திண்ணை | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
திண்ணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
00:00

ஜூலை - 27 அப்துல் கலாம் நினைவு தினம்

ம.வீரகோபாலன் எழுதிய, 'வள்ளுவர் வழியில், அப்துல் கலாம்' நுாலிலிருந்து:
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செல்ல வேண்டும் என்ற, அப்துல்கலாமின் நீண்ட நாள் ஆசை, குடியரசு தலைவராக இருந்தபோது நிறைவேறியது.
பொதுவாக குடியரசு தலைவராக இருப்பவர்கள், கடினமான பயணத்தை மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், கலாம், பிப்., 13, 2016ல், 'ஐ.என்.எஸ்., சிந்து ரக்சக்' கடற்படை நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார்.
கடற்படை வீரர்கள், கடலுக்கு அடியிலிருந்து ஏவுகணையை ஏவி, செயல்படுத்திக் காட்டினர். அது, இலக்கை, குறிப்பிட்ட நேரத்தில் தாக்கியதை பார்த்தார். வீரர்களை மிகவும் பாராட்டினார். மூன்று மணி நேரம், கடலுக்குள் துணிச்சலாக சென்று பார்வையிட்டதை, அனைவரும் பாராட்டினர்.

கலாமிடம், 'ஐயா, பயங்கரவாதிகள் யார்... அவர்கள், நம் தேசத்தை சேர்ந்தவர்களா...' என, கேட்டாள், ஒரு மாணவி.
'பயங்கரவாதிகள் பற்றிய செய்தி, இப்பிஞ்சு உள்ளத்திலும் சென்றடைந்திருக்கிறதே...' என்று திடுக்கிட்டார், கலாம்.
இருப்பினும், நிதானமாக அச்சிறுமியை அருகில் அழைத்து, 'உன் கேள்விக்கு, நம் காவியமான ராமாயணம், மகாபாரதம் தான் நினைவுக்கு வருகிறது. ராமாயணத்தில், தெய்வீக நாயகன் ராமனுக்கும், அசுரகுல வேந்தன் ராவணனுக்கும் யுத்தம் நடந்தது. இறுதியில், யார் வென்றனர்... ராமன் தான் வென்றார்.
'மகாபாரதத்தில், குருஷேத்திர போர் நடந்தது. தருமத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், இறுதியில் எது வெற்றி பெற்றது... தர்மம் தான் வென்றது.
எந்த தீய சக்திகளும் வென்றதாக சரித்திரம் கிடையாது. எனவே, பயங்கரவாதங்கள் அடங்கிவிடும். நீ அதைப்பற்றி சிந்திக்காமல், கல்வியில் கவனம் செலுத்து...' என்றார்.

அப்துல் கலாம், 1990ல், கண் சிகிச்சை பெறுவதற்காக, மதுரையில் உள்ள புகழ்மிக்க கண் மருத்துவமனைக்கு, தன் பாதுகாப்பு அதிகாரியுடன் வந்தார்.
அந்த அதிகாரி வேறொரு வேலையாக சென்று விட, கலாமை பரிசோதித்த மருத்துவருக்கு, இவர் யாரென்று தெரியாது. கலாமும் தன்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. 'சிகிச்சை மேற்கொள்ள முன்பணம் கட்ட வேண்டும். அதனால், கட்டிவிட்டு வாருங்கள்...' என்று, கூறினார்.
வரிசையாக நின்று, பணம் கட்டுமிடத்தில் காசோலையை நீட்டினார், கலாம்.
'பணமாக தான் கட்ட வேண்டும்...' என, கூறி விட்டனர், அவர்கள்.
கலாமிடம், கையில் அவ்வளவு பணம் இல்லை. மீண்டும் மருத்துவரிடம் சென்று, 'நான் அவ்வளவு பணம் எடுத்து வரவில்லை...' என்று, கூறினார்.
அப்போது கூட, தான் யாரென்று கூறவில்லை. சற்று யோசித்து விட்டு, சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறினார், மருத்துவர்.
சிகிச்சை முடிந்து, அவரும் சென்று விட்டார். அதன்பின், அவர் திரும்பிய செய்தி அறியாத பாதுகாப்பு அதிகாரி, அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது தான், மருத்துவருக்கு, தன்னிடம் சிகிச்சைப் பெற வந்தவர், ஏவுகணை அணு விஞ்ஞானி அப்துல் கலாம் என்பது, தெரிய வந்தது.
உடனே, கலாமுக்கு கடிதம் எழுதி, மன்னிப்பு கேட்டார், மருத்துவர்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X