உயிரோடு உறவாடு! (20)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
00:00

முன்கதை சுருக்கம்: அறையில் தங்கி கொள்ள மாமியிடம் கேட்டு சொல்வதாக கூறிய ரிஷி, இதுகுறித்து, தமிழ்செல்வியிடம் போனில் பேச, அது மாமி காதிலும் விழுந்தது. இந்நிலையில், 'டிவி'யில் இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவு செய்தி கேட்டு, அதிர்ச்சி அடைந்தான், ரிஷி-

அந்த அதிர்ச்சி செய்தி, ஒரு விநாடி, ரிஷியை உலுக்கி எடுத்து விட்டது. திடீர் மாரடைப்பால், கே.வி.ஆனந்தின் உயிர் பிரிந்ததாக, அந்த செய்தியின் விரிவை, ரிஷியால் ஜீரணிக்க முடியவில்லை. அடுத்த நொடி, தமிழ்ச்செல்விக்கு போன் செய்து, தன் அதிர்வை பகிர்ந்து கொள்ள முனைந்தவனை, அவளே அழைத்து பேசினாள்.
''ரிஷி... நியூஸ் பார்த்தியா?'' என்று தான் ஆரம்பித்தாள்.
''பார்த்தேனாவா... இப்ப, என் மனசு பதறிகிட்டிருக்கு, தமிழ்.''
''புரியுது... எனக்கே பெரிய, 'ஷாக்' தான். நீ உடனே, 'எனக்கு அதிர்ஷ்டமில்ல; நான் ஒரு துரதிர்ஷ்டசாலி'ன்னு நினைச்சு நம்பிக்கை இழந்துடாதே.''
''நீ சொன்னாலும் சொல்லாட்டியும், நான் அதிர்ஷ்டக்கட்டை தான், தமிழ். எப்பேர்ப்பட்ட வாய்ப்பு... இப்ப போயிடுச்சே தமிழ்?''
''உனக்கு, வாய்ப்பு மட்டும் தான் போயிருக்கு... இன்னிக்கு, இல்லை நாளைக்கு வேற யார்கிட்டயாவது அது திரும்ப கிடைக்க நிறைய சாத்தியங்கள் இருக்கு. ஆனா, அவர் வரையில், ஒரு வாழ்க்கையே போயிடுச்சு. அதை நினைச்சு பார்.''
தமிழ் அளித்த தேறுதலில் சற்று தணிந்தவன், ''சரி தமிழ்... ரொம்பவே நேரமாயிடுச்சு. நீ துாங்கு. எனக்கு, இன்னிக்கு சிவராத்திரி தான்,'' என்று, போனை, 'கட்' செய்தான்.
மனதுக்குள் அவர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்தவன், சிறிது நேரத்தில் உட்கார்ந்த நிலையிலேயே துாங்கிப் போனான்.

மறுநாள் -
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்தவன் எதிரில், மாமி. கையில் டபரா தம்ளரில் ஆவி பறக்கும் காபியுடன் நின்றிருந்தார்.
''மணி இப்ப என்ன தெரியுமா?'' என்றபடியே உள்ளே வந்தாள், மாமி.
மொபைல் போனை எடுத்து பார்த்தவன், ''ஓ... 9:00 மணியா... ரொம்பவே அசந்துட்டேன் மாமி... சாரி,'' என்றான்.
''முதல்ல பல்லை தேய்ச்சுட்டு, காபிய குடி. சூடு ஆறிடப் போறது,'' என்றாள்.
''பல்லை தேய்க்கிற அளவுக்கு பொறுமை, இப்ப எனக்கில்ல மாமி,'' என்றவன், காபியை வாங்கி, ஒரே உறிஞ்சாய் உறிஞ்சினான்.
''அவ்வளவும் உடம்புக்கு கேடு,'' என்று சற்று சினந்தாள், மாமி.
''எனக்கு உடம்ப விட, மனசு தான் மாமி கணக்கு. அது இப்ப எவ்வளவு பெரிய சோகத்துல இருக்கு தெரியுமா உங்களுக்கு?'' என்றான்.
''தெரியுண்டா... நீ பேசற எல்லாம் தான், காதுல விழறதே. இதனால என்னை, ஒட்டு கேட்கறவளா நினைச்சுடாதே. இதோ பார், மேடு பள்ளம்ன்னு மாறி மாறி வர்றதுக்கு பேர் தான், வாழ்க்கை. உன் இள வயசுக்கு, நான் இப்ப என்ன சொன்னாலும் புரியாது.
''போகட்டும் விடு... முதல்ல குளிச்சுட்டு கீழ வா... டிபன் தயாரா இருக்கு, சாப்பிட்டுண்டே பேசுவோம். உன்கிட்ட நான் நிறைய பேச வேண்டியிருக்கு...'' காலி டபரா தம்ளரை எடுத்து, ''உம் சீக்கிரம்,'' என்று, ஒரு முடுக்கு முடுக்கிவிட்டு கீழிறங்கினாள்.
சற்று சோம்பல் முறித்தபடியே பாத்ரூமுக்குள் நுழைந்தான், ரிஷி.

டைனிங் டேபிள் மேல், 'ஹாட்பேக்'கில் இட்லியும், மெது வடையும் இருந்தது. அருகில், திறந்த பாத்திரமொன்றில், வெங்காய சாம்பார்.
அள்ளிப்போட்டு ஒரு பிடி பிடித்தவன் முன், மாமி சாரதாவும், மாமா நீலகண்டனும் ரசித்தபடி அமர்ந்திருந்தனர். அவர்களை பார்த்தால் ரசித்து சாப்பிட முடியாது என்று நினைத்தானோ என்னவோ, இட்லியை சாம்பாரில் குழைப்பதிலேயே மும்முரமாக இருந்தான், ரிஷி.
'உங்களுக்கு எதுக்கு மாமி அநாவசிய சிரமம்?' என்ற, கேள்வியை எல்லாம் அவன் பசி, ஓரம்கட்டி விட்டது.
ஆறாவது இட்லியை பிய்க்கும்போது, போகட்டும் என்பது போல் மாமா, மாமியை பார்த்தவன், ''உம்... ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்களே மாமி,'' என்று அவர்களை துாண்டினான்.
''மைத்ரேயி பத்தி, நீ பேசினதை எல்லாம் நானும், இவரும் கேட்டுண்டு தான் இருந்தோம். அவ ஒரு வீடு வாங்கற வரை, அவளுக்கு சப்போர்ட்டா இருக்கப் போறதா சொல்லியிருக்கே போல இருக்கே?''
மாமி நேரிடையாக, மைத்ரேயி விஷயத்தை தொடவும், ஒரு சன்னமான அதிர்ச்சி, ரிஷியிடம் ஏற்பட்டது.
''மாமி...'' என்றான் அதிர்வுடன்.
''என்ன மாமி? அவளை, நீ தாராளமா இங்க கூட்டிண்டு வரலாம். கீழே, அதோ அந்த அறையை நான், அவளுக்கு ஒதுக்கி கொடுத்துடறேன். நீ மட்டுமில்ல, நாங்களும் அவளுக்கு உறுதுணையா இருக்க முடிவு பண்ணிட்டோம்.''
மாமியின் பதிலால், திக்குமுக்காடினான், ரிஷி.
''அவ விஷயத்துல, நானே இன்னும் ஒரு முடிவுக்கு வரல மாமி. ஆனா, அதுக்குள்ள நீங்க...''
''அவ ஒரு வயசுப் பொண்ணு... தனியா வேற இருக்கா... அதுமட்டுமா, அழகு, பணம்ன்னு ரெண்டும் கூடவே இருக்கு. அது பேராபத்து. ஒரு நல்ல துணை, இப்ப அவளுக்கு அவசியம் ரிஷி... உன் ப்ரெண்ட் தமிழ்ச்செல்வி சொன்னது ரொம்ப சரி.''
''புரியுது மாமி... ஆனா, அவ கேரக்டர்?''
''அவ தன் வாழ்க்கையில நல்ல மனுஷாளையே பார்க்கலடா. அதான், கொஞ்சம் தப்பா போயிட்டான்னு தெரியுது. அதனால என்ன, இங்க நம்மை எல்லாம் பார்த்தா மாறிட்டு போறா.''
''எப்படி மாமி உங்களால இப்படி ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது?''
''எங்க பிள்ளை போனதுல இருந்தே, எங்க வாழ்க்கைலயும் ஒரு சூன்யம் வந்துடுத்துடா... உன்னால அது கொஞ்சம் மாறித்து... மைத்ரேயியும் வந்தா, ஒரு நல்ல அர்த்தம் வரும்ன்னு தோணுது. இப்பல்லாம் தான் ஒருத்தர் பார்த்துண்டிருக்கும்போதே, 'ஹார்ட் அட்டாக், கொரோனா'ன்னு, 'பட் பட்'ன்னு போய் சேர்ந்துடறாளே... வாழ்க்கையில, என்ன பெருசா இருக்கு...
''இருக்கற வரை கொஞ்சம் பெரிய மனசோட, நாலு பேருக்கு பயன்படற மாதிரி வாழ்ந்து தான் பார்ப்போமே,'' மாமியின் பேச்சு, ரிஷி வரையில் அசத்தியது. கண்களும் மளுக்கென்று பனித்துப் போனது.
''ரொம்ப தேங்க்ஸ் மாமி... மைத்ரேயியை, சாயந்திரம் தான் பார்ப்பேன். அப்ப அவகிட்ட சொல்றேன். இன்னிக்கு பகல்ல ஒரு பெரிய, 'அசைன்மென்ட்' ஒண்ணு இருக்கு மாமி,'' என்றான்.
''அப்படி என்ன பெரிய, அசைன்மென்ட்?''
''ரெண்டு நாளைக்கு முந்தி, ஒரு விபத்து ஏற்பட்டுச்சுல்ல?''
''ஆமா.''
''அது, விபத்துங்கிற பேர்ல சதி வேலை, மாமி. அதை செய்த நபரை, ரெண்டுல ஒண்ணு பார்க்கணும்.''
''புரியறது... சுஜித் குமாரோட புரோக்ராமை நீயும், தமிழ்ச்செல்வியும் பண்றது பொறுக்காம, உங்க ஆபீஸ்ல உங்க கூட வேலை பார்க்கறவா பண்ண வேலையா?''
''நெருப்பு மாமி நீங்க... நான் கோடு கூட போட வேண்டாம், நீங்க ரோடு போட்டுடறீங்க. அதே தான் மாமி,'' என்றான்.
''போகட்டும் விடுடா... அதான் நீங்க ஜெயிச்சு காட்டிட்டீங்களே!''
''அப்படியெல்லாம் விட முடியாது, மாமி. இதுல, தமிழ்ச்செல்வியோட கல்யாண வாழ்க்கையும் அடங்கியிருக்கு. அடுத்து, எங்க சேனல்ல, இனி, யாருக்கும் எங்களுக்கு நடந்த மாதிரி நடக்க கூடாது.''
''சரி... பார்த்து புத்திசாலித்தனமா நடந்துக்கோ. வெறும் உணர்ச்சிகள் எதுக்கும் உதவாது. விவேகம் முக்கியம்,'' என்றாள், மாமி.
''சரியா சொன்னீங்க, மாமி. உணர்வை மூட்டை கட்டி வெச்சுட்டு, 'ஸ்பை' அவதாரம் எடுக்க போறேன். மிச்சத்தை எல்லாம் நல்லபடியா முடிச்ச பின் சொல்றேன். இப்ப நான் கிளம்பறேன்,'' கைகளை கழுவி, 'ஹெல்மெட்'டுடன் வேகமானான், ரிஷி.

ஜார்ஜ்டவுன் ராஜாபாதர் காயலான் கடை.
விபத்தான கார் மற்றும் பைக்குகளின் உடைந்த, 'ஸ்பேர் பார்ட்ஸ்'களுடன் காட்சி தந்த கடை முகப்பில், பைக்கிலிருந்து ரிஷியுடன், இறங்கினாள், தமிழ். 'மாஸ்க், கூலிங்கிளாஸ்' முழுமையாக முகத்தை மறைத்திருக்கும் நிலையில், கழுத்தில் தொங்கிய சேனல் ஐ.டி., கார்டு, அங்கிருந்த ஒரு அழுக்கு மனிதனை ஊன்றிப் பார்க்க வைத்தது.
மிக சகஜமாக அவனிடம், ''முனிராஜ் அண்ணனை பார்க்க வந்துருக்கோம்,'' என்றான், ரிஷி.
''அண்ணனை பார்க்கவா... ஆமா, நீங்க யாரு?''
''பார்த்தா தெரியலியா... நாங்க, 'டிவி' சேனல்ல வேலை பண்றோம். ஜனா சார் கூட இங்க வந்திருப்பாரே?''
ஜனா பேரை சொல்லவுமே, அவன் முகத்தில் ஒரு தெளிவு.
''நீங்க, அவர் கூடதான் வேலை பார்க்கறீங்களா?''
''ஆமா... அண்ணன் தான் அனுப்பியிருக்காரு,'' துணிந்து கூறினான், ரிஷி.
ஒருமுறை ஏற இறங்க பார்த்த அந்த மனிதன், ''கொஞ்சம் இருங்க போய் அண்ணங்கிட்ட கேட்டுட்டு வர்றேன்,'' என்று உள்ளே சென்றான்.
ரிஷியின், 'டி - ஷர்ட்'டில், பட்டன் கேமரா மாற்றப்பட்டிருந்தது. பேனா வடிவ கேமராவை, 'நெக் ஜாக்கெட்'டுக்குள் செருகியிருந்தாள், தமிழ்ச்செல்வி.
கேமராவை ஒரு அழுத்து அழுத்தினால், எதிரில் தென்படும் காட்சிகளை, சத்தத்தோடு அப்படியே பதிவு செய்து விடும்.
இருவரும் உள்ளிருந்து வரவேண்டிய அழைப்புக்காக காத்திருக்கவும், உள்ளே போனவனும் திரும்பி வந்து, அவர்களை அழைத்துச் சென்றான். வழியெங்கும் துருவேறிய இரும்புப் பொருட்கள், தகடுகள், பழைய டயர்கள். நடந்து செல்லும்போதே, கேமராவை, 'ஆன்' செய்து விட்டனர்.
அந்த இரும்பு குவியல்கள் நடுவே, ஆஸ்பெஸ்டாஸ் கூரை ஷெட். அங்கு, விபத்தை ஏற்படுத்திய அம்பாசிடர் காரின், 'பானட்' மேல் அமர்ந்த நிலையில், சிகரெட் பிடித்தபடி இருந்தான், முனிராஜ் என்கிற அந்த ரவுடி.
இருவரும் வரவும், புகையை உமிழ்ந்தபடியே, ''இன்னா மேட்டரு?'' என்று எடுத்த எடுப்பிலேயே கேள்வியை வைத்தான்.
''இல்ல... ரெண்டு நாள் முந்தி, ஜனா சார் சொல்லி, எங்க, 'டிவி'ல வேலை செய்துவரும், ரிஷிங்கிறவனை, 'ஹிட்' பண்ணீங்கல்ல?''
''அதுக்கென்ன இப்ப?''
''அதே மாதிரி இன்னொருத்தனையும் பண்ணணும்.''
''பார்றா... ஏன் இப்படி ஒரே இடத்துல வேலை பார்த்துக்கிட்டு அடிச்சுக்கிறீங்கோ... அப்படியிருந்தா, போன் பண்ணியிருப்பாரே, ஜனா... ஆனா, போன் பண்ணலியே?''
''இதெல்லாம் இனி போன்ல வேண்டாம், நேர்லயே போய் பேசி முடிங்கன்னு தான் எங்களை அனுப்புனாரு.''
''ஜனா, ரொம்ப தான் உஷாரு... ரைட், ஆள் யாரு, எங்க இருக்கான், போட்டோ கொண்டாந்திருக்கீங்களா?''
''போட்டோவை, 'வாட்ஸ் ஆப்' நம்பர் தந்தா அனுப்பிடறோம். பிரின்ட் காப்பி கையில இல்ல... அதோடு எல்லா விபரமும் இருக்கும்.''
''என் நம்பர் தான் ஜனாகிட்ட இருக்குதே... அனுப்ப வேண்டியதுதானே?''
''இப்பவே போய் சொல்லி அனுப்பிடறேன்.''
''துட்டு?''
''போய், ஏ.டி.எம்.,ல எடுத்துட்டு வந்து தரேன்.''
''அய்ய, இதென்ன வந்து போயின்னுகிட்டு... வரும்போதே துட்டோட வரவேண்டியது தானே?''
''இல்ல... உங்ககிட்ட, ஓ.கே., வாங்கிகிட்டு பணத்தை எடுக்கலாம்ன்னு.''
''சரி சரி... போய் எடுத்துட்டு வா... எவ்வளவுன்னு தெரியும்ல?''
''நீங்களே சொல்லிடுங்க.''
''ஜனா என்ன, என்னை ஆழம் பார்க்கறாரா... எல்லாம் தலைகீழா இருக்குதே.''
''அதெல்லாம் ஒண்ணுமில்ல, இப்பவே போய் பணத்தோட வர்றோம்.''
''சரி சரி... ஜூட்டா போயிட்டு வா. இந்த மாதிரி எடத்துக்கு வரும்போது, நீ மட்டும் வா... பாப்பா மாதிரி ஆளுங்கள எல்லாம் இட்டாராதே. என் பயலுங்க தொழிலுக்கு போயிருக்கிறானுங்கோ. அவனுங்க இப்ப இங்க இருந்திருந்தா, கண்ணாலயே கற்பழிச்சிருப்பானுங்க.''
தமிழ்ச்செல்வியை வெறித்தபடியே முனிராஜ் பேசிய பேச்சு, அவளுக்குள் அமிலத்தை பீறிடச் செய்தது.
''சரிங்க வரேன்,'' என்று, தமிழை அழைத்து, திரும்பி நடந்தான், ரிஷி.
''ஏய், ஒரு நிமிஷம் நில்லு... 'மாஸ்க்'கை கழட்டிட்டு, உன் முகத்தை காட்டு பார்ப்போம்,'' என்ற முனிராஜ் குரல், ரிஷியை சற்று பதறச் செய்தது.
தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahalingam - கூடுவாஞ்சேரி 603202,இந்தியா
25-ஜூலை-202108:36:57 IST Report Abuse
mahalingam எஸ்.வி.சேகர் அவர்களின் சாதனை பிரமிக்க வைக்கிறது. இப்பொழுதெல்லாம் நான், டிராமாயணம் படித்த பிறகுதான் தொடர்கததையவே படிக்க ஆரம்பிக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X