நுாதன திருட்டு!
சமீபத்தில், காய்கறி சந்தைக்கு சென்றிருந்தேன். அங்கு, கை குழந்தையுடன் நின்றிருந்த தம்பதியர், 'காய்கறி வாங்க வந்த இடத்தில், 'டூ வீலரின்' சாவி தொலைந்து விட்டது. வேறு சாவியும் இல்லை. வண்டியை, 'மெக்கானிக் ஷாப்'பிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆட்டோவில் ஏற்ற, கொஞ்சம் உதவ முடியுமா...' என்றனர்.
அவர்கள் மீது இரக்கப்பட்டு, 'டூ - வீலரை' ஆட்டோவில் ஏற்றி விட்டேன். பிறகு, சந்தையில் காய்கறி வாங்கி திரும்புகையில், 'டூ - வீலர்' ஒன்று திருட்டு போய் விட்டதாக, சிலர் பேசியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
'டூ - வீலரை' திருட்டு கொடுத்து நின்றிருந்தவரிடம், அதன் பதிவு எண் மற்றும் மற்ற விபரங்களை கேட்டேன். அவர் கூறியதை கேட்டதும், துாக்கிவாரிப் போட்டது. கை குழந்தையுடன் வந்த தம்பதி, திருட்டு கும்பல் என, தெரிய வந்தது.
உடனே, அவரிடம் விஷயத்தை கூறி, அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்று, அவர்களிடம் விபரத்தை கூறினேன். சக ஆட்டோக்காரர்களை தொடர்பு கொண்ட அவர்கள், 'டூ - வீலரை' ஏற்றிச் சென்றவரை கண்டுபிடித்து, தகவல் தந்தனர். அந்த ஆட்டோக்காரர் கூறிய, 'மெக்கானிக் ஷாப்' முகவரிக்கு விரைந்தோம்.
மெக்கானிக்கிடம் விஷயத்தை கூறி, ரகசியமாக போலீசை வரவழைத்து, அந்த தம்பதியரை போலீசிடம் பிடித்து கொடுத்தோம். மற்றவர்களின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கை குழந்தையுடன் நுாதன திருட்டில் ஈடுபடுவதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தோம்.
இதுபோன்ற திருடர்களால், உதவி செய்யக்கூட பயமாக இருக்கிறது. நண்பர்களே, சுதாரிப்புடன் இருந்து கொள்ளுங்கள்.
- எ. மகேஷ், கோவை.
மாற்று யோசனை வாழ்வை உயர்த்தும்!
எங்கள் பகுதியில், முதுகலை கணிதம் முடித்த, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர், வீடு வீடாக சென்று பேப்பர் போடுகிறார். இதில், அவருக்கு கிடைப்பது சொற்ப வருமானம் தான். கூடுதல் வருமானம் பெற, பேப்பர் போடும் வீடுகளிலுள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, 'ஆன்லைன்' வழியாக, கணித பாடத்திற்கு, 'டியூஷன்' எடுக்க துவங்கினார்.
நட்பான அணுகுமுறையும், எளிமையான கற்பித்தல் முறையும், அவருக்கு நற்பெயரை ஈட்டித் தர, பேப்பர் போடாத வீடுகளிலிருந்தும், 'ஆன்லைன் டியூஷனு'க்கு, மாணவர்கள் சேரத் துவங்கினர். அவருக்கும் கூடுதல் வருமானம் கிடைத்து, நம்பிக்கையோடு வாழ்வில் உயரத் துவங்கினார்.
வருமானம் குறைவு என்று வருந்துவதோடு நில்லாமல், மாற்றி யோசித்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு, அந்த இளைஞரே உதாரணம்!
எஸ். அலமேலு, கள்ளக்குறிச்சி.
'கொரோனா' ஊசி எச்சரிக்கை!
உறவினர் பெண்ணின் மொபைல் போனிற்கு அழைப்பு விடுத்த ஒருவர், 'கொரோனா' தடுப்பூசி சேவை மையத்திலிருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
'ஊசி போடுவதற்கு, முன்பதிவு செய்ய வேண்டும். ஆதார் கார்டு எண் மற்றும் 'இ - மெயில்' முகவரி வேண்டும். ஆதார் எண்ணை, வங்கி கணக்குடன் இணைத்துள்ளீர்களா...' என, கேட்டுள்ளார்.
'ஆதார் கார்டை எடுத்து விட்டு, போன் செய்கிறேன்...' எனக் கூறி, இணைப்பை துண்டித்திருக்கிறாள், உறவினர் பெண். அந்நேரம் உறவினரின் மகன் அங்கு வர, விபரம் கேட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்திருக்கிறான்.
உறவினர் மகன் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் அளிக்காமல் தடுமாறவே, சந்தேகம் அடைந்த அவன், போலீசுக்கு போன் செய்வதாக மிரட்ட, இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர், உறவினர் பெண்ணிடம், 'வேறு என்னென்ன தகவல்கள் கேட்டார்...' என்றான்.
'போனிற்கு வரும், ஓ.டி.பி., எண்ணை சொல்ல வேண்டும்; அப்போது தான் பெயர் பதிவு செய்யப்படும்...' என கூறியதை கேட்டு, அதிர்ச்சி அடைந்தான், உறவினர் மகன்.
'கொஞ்சம் தாமதாக வந்திருந்தால், உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை, அந்த நபர், 'ஆட்டையை' போட்டிருப்பான். அவன் ஏமாற்று பேர்வழி. இனியாவது எச்சரிக்கையோடு இருங்கள்...' என்றான்.
விபரம் கேட்டு, மிகவும் அதிர்ச்சியடைந்தேன். திருடுவதற்கு எப்படியெல்லாம் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றனர், இந்த வீணர்கள். நண்பர்களே... யாரேனும் தொலைபேசியில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் முகவரி என, எதைக் கேட்டாலும், தயவுசெய்து கொடுக்க வேண்டாம். கவனமுடன் இருங்கள்.
- எம். புனிதா, கோவை.