* அன்புச்செல்வன், வீரபாண்டி: மு.க.அழகிரி, தனிக் கட்சி தொடங்கப் போகிறாராமே?
பாண்டிய நாட்டுக்கு ஒரு அரசர் வேண்டாமா!
எம். கலையரசி, அஸ்தம்பட்டி: சசிகலா இப்போது யாரை நம்புகிறார்?
'வாய்ஸ் ரெக்கார்டரை!'
* ஆ.சங்கரன், திசையன்விளை: கவர்னர் உரையில், 'ஜெய்ஹிந்'தை விட்டு விட்டாரே...
இதுவெல்லாம், தி.மு.க.,வின் சதி! தமிழகத்தில் ஹிந்தி உச்சரிக்கக் கூடாது; தமிழகத்தை தனி நாடாக்கி, அவர்கள் அரசர்கள் ஆக வேண்டும் என்பதன் முயற்சி!
'ஜெய்ஹிந்த்' என்றால், இந்தியா வெல்லட்டும் என்று பொருள். சுதந்திரத்திற்கு முன், விடுதலை போராட்ட வேட்கையை மக்களிடம் ஊட்டுவதற்காக, தமிழ் தியாகி செண்பகராமன் என்பவரால் முழங்கப்பட்ட வார்த்தை!
ஆர். சேகர், சென்னை: தமிழகத்தில், கொங்கு நாடு உருவாக்கினால் அதன் விளைவுகள் யாருக்கு சாதகம்?
அங்கு பலமில்லாத கட்சிக்கு தான்!
* கே. ராமநாதன், மதுரை: தி.மு.க., அரசு, மத்திய அரசுடனான தொடர் மோதல்கள் செய்யும் போக்கால் யாருக்கு லாபம்?
நஷ்டம் - ஓட்டு போட்ட மக்களுக்கு!
பா. பரத், சிதம்பரம்: வாசகர்களை முதலாளி என்கிறீர்கள்... அப்படி என்றால், முதலாளியை என்ன சொல்லி அழைப்பீர்கள்?
ஆங்கிலத்தில் தான்! அவரை, 'பாஸ்' என்று தான் அழைப்பேன்!
எஸ்.நிக்கில் குமார், ராமேஸ்வரம்: தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை, 'கொங்கு நாடு யூனியன் பிரதேச'மாக மாற்றும் மத்திய அரசின் திட்டம் பற்றி...
தொழில் துறையில் முன்னேற்றமாக உள்ள பிரதேசம், கொங்கு நாடு! அங்குள்ள மக்களும் உழைப்புக்கு தயங்காதவர்கள். இவர்களுக்கு, தி.மு.க.,வில் இருந்து நன்மை கிடைக்கவில்லை. அதனால், மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் உதவிகளைப் பெற, 'யூனியன் பிரதேச'மாக்க வேண்டும் என்று கோருகின்றனர்!
ஜி. முத்து ஜவகர், திருநெல்வேலி: அண்ணாமலையால் பா.ஜ., முன்னேறுமா?
நமீதாவிடம் கேட்டு சொல்லச் சொல்கிறேன். ஹி... ஹி...