்; மத்தவங்க சொல்றதில்ல... அவ்வளவு தான் வித்தியாசம். எனக்கு எல்லாவிதத்துலயும், ஓபன் ஹார்ட்,'' என்று சற்று குறும்பாக, தன் தளர்ந்த டீ - ஷர்ட்டின் முன்பாகத்தை பார்த்தபடியே, கண்ணடிக்கவும் செய்தாள், மைத்ரேயி.
அடுத்த நொடியே அவளை அணுகுவதில் ஒரு குழப்பம் உருவாகியது, ரிஷிக்கு.
அவன் கேட்ட ஒரு கேள்விக்கு கூட, அவள், அவன் எதிர்பார்த்த வழக்கமான பதிலை சொல்லவில்லை. மாறாக, மின்சாரம் போல அவள் ஒவ்வொரு பதிலுமே, 'ஷாக்'காக தான் இருந்தது.
அவள் முன் திணறினான், ரிஷி; பேச்சே வரவில்லை.
''ஓ.கே., நீங்க ரொம்ப நல்ல பையன் மாதிரி தெரியுது. என்னை உங்களால ஜீரணிக்க முடியலல்ல... இட்ஸ் ஓ.கே., நான் வேற எவனையாவது பார்த்துக்கறேன்,'' என்று, அந்த, 'டாபிக்'கை மூடினாள்.
''மைத்ரேயி... என்ன பேச்சு இது? யூ ஆர் சோ டேர்... ஆமா, தனியா இருக்கலாமே... எதுக்கு கூட ஒரு ஆண். எவ்வளவு லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு,'' என்று அவனும், அவளை தணிக்க முயன்றான்.
''நான் அங்கல்லாம் இருந்தவ தான், சார்... ஹாஸ்டல்னாலே, வார்டன்னு ஒரு குரங்கு நிச்சயமா இருப்பா. நிபந்தனைன்ற பேர்ல என்னென்னவோ இருக்கும். நான் தாராளமா, 'பீர்' குடிப்பேன். ஆனா, என்னை தெருவுல விழுந்து கிடக்கிற ஒரு, 'லோக்கல்' குடிகாரன் அளவுக்கு பார்ப்பாங்க... எதுக்கு? சோ... ஹாஸ்டல்லாம் எனக்கு சரியா வரலை.''
''சரி, தனி வீடு... இப்ப நான் இருக்கிற மாதிரி?''
''மீடியா சார்... நான் பொய்யெல்லாம் பேச மாட்டேன். கொஞ்சம் மூடி வேணும்ன்னா மறைப்பேன். ஏன் சொல்றேன்னா, அவங்க என்னை பத்தி கேட்கும்போது, அப்பா - அம்மா பத்தி கேட்பாங்க.
''அம்மா என்னை அப்பாகிட்ட விட்டுட்டு, 'டைவர்ஸ்' வாங்கிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு, 'ஸ்டேட்சு'க்கு போயிட்டார்ன்னு சொன்ன உடனேயே ஒரு மாதிரி ஆயிடுவாங்க. அப்பா நோ மோர்... அப்புறம் கேட்கணுமா? யோசிச்சு சொல்றோம்ன்னு சொல்வாங்க; அதுக்கு என்ன அர்த்தம்ன்னு எனக்கு தெரியாதா?''
தன் ஒவ்வொரு சொல்லாலும், ரிஷியை திணறடித்தாள், மைத்ரேயி.
தன் வாழ்நாளில் அவன் சந்தித்த, முதல் புதுமைப் பெண்ணாகவும் தெரிந்தாள். தன்னால், ஒரு, 20 நிமிட நேரத்தையே இவளுடன் அதிர்வில்லாமல் கழிக்க முடியவில்லை. அவன் எப்படித்தான் அந்த மாடி அறையில் மாதக்கணக்கில் தாக்குப்பிடித்தானோ?
ரிஷியின் மனதுக்குள் கேள்வி ஓடியது. காலையில், இதேபோல் ஒரு முரணான ஆண் பாத்திரம்... தமிழ்ச்செல்வியின் வருங்கால கணவன், சுகுமார் என்ற பெயரில்... இப்போதோ ஒரு பெண் பாத்திரம்!
ஒரே நாளில் இப்படி இருவேறுபட்ட மனிதர்களை சந்திக்க நேர்ந்ததை என்னவென்று சொல்வது... சிந்தித்தபடியே அவளிடம் அடுத்து எதைப் பேசுவது என்று யோசித்தபோது, 'இவள் சினிமாவுக்கு மிக ஏற்றவளாக இருப்பாள்...' என்று, உள்ளுக்குள் ஒரு பட்சி சொன்னது.
''மைத்ரேயி, உன்கிட்ட நான் ஒரு கேள்வி கேட்கலாமா?''
''ஒண்ணென்ன... எவ்வளவு வேணா கேளுங்க. தயவுசெய்து, 'அட்வைஸ்' மட்டும் பண்ணிடாதீங்க. எனக்கு அது மட்டும் பிடிக்கவே பிடிக்காது,'' என்றாள்.
''இல்ல, இப்படியே எவ்வளவு நாள் தனியா இருந்துட முடியும்ன்னு நினைக்கறீங்க?'' என்றான்.
''நானும் தனியா இருக்க விரும்பல. எனக்கு பிடிச்ச ஒரு ஆணுக்காக, காத்திருக்கேன்னு சொல்லலாம்... அது, நீங்களா கூட இருக்கலாம்; எனக்கு தெரியாது,'' அவள் அப்படி சொன்ன மறு நொடி, ரிஷியிடம் திரும்ப ஒரு பதட்டம்.
''நோ... நோ... எனக்குள்ள இப்ப கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமெல்லாம் துளி கூட இல்லை. சினிமால ஒரு டைரக்டராகணும்ங்கிறது தான், என் லட்சியம். இந்த மீடியா வேலையே கூட, சும்மா தற்காலிகமான ஒண்ணு தான்.''
''உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... என்னோட சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா... என்ன திடீர்னு, சொத்து பத்தி பேசறேன்னு பார்க்கறீங்களா... காரணம் இருக்கு, எங்களுக்கு புதுடில்லியில இரண்டு, 'அப்பார்ட்மென்ட்' இருக்கு... நாக்பூர்ல ஒரு, 'அப்பார்ட்மென்ட்!' இங்க, கும்பகோணத்துல, 40 ஏக்கர்ல, 'பெர்டைல் லேண்ட்!'
''இதுபோக, வங்கி நிரந்தர வைப்பு நிதியில, ஒரு அஞ்சாறு கோடி இருக்கும். நான் ஒருத்தி தான் அவ்வளவுக்கும் வாரிசு. இவ்வளவு வெச்சுகிட்டு தான், இங்க ஒரு அறைக்கு தவிச்சுக்கிட்டிருக்கேன்.''
அவள் பொய்யாக ஆசை காட்டுவது போல், அவனுக்குள் தோன்றியது. மவுனமாக வெறித்தான்.
''கமான் மீடியா... இப்படி பார்த்தா என்ன அர்த்தம், பேசுங்க...''
''இல்ல, இவ்வளவு பணத்த வெச்சுக்கிட்டு ஒரு வீட்டை இல்ல, ப்ளாட்ட வாங்கி, சவுகர்யமா இல்லாம இப்படி முட்டாள்தனமா எதுக்கு கஷ்டப்படணும்ன்னு தோணிச்சு.''
''முயற்சி பண்ணினேனே... எல்லா இடத்துலயும் நான், தனி லேடிங்கறதால, டிசைன் டிசைனா சிக்கல், மிஸ்டர் மீடியா. எனக்கு இப்ப ஒரு நல்ல நண்பன் முதல்ல வேணும். ஒய் டோன்ட் யூ?'' அவள் அப்படி கேட்கவும், தான் கேட்ட கேள்வியில் தானே சிக்க நேரும் என்று, நினைக்கவே இல்லை, ரிஷி. ஆனால், ஒரு பதில் சொல்ல வேண்டுமே?
''ஷ்யூர் மைத்ரேயி... ஒரு ப்ரெண்டா, என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா செய்யறேன்,'' என்று, மெல்ல சமாளித்தான்.
''அப்ப நான், உங்க அறைக்கு நாளைக்கே வந்துடலாமா?'' திரும்ப ஆரம்பித்த இடத்துக்கே வந்தாள், மைத்ரேயி.
''அது... என் வீட்டு உரிமையாளர் அனுமதிக்க மாட்டாங்க.''
''தற்காலிகமா ஒரு வீடு வாங்கி, 'ரிஜிஸ்டர்' பண்ற வரை தான். எனக்கு, இப்ப யார் உதவியாவது அவசியம் தேவை. அப்படி ஒரு சிக்கல்ல நான் இருக்கேன். ப்ளீஸ்.''
''வீட்டு உரிமையாளரிடம் பேசிட்டு வேணா சொல்றேன்,'' என்றான், ரிஷி.
''கட்டாயம் சொல்லணும். அவங்க, அனுமதிக்கலைன்னா, அதையும் சொல்லணும். என் ஆபீஸ்ல சில பேர் இருக்காங்க. அவங்கள என்னால ஒரு, 'ப்ரெண்டா' நினைக்க முடியல. அதுல சிலர், எப்பவும் என் மார்பை பார்த்துக்கிட்டே தான் பேசுவாங்க.
''சிலருக்கு, என் பணத்து மேல குறி... 'பார்ட்டி'க்கு கூட்டிகிட்டு போய், 'பில்'லை என் தலையில சாமர்த்தியமா கட்டிடுவாங்க. பெண் ஊழியரும் உண்டு. அவங்களுக்கு என்னை கண்டாலே பிடிக்காது. எனக்கு, 'அராத்து'ன்னு ஒரு, 'நிக் நேம்' வெச்சுருக்காங்க...
''இப்படி என்னை சுத்தி என் கேரக்டரை மீறி, என் மேல அக்கறையா யாருமே இல்லை. ஆனா நீங்க, இவங்க யார் போலவும் இல்லை. அதான் இவ்வளவு துாரம் பேசிக்கிட்டிருக்கேன்.''
ஒரு வழியாக, அவன் ஏற்கும்படியான ஒரு பதிலை சொல்லி முடித்தாள்.
அதன்பின், சாப்பிட்டதற்கு, 'பில்' வந்தபோது, அவளே பணம் தந்தாள். அதை தவிர்க்க முயன்று தோற்றுப் போனான். 'உன், 'பில்' உனக்கு - என், 'பில்' எனக்கு...' என்று, ஏனோ கறாராக சொல்ல முடியவில்லை.
அவள், 'அராத்'தாக இருக்கலாம். ஆனால், அவளிடம் ஒரு தைரியமும், உண்மையும் சந்திர - சூரியன் போல இருப்பதை, அவனால் உணர முடிந்தது.
அவளை சந்தித்த நொடியிலிருந்து, இப்போது வரை, வேறு எந்த நினைவுகளுக்கும் இடமில்லாமல், அவளுடைய ஆக்கிரமிப்பிலேயே தானிருந்ததையும் ஒரு வினாடி எண்ணிப் பார்த்தான். சாப்பிட்டு முடித்து பைக் அருகே வரவும், அவளும் உடன் வந்தாள்.
'எங்கே... என்னை டிராப் செய்' என்று சொல்லி விடுவாளோ என, அவனுக்குள் லேசாய் அச்சம் மூண்டபோது, ''ஆட்டோ,'' என, ஒரு ஆட்டோக்காரனை கூவி அழைத்தாள்.
'அப்பாடா...' என்று, 'ரிலாக்ஸ்' ஏற்பட்டது.
அவள் சிரித்தபடியே, ''பயப்படாதே. நான், 'டிராப்' பண்ணல்லாம் சொல்ல மாட்டேன். என்னை முழுமையா புரிஞ்சுக்கிட்ட பிறகு தான் சொல்வேன்,'' என்றபடியே கடந்து போய், ஆட்டோவில் ஏறிக்கொண்டாள். அது, செல்லமாய் அவன் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.

வீடு திரும்பி, மாடி படிகளில் ஏறும்போது, பார்த்துக் கொண்டே இருந்தாள், மாமி.
அறைக்குள் நுழைந்தவன், முதல் காரியமாக, தமிழ்ச்செல்வியை தான் அழைத்தான். மைத்ரேயியோடு தனக்கு நேரிட்ட அனுபவம் அவ்வளவையும் சொல்லி முடித்தான்.
படுக்கையில், அவன் முதுகுக்கு தலையணை கொடுத்தபடி பேசின அவ்வளவும், அப்படியே பின்புற ஜன்னல் வழியாக வெளியேறி, கீழே மாமி காதிலும் விழுந்து, அவரிடமும் திகைப்பு தோன்றியிருந்தது.
''சரி, என்ன பண்ணப் போறே?'' என்று, இறுதியாக கேட்டாள், தமிழ்.
''என்ன பண்ணப் போறேன்னா... மாமி, என்னை தன் மகன் இடத்துல வெச்சுருக்காங்க. இந்த மைத்ரேயிக்காக பேசி, என் பேரை கெடுத்துக்க விரும்பல, தமிழ்.''
மறுபுறம், தமிழ் சற்று கேலியாக சிரிப்பது காதில் விழுந்தது.
''என்ன தமிழ் சிரிக்கறே?''
''சிரிக்காம... நீ அவளை பார்த்து ரொம்பவே பயந்துட்டேன்னு நல்லா தெரியுது.''
''பயமெல்லாம் இல்ல தமிழ். புரியாம பேசாதே. அவ, ஆண் இயல்பு கொண்ட பெண். யாருக்குமே பிடிக்காது... நான் இவ்வளவு சொல்லியிருக்கேன், உனக்கு பிடிச்சிருக்கா என்ன?''
''ரொம்ப பிடிச்சிருக்கு, ரிஷி... அதேசமயம், அவளை நினைச்சு பரிதாபமாவும் இருக்கு.''
''பரிதாபமா இருக்கா?''
''நிச்சயமா... அம்மா இருந்தும் இல்லை - அப்பா இறந்துட்டார். பணம் மட்டும் இருக்கு. ஆதரிக்க நண்பர்களும் இல்லை. பாவமா இல்லையா?''
''நீ சொல்றபடி யோசிச்சா, பாவமாதான் இருக்கு... ஆனா, அவ பேச்சுல பணிவே இல்லையே... ஒரே தாட் பூட் தான்.''
''அதுதான் அவளோட பலம். கொஞ்சம் யோசிச்சு பார்... அவ மென்மையா, பயந்த பொண்ணா எல்லாரையும் போல இருந்திருந்தா, இப்ப இருக்கற மாதிரி அவ இருந்திருக்க இந்த சமூகம் விட்டிருக்குமா?''
''நீ என்ன சொல்றே?''
''ஒரு பக்கம் அவ இளமை - இன்னொரு பக்கம் அவ பணம். பாய்ஞ்சு குதறியிருக்க மாட்டாங்க.''
''அதுக்கும் வாய்ப்பு இருக்கு. ஆனா, 'செக்ஸ்' பத்தின அவ கருத்து கொஞ்சமாவது சரியா... எனக்கு அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லேன்னாளே?''
''இல்ல... உன்கிட்ட, அவ பொய் சொல்லியிருக்கா... உன்கிட்ட அப்படி பேசி, நீ, 'ஜொள்ளு பார்ட்டி'யான்னு, 'டெஸ்ட்' பண்ணியிருக்கா.''
''என்ன தமிழ், அவளுக்காக இப்படி வக்காலத்து வாங்கறே?''
''ரிஷி... அவளுக்கு உதவி செய். மாமிகிட்டயும் பேசு. இவளுடைய நட்பு உனக்கு ரொம்ப புது அனுபவமா இருக்கும். எங்கியோ யாரோ வாழப்போற ஒரு, 'லிவிங் டுகெதர்' வாழ்க்கையை துார இருந்து பார்க்காம, நீயே வாழ்ந்து பார்த்து உணர, ஒரு அருமையான வாய்ப்பு.''
''தமிழ், உன்கிட்டயிருந்து இப்படி ஒரு பதிலை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.''
''எதிர்பாராததெல்லாம் நடக்கறது தான், இன்றைய நாள். எனக்கொரு சுகுமார்னா - உனக்கொரு மைத்ரேயி. பயந்து முடங்காம, தைரியமா இவங்கள எதிர்கொள்வோம், என்ன சொல்றே?''
தமிழ் கேட்டு முடிக்க, மொபைல் போனை, 'ஆப்' செய்தவன், துாங்கும் முன் கொஞ்ச நேரம், 'டிவி' பார்க்கும் விருப்பத்தில், அதை, 'ஆன்' செய்தான். அதில், இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவு என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தான்.
தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X