நட்பு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நட்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
00:00

ஆபீசிலிருந்து வண்டியில் வந்தபோது, வீட்டுக்கு அருகில் அவளை பார்த்தான், ராஜு.
அவள்தானா என்ற சின்ன சந்தேகம்.
வீட்டிற்குள் நுழைந்த உடனேயே மனைவி விஜயாவிடம், ''சாந்தாக்கா வந்தாங்களா?'' என, கேட்டான்.
''ஆமா... உங்களை பார்த்தாங்களா?''
''இல்லல்ல... வண்டியில வந்துட்டிருந்தேன். 'ஹெல்மெட்' வேற... இப்பவும் நம் வீட்டுக்கு வர்றாங்களான்னு,'' கேட்டேன்.
''அவங்க நடந்ததை எல்லாம் அப்பவே மறந்துட்டாங்க... ஒரு வார்த்தை கூட அது பத்தி பேசறதில்ல. எனக்குதான் அவங்க முகத்தை பார்க்கவே என்னவோ போல இருக்கு,'' என்றாள்.
''சரி சரி... இன்னிக்கு ரொம்ப நல்ல மூட்ல வந்திருக்கேன். நல்ல காபியா எடுத்துட்டு வாங்க மேடம்,'' என்று, அவளை சமையலறை பக்கம் தள்ளி விட்டான்.
அவர்கள் முதலில் இருந்த வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவள், சாந்தா. கணவனுக்கு வெளியூரில் வேலை. வாரா வாரம் வருவார். எட்டு - பத்து வயதில், இரு பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து, வீட்டு வேலை, வெளி வேலை எல்லாம் சமாளித்தபடி இருப்பாள்.
விஜயா, அந்த வீட்டுக்கு வந்ததும், முதலில் வந்து பழகியதும் அவள்தான். பார்த்தவுடனே பிடித்துவிட, சாந்தாக்கா என்று ஒட்டிக்கொண்டாள். ஐந்து வயது பவித்ராவும், சாந்தாவின் பெண்களுக்கு குட்டிச் செல்லம் ஆகிப் போனாள். அவர்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும், ஒரு பங்கு முதலில், இவர்கள் வீட்டுக்கு வந்து விடும்.
பவித்ராவுக்கு ஸ்கூல் வேன் வருவதற்கு வசதியாக, அவர்கள் வீடு மாறியபோது, சாந்தாவும், பிள்ளைகளும் புலம்பித் தள்ளினர். அதன்பின்னும், எதையாவது எடுத்துக் கொண்டு இங்கே வந்து விடுவாள், சாந்தா.
அப்படி ஒருநாள் வந்தபோது, 'விஜி... உன்கிட்ட எப்படி கேட்கறதுன்னு தெரியலை... திவியோட அப்பா இந்த வாரம் வரமாட்டேன். கொஞ்சம் வேலைன்னு சொன்னார். இப்போ திடீர்ன்னு ஒரு அவசர செலவு. எனக்கு, 5,000 ரூபாய் தேவைப்படுது.
'அடுத்த வாரம், அவர் வந்ததும் கொடுத்துடறேன். மாசக் கடைசி, அதான்... இல்லைன்னாலும் பரவாயில்லை. நான் பார்த்துக்கறேன்... தம்பிகிட்ட கேட்டுப் பாரு...' என, தயங்கி தயங்கிதான் கேட்டாள்.
ராஜுவிடம் வாங்கி தருவதாக கூறி, அவனிடம் விஷயத்தை சொன்னாள், விஜயா.
'ஐயாயிரமா... நமக்கு மட்டும் மாசக் கடைசி இல்லையா... சேமிப்பிலிருந்து எடுத்து தர அளவுக்கு வைச்சுக்க வேண்டாம், விஜி. இல்லைன்னுடுவோம். அப்புறம், இதுவே வழக்கமாயிடும்.
'நல்லா இருக்கிற நட்பு கூட, பணம்ன்னு வரப்போ பட்டுன்னு முறிஞ்சு போயிடும். நீ, சாரி சொல்லிடு...' என்றான்.
சாந்தாவிடம் எப்படி சொல்வது என தவித்தவள், 'சாரிக்கா... இப்போ முடியலை...' என, ஒருவழியாக கூறி விட்டாள்.
கொஞ்சம் கூட சலனப்படாமல், 'ஏய்... நான் தான் பார்த்துக்கறேன்னு சொன்னேனில்ல... நீ கவலைப்படாதே...' என்று, அதோடு முடித்து விட்டாள், சாந்தா. அதன்பின்னும் விஜயா மற்றும் பவியை பார்க்க வந்து கொண்டுதான் இருக்கிறாள்.
எப்படி அந்த நெருக்கடியை சமாளித்தாள் என்று, அவளும் சொல்லவில்லை; விஜயாவும் கேட்கவில்லை. ஆனால், சாந்தா வரும் ஒவ்வொரு முறையும், அவள் தருவதை வாங்கும்போதும், குற்ற உணர்வில் தவித்துப் போவாள், விஜயா.
நினைவுகளின் ஓட்டத்தை அப்போதைக்கு நிறுத்தி, காபியுடன் வந்தாள்.
''இன்னிக்கு எனக்கு பசியே தெரியலை, விஜி... எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா... எங்க ஆபீஸ்ல போன மாசம் ஒரு சீட்டு ஆரம்பிக்கிறாங்கன்னு சொல்லி சேர்ந்தேனில்ல...
''அது, இந்த மாசம் நமக்கு விழுந்துடுச்சு. ஒரு தவணை தான் கட்டியிருக்கேன். அடுத்த வாரம், நம் கையில் ஒரு லட்சம். 'உனக்கு வேண்டாம்ன்னா நான் எடுத்துக்கறேன்'னு அவனவன் வரிசையில நிக்கிறான்... சொல்லு, என்ன பண்ணலாம்... நீ, உனக்கு புடிச்ச நகை ஏதாவது வாங்கிக்கோ,'' என்றான்.
''இல்லங்க... இது, நம் பவிக்குன்னு போட்டது. அவளுக்கு வாங்குவோம்,'' என்றாள்.
விஜயா சொல்வதை கேட்டபடி, ஜன்னல் வழியே பார்க்க, தெரு முனையில் வந்து கொண்டிருந்தான், வாசு.
''விஜி... வாசு வர்றான்... அவன் தங்கச்சி கல்யாணத்துக்கு பணத்துக்கு அலைஞ்சுட்டு இருக்கான். எனக்கு சீட்டு விழுந்திருக்குன்னு அவனுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்... இப்படி உடனே வந்துடுவான்னு நினைக்கலை... இப்போ என்ன பண்றது?''
''பாவம்ங்க அந்த அண்ணன்... அப்பா இல்லாத குடும்பத்தில், யாரு இப்படி தம்பி, தங்கச்சின்னு பொறுப்பா இழுத்து போட்டு பண்றாங்க. அந்த அக்காவும் சும்மா சொல்லக் கூடாது. தன் கூட பிறப்பு போல அவங்களும் செய்யிறது தான், பெரிய விஷயம்.''
''விஜி... நீ சொல்லித்தான் அதெல்லாம் எனக்கு தெரியுமா... எத்தனையோ முறை அவன், எங்கிட்ட கடன் வாங்கியிருக்கான். அதெல்லாம் சின்ன தொகை... சில சமயம் வரும், நிறைய நேரம் திரும்பி வராதுன்னு தெரிஞ்சு கூட செஞ்சிருக்கேன்.
''இது, கல்யாணம். பெரிய தொகையா அவனுக்கு தேவைப்படுது. கொடுத்துட்டு வரலைன்னா நமக்கும் அது பெரிய அடியா போகும்... அதான்...'' என, அவன் பேச்சை நிறுத்தவும், அழைப்பு மணி சத்தம் கேட்டு, கதவை திறந்தாள், விஜயா.
''என்னம்மா நல்லாயிருக்கியா...'' உற்சாகமாக கேட்டபடி வந்த வாசுவை, ''வாங்கண்ணே... நல்லா இருக்கோம். கமலி வரலியா?'' என்றாள்.
''வருவாம்மா,'' என்றான், வாசு.
''வாசு... வா வா... என்ன இன்னிக்கு ஆபீஸ்லருந்து சீக்கிரம் போயிட்டே போல,'' என்று, கேள்வியும் பதிலுமாக வரவேற்றபடி வெளியே வந்தான், ராஜு.
''ஆமாண்ணே... கல்யாண வேலையா கொஞ்சம் வெளியே போக வேண்டியிருந்தது. அதான்...''
வாசுவைப் பார்க்க பாவமாய் இருந்தது, விஜயாவுக்கு.
'இந்த அண்ணன் என்ன கேட்குமோ, இவர் என்ன சொல்வாரோ... எத்தனையோ வருஷ நட்பு. எல்லாமே பணம் என்று வரும்போது மொத்தமாக சிதறிப் போகிறது...' என்று கவலைப்பட்டாள்.
''கல்யாண வேலை எல்லாம் எவ்வளவு துாரத்தில் இருக்கு?''
''போயிட்டிருக்கண்ணே... நீங்களெல்லாம் இருக்கும்போது எனக்கு என்ன? பத்திரிகை எல்லாம் வந்துடுச்சு. குல தெய்வம் கோவிலுக்கும் போய், பூஜை செய்தும் வந்துட்டோம். அப்பா இருந்தா எப்படி பண்ணுவாரோ அதுபோல ஒரு குறையும் இல்லாம நடத்தணுமேன்னு, ரெண்டு பேருக்கும் கொஞ்சம் டென்ஷன்... அவ்வளவு தான்.''
''எப்போடா, 'லீவ்' போடறே,'' பேச்சை மாற்றினான், ராஜு.
''ஒரு வாரத்துக்கு முன் போடலாம்ன்னு இருக்கேண்ணே.''
''கொஞ்சம் பணம் தேவைப்படுதுன்னு சொல்லிட்டிருந்தியேப்பா.''
''இல்லண்ணே அதெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். அப்பாவோட நண்பர் தரேன்னிருக்கார்,'' என்றான் தயக்கத்துடன்.
''விஜி... காபியாவது குடேன். எவ்வளவு, 'டயர்டா' இருக்கான் பாரு,'' என்று, அவளை அங்கிருந்து விரட்டுவதில் முனைப்பானான்.
''கல்யாணம்ன்னு பேச ஆரம்பிச்ச நாள்லேயிருந்து ஓட்டம் தான். நிஜமா சொல்லணும்ன்னா, இன்னிக்கு தான் இப்படி நிம்மதியா உட்கார்ந்து உங்க கூட பேசிட்டிருக்கேன். வேற எங்கேயும் எனக்கு இப்படி இயல்பா இருக்க முடியாது,'' என்று மனமார சொன்னான், வாசு.
''இது, உங்க வீடுண்ணே... எப்போ வேண்டுமானாலும் நீங்களும், கமலியும் வரலாம். இருங்க, காபி எடுத்து வரேன்,'' என, சமையலறை சென்றாள், விஜயா.
''கொஞ்சம் இருடா வாசு வரேன்,'' என்றவாறு, அவள் பின்னாலேயே ராஜுவும் வந்தான்.
''என்ன விஜி இது... இவன் இப்போதைக்கு போக மாட்டான் போல இருக்குதே. எனக்கு தான் ஒரே பதட்டமா இருக்கு. எவ்வளவு கேட்பானோ, கேட்டா என்ன சொல்றது, ஏதாவது, 'ஐடியா' சொல்லேன்.''
''அதான் எப்பவும் சொல்வீங்களே... கொடுத்துட்டு வருமா, வராதா, ஏன் கொடுத்தோம் என, பதட்டப்படாம இருக்கறதுக்கு... முதல்லயே ஒரேயடியா, 'நோ'ன்னு சொல்லிட்டா நல்லதுன்னு... அதையே சொல்லிடுங்க... வீணா அவருக்கு ஒரு நம்பிக்கை தராம, ஆரம்பத்திலேயே சொல்லிடுங்க,'' என்றாள்.
விஜயா கொடுத்த காபியை வாங்கி குடித்தவன், ''அண்ணி போடற காபி வாசனையே தனி. கமலி இங்கே வரேன்னா... அதான் வந்ததும் சேர்ந்து போயிடலாம்ன்னு இருக்கேன்; இன்னும் காணோம்,'' என, வாசு சொல்ல, பகீரென்றது ராஜுவுக்கு.
'போச்சு... போச்சு... கமலியுடன் சேர்ந்து கேட்டால், நிச்சயம் நான் கொடுத்து விடுவேன் என்று பெரிய, 'ப்ளான்' பண்றான். என்ன சொல்லலாம்...' என, யோசனை செய்வதற்குள், கையில் பெரிய துணி பார்சலுடன் வந்தாள், கமலி.
''சாரிங்க... ஆட்டோவே கிடைக்கலை. அதான், 'லேட்' ஆகிடுச்சு. ரெண்டு தட்டு தாங்க அண்ணி... அண்ணா, எப்படியிருக்கிறீங்க...'' என்றபடியே, விஜயா கொடுத்த ஒரு தட்டில் பழங்கள், ஸ்வீட், தாம்பூலம், பூவையும், அடுத்த தட்டில், விஜிக்கு மிகவும் பிடித்த மெரூன் நிற பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி, பவி குட்டிக்கு, மாம்பழ கலர் பட்டுப் பாவாடை, சட்டையை வைத்தாள்.
''அண்ணா... ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க,'' என்று கூறி, அவர்களிடம் தட்டுகளை கொடுத்தனர், இருவரும்.
''குல தெய்வத்துக்கு வச்சுட்டு வந்ததும், முதல் பத்திரிகை உங்களுக்கு தான் தரணும்ன்னு, கமலி, தங்கை சந்திரா எல்லாரும் சொல்லிட்டாங்க. எனக்கு ஒரு அண்ணன் இருந்தா கூட, இப்படி என்கிட்ட அன்பா இருக்க மாட்டாங்க...
''இது, உங்க தங்கச்சி கல்யாணம். நீங்க ரெண்டு பேரும், பவி குட்டியோட வந்து, இந்த கல்யாணத்தை சிறப்பா நடந்தி தரணும்ண்ணே,'' என்றான், வாசு.
''அண்ணி, இப்பவே சொல்லிட்டேன். ரெண்டு நாள் முன்னாலயே வந்துடணும்,'' உரிமையோடு சொன்னாள், கமலி.
''கமலி, அவங்க இன்னும் சாப்பிடலை. நாம கிளம்பலாம்,'' வாசு சொல்ல, இருவரும் கிளம்ப, கமலியின் கையிலிருந்த பையை பிடுங்கி கீழே வைத்தாள், விஜயா.
''கொஞ்சம் இரு கமலி, சாப்பிட்டுட்டு போகலாம். இருங்க வரேன்,'' என்று, பூஜையறையினுள் நுழைந்தாள்.
குங்குமத்தை எடுத்து, தானே கமலிக்கு வைத்து விட்டு, வாசுவிடம், ''அண்ணா, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி... உங்க பிரண்டு ஆபீஸ்ல போட்ட சீட்டு குலுக்கல்ல, இந்த மாசம் அவருக்கு தான் வந்திருக்கு. அடுத்த வாரம், பணம் வந்துடும்.
''சந்திரா கல்யாணத்துக்கு, நீங்க வேற யாருகிட்டயும் போய் கடன் கேட்க வேண்டாம். அந்த பணம் உங்களுக்குன்னு, இவர் வந்ததுமே சொல்லிட்டார்.
''பணம் வந்ததும் ஒரு இன்ப அதிர்ச்சி உங்களுக்கு தரலாம்ன்னு நினைச்சிருந்தோம். எங்கேயும் அலையாம நிம்மதியா கல்யாண வேலையை மட்டும் பாருங்க,'' என்றவள், ''என்னங்க, இப்பவே சொல்லிட்டேன்னு கோபமா...'' என்று கேட்ட தோரணையில், 'கோபப்பட்டு விடாதீர்கள்' என்ற கெஞ்சல் தான், அதிகம் இருந்தது.
''நான் கூட, 'சீட்' போட்டிருக்கேன் அண்ணி... சீக்கிரமே கிளம்பிட்டதால யாருக்கு விழுந்துருக்குன்னு தெரியல... அண்ணனுக்கு விழுந்தது ரொம்ப சந்தோஷம். அது, உங்களுக்குன்னு வைச்சிருப்பீங்க... நான் பார்த்துக்கறேன்,'' என்றான்.
''இல்ல... எங்களுக்கு ஒண்ணும் அவசரம் இல்லைங்க,'' என்றாள், விஜயா.
அவனையும் அறியாமல், ஆம் என்று தலையாட்டிய ராஜுவின் கைகளை பிடித்து, ''அண்ணே, இந்த மனசு யாருக்குமே வராது,'' என்று கலங்கினான்.
''எப்பவும் உங்களதான் சொல்லிட்டே இருப்பார். அவர், எனக்கு ஆபீஸ்ல ஒரு பிரண்டாதான் அறிமுகம் ஆனாரு... இப்போ, நண்பனுக்கும் மேலா, ஒரு சகோதரன் போல் அக்கறையும், அன்பும் காட்டறாருன்னு... அது ஏன்னு இப்பத்தாண்ணே புரியுது... கேட்காமலேயே உதவற குணம் இந்த காலத்தில் யாருகிட்டே இருக்கு,'' என்று, கமலியும் தன் பங்குக்கு கண் கலங்கினாள்.
''டேய்... போடா போ... உன் சோக வசனம், 'சென்டிமென்ட்' காட்சிக்கெல்லாம் இப்போ நேரமில்லை. போய் தங்கச்சிக்கு இன்னும் என்ன வாங்கலாம், எப்படி இன்னும் சிறப்பா பண்ணலாம்ன்னு பாரு... நீயுதாம்மா,'' என்றான், ராஜு.
சாப்பிட்டு நிறைந்த மனதுடன் அவர்கள் கிளம்பினர்.
வாசுவும், கமலியும் தெரு முனை திரும்பியதும், கதவை பூட்டிய விஜயா, சோபாவில் உட்கார்ந்திருந்தவனிடம் வேகமாய் வந்தாள்.
''என்னை மன்னிச்சுடுங்க... அஞ்சு வயசு பொண்ணுக்கு எப்பவோ நடக்கப் போற கல்யாணத்துக்கு நகை சேர்க்கறதை விட, 25 வயசு பொண்ணை கரையேத்தறது முக்கியம்ன்னு தோணுச்சு. ஒரு பொறுப்பான அண்ணனுக்கு இந்த பணம் உதவட்டுமே...
''உங்ககிட்ட கேட்காம அப்படி சொன்னது தப்பு தான். அவர், உங்களை நண்பனா மட்டும் பார்க்கலை... அதுக்கும் மேல, உங்களிடம் மதிப்பும், அன்பும் வைச்சிருக்கார். அந்த அன்புக்கும், நட்புக்கும் முன்ன இந்த பணம் எதுவுமே இல்லங்க.
''உங்ககிட்ட பணம் இருந்தும், இப்ப கொடுத்து உதவலேன்னா, இத்தனை வருஷ உங்க நட்புக்கு அர்த்தமில்லாம போயிடும். ரெண்டு பேரோட நட்பு முடிச்சு இறுக்கமாகுறதுக்கும், பட்டுன்னு அறுந்து போறதுக்கும் ஒரு வார்த்தை, ஒரு செயல் போதும்.
''சாந்தாக்கா விஷயத்துல அப்படி ஒண்ணு நடந்ததால தான், என்னால இப்படி யோசிக்க முடிஞ்சது. எதையுமே மனசுல வைச்சுக்காம அவங்க வரலாம், பழகலாம். ஆனா, அந்த உண்மையான நட்புக்கு நான் தகுதி இல்லையோன்னு அவங்க வரப்போல்லாம் எனக்கு வர உறுத்தல், உங்களுக்கு வரக்கூடாது.
''நாம சாந்தாக்காகிட்டே, சாரின்னு சொன்ன ஒரு வார்த்தையில, எங்க நட்போட இழை கொஞ்சம் நழுவிடுச்சு. நட்பு என்றும் சாகக் கூடாது. அது ரொம்ப வேதனை. சாகிற வரையில நம் கூட வரும், இந்த உன்னதமான நட்பு, இப்படியே தொடரணும்ன்னு தான், அப்படி சொல்லிட்டேன்... அப்புறம் உங்க இஷ்டம்,'' ராஜுவின் முகத்தை பார்த்தபடி தெளிவாக கூறினாள், விஜயா.
அவன், விஜயாவை பார்த்த பார்வையில் காதலும், பெருமையும் பொங்கி வழிந்தது.

யசோதா சுப்ரமணியன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X