அன்புள்ள சகோதரி —
என் மகளுக்கு வயது: 17. பிளஸ் 2 படிக்கிறாள். படிப்பில் சுமார். கணக்கிலும், உயிரியலிலும், ஆங்கிலத்திலும் நல்ல மார்க் எடுக்க வேண்டி, அவளை, 'டியூஷன் சென்ட்ரில்' சேர்த்திருக்கிறோம். அங்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் ௨ மாணவியரும் அதிகம் படிக்கின்றனர்; மாணவர்கள் மிக குறைவு.
டியூஷன் படிக்கும் மாணவியர், அதிக மார்க் எடுப்பதால், என் மகளையும் அங்கு சேர்த்தேன்.
டியூஷன் சென்டர் நடத்துபவர், 30 வயது, திருமணமாகாத இளைஞர். ஆள் பார்க்க கவர்ச்சிகரமாய் இருப்பார். என் மகளை சேர்த்த பின், சென்டரை பற்றி பல விஷயங்கள் எனக்கு தெரிய வந்தன.
டியூஷன் சாரை கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பதற்காகவே, நிறைய பெண் பிள்ளைகள் அங்கு சேர்ந்துள்ளனராம். பெண் பிள்ளைகளை தொட்டு தொட்டு பேசுவாராம், டியூஷன் சார். நிறைய மாணவியருக்கும், டியூஷன் சாருக்கும் உடல் ரீதியான தொடர்பு உண்டாம்.
டியூஷன் சாரின் ஆசைக்கு இணங்கினால், அந்த பெண்களுக்கு சிறப்பாக சொல்லிக் கொடுத்து, கரையேத்துவாராம். உடன்படாத பெண் பிள்ளைகளை மிரட்டி, தன் வழிக்கு கொண்டு வருவாராம்.
டியூஷன் சென்டரில் சேர்ந்ததிலிருந்து, இரட்டிப்பாய், 'மேக் - அப்' செய்து, அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே போய் விடுகிறாள், என் மகள். போனின், 'டிபி'யில், மாணவியருடன் டியூஷன் சார் நிற்கும் புகைப்படத்தை வைத்திருக்கிறாள்.
பாத்ரூமில் சத்தம் போட்டு பாடுகிறாள். டியூஷன் மாணவியருடன், டியூஷன் சாரின், 'பெர்சனாலிட்டி' பற்றி மணிக்கணக்கில் பேசுகிறாள்.
மகளை கண்டித்தேன். அவளோ, 'சார், சிறப்பா சொல்லித் தர்றார். அதனால், அவரை பிடிச்சிருக்கு. பிளஸ் 2ல நல்ல மார்க் வாங்கிய பின், அவர் யாரோ, நாங்க யாரோ. அவர் மேல நாங்க ஈடுபாடா இருக்கிற மாதிரி காண்பிச்சா, விழுந்து விழுந்து சொல்லித் தர்றார்.
'நாங்க அவர்கிட்ட ஏமாற மாட்டோம். அவர், காக்கான்னா, நாங்க நரி. காக்காவை ஏமாத்தி வடைன்ற மார்க்கை கைப்பற்றுகிறோம்...' என்கிறாள். என்ன செய்வது என்று நீங்கள் தான் கூற வேண்டும்.
— இப்படிக்கு,
அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். குரு ஸ்தானத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாய், சில தனியார் இளம் ஆசிரியர்கள் நடந்து கொள்கின்றனர். பதின்ம வயது பெண்களுக்கு, எந்த ஆணை பார்த்தாலும், கண்களில் பட்டாம் பூச்சி பறக்கும்.
ஆசிரிய பணியின் மேன்மையை காற்றில் பறக்க விட்ட இள வயது ஆசிரியனும், வாலிப வயதின் வர்ணஜாலத்தை முதன் முறையாய் அனுபவிக்கிற, 'டீனேஜ்' பெண்ணும், கல்வியின் பொருட்டு சந்தித்துக் கொண்டால், ஏடாகூடங்களே நிகழும். அந்த ஏடாகூடங்களை கேவலம் மதிப்பெண்களுக்காக சகித்துக் கொள்வது பெரும் இழிவு.
உங்கள் மகளின் செய்கைகள் அப்பட்டமாய், அவள் மனம் திரிந்துள்ளதை காட்டுகிறது. உங்களை ஏமாற்ற, பசப்பு வார்த்தைகளை கூறுகிறாள். அவளை துளியும் நம்பாதீர்கள். உடனடியாக டியூஷனிலிருந்து நிறுத்துங்கள்.
அவளது மொபைலை பிடுங்கி, சாதாரண போனை கொடுங்கள். வேறு ஏதாவது பெண்கள் சொல்லித் தரும் டியூஷன் சென்டரில் சேருங்கள் அல்லது தினமும் அவளுடன் அமர்ந்து, படிக்க வையுங்கள்.
உங்களுக்கு, பிளஸ் 2 பாடங்கள் தெரிந்தால், சொல்லிக் கொடுங்கள். எல்லாவற்றையும் மீறி உங்கள் மகள், பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால், கவலையேபடாதீர்கள்; அவளது மதிப்பெண் தகுதிக்கேற்ற பட்டப்படிப்பில் சேருங்கள்.
டியூஷன் சென்டரில், உங்கள் நெருங்கிய தோழியரின் மகள்கள் யாராவது படித்தால், அவர்களையும் அங்கிருந்து விலகச் சொல்லுங்கள். டியூஷன் ஆசிரியரின் துர் நடத்தையை, காவல்துறையிடம் தனியாக போய் புகார் செய்யாதீர். சமூகவிரோதிகளால் குறி வைக்கப்படுவீர். பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் ஒன்று சேர்ந்து, காவல்துறையில் புகார் செய்யலாம்.
போக்சோ சட்டம், 2012ம் ஆண்டு முதல், செயல்பாட்டில் இருந்து வருகிறது. 18 வயதுக்கு உட்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்தால், குறைந்தபட்சமாக ஏழு ஆண்டுகள் அல்லது அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்; கூடவே, அபராதமும் உண்டு.
தவறு, 5 சதவீதம் நடக்க சாத்தியமுள்ள இடங்களில் கூட, நம் ஆண் - பெண் பிள்ளைகளை கொண்டு சேர்க்கக் கூடாது. வரும்முன் காப்பது மிகவும் நல்லது.
பதின்ம வயது ஆண் - பெண் பிள்ளைகளை, கண்ணாடி பாத்திரங்களை போல் கையாள வேண்டும்.
பதின்ம வயதினருக்கு, நீண்ட நேரம் அறிவுரைகளை கூறினால், அவர்களுக்கு போரடித்து விடும். திருக்குறள் போல அளவாய், கச்சிதமாய், தகுந்த நேரத்தில் ஆலோசனை கூறினால், அது அவர்களிடம் எடுபடும்.
ஒழுக்கமே பிரதானம். அதையடுத்து தான் மீதி எல்லாம் என, உணர்த்துங்கள். நல்லொழுக்கத்தில், பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக திகழுங்கள். கஞ்சத்தனமில்லாத சேமிப்பை பழக்கப் படுத்துங்கள். ஆடம்பரம் வேண்டாம்.
பெண்களுக்கு, ஆண் நிர்வாகமும், ஆண்களுக்கு, பெண் நிர்வாகமும் கற்றுத் தாருங்கள். குழு மனப்பான்மையிலும், கூட்டு மனோபாவத்திலும் போய் சிக்கிக் கொள்ளாதீர். உங்கள் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்பதை, தனித்துவமாய் யோசியுங்கள்.
இன கவர்ச்சி, ஒரு ஜல்லிக்கட்டு காளை. அதை அடக்க ஆணுக்கும், பெண்ணுக்கும் உத்திகளை சொல்லிக் கொடுப்போம்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்