தாய்மை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2021
00:00

கல்பனாவை வற்புறுத்தி, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற சந்திரன், 10 நிமிட பயணத்திற்கு பிறகு, ஒரு இடத்தில் நின்றான். வழி நெடுக உதிர்ந்த பூக்களையும், சிதைந்த மாலைகளையும் பார்த்தபடியே வந்த கல்பனாவுக்கு, சற்று கலக்கம் அதிகமானது. போதாக்குறைக்கு, துாரத்தில் ஒரே புகை மூட்டமாய் இருந்தது.
''என்னங்க... பக்கத்துல சுடுகாடு இருக்கு போல... எனக்கென்னவோ இந்த இடம் சரி வரும்ன்னு தோணல.''
''சுடுகாடுன்னு சர்வ சாதாரணமா சொல்லிட்டே. இந்த இடத்துக்கு வர, அவனவன் சாக வேண்டியிருக்கு தெரியுமா?'' சந்திரன் சொன்ன பதில், கல்பனாவுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது.
''உங்க நகைச்சுவையை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு, நான் சொல்றதை கொஞ்சம் சீரியசாக் கேளுங்க.''
''நம்மகிட்ட இருக்கற பணத்துக்கு, இந்த ஏரியாவுல தான், இடம் வாங்க முடியும், கல்பனா. பக்கதுல பலரும் வீடு கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நீ வேணா பாரேன், ரெண்டு, மூணு வருஷத்துல நல்லா, 'டெவலப்' ஆயிடும்,'' கல்பனாவைச் சமாதானப்படுத்தும் எண்ணத்தில் பேசினான், சந்திரன்.
சுற்றுமுற்றும் பார்த்தாள், கல்பனா. சில, இடங்களில் கட்டுமான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. குடியேறிய சில வீடுகளின் மாடியில், துவைத்த துணிகள் காய்ந்து கொண்டிருந்தன.
காலியாக இருந்த சில இடங்களில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். கண்ணுக்கெட்டும் துாரத்தில், புதிதாக ஒரு மளிகை கடை முளைத்திருந்தது.
சந்திரன் வாங்க முடிவு செய்திருக்கும் இடத்திலிருந்து, சற்று துாரத்தில் சுடுகாடு தெரிந்தது. அதனுள் ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு பெண்மணி, அங்குமிங்கும் ஓடியாடி, வெட்டியான் செய்யும் வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு வயது, 50ஐ கடந்திருக்க வேண்டும். அப்பெண்ணையே ஆச்சர்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த கல்பனா, ஆழ்ந்த சிந்தனையிலிருந்து மீண்டு, ''என்னங்க... வாங்க போகலாம்,'' என்றாள்.
''என்ன முடிவு பண்ணின கல்பனா?''
''பக்கத்துலயே சுடுகாடு இருக்கு; அதான் யோசிக்கறேன்.''
வீடு வந்து சேரும் வரை, சந்திரனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாய் பயணித்தாள், கல்பனா. வீட்டில் அவ்வப்போது நடந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

அன்று காலை, கல்பனா எழ, கொஞ்சம் தாமதமாகி விட்டது.
'மணி என்னாகுது, இன்னும் வாசல் தெளிச்சு, கூட்டல. வாடகை கொடுத்துட்டா இவளுக்கெல்லாம் மகாராணின்னு நினைப்பு...' காளியம்மாவின் குரல் கேட்டு, பதற்றமாய் வெளியே ஓடி வந்தாள், கல்பனா.
'சாரிம்மா... நேற்றெல்லாம் ஒரே தலைவலி. ராத்திரி முழுக்க துாக்கமில்ல. அதான் லேட்டாயிடுச்சி...' வேகவேகமாய் தண்ணீர் தெளித்து, கூட்டி, கோலம் போட்டு முடித்தாள்.
பின், காளியம்மா அருகே சென்று, 'அம்மா... மாடிக்கு தண்ணீர் சரியாக வரமாட்டுதும்மா...' சொல்லும்போதே அச்சத்தால் குரல் தடுமாறியது.
'தோ பாரு கல்பனா... உங்கிட்ட பல தடவை சொல்லிட்டேன். முனிசிபல் பைப்ல தண்ணி வரும்போதே வேலையெல்லாம் முடிச்சிடணும். விடிய விடிய துாங்கிட்டு, அப்புறம் அது வரல இது வரலங்கிறது...' என, இப்படியான பேச்சுகள் பலவற்றை அன்றாடம் கேட்டுக் கேட்டு, வாடகை வீடே வெறுத்துப் போனது.
போதாக்குறைக்கு விருந்தாளிகள் வந்து தங்கினால், 'கக்கூஸ் தொட்டிய சீக்கிரம் ரொப்பிடுங்க. நாங்க அப்பப்போ, 'கிளீன்' பண்ணித் தொலைக்கிறோம்...' அதட்டலாய் அவர்கள் காதுபட காளியம்மா பேசியதால், உறவுகள் வருவதும், அறவே நின்று போனது.
பழைய கசப்பான அனுபவங்களை அசைபோட்டபடி வீடு சேர்ந்த கல்பனா, குளியலறைக்கு போனாள்.
'எவ்வளவு நாளைக்குத்தான் வாடகை வீட்டுலயே காலத்தை ஓட்டறது. சுடுகாட்டுக்கு பக்கத்தில் இருந்தாலென்ன...' மனதை சமாதானப் படுத்தியபடியே குளித்து, பூஜையறைக்கு சென்று விளக்கேற்றினாள். காளியம்மாவின் ஏச்சுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, காபியுடன் சந்திரன் அருகில் வந்தமர்ந்தாள்.
''என்னங்க... அந்த இடம் எனக்கு, ஓ.கே., வீடு கட்ட ஏற்பாடு பண்ணுங்க... சீக்கிரம் குடி போயிடணும்,'' என்றாள்.
''நல்ல முடிவு எடுத்திருக்கோம். அப்படியே அம்மன் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வரலாமே,'' என்றான், சந்திரன்.
மகிழ்ச்சியில் மறுப்பேதும் சொல்லாமல் சட்டென கிளம்பினாள், கல்பனா.
சற்று நேரத்தில், அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றனர். கூட்டம் குறைவாகவே இருந்ததால், விரைவாய் தரிசனம் முடிந்தது. புறப்படும் நேரத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மரகதத்தின் குரல்.
''ஏம்மா... கல்பனா எப்படி இருக்கே,'' என்றார்.
அக்கம் பக்கம் வசிக்கும் மக்களிடம் பேசிப் பழகறது கூட ஒரு குற்றம் என, காளியம்மா அடிக்கடிச் சொன்னதால், அவர்களிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டாள். ஆனால், இதுபோல சந்தர்ப்பங்களில் அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவாள்.
''போகும்போது என்னத்த கொண்டு போகப் போறாங்களோ... நீ எப்படித்தான் அந்த காளியம்மா வீட்டுல குடியிருக்கியோ,'' சலிப்பாய் ஆரம்பித்தார், மரகதம்.
உடன் பிறந்தவள் போல, அரவணைப்பாக பேசும் மரகதம் அக்காவிடம், அந்த நல்ல செய்தியை முதன் முதலில் சொல்ல மனசு துடித்தது.
''அக்கா... இன்னும் ஆறு மாசம் தான். அப்புறம் புது வீட்டுக்கு போயிடுவோம்,'' என்றாள்.
''நல்ல செய்தி சொல்லியிருக்கே, கல்பனா. கேட்கவே சந்தோஷமா இருக்கு. உன் வாரிசு, சொந்த வீட்டுல தான் பொறக்கணும்ன்னு எழுதியிருக்கு. சீக்கிரம் முடிங்க, அப்புறம் இந்த அக்காவ மறந்துடாத,'' என்றார்.
''கூடப் பொறந்த அக்காவா நினைச்சு பழகறேன். உங்களையெல்லாம் மறந்துடுவேனா,'' சிரித்தபடியே விடை பெற்றாள்.
வீடு வந்து சேரும் வரை, புது வீட்டைப் பற்றிய சிந்தனைகள் வந்து வந்து போயின.

ஒரு வாரத்தில், இடம் பதிவு செய்யப்பட்டது. கட்டட வேலைக்கு, மேஸ்திரி ஒருவரை பார்த்து பேசினான், சந்திரன். காளியம்மாவிடம் செய்தியை சொல்ல வேண்டும் என முடிவு செய்து, இருவரும் சென்றனர்.
''வீட்டு வேலையை ஆரம்பிக்கப் போறோம். ஆறு மாசத்துல முடிஞ்சிடும். அதான் முன்கூட்டியே சொல்லிடறோம்,'' என்றாள், கல்பனா.
வேண்டா வெறுப்பாய், ''எந்த இடத்துல வீடு கட்டப் போறீங்க,'' என்றாள், காளியம்மா.
இடம் வாங்கியிருக்கும் ஏரியாவை சொன்னதும், ''போயும் போயும் பொணம் புதைக்கிற சுடுகாட்டுக்கு பக்கத்துல தான் கிடைச்சுதா,'' சொல்லும்போதே வார்த்தைகளில் ஒரு எகத்தாளமும், அலட்சியமும் தெரிந்தது.

ஒருநாள் மாலை -
கட்டுமானம் முடிந்த பகுதிகளில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான், சந்திரன். அவனுக்கு உறுதுணையாய் உதவிகளை செய்து கொண்டிருந்தாள், கல்பனா.
திடீரென ஒரு புதிய உருவம், வீட்டு வாசல் முன். நெற்றி நிறைய குங்குமம், தலை நிறைய பூ, மங்களகரமான மஞ்சள் நிற புடவை; தெய்வ கடாட்சமாக நின்றிருந்தாள், ஒரு பெண்.
''அம்மா, என் பேரு அன்னம். பக்கத்துலதான் என் வீடு,'' என, சுடுகாட்டை காட்டினாள். முதன் முதலாய் அப்பெண்ணை அருகாமையில் பார்த்த கல்பனாவுக்கு, முதலில் சற்று பயம்.
''கொஞ்ச நாளாவே பாக்கறேன். வீட்டு வேலை ஆரம்பிச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுது. வந்து பார்க்கணும்ன்னு நினைப்பேன், வேலையிருக்கறதால முடியல. இன்னக்கி வேலை எதுவுமில்ல, பொழுதும் போகல. அதான் வந்தேன்,'' யதார்த்தமாக சொல்லி முடிக்கும்போது, கல்பனாவுக்கு அவள் மீதிருந்த பயம் சற்று குறைந்தது.
''இந்த வெட்டியான் வேலைக்கு, நீங்க எப்படிம்மா வந்தீங்க?'' என்றாள்.
''தாலி கட்டின படுபாவி, 'மலடி'ன்னு வீட்டை விட்டுத் துரத்திட்டான். செத்துடலாம்ன்னு நினைச்சி கடலுக்கு போனேன். ஒரு புண்ணியவான் காப்பாத்தி, அனாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டார். அங்கிருந்த ஒரு வயசான பாட்டி சாகும்போது, அவங்க பிணத்தை அனாதைன்னு சொல்லி, அடக்கம் செய்ய யாரும் முன் வரல. அப்போதிருந்தே இந்த வேலையை செய்ய ஆரம்பிச்சேன்,'' என்றாள்.

நான்கைந்து மாதங்கள் கடந்தன. அதற்குள் அந்த ஏரியா கல்பனாவுக்குப் பழகிப் போனது. அன்னம்மாவும் அவளுக்கு அதிக பரிட்சயமானாள்.
ஓய்வாக இருக்கும்போது ஏதாவது உதவிகள் செய்து, கொஞ்ச நேரம் கல்பனாவிடம் ஏதாவது பேசிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டாள், அன்னம்மா.
நாட்கள் விரைவாய் கடந்தன. ஒரு வழியாய் கட்டுமான வேலைகள் முடிந்தன. புதுமனை புகுவிழாவுக்கு அழைப்பு தயாராகியது.
மரியாதை நிமித்தமாக முதல் பத்திரிகையை காளியம்மாளிடம் கொடுக்க, இருவரும் சென்றனர். அலட்சியமாய் அதை வாங்கிய காளியம்மா, பிரித்துப் பார்க்காமல் மேசை மீது போட்டார். அதற்குமேல் அங்கு நிற்க கல்பனாவின் மனம் ஒப்பவில்லை.
விரைவில் புது வீடு குடிபோகப் போகிறோம் என்ற மனநிலையோடும், உறுதியோடும், ஆகவேண்டிய வேலைகளை ஆர்வமாய் கவனித்தனர்.
அன்னம்மாளுக்கும் அழைப்பு தரப்பட்டது.
''என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு கூப்பிடறீங்களே,'' கையில் வாங்கிய அழைப்பிதழை கண்களில் ஒத்திக்கொண்டாள், அன்னம்மா.

அன்று, புதுமனை புகுவிழா. அதிகாலை, 4:00 மணி.
முதல் விருந்தாளியாய் வீட்டுக்குள் நுழைந்த அன்னம்மா, வேலைகளை தானாகவே எடுத்துக் கட்டி செய்து கொண்டிருந்தாள். விருந்தினர்கள், உறவினர்கள் வரத்து அதிகமாக, விழாக்கோலம் பூண்டது வீடு.
வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருந்த காளியம்மா, உடன் இருந்த மரகதத்திடம் வெறும் குறைகளாக சொல்லிக் கொண்டிருந்தாள். எரிச்சலடைந்த மரகதம், சற்று நேரத்தில் அவளிடமிருந்து விலகிச் சென்றாள்.
பூஜை அனைத்தும் முடிந்தன. இருவரையும் ஆசிர்வதிக்க அனைவரும் காத்திருந்தனர். முண்டியடித்து முதலில் வந்து நின்றாள், காளியம்மா.
சந்திரனும், கல்பனாவும் உள்ளே சென்று பூஜையறையில் எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கின் எதிரில் நின்றனர்.
ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த அன்னம்மாளை அருகே அழைத்து, யாரும் எதிர்பாரா வண்ணம், இருவரும், அவர் காலில் விழுந்து, முதல் ஆசி பெற்றனர். அப்போது, அன்னம்மாவின் உடல் சிலிர்த்தது.
வாழ்நாளில், துக்கத்துக்கு மட்டுமே அழுது பழகிய அன்னம்மா, 'தாய்மை' அடைந்த உணர்வில், முதன் முறையாய் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

பூபதி பெரியசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
25-ஜூலை-202111:29:11 IST Report Abuse
Girija 1960 களில் வந்திருக்க வேண்டிய பகுத்தறிவு கதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X