அன்புள்ள சகோதரிக்கு —
நான் ஒரு இஸ்லாமிய பெண்.
15 ஆண்டுகளுக்கு முன், என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. இந்த ரகசியத்தை இதுவரை நான், யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை.
என் தோழி வீட்டுக்கு, ஆட்டோவில் போய் திரும்பும்போது, ஒரு மஞ்சள் பையை கண்டெடுத்தேன். எப்போதும் நேர்மையாய், நாணயமாய் நடந்து கொள்ளும் நான், சிறிது சலனப்பட்டு விட்டேன். அந்த பையை ஆட்டோகாரரிடமும் ஒப்படைக்கவில்லை; காவல்துறையிடமும் ஒப்படைக்காமல், வீட்டுக்கு எடுத்து வந்து விட்டேன்.
மஞ்சள் பையில், 80 ஆயிரம் பணமும், ஐந்து பவுன் நகையும் இருந்தன.
நகை, பணத்துடன், ஒரு பெண்ணின் வாக்காளர் அட்டையும், சில, 'பில்'களும் இருந்தன.
'நகருக்கு வெளியே ஒரு ப்ளாட் விற்பனைக்கு வந்திருக்கிறது. அதை வாங்கினால் பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம். விலை, 80 ஆயிரம், பத்திரப்பதிவு இலவசம்...' என்றார், கணவர். பணத்தை புரட்டிக் கொடுத்ததாக நடித்து, கையிலிருந்ததை கொடுத்தேன். ப்ளாட், என் பெயரில் வாங்கப்பட்டது.
சில வாரங்களுக்கு பின், மீண்டும் கணவர், 'ஒரு கம்பெனியின் பங்கு, குறைந்த விலைக்கு வந்திருக்கிறது. எதிர்காலத்தில் அந்த பங்குகள் மிக நல்ல விலைக்கு போகும்...' என, ஆசை காட்டினார்.
'பங்கு வாங்க எவ்வளவு பணம் தேவை...' என, கேட்டேன்.
மஞ்சள் பையிலிருந்த, 40 கிராம் தங்கத்தை (அப்போது, கிராம், 800 ரூபாய்) 30 ஆயிரத்துக்கு விற்று, பங்கு வாங்க பணம் கொடுத்தேன். பங்குகள் வாங்கிப் போட்டார், கணவர்.
நாங்கள் வாங்கிப்போட்ட மனையின் பக்கம், பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட போவதால், அதன் இன்றைய மதிப்பு,
40 லட்சம் ரூபாய். 2006ல் வாங்கிப் போட்ட பங்குகளின் இன்றைய மதிப்பு, 46 லட்சம்.
கடந்த ஒரு ஆண்டாக, எங்கள் வீட்டில் ஒரு பெண், வீட்டு வேலை பார்க்கிறாள். அவளை பற்றி விசாரித்தபோது, 'ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்து, கெட்ட குடும்பம். கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் நான் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். 2006ல், ஆட்டோவில் போகும்போது, 80 ஆயிரம் பணத்தையும், ஐந்து பவுன் நகையையும் தொலைத்து விட்டேன்.
'ஆட்டோக்காரரை தேடினேன். போலீசில் புகார் செய்தேன். பயனில்லை. பணம், நகையை தொலைத்ததற்காக, கணவருக்கும், எனக்கும் சண்டை ஏற்பட்டது. முடிவில், இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தோம்.
'என் கணவர், இன்னொரு திருமணம் செய்து கொண்டார். படிக்காத, வேலைக்கு போகாத நான், இரு குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டேன். வேறு வழியின்றி, வீட்டு வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றுகிறேன். மகளுக்கு, 22 வயதாகிறது. டிகிரி முடித்து, கல்யாணத்திற்கு காத்திருக்கிறாள்.
'மகனுக்கு வயது, 18. பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, பி.எஸ்சி., ரேடியாலஜி படிக்க காத்திருக்கிறான். கல்யாண செலவுக்கும், படிப்பு செலவுக்கும் எங்கே போவது என, குழம்பி போய் கிடக்கிறேன்...' என்றாள்.
ஆஹா... இவளுடைய பணம், நகையை வைத்துதான், மனை மற்றும் பங்குகளை வாங்கி, கோடீஸ்வரர்களாய் இருக்கிறோம். என்ன செய்வது, பணம் மற்றும் நகையை திருடி, ஒரு குடும்பத்தை பிரித்து நிர்மூலமாக்கிய எனக்கு, பாவ விமோசனம் கிடைக்க வழி என்ன? குற்ற உணர்ச்சியால் மனநோயாளி போல பரிதவிக்கிறேன். என்ன செய்யலாம் அக்கா?
— இப்படிக்கு,
அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
'ஆட்டோவில் தொலைத்த பணத்தை திருடியது அல்லது கண்டெடுத்தது நான் தான்...' என, உன்னிடம் வேலை செய்யும் பெண்ணிடம், நீ ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதால், என்ன பலன் ஏற்படப் போகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் அவளை பிரிந்து சென்று, வேறொரு திருமணம் செய்து கொண்ட கணவன் மீண்டும் அவளுடன் இணைவானா?
இத்தனை ஆண்டுகள் அவள் பட்ட உடல், மன வேதனைகளுக்கு, உன் ஒப்புதல் வாக்குமூலம் நிவாரணம் அளிக்குமா? இரண்டுமே கிடையாது.
அதனால், எக்காரணத்தை முன்னிட்டும், பணம் மற்றும் நகையை எடுத்தது நீதான் என்பதை வெளிப்படுத்தி விடாதே. அதற்கு பதிலாக, அந்த பெண்ணுக்கு, எந்தெந்த விதத்தில் முழுமையாக உதவலாம் என்று திட்டமிடு.
அவளுக்கு செய்ய தீர்மானித்த உதவிகளை, கொட கொடவென கொட்டி விடாதே. அவளுக்கு, உன் மேல் சந்தேகம் வந்து விடும். நிதானம் தேவை.
அந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகு. அவள் நம்பும்படியாக ஒரு கதையை உருவாக்கு.
'என் கணவருக்கு, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் உடல்நலமில்லாமல் போய் விட்டது. மரணத்தின் விளிம்பில் நின்றார். அவர், ஆபத்திலிருந்து மீண்டால், யாராவது ஒரு ஏழை பெண்ணுக்கு, சொந்த செலவில் திருமணம் செய்து வைக்கிறேன்; யாராவது ஒரு ஏழை பையனின் கல்வி செலவை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் என, வேண்டினேன்.
'குணமானார், கணவர். அந்த வேண்டுதலை நிறைவேற்ற, தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தேன். அது, இப்போது வந்திருக்கிறது. உன் மகனின் கல்வி செலவையும், மகளின் திருமண செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்...' எனக் கூறு. இந்த பொய்யை, பல ஒத்திகைகளுக்கு பின் கவனமாய் அரங்கேற்று.
நடந்ததை கணவரிடம் தனியாக கூறினால், அவர், உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்வாரா என்பதை யோசி. அவரிடம் கூறினால் பிரச்னை வெடிக்கும் என்றால், வாயை திறக்காதே.
'பங்குகளை விற்று, 45 லட்சத்தில் நீ பாதி எடுத்துக் கொள்.
'வேலைக்காரி பெண், என் தங்கை மாதிரி. அவளுக்கு உதவ தீர்மானித்து விட்டேன். அன்று நான் மனை மற்றும் பங்கு வாங்க கொடுத்த பணம், என் சிறுவாடு காசு. அதில் வாங்கிய சொத்தில் பங்கு கேட்க, எனக்கு உரிமை இருக்கிறது.
'வேலைக்கார பெண்ணுடைய மகனின் படிப்புக்கும், மகளின் திருமணத்துக்காகவும் செலவு பண்ண போகிறேன். இது ஒரு அழகிய கடன். நம் வாழ்க்கைக்கு, கடவுளுக்கு நாம் செய்யும் நன்றி கடனாக இது அமையும்...' எனக் கூறு.
நீ செய்யும் உதவி, உறவினர்கள் கண்ணை உறுத்தாமல் பார்த்துக்கொள். உதவி செய்வதற்கு ஏதுவாக, வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகன் - மகளை வீட்டுக்கு வரவழைத்து உறவாடு.
'உன் மகன் - மகளிடம் பழகி அவர்களுக்கு ஒரு தாயாகி விட்டேன். அவர்களின் அன்பு மழையில் நனைந்த நான், அவர்களுக்கு உதவ இதயப்பூர்வமாக தீர்மானித்து விட்டேன்...' என, 'பில்ட் - அப்' கொடு.
திருடிய அல்லது கண்டெடுத்த, 10 ஆயிரம் ரூபாயை, நீ, வட்டியோடு திருப்பி தர வேண்டிய நேரம் வந்து விட்டது. உடனே செயலில் இறங்கி, உன் மீது இருக்கும் பாவ கணக்கை அறுத்துவிடு.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.