அன்புள்ள சகோதரி -
என் வயது: 60. கணவர் வயது: 65. மகன் - மகள் வாயிலாக, நான்கு பேரன் - பேத்திகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, எனக்கு ஒரு பிரச்னை தலைவிரித்தாடுகிறது.
எனக்கு நீரழிவு நோய் இருக்கிறது. உணவு கட்டுப்பாடும், நடைபயிற்சியும் மேற்கொண்டு நீரழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறேன். இருந்தும், ஒருநாளைக்கு எட்டு முறை சிறுநீர் கழிக்கிறேன். இரவில் இரண்டிலிருந்து மூன்று தடவை சிறுநீர் வந்து விடுகிறது.
வீட்டில் இருக்கும்போது, படுக்கைக்கு அருகில் சிறுநீர் குவளை வைத்து சமாளித்து கொள்கிறேன். சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டு, பாத்ரூமுக்கு ஓடி போகும்போதே வழியில் சிறுநீர் வந்து விடுகிறது. பாத்ரூம் போகும் வழியெங்கும் சிறுநீர் சிதறல்கள்.
மகன் - மகள் வீட்டுக்கு போனால், கூடுதல் குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. பாத்ரூமுக்கு அருகிலேயே படுத்து, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் எழுந்து ஓடுகிறேன். இந்த ஒரு காரணத்துக்காகவே, உறவினர் வீடுகளுக்கு செல்வதில்லை. வெளியூர் பயணம் என்றால், பஸ் பயணத்தை தவிர்த்து, ரயிலில் தான் செல்கிறேன்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருக்கப் போகிறேனோ, இறைவனுக்கு தான் தெரியும். ஆனால், சிறுநீரை கட்டுப்படுத்த தெரியாமல், உற்றார் உறவினரிடம் அவமானப்படுவதை எப்படி தவிர்ப்பேன். என் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வை சொல்லுங்கள், சகோதரி.
— இப்படிக்கு,
அன்பு சகோதரி
அன்பு சகோதரிக்கு —
உலக அளவில், 3.3 கோடி அமெரிக்கர்கள், இப்பிரச்னையால் அல்லல்படுகின்றனர். 40 சதவீத அமெரிக்க பெண்களுக்கு, இந்த பிரச்னை இருக்கிறது. இந்திய அளவில், மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், சிறுநீரை கட்டுப்படுத்த தெரியாமல் துன்புறுகின்றனர்.
சிறுநீர் பை தசைகளின் தேவைக்கு அதிகமான செயல்பாடே, கட்டுப்பாடு இல்லாத சிறுநீர் கழிப்புக்கு அடிப்படை காரணம். இதை ஆங்கிலத்தில், 'ஓஏபி' என்பர்.
இந்த சிறுநீர் பிரச்னைக்கான காரணங்களை வரிசையாக பார்ப்போம்...
* இடுப்பில் காயம்
* பக்கவாதம் அல்லது தண்டுவட மரப்பு நோய்
* பெண்களுக்கு, 45 வயதுக்கு பின், மாதவிலக்கு நின்று விடும். அதன்பின், சில பெண்களுக்கு, 'ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்' குறைபாடு ஏற்படும். இந்த குறைபாடு, இடைவிடா சிறுநீர் கழிப்புக்கு ஒரு காரணம்
* பெண்கள் தாறுமாறாய் எடை கூடினாலும், சிறுநீர் பையின் மீது, அதீத அழுத்தம் ஏற்படும்
* சிறுநீர் பையில் கல்
* நீரழிவு நோய்
* பலவீனமான இடுப்பு தசைகள்
* சிறுநீர்ப்பை இடைத்திசு அழற்சி
* காபி, தேநீர், செயற்கை இனிப்பை அதிகம் சேர்த்தல்.
சகோதரி, ஒரு பெண் மருத்துவரிடம் போய், மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள்.
இந்த பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர, கீழ்கண்ட யோசனைகளை கூறுகிறேன்...
* சிறுநீர் பாதை தொற்று இருந்தால், 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் எடுத்துக் கொள்வது நல்லது
* மருத்துவர் கூறும் சில இடுப்பு மற்றும் சிறுநீர் பை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்
* அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்ளலாம்
* மலச்சிக்கலை தவிர்க்க, நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளுங்கள்
* காபி, தேநீர், செயற்கை இனிப்பு, தக்காளி தவிர்த்தல் சிறப்பு
* தயிர் போன்ற, 'புரோபயாட்டி'களை உண்ணுதல் நல்லது
* வைட்டமின், 'சி' சார்ந்த உணவுகளை சாப்பிடலாம்
* உறவினர் வீடுகளுக்கு சென்றால், இரவில், 'அடல்ட் டயாப்பர்' அணிந்து கொள்ளலாம்
எனக்கு இந்த பிரச்னை இருக்கிறது என புலம்பாதீர்கள். தன்னம்பிக்கையுடன் பிரச்னையை எதிர்கொள்ளுங்கள்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்