உயிரோடு உறவாடு... 21 | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
உயிரோடு உறவாடு... 21
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
00:00

முன்கதை சுருக்கம்: மைத்ரேயி தங்க, வீட்டில் ஒரு அறை ஒதுக்குவதாக கூறினாள், மாமி. தமிழ்ச்செல்வியுடன் சென்று, ரவுடி முனிராஜை சந்தித்த ரிஷியை, 'மாஸ்க்'கை கழற்றுமாறு, முனிராஜ் கூற, பதற்றமடைந்தான் -

''மாஸ்க்கை கழற்றி முகத்தை காட்டு...'' என்ற முனிராஜின் குரலைத் தொடர்ந்து, துளியும் தயக்கமின்றி, 'மாஸ்க்'கை விலக்கினான், ரிஷி.
கூலிங்கிளாசையும் கழற்றி முழு முகத்தை காட்டியவன், சற்று துணிச்சலாக, ''உங்களோட ஒரு, 'செல்பி' எடுத்துக்கட்டுமா?'' என்று கேட்டான்.
அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை, முனிராஜ்.
சற்று எரிச்சலுடன், ''உனக்கு தைரியம் தான்... என்னாண்ட யாருமே இப்பிடி கேட்டதில்ல. கிளம்பு கிளம்பு,'' என்றான்.
லேசான சிரிப்புடன் கூலிங்கிளாசை திரும்ப போட்டுக் கொண்ட ரிஷி, 'மாஸ்க்'கையும் அணிந்து திரும்பி நடந்தான். தமிழும் தொடர்ந்தாள்.
வெளியே சென்று பைக்கில் ஏறி புறப்படவும், தன்னை மறந்து அவன் முதுகின் மேல் சற்று முகம் சாய்த்த தமிழ், ''அப்பாடா... வந்த வேலை நல்லபடியா முடிஞ்சுச்சு. ஆமா, அவன், 'மாஸ்க்'கை கழட்டச் சொன்ன உடனேயே கழட்டிட்டியே... உனக்கு அப்ப தயக்கமா இல்லியா?'' என்று கேட்டாள்.
அடுத்த நொடி, பைக்கை சற்று ஓரமாக நிறுத்தியவன், தமிழிடம் சற்று தீர்க்கமாகவே பேசத் துவங்கினான்.
''தமிழ்... கேமரா ஆதாரத்தை, நம்ப, எம்.டி.,க்கு போட்டு காட்டும்போது, எப்படியும் நாம போயிட்டு வந்தது தெரியத்தான் போகுது. அப்புறமா அது, ஜனா மூலமா இந்த முனிராஜுக்கும் தெரியப் போகுது. நம்பளை முன்னாடியே தெரிஞ்சுகிட்டிருந்தா தான் ஆபத்து...
''நாம வேவு பார்க்க வந்ததை தெரிஞ்சுகிட்டு, 'ஜனாவா... அது யாரு'ன்னு கேட்டிருப்பான். நாம தான் பேச வேண்டியத பேசி, வாங்க வேண்டிய உண்மையை, அவன் வாயாலேயே வாங்கிட்டோமே... அதனால தான் தைரியமா என் முகத்தை காமிச்சேன்.
''அதோட நம்பள, 'ஹிட்' பண்ணின அந்த கார்ல வந்த நபர்களும் இங்க இல்லை... அதனால, வந்த வேலை சுலபமாயிடுச்சு,'' என்றான்.
''உன் கணக்கு, சரி ரிஷி... அதே சமயம், நாம் அவனை, 'சீட்' பண்ணிட்டதா கோபப்பட்டு நம்மகிட்ட திரும்ப மோதினா என்ன பண்றது?''
''பயப்படறியா, தமிழ்?''
''பயப்பட வேண்டியதுக்கு பயப்படத்தானே வேணும், ரிஷி?''
''பயந்தா, 'மீடியா' உலகத்துல வாழ முடியாது. ஜனா பயந்தாரா, நம்பளை ஒடுக்க... நாம மட்டும் எதுக்கு பயப்படணும்?''
''பயப்பட வேண்டாம்... எச்சரிக்கையா இருக்கலாம்ல?''
''இருப்போம். அதை மீறி ஏதாவது நடந்தா சந்திப்போம்; வேற வழி கிடையாது தமிழ்.''
''உன் தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... ஆனா, நீ எனக்காக இவ்வளவு பெரிய, 'ரிஸ்க்' எடுத்தது தான் நெருடுது.''
''ஆனா, எனக்கு இது சந்தோஷமா இருக்கு, தமிழ். ஜனா எப்படின்னு, உன் வருங்கால புருஷனுக்கு தெரியணும். சும்மா ஒரு அரை மணி நேரம் பேசிட்டு, அந்தாளை, 'ஜென்டில் மேன்'ன்னு சொன்னதை எல்லாம் என்னால மறக்க முடியாது.''
ரிஷியின் உணர்ச்சி கொந்தளிப்பை சற்றே கண்கள் பனிக்க பார்த்தவள், ''சரி புறப்படு... இனி, ஒவ்வொரு நிமிஷமும், 'த்ரில்' தான் நமக்கு,'' என்றாள்.
அவனும், அவளுடன் அந்த இரும்புக் குதிரையை செருமச் செய்து விரட்ட, அதுவும் ஓடத் துவங்கியது.

எம்.டி.,யின் நவீனமான குளிர்பதன அறைக் கதவை திறந்து, ஜனா உள்ளே நுழைந்தபோது, உள்ளே, தமிழ்ச்செல்வி, ரிஷி இருவருமே, அவர் எதிரில் அமர்ந்திருந்தனர். அவர்களை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ஜனா.
''கூப்பிட்டீங்களா சார்?'' என்றபடியே, அவர் எதிரில் மிகப் பணிவாக நின்றார், ஜனா.
பதிலுக்கு எதுவும் பேசாமல், 'லேப் டாப்'பை, 'ஆன்' செய்து, ஜனாவுக்கு திருப்பி காண்பித்தார், எம்.டி.,
அதில், ஜார்ஜ்டவுன் காயலான் கடையில், முனிராஜிடம் பேசின அவ்வளவு பேச்சும் காட்சிகளாகவே ஓடியது.
கேமராவில் இருந்ததை, 'லேப் டாப்'புக்குள் கடத்தி, அதை, எம்.டி.,யின் மெயிலுக்கும் அனுப்பியது, அங்கே ஓடி முடிந்தது. ஜனா முகத்தில் வியர்வை புள்ளிகள்; கண்களில் மருட்சி. அதை மறுக்க முடியாதபடி ஒரு தயக்கம், தடுமாற்றம்.
''இன்னிக்கு, ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்த வீடியோ தான் சார், இது... இவரை கையும், களவுமா பிடிக்கணும்ங்கறதுக்காக, நான் எடுத்த, 'ரிஸ்க்' சார் இது!
''நாங்க ரெண்டு பேரும் இப்பதான் வளரவே துவங்கியிருக்கோம். ஆனா, எங்க மேல தான் இவருக்கு எவ்வளவு பொறாமை... அதை கூட சகிச்சுக்கலாம். ஆனா, எங்கள, 'ஹிட்' பண்ண, இவர் ரவுடிகளை ஏவி விட்டது, எவ்வளவு பெரிய வன்முறைன்னு யோசிச்சு பாருங்க.
''நல்லவேளை, சிறு காயத்தோட நான் தப்பிச்சேன். என் காலோ, கையோ போயிருந்தா, என் எதிர்காலத்துக்கு யார் சார் பொறுப்பு?''
ஜனா காதுபட, தன் கேள்விகளை கேட்டு நிறுத்தினான், ரிஷி.
''என்ன மிஸ்டர் ஜனா... 'இதெல்லாமே போர்ஜரி, அந்த முனிராஜ் யாருன்னே தெரியாது'ன்னு சொல்லப் போறீங்களா... இல்ல, தப்ப ஏத்துக்க போறீங்களா?'' என்றார், எம்.டி.,
ஜனாவிடம் இறுக்கம். இப்படி ஒரு செயல்பாட்டில் ரிஷி இறங்குவான் என்பதை, அவரால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
'முனிராஜை இவனுக்கு எப்படி தெரியும்?' என்ற கேள்வி, அவருக்குள் குடையத் துவங்கியிருந்தது.
''நாங்க கூட, எங்கள, 'ஹிட்' பண்ணவங்கள சரியா கவனிக்கல. ஆனா, அந்த ரோட்ல இருந்த மெக்கானிக், அவங்கள பார்த்துட்டாரு. அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஏன்னா, அந்த மெக்கானிக், கொஞ்ச காலம் அந்த குரூப்ல இருந்து, பின்னால திருந்துனவர்.
''அதனால, இது முனிராஜ் குரூப் வேலைன்னு, தெரிய வந்தது. அவர்தான் ஜார்ஜ்டவுன் முகவரியையும் தந்தாரு,'' என்று, அதற்கும் ஒரு பதிலை அப்போதே ரிஷி சொல்லவும், ஜனாவிடம் ஸ்தம்பிப்பு.
அப்போது, கச்சிதமாய் அவரை போனில் கூப்பிட்டான், முனிராஜ்.
திரையில் அவன் பெயரை பார்க்கவும், வேகமாய், 'கட்' செய்தார்.
அதைப் பார்த்த ரிஷி, ''சார்... இப்ப, இவர் போனை வாங்கி பாருங்க. அந்த முனிராஜ் நிச்சயம் போன் செய்திருப்பான். நான் பணத்தை, ஏ.டி.எம்.,லேர்ந்து எடுத்துகிட்டு வரேன்னு சொல்லிட்டு, நேரா நம்ப ஆபீசுக்கு வந்துட்டேன்.
''அதனால, ஏன் பணம் வரலேன்னு கேட்டு, போன் பண்ணியிருப்பான் சார். மேலும், இப்ப வந்த போன் கூட அவனா இருக்கலாம், நீங்க வாங்கிப் பாருங்க, நான் சொன்னது உண்மைன்னு தெரியும்,'' என்றான், ரிஷி.
பதைத்து போய் விட்டார், ஜனா.
உற்றுப் பார்த்தபடியே இருந்தார், எம்.டி., ஜனாவின் மவுனமும், வியர்வையுமே அவர் சரண்டராகப் போவதை சொல்லியது. இந்த ஆதாரத்துடன், போலீசில் புகார் கொடுக்கலாம்; உள்ளேயும் துாக்கி போடலாம். ஆனால், அதை விரும்பவில்லை, எம்.டி.,
''மிஸ்டர் ஜனா... எனக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு. உங்க மவுனமே நீங்க குற்றவாளிங்கிறதை சொல்லாம சொல்லிடுச்சு. ஒரு சீனியரா, வழிகாட்டியா இவங்களுக்கு, 'சப்போர்ட்' பண்ண வேண்டிய நீங்க, இப்படி ஒரு தரக்குறைவான காரியத்துல இறங்கினதை நினைச்சு, நான் ரொம்ப வருத்தப்படறேன்.
''இவங்க ரெண்டு பேரும், சேனலோட வளர்ச்சிக்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. எனக்கு, என் சேனலோட வளர்ச்சியை விரும்புறவங்க தான் வேணும். உங்களைப் போன்ற கிரிமினல் இல்லை.
''நீங்க, இதுநாள் வரை இங்க இருந்து, வேலை பண்ணினதை நினைச்சு, உங்க மேல போலீசில் புகார் கொடுக்காம விடறேன். அதேசமயம், நீங்க இங்க, உங்க பதவியை தொடர்றத நான் விரும்பல.
''நான், வேலையை விட்டு நீக்கினேன்னு இல்லாம, நீங்களே ராஜினாமா பண்ணிட்டு கிளம்புங்க,'' என்று, எம்.டி., சொல்லி முடிக்கவும், மவுனமாக அந்த அறையை விட்டு நகர துவங்கினார், ஜனா.
ரிஷியிடம் ஒரு சன்னமான தவிப்பு.
''என்ன ரிஷி?''
''இவர், ஒரு குற்றவாளிங்கிறது வெளிய தெரியணும் சார். ஏன்னா, இவரை ஒரு, 'ஜென்டில் மேனா' தமிழ்ச்செல்வியோட வருங்கால கணவரே நினைச்சுக்கிட்டிருக்கார். இந்தாளு அவர் மனசுலயும் ஏகப்பட்ட விஷத்தை துாவியிருக்கார், சார்.''
''புரியுது ரிஷி... ஆனா, ஜனாவை பெருசா தண்டிப்பது, பல காரணங்களுக்காக நல்லதில்ல. இந்த அளவு போதும். வேணும்னா தமிழ்ச்செல்வியோட வருங்கால கணவர்கிட்ட, நான் பேசறேன். நடந்ததை சொல்றேன். இதை, இந்த அளவோட விட்டுடுங்க; அதுதான் உங்களுக்கும் நல்லது,'' எம்.டி.,யின் பதில் ரிஷியை கட்டிப் போட்டது.
அதுவரை வாயை திறக்காத தமிழும், ''நீங்க சொன்னது தான் சரி. இவ்வளவு போதும். அவர், இங்க இல்லேங்கிறதே எங்களுக்கு பெரிய ஆறுதல். நாங்க இனி, இன்னும் சுதந்திரமா நிறைய ஐடியாக்களை செயல்படுத்துவோம் சார்,'' என்றாள்.
''அப்படியே செய்ங்க... எனக்கு அதுதான் வேணும். ரிஷி, நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். அந்த முனிராஜ் குரூப் திரும்ப தாக்கலாம். நான் வேணும்னா, கமிஷனர்கிட்ட சொல்லி வைக்கட்டுமா?''
''வேண்டாம் சார்... ஜனா மேலதான் பாய்வான், முனிராஜ். என்னை நினைச்சு பயப்பட வேணா செய்வான். அதோட, அவன் என் கூட பேசினது, 'வீடியோ' ஆதாரமா, என் கையில இருக்கறதால ஒதுங்கிதான் போவான்.
''ஆனா, இந்த ஜனா, நிச்சயம் சும்மா போக மாட்டார், சார். எங்களை பழி வாங்க ஏதாவது செய்ய முயற்சிக்கலாம். அப்படி அவர் நடந்தா, அதையும் தாண்டி நான் வருவேன்கிற நம்பிக்கை, எனக்கு இருக்கு சார்,'' என்றான், ரிஷி.
அதைக்கேட்டு சற்று பிரமித்தபடியே, ''100 சதவீதம், நீ ஒரு மீடியாகாரன் ரிஷி. உனக்கு ஒரு பெரிய எதிர்காலம் நிச்சயம்,'' என்றார், எம்.டி.,
''நிச்சயமா சார்,'' என்று, அதை ஆமோதித்தாள், தமிழ்ச்செல்வி.

ராஜினாமா கடிதத்தை, 'டைப்' செய்து, அதை, 'மெயிலும்' செய்து, மிக சோகமாக, தான் அதுவரை அமர்ந்திருந்த அந்த சுழல் நாற்காலியை ஒரு பார்வை பார்த்தபடியே, பிரீப்கேசை எடுத்து புறப்பட்டார், ஜனா.
யாரிடமும் தன் ராஜினாமா குறித்து, ஒரு வார்த்தை பேசவில்லை. சேனலை விட்டு வெளியே வந்தவர், தன் காரில் ஏறி அமர்ந்த நொடி, முனிராஜுக்கு தான் போன் செய்தார்.
''என்னா பாஸ்... போன் பண்ணா எடுக்காம, 'கட்' பண்றீங்கோ... ஒரு பக்கம் ரெண்டு பேரை அனுப்பிட்டு, இப்படி அமுக்கமா இருந்தா, இன்னா அர்த்தம்?'' என்று, அவனும் லைனில் வந்தான்.
''மண்ணாங்கட்டி... அந்த ரெண்டு பேர், யாரோ இல்லை. அவங்களை, 'ஹிட்' பண்ணத்தான், நான் உனக்கு பணம் கொடுத்திருந்தேன். ஆனா, அவங்க இப்ப உனக்கு, எனக்கு நல்லா பெரிய வேட்டா வெச்சுட்டாங்க...
''ஆமா, நான் தெரியாம தான் கேட்கறேன்... என் பேர் சொல்லிகிட்டு யாராவது வந்தா, நீ உடனே எனக்கு போன் பண்ணி என்ன விஷயம்ன்னு, 'கன்பார்ம்' பண்ணிக்க வேண்டாமா?''
''நான் கேட்டேன் பாஸ்... அவங்கதான் போன்ல பேச வேணாம். 'டைரக்ட் டீலா' இருக்கட்டும்ன்னு நீங்க சொன்னதா சொன்னாங்க.''
''உடனே நீயும் அதை நம்பிட்டியாக்கும்? சரி, இப்ப மட்டும் எதுக்கு போன் பண்ணே?''
''பார்ட்டி போய் இரண்டு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. பணத்தோட வரேன்னு சொன்னவங்க வரலை. அதான் சந்தேகம் வந்து, உங்களுக்கு போன் பண்ணினேன். ஆமா, அவங்க அப்ப உங்க ஆளுங்க இல்லியா?''
''ஒளியத் தெரியாதவன், தலையாரி வீட்லயே ஒளிஞ்ச கதை ஆயிடுச்சு... சட்டை பட்டன்ல, கேமராவோட வந்து, உன்கிட்ட, என் ஆள் மாதிரி பேசி, உன் வாயாலேயே எனக்கும், உனக்கும் இருக்கிற தொடர்பை எல்லாமும் போட்டு வாங்கிட்டாங்க... அதை அப்படியே, எம்.டி.,க்கும் போட்டு காண்பிக்கவும், இங்க சந்தி சிரிச்சுடுச்சு என் பொழப்பு.''
''பார்றா... அவன் அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா... அதான் அவ்வளவு தைரியமா என்னாண்ட, 'செல்பி' எடுத்துக்கறேன்னானா?''
''அது வேறயா?''
''அதெல்லாம் நான் எடுக்க விடல... போகட்டும் பாஸ், பதிலுக்கு பதில்ன்னு, ஒரு காட்டு காட்டிடுவோமா?''
''போதும் போதும்... நீ கொஞ்சம் வாலை சுருட்டிகிட்டு சும்மா இரு. அவன்கிட்ட நீ பேசின வீடியோ ஆதாரமே இருக்கு. நல்லவேளை எங்க, எம்.டி., போலீசுக்கு போக விரும்பல...
''என்னை, ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்துட்டு போக சொல்லிட்டார். போலீசுக்கு போயிருந்தா அவ்வளவு தான். நீ, நான், எல்லாரும், 'டிவி' செய்தியில, நாள் பூரா வந்துருப்போம். என்னாலயும் வெளிய தலை காட்ட முடியாம போயிருக்கும்.''
''அப்ப உங்க வேலை பூடுச்சா?''
''பின்ன... பதவி உயர்வா கொடுப்பாங்க... நான் தப்பிச்சதே பெரும்பாடு.''
''அய்ய... ஒரு சோட்டாப் பய்யன், நம்பள இப்படி புலம்ப உட்டுட்டானே, பாஸ்... எனக்கும், 'பல்ப்' கொடுத்துட்டானே?''
''அவன் பார்க்கதான் சோட்டா... சுஜித்குமாரையே சேனலுக்கு வரவெச்ச கில்லி, அவன். அவனை விட கில்லாடி, அந்த தமிழ்ச்செல்வி. ரெண்டு பேரும் என்னை நல்லாவே வெச்சு செஞ்சுட்டாங்க.''
''வெச்சு செஞ்சவங்கள போய், கில்லி, கில்லாடின்னு மெச்சினா இன்னா அர்த்தம் பாஸ்?''
''புத்திசாலிகளை அவங்க வழியிலேயே போய், அதைவிட புத்திசாலித்தனமா சந்திக்கணும்ன்னு அர்த்தம்,'' என்று ஜனா சொல்லவும், அதில் மிக மிக உக்கிரம் தெரிந்தது.

தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X