பழமொழிகள் நம் கலாசாரங்களை சுருங்கச் சொல்லும் சொலவடை. நாம் அதன் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோம். அதை ஞாபகப்படுத்தும் விதமான சிறுகதை.
பழமொழி:
ஆமை நுழைந்த வீடும்,
அமீனா நுழைந்த வீடும் உருப்படாது.
ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
திகைத்துப் போனான், சிதம்பரம். அவன் தாய் வள்ளியம்மை சொன்னதென்ன... இவன் நினைத்தது என்ன?
''தம்பி, அப்பாதான் இறந்துட்டாரு. ஆனால், அவர் நடத்திய இந்த பொட்டி கடையை நீ நடத்து பா... இந்த கடை சாகலை. அய்யாவோட ஆசீர்வாதம் உனக்கு என்னைக்கும் உண்டு,'' என்றாள், வள்ளியம்மை.
இந்த சொத்தை பொட்டிக் கடைய வெச்சு நடத்தவா, இவன் ஓடி வந்தான்... கல்லாவில் உட்கார்ந்து, காசு சேகரிக்க வந்தானா... அதுவும் இந்த கிராமத்தில், மூக்காயியும், கண்ணாயியும் தான் உலக மகா அழகிகள். அவர்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து, இவன் வாழ்க்கை கழிய வேண்டுமா என்ன?
''இதோ பார் ஆத்தா... இந்த கிராமத்தில் குப்பை கொட்ட, என்னால் முடியாது. நீ போட்டிருக்கிற இந்த பொட்டி கடை என்ன, சூப்பர் மார்க்கெட்டா... வேண்டாம், பேசாம இதை வித்துட்டு பட்டணத்துக்கு வா... ஏதாவது நாலு காசு பாக்கலாம்,'' என்றான்.
குறுக்கிட்ட வள்ளியம்மை, ''எந்த வெற்றி ஆனாலும் உழைக்கணும் ஐயா... நம் கையில தான் இருக்கு, உழைப்பின் வெற்றி...''
''கேட்க நல்லா இருக்கும்மா... வீட்டுக் கடன், எந்த நேரத்திலேயும் அமீனா வருவானா வருவானான்னு பார்க்கிறேன். வீட்டையும், கடையையும், 'ஜப்தி' பண்ணினா என்ன மிஞ்சும்? 'ஆமை நுழைஞ்ச வீடும், அமீனா நுழைஞ்ச வீடும் உருப்படாது'ன்னு சொல்வாங்க...''
''இல்ல தம்பி, நான் சொல்றதை கேளு... உங்கப்பா, கடன்பட்டு இந்த கடையை நடத்தி தான், உன்னை படிக்க வைத்தார். இந்தக் கடையைக் காப்பாத்துறது, நம் கடமை. ஐயாவோட கடையில ஒக்காந்து வியாபாரம் பார்த்தா, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.
''நானும், அப்பப்போ கடைக்கு வந்து, உன்ன பாத்துக்கிறேன். அப்பாவை பார்த்து பார்த்து தான், நான் நிறைய வியாபார நுணுக்கங்களை எல்லாம் கத்துக்கிட்டு இருக்கேன். உனக்கு அது உதவியாக இருக்கும். என்ன சொல்ற?''
கோபமாக கிளம்பினான், சிதம்பரம். யோசனையில் ஆழ்ந்தாள், வள்ளியம்மை.
இந்த வீட்டை, 'ஜப்தி' செய்ய விட்டுவிடக் கூடாது. இந்த வீட்டில் தான் பெரியவர், தன் இறுதி மூச்சை விட்டார் என்னுடைய கடைசி காலம், இங்கு தான் முடிய வேண்டும். வங்கிக் கடனுக்காக அடிக்கடி சில, 'டாக்குமென்ட்ஸ்' கையெழுத்துப் போட, வள்ளியம்மை போனபோது, அந்த மேனேஜரை நன்கு அறிவாள்.
ஒருமுறை அவர், 'என்னம்மா... பெரியவரும் போயிட்டாரு. இனிமே, நீங்க தனியா என்ன பண்ண போறீங்க? பேசாம இந்த வீட்டை வித்துட்டு, கடனை அடைத்து, நிம்மதியா இருங்கம்மா...' என்றார்.
அப்போது அவள் எதுவும் பேசவில்லை.
மீண்டும் அந்த வங்கியை நாடிச் சென்றாள், வள்ளியம்மை.
மேனேஜரிடம், ''எங்க வீட்டுக்காரரை கடனாளியாக்க விரும்பல. நானே கடன் கட்டறேன்.''
''எப்படிம்மா?''
''என்னால முடியும். ஆனா, நீங்க உதவணும்...'' என்றவள், தன்னுடைய சில எண்ணங்களைக் கூறி, மீண்டும் கடன் வாங்கினாள்.
அந்த கிராமத்தில் இருந்த ஓரளவு படித்த பெண்களையும், வேலை இல்லாமல் இருந்த பெண்களையும் ஒன்று திரட்டினாள்.
'வள்ளியம்மை அங்காடி' என்ற, ஒரு புதிய உருவம், அந்தக் கடைக்குக் கிடைத்தது. பழைய இடத்திலேயே, புதிய கடையை நிர்மாணித்தாள்.
தேங்காய் பர்பி, கடலை மிட்டாய், கடலை உருண்டை, ஆவக்காய், எலுமிச்சங்காய் தொக்கு மிக்ஸ்ட், ஊறுகாய் வகைகள், பொடி வகைகள்... இப்படி பல பொருட்கள், வள்ளியம்மை கடையில் கிடைத்தன.
அத்துடன், மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் போன்றவற்றை, விளம்பரத்துடன் விற்க ஆரம்பித்தாள். பத்திரிகைகளில் சின்னச்சின்ன நோட்டீஸ்கள் வைத்து, ஊருக்கெல்லாம் அனுப்பினாள்.
ஒரு சிறிய டெம்போவை வாங்கி, அதில் எல்லா பொருட்களையும் ஏற்றி, வீடு வீடாக சென்று விற்றாள். துணைக்கு, சில பெண்கள் வந்தனர். வியாபாரம் வளர்ந்தது. புதிது புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.
கூடை முடைய கற்றுக்கொடுத்தாள். முடைந்த கூடைகளில் வாடிக்கையாளர் வாங்கிய பொருட்களை போட்டு, குறைந்த விலையில் கொடுத்தபோது, அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அங்காடி விரைவாக, 'மினி சூப்பர் மார்க்கெட்' ஆக, விசுவரூபம் எடுத்தது. எல்லா பொருட்களையும் அழகழகான, 'ஆர்ட் பேப்பர்'களில், 'பேக்' செய்து வாசலில், 'டிஸ்பிளே' செய்தாள். அதற்கென்று தனியான, 'ஷோகேஸ்!' அந்த கிராமத்துக்கு, இது மிக அதிகம்.
'வள்ளியம்மை உங்களை அழைக்கிறது' என்று, அதற்கு ஒரு வாசகம் எழுதப்பட்டது. அத்துடன் பாம்படமும், பின் கொசுவமும் வைத்து கட்டப்பட்ட செட்டிநாட்டுப் புடவையும் அடையாளங்கள் ஆயின.
இரவு பகலாக உழைத்தாள். எங்கும் வள்ளியம்மை, எதிலும் வள்ளியம்மை.
அமீனா நுழைய இருந்த வீடு ஆனந்தபுரியானது. இவள் விதையாக வீழ்ந்து, மரமாக முளைத்த கதை இது.
ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. சிதம்பரம் வரவில்லை: இவளும் தேடவில்லை.
அன்று, கடையின் ஆறாவது ஆண்டு விழா. இவள் கணவன் நாச்சியப்பன் பிறந்தநாள். இன்று கடைக்கு வரும் அத்தனை வாடிக்கையாளர்களுக்கும், இவள் லட்டு பொட்டலங்கள் தருவது வழக்கம்.
எதிரில், நாச்சியப்பன் ஆள் உயரத்தில் மாலைகளுடன் கம்பீரமாக புகைப்படத்தில் நின்று கொண்டிருந்தார். ஊதுவத்தி வாசனை மூக்கைத் துளைத்தது.
வணங்கி, கடைக்கு கிளம்பியபோது, நாலு வயது குழந்தை உள்ளே நுழைந்தது. இவள் கையில் இருந்த பலகாரத்தை பார்த்து, கையை நீட்டி யாசித்தது. இவளுக்கு என்னமோ போல் இருந்தது. உடனே, அவசரமாக பார்சலை பிரித்து, ஒரு லட்டை தந்து, ''நீ யாரப்பா?'' என்று கேட்டாள்.
அந்த குழந்தை, லட்டு தின்றபடி சிரித்தது; வாசலை நோக்கி ஓடியது.
அங்கே, தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள், ஒரு பெண்.
'யார் இவள்?' என, யோசித்தாள், வள்ளியம்மை.
அவள் மெல்ல, ''நான் உங்க மருமகள். இவன், உங்க பேரன்...''
வள்ளியம்மை திரும்பிப் பார்த்தாள். அந்த குழந்தை வாயில் லட்டு துகள்களுடன் இவளைப் பார்த்து சிரித்தது; இவளுக்கு மேனி எல்லாம் சிலிர்த்தது.
அந்த பெண் நிமிர்ந்தாள். வெற்று நெற்றி, மூளிக் கழுத்து.
''ஐயோ... சிதம்பரம்,'' என்று கதறினாள்.
அந்தப் பெண் மெல்ல, ''நாங்க ரெண்டு பேரும், 'லவ் மேரேஜ்' பண்ணிட்டோம். ஆனா, இவரு ஆரம்பிச்ச, 'பிசினஸ்'ல நஷ்டம். வங்கி கடன் அடைக்க முடியல. கடன் கொடுத்தவங்க நெருக்க ஆரம்பிச்சாங்க. மேலே மேலே கடன். 'உங்க அம்மா நல்லா இருக்காங்களே.. அவங்ககிட்ட போய் கேளுங்க'ன்னேன்.
''ஆனால், அவர், 'என் தாய் முகத்தில் முழிக்க தகுதியற்றவன். ஆமை நுழைந்த வீடுன்னு சொன்னேன். ஆனா, அது ஆமை நுழைந்த வீடு இல்ல. நான் நுழைஞ்ச வீடு. என் கூட அறியாமை, கல்லாமை, முயலாமை எல்லாமே நுழைஞ்ச வீடு. இதை நான் லேட்டாத் தான் புரிஞ்சுட்டேன்'னு சொன்னவர், கடன் தொல்லை தாங்காம ஒரு நாள் தற்கொலை பண்ணிட்டார்...'' என சொல்லி, மேலே பேச முடியாமல் அழுதாள்.
வள்ளியம்மை அந்தச் சிறுவனை முத்தமிட்டபடி,''உன் பேர் என்னப்பா?'' என்றாள்.
லட்டு தின்ற வாயுடன், ''நாச்சியப்பன்,'' என்றான், சிறுவன்.
விமலா ரமணி