அத்திக்கன்றுகள் நட்டு ஐந்து மாதம் தான் ஆகுது. அதற்குள் செடி முழுவதும் காய்களாக காய்த்து அதிசயிக்க செய்கிறது என்கிறார் கருமாத்துாரைச் சேர்ந்த விவசாயி பவுன்ராஜ். சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரியும் போதே வீட்டுத் தோட்டத்தை பராமரித்து வந்த பவுன்ராஜ், பணி ஓய்வுக்கு பின் முழுநேர விவசாயியான கதையை விவரிக்கிறார்.
மதுரையில் சொரிக்காம்பட்டி கிராமத்திற்கு செல்லும் பாதையில் கருமாத்துாரில் தோட்டம் உள்ளது. 'புனே ரெட்' எனப்படும் அத்திக்கன்றுகள் பற்றி கேள்விப்பட்டேன். வேளாண்மை பொறியியல் துறை உதவி இயக்குனர் காசிநாதனிடம் அத்திமரக்கன்றுகளும், தைவான் பிங்க் கொய்யா கன்றுகளும் இருந்தன. ஒன்றரை ஏக்கருக்கு 1300 கன்றுகள் வாங்கி நட்டேன். சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தேன். ஒவ்வொரு கன்றிலும் 50 காய்கள் காய்க்கிறது.
ஒரு ஏக்கரில் 'தைவான் பிங்க்' ரகத்தில் 700 கொய்யா கன்றுகள் நட்டுள்ளேன். இன்னும் 3 மாதத்தில் காய்ப்புக்கு வந்துவிடும். தற்போது வரும் கொழுந்து மற்றும் பூக்களை கிள்ளி எறிந்ததால் அடுத்தடுத்து பூக்கள் பெருகி நிற்கின்றன. நன்கு காய்க்கும். இரண்டரை ஏக்கரில் 'ரெட் லேடி' ரக பப்பாளி மரங்கள் காய்ப்பில் உள்ளன. நட்டு ஏழு மாதங்களில் ஒவ்வொரு பழமும் இரண்டு கிலோவுக்கு குறையாமல் கிடைக்கிறது. பத்து நாட்களுக்கு ஒருமுறை 100 கிலோ பழங்கள் கிடைக்கின்றன.
ஏழாண்டுக்கு முன் ஒன்றரை ஏக்கரில் மாங்கன்றுகள் நட்டேன். இரண்டாண்டுகளாக பலன் தருகிறது. ஒட்டுக்கன்று என்பதால் சீக்கிரம் காய்கள் கிடைக்கின்றன. இதுதவிர 70 தென்னைகள் உள்ளன.
அத்திமரம் சிறிதாக இருந்தாலும் தொடர்ந்து 40 ஆண்டுகள் பலன் தரும் என்பதால் பராமரிப்பு செய்தால் போதும். கன்றுகளை புதிதாக நடவேண்டியதில்லை. ஒன்றரை ஏக்கரில் ஒருநாள் விட்டு ஒருநாள் பழம் பறித்தாலும் கிலோ ரூ.150 வீதம் ரூ.4000 லாபம் கிடைக்கும். தோட்டப் பயிர்கள் என்பதால் அவ்வப்போது களையெடுத்தால் போதும். முறையான தண்ணீர், உரம் கொடுப்பதால் சுணங்காமல் லாபம் கிடைக்கிறது என்றார்.
இவரிடம் பேச : 94892 70989
எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை