நங்கையர் திலகம்! | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements
நங்கையர் திலகம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
00:00

'உயிரை விட்டுக் கொண்டிருப்பவனின் கடைசி உள்மூச்சும் வெளி மூச்சும்தான் வாழ்க்கை. இதில் அன்பை மட்டும் விதையுங்கள்!' - ஏதோவொரு பயணத்தில் சுவரொட்டியில் கண்ட இவ்வரிகள், மதுரை ராஜகம்பீரம் பகுதிவாசியும், சமூக செயற்பாட்டாளருமான நந்தினி முரளியிடம் பேசியபோது நினைவிற்கு வந்தன!

'அன்பு' - நந்தினியின் பார்வையில்...?
நான் அன்பு காட்டுறதுக்கும், எனக்கு அன்பை தர்றதுக்கும் என்னைச் சுற்றி நல்ல மனிதர்களும், என் செல்ல பிராணிகளான மல்லியும், மின்னலும் எப்பவும் இருந்திருக்காங்க. நகரும் மேகங்களை வேடிக்கை பார்த்துட்டு இருக்குற குளத்து நீரை தொந்தரவு செய்ய சிறு கல் போதுமானது இல்லையா; அப்படித்தான் ஒருசிலரோட அணுகுமுறை, அமைதியான என் வாழ்க்கை மேல கல் எறிந்தது!

உங்க கணவர் தற்கொலை பண்ணிக்கிட்டதா...
ஆமா... உண்மைதான்! ஆதரவற்ற ஹெச்.ஐ.வி., நோயாளிகள், மாற்று பாலினத்தவர்கள்னு சமூகத்தால ஒதுக்கப்படுபவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்குற பணியில நான் தீவிரமா ஈடுபட்டிருந்த நேரம்; பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணரான என் கணவர் முரளி திடீர்னு தற்கொலை செய்துகிட்டார். நிறைய பேர் வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை தந்துட்டு இருந்த எனக்கு இது அதிர்ச்சி; வீட்டுக்கு வந்த பலரும் இது ஏன் நடந்தது, எப்படி நடந்ததுன்னு கிசுகிசு பேசிக்கிட்டது பேரதிர்ச்சி! அந்த துக்க நாள்ல, என் கையை பிடிச்சு 'தைரியமா இருங்க'ன்னு சொன்னவங்க ரொம்பவே குறைவு!

அந்த சூழல்ல உங்க மனநிலை?
தற்கொலை சம்பவம் ஒரு குடும்பத்துல நிகழ்ந்துட்டா, அந்த குடும்பத்தாராலேயே அது குற்ற செயலாகவும், அவமான சின்னமாகவும் பார்க்கப்படுது. இதை உடைச்சு பேசணும்னு முடிவு பண்ணிதான் தற்கொலை இழப்பில் இருந்து மீண்ட என் அனுபவத்தை தொகுத்து 'லெப்ட் பிகைண்ட்' புத்தகத்தை எழுதினேன்; தற்கொலை முன்னெடுப்பு மனநிலையை மாற்றும் 'ஸ்பீக்' அமைப்பையும் துவக்கினேன்.

ஆண் - பெண்; தற்கொலை இழப்பில் அழுத்தம் யாருக்கு?
ஒரு குடும்பத்துல மகனோ, மகளோ தற்கொலை செய்துகிட்டா தாய் மேலதான் விமர்சனங்கள் அதிகமா இருக்கும்; இறந்தது கணவன்னா மனைவியை பொறுப்பாக்கிடுவாங்க! எல்லா நிகழ்வுகள் மாதிரியே இந்த தற்கொலை விஷயத்துலேயும் பெண்களைத்தான் இந்த சமூகம் குறி வைக்குது; உலகளவுல நடக்குற தற்கொலைகள்ல 70 சதவீதம் இந்தியாவுல நடக்குறப்போ நம்ம பெண்களோட நிலையை நினைச்சுப் பாருங்க!

'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!' - உங்களுடைய கருத்தும் இதுதானா?
ஆமா... அதனாலதான் சொல்றேன்; நமக்கு தெரிந்தவர்களோட குடும்பத்துல இப்படி ஒரு நிகழ்வுன்னா நாம ஒதுங்கி நிற்கக் கூடாது. அவங்களுக்கு ஆதரவா நிற்கணும்; அவங்க மனசுல அன்பை விதைக்கணும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X