ஆக., 3, ஆடிப் பெருக்கு
ஆடிப்பெருக்கை, ஆடி மாதம் 18ம் தேதி கொண்டாடுவது வழக்கம். இம்மாதத்தின், 18ம் தேதி கொண்டாட, அப்படி என்ன முக்கியத்துவம்?
நம் முன்னோர் எந்த ஒரு விழாவையும் ஆன்மிக காரணங்களுக்காக மட்டுமின்றி, அறிவியலையும் இணைத்தே கொண்டாடி இருக்கின்றனர். ஆடிப்பெருக்கும் அதே ரகம் தான். இது தண்ணீரைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் விழா. ஒவ்வொரு துளி நீரும், உலகுக்கு மிகவும் உபயோகமானது.
ஆடி 18 அன்று, விவசாயிகள் விதைக்கும் பணிகளைத் துவங்குவர். இந்த மாதத்தில் சூரியன், கடக ராசிக்கு செல்வார். கடகத்திற்குரிய கிரகம், சந்திரன். நீர்நிலைகளுக்கு இவரே அதிபதி.
பவுர்ணமியன்று கடல் அலைகள், அதிக உயரம் எழுவது கண்கூடு. ஆறுகள், இந்நாட்களில் சந்திரனின் ஒளியைக் கிரகித்து, பளபளவென மின்னும்.
கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன. ஆடி 18 அன்று, பூச நட்சத்திரத்தின் அதிபதியான சனியின் பிடியிலிருந்து விடுபடும் சூரியன், புதன் நட்சத்திரமான ஆயில்யத்திற்குள் செல்வார். சூரியனும், புதனும் நண்பர்கள் என்பதால், இருவரும் இணைந்து உலகிற்கு நன்மை செய்ய எண்ணுவர். அப்போது, அவர்கள் கண்ணில் முதலில் படுவது, பயிர் வகைகள்.
இந்த கிரகங்களுக்கு, பயிரை சிறப்பாக விளைய வைக்கும் சக்தி உண்டு. பயிர்களில் பச்சையத்தன்மையை அதிகரித்து, விளைச்சலை செழிப்பாக்குவர். எனவே தான், சூரியன், ஆயில்யத்தில் கால் வைக்கும், ஆடி 18 அன்று, விதைக்க துவங்கினர். இதையே, 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பர்.
'பட்டம்' என்றால் பறப்பது, படிப்பு மட்டுமல்ல. 'நீர்நிலை, நாற்றங்கால்' என்ற அர்த்தமும் உண்டு. ஆடி மாதம், நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பை அனுசரித்து, நாற்றங்காலில் கால் வைக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு கற்றுத் தருகிறது, இந்த பழமொழி.
பயிர்கள் செழிப்பாக விளைய, தண்ணீர் அவசியம். இதனால் தான், ஆறுகளை வணங்கத் துவங்கினர், மக்கள். காவிரி, தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளை, பெண் தெய்வங்களாகக் கருதி, பூஜை செய்தனர்.
தாமிரபரணி பாயும் திருநெல்வேலி மண்ணுக்கு, 'நெல்' என்ற தானியத்தின் பெயரையும், காவிரி பாயும், தஞ்சைக்கு (தண்+செய்) 'குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த பகுதி' என்ற பொருளிலும், பெயர் சூட்டினர்.
ஆடிப்பெருக்கு நன்னாளில் விதைக்கும் விதை, எவ்வாறு செழித்து வளர்கிறதோ, அதுபோல் தங்கள் மண வாழ்க்கையும் செழிக்க, புதுமணத் தம்பதியர், தென்னக கங்கையான காவிரிக்கரையில், மாங்கல்ய பூஜை செய்கின்றனர்.
காவிரி தாயை சிலை வடிவில், கும்பகோணம் மகாமக குளக்கரையிலுள்ள, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசிக்கலாம். ஆடிப்பெருக்கு சாதாரண விழாவல்ல; இயற்கையைக் காக்கும் விழா; வாழ்வில் இன்பம் தரும் விழா.
தி. செல்லப்பா