அப்படி நான் சொன்னது பெரிய தப்புங்களா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2021
00:00

இது, என்னய பத்தின கதை. 1990ல் நடந்ததுங்க. இப்ப எனக்கு, 93 வயசு ஆகுதுங்க. 'இம்புட்டு வயசாயிப் போன கெழவன் கதையில் என்ன சுவாரசியம் இருக்கப் போவுது'ன்னு நினைக்காதீங்க. சுவாரசியம் இல்லாட்டியும், அதுல ஒரு வெசயம் இருக்குதுன்னு நான் நெனைக்கிறேங்க.
அதான் என் கதையைச் சொல்லணும்ன்னு தோணிச்சு. நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சு, 74 வருசம் ஆயிடுச்சுங்க. இது, எல்லாத்துக்கு தெரிஞ்ச வெசயந்தானே என்றீங்களா? ஆனா, நான் சொல்ல வந்தது, அதுல நானும் சம்பந்தப்பட்ட வெசயமுங்க.
நானும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனுங்க... 1942ல் மகாத்மா காந்தியோட, 'வெள்ளையனே வெளியேறு'ன்ற அறைகூவலை மதிச்சு, அந்தப் போராட்டத்துல கலந்துக்கிட்டவங்கள்ல நானும் ஒருத்தனுங்க. அப்ப நான், ஹைஸ்கூல்ல 9ம் வகுப்புல படிச்சுக்கிட்டிருந்தேனுங்க.
எனக்கு அப்ப, 14 வயசு. நம்ப முடியலீங்களா? நான் பொய் சொல்லல்லீங்க. என் வயசொத்த எத்தினியோ பசங்க அந்தக் கும்பல்ல இருந்தாங்க. எங்கப்பா சொல்லி சொல்லித்தான் எனக்கு வெள்ளைக்காரங்க மேல கோவம் வந்திச்சு.
எங்கப்பா ஏன் விடுதலைப் போராட்டத்துல கலந்துக்கலைன்னா, பெறவிலயே அவருக்கு ஒரு கால் வெளங்காதுங்க. 'வெள்ளைக்காரனைத் தொரத்துரதுக்கும் ஓட முடியாது. அவன் தொரத்தினாலும் ஓட முடியாது.
அதாண்டா நான் போராட்டத்துல கலந்துக்காததுக்கு காரணம்'ன்னு சொல்லிச் சிரிப்பாரு.
எனக்கு, 10 வயது இருக்கிறப்போ எங்கம்மா எறந்துட்டாங்க. 'வெள்ளையனே வெளியேறு' ஊர்வலத்துல நானும் கலந்துக்கப் போறதாச் சொன்னதும், அப்பாவுக்கு சந்தோஷம் தாங்கல்லீங்க. 'கலந்துக்கடா'ன்னுட்டாரு.

போராட்டம் தொடங்குறதுக்குள்ளாறவே காந்தி, நேருன்னு, எல்லா தலைவருங்களையும் வெள்ளைக்காரன் ஜெயில்ல பிடிச்சுப் போட்டுட்டான். ஆனாலும், தலைவருங்க இல்லாமயே நாடு முழுக்கப் போராட்டம் நடந்துச்சுங்க.
காந்தி சொல்லியிருந்தபடியே ஊர்வலத்துல கலந்துக்கிட்டவங்கள்ல ஒருத்தருகிட்டக் கூட கம்போ, கத்தியோ, கல்லோ இல்லீங்க... அவரு சொன்னபடியே அது, அகிம்சையான ஊர்வலமாத்தான் நடந்துச்சுங்க. 'வெள்ளையனே வெளியேறு'ன்ற கூச்சலை மட்டும்தான் எல்லாரும் எழுப்பினாங்க.
ஆனா, பாருங்க, இந்தப் போலீஸ்காரனுங்க தேவையே இல்லாம எங்களை தடியால அடிச்சு நொறுக்கினாங்க. சில போலீஸ்காரனுங்க எங்களைப் பாத்துச் சுடவும் செஞ்சாங்க. நிறையப் பேரு காயம்பட்டும், செத்தும் விழுந்தாங்க. சின்னப் பசங்களைக்கூட விட்டு வைக்காம சுட்டுத் தள்ளினாங்கன்னா பாத்துக்குங்களேன்.
என்னோட ப்ரண்டு ஒருத்தனை, ஒரு போலீஸ்காரன் சுட்டதும், அவன், சுருண்டு விழுந்துட்டான். வவுத்துல தோட்டா பாஞ்சு, ரத்தம் ஒழுக ஆரம்பிச்சிடுச்சுங்க. எனக்குத் தாங்கலே. 'நாங்க யாருமே எந்த ஆயுதமும் வெச்சுக்கலியே... ஏன் எங்களை சுடறீங்க'ன்னு, மயக்கமாயிட்ட அந்த ப்ரண்டுக்குப் பக்கத்துல குந்திக்கிட்டு நான் கேட்டதும், அவன் என்னையும் சுடப் பாத்தான்.
ஆனா, துப்பாக்கியில தோட்டா இல்லே போல. அதனால, ஆங்காரத்தோட அதாலயே என் தோள்பட்டையில நாலு போடு போட்டான். நானும் சுருண்டு விழுந்தேன். முன்ன நடந்துக்கிட்டிருந்த இன்னொரு போலீஸ்காரர் அவனைக் கூப்பிடவே, அவன் அங்க போயிட்டான். நான் தப்பிச்சேன்.
அவங்க சுட்டதைப் பொருப்படுத்தாம, கூட்டம் முன்னேறிக்கிட்டே இருந்திச்சு. அடிபட்ட ப்ரண்டை எவனோ வந்து துாக்கினான். கூட்டம் முண்டித் தள்ளினதால நானும் வலியைப் பொறுத்துக்கிட்டே முன்ன போக வேண்டியதாச்சு.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போலீஸ் லாரியில் வந்தவங்க, குண்டடிபட்டவங்க, தடியால அடிபட்டவங்க எல்லாரையும் ஏத்திக்கிட்டு, வேகமா ஜெயிலுக்குக் கொணாந்து அடச்சுப் பூட்டினாங்க.

மெட்ராஸ் சென்ட்ரல் ஜெயில்ல என்னையும் பலரோட சேத்து அடச்சாங்க. தோள்பட்டை வலி தாங்க முடியல்லே. ஆனா, என்ன செய்யிறது?
அப்பால சில டாக்டருங்க வந்து காயம் பட்டவங்களுக்கெல்லாம் வைத்தியம் பண்ணினாங்க. எனக்கு, 'சிலிங்க்' வச்சு கட்டினாங்க. எலும்பு முறிஞ்சிடுச்சுன்னு பேசிக்கிட்டாங்க. நல்ல வேளையா பீச்சாங்கையில தான் அடி. வலது கை தப்பிடிச்சு.
இது நடந்து ஒரு மாசங்கழிச்சுத்தான் என்னயப் பாக்க, அப்பாவை உள்ள விட்டாங்க. 'வெசயந் தெரிஞ்சு எத்தினியோ வாட்டி வந்து கெஞ்சியும் உள்ள விடல்லே'ன்னு, என்னயப் பாத்தப்ப சொல்லி, கேவிக் கேவி அழுதாரு. 'வெள்ளைக்காரப் பாவிங்க. இப்பிடி சின்னஞ் சிறிசுங்களையெல்லாம் சுட்டும், அடிச்சும் அநியாயம் பண்ணியிருக்குறாங்களே'ன்னு கொதிச்சுப் போய்த் திட்டினாரு.
'அப்படி பண்ணினவங்கல்லாம் நம் நாட்டுப் போலீஸ்காரங்க தானேப்பா... நம் ஆளுங்களை நாமளே சுடலாமான்னு, அவங்க நெனச்சுப் பாத்திருக்க வேணாமாப்பா'ன்னு கேட்டேன்.
அப்பா தெகைச்சுப் போய், 'உன் கேள்வி சரிதாண்டா'ன்னாரு. ஜெயிலருக்கு லஞ்சம் குடுத்துத்தான் உள்ள வந்ததாச் சொன்னாரு.
'சென்ட்ரல் ஜெயில்ல கூட்டம் அதிகமாயிட்டதால, சிலரை வேலுாரு ஜெயிலுக்கு மாத்தப் போறதாப் பேச்சு அடிபடுது'ன்னு சொல்லிட்டு, 'இந்த நொண்டிக்காலோட, வேலுாருக்கெல்லாம் நான் எங்கிட்றா உன்னய வந்து பாக்கப் போறேன்'னு அழுதாரு. நானும் அழுதேன்.
என் பீச்சாங்கை முன்ன மாதிரி இல்லாம சேதப்பட்டுக் கெடந்ததைப் பாத்ததும், 'நான் தப்புப் பண்ணிட்டேண்டா. அடிக்கடி காந்தி பத்தி பேசிப் பேசி, உன்னய நான் உசுப்பி விட்டிருக்கக் கூடாது. இப்ப பாரு, உன் படிப்புக் கெட்டுப் போயிருச்சு. ஆனா, இன்னும் நாலஞ்சு வருசத்துல சுதந்திரம் வந்துடும்ன்னு சொல்றாங்க.
'ஏன்னா, ஆகஸ்டுப் புரச்சி அடியோட நசிச்சுப் போயிடல்லே. நம் நாடு முழுக்க, அங்கங்க வெள்ளைக்கரங்களை அடிக்கிறது, கொல்லுறது, அவங்க வீடுகளைக் கொள்ளையடிக்கிறது, கொளுத்துறதுன்னு சனங்க பண்ணிக்கிட்டுத்தான் இருக்குறாங்க.
'அதனால, இனிமேட்டு இங்ஙன தாக்குப்பிடிக்க முடியாதுன்னு வெள்ளைக்காரனுக்கே தோணிடிச்சாம்; பேசிக்கிறாங்க. அப்ப எல்லா கைதிங்களையும் விட்டுடுவாங்க... மாணவருங்க இது மாதிரியான போராட்டத்துல எல்லாம் கலந்துக்கவே கூடாதுன்னு இப்ப எனக்குத் தோணுதுடா. படிப்பை முடிச்சுட்டுத்தான் மத்ததெல்லாம்... இப்ப பாருன்னு...' எங்கப்பா அழுதாரு.

அடுத்த வாட்டி அவரு வரதுக்குள்ள என்னய வேலுார் ஜெயிலுக்கு மாத்திட்டாங்க. 1947 ஆகஸ்டுல சுதந்திரம் கிடைச்சதும், எல்லாரையும் விடுதலை பண்ணினாங்க. நான் மெட்ராசுக்கு ஓடி வந்தேன். ஆனா, அப்பா காலமாயிட்டிருந்தாரு. அக்கம்பக்கத்து ஆளுங்களே கருமாதியெல்லாம் பண்ணினாங்களாம்.
எனக்கு ஒரு கைதான் நல்லா வெளங்கிச்சு. அதனால, என்ன வேலை செய்ய முடியும்ன்னு, ஒரே மலைப்பா இருந்திச்சு. அப்படியும் சென்ட்ரல் ஸ்டேசனுக்குப் போய் போர்ட்டர் வேலை செய்யலாம்ன்னு பாத்தேன். ஆனா, அங்கயிருந்த போர்ட்டருங்கல்லாம் என்னய வெரட்டினாங்க.
அப்பால, சேரியில ஒரு குடிசையில இருக்க துவங்கினேன். குப்பை பொறுக்கினேன். டீக்கடையில டீ அடிச்சேன். காய்கறி மண்டியில வேலை செஞ்சேன். நியூஸ்பேப்பர் போட்டேன். இப்படி என்னென்னவோ செஞ்சு கொஞ்சம் பணம் சேத்ததும், ஒரு பொட்டிக்கடை வெச்சேன்.
பீடி, சிகரெட், பொகையில இதுங்களை விக்கிறதில்லேன்னு, ஒரு கொள்கை வச்சுக்கிட்டேன். ஆனா, பீடா பண்ணி வித்தேன். நல்லாப் போச்சு. பிஸ்கோத்து, மிட்டாய், சோடா, கலர், நோட்டுப் புஸ்தகம், பேனா, பென்சிலு, இங்க், அழி ரப்பரு... இதெல்லாம் வித்தேன். சுமாராப் போச்சு.
இதுக்கிடையில என் கடைக்கு வந்த ஒரு பெரியவரு, தன் மகளை எனக்கு கட்டி வெச்சாரு. எனக்கு ஒரு கை ஊனமாயிருந்திச்சில்ல, அதுக்கு ஒரு காலு ஊனம். எங்கப்பாரும் ஊனந்தானே? அதனால, கட்டிக்கிட்டேன். ஆனா, கலியாணம் ஆன மூணே மாசத்துல பெரியம்மை வந்து அது போயிடிச்சு. அதுக்கு அப்பால எனக்கு எல்லாமே வெறுத்துப் போச்சு.

ஒரு நாளு, அடிக்கடி கடைக்கு வர்ற ஒருத்தரு, நான் சுதந்திரப் போராட்ட ஆளுன்றதைப் பேச்சு வாக்குல தெரிஞ்சுக்கிட்டு, 'கவர்மெண்ட்டுல சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பென்சன் தர்றாங்க. நீங்களும் வாங்கலாமே'ன்னு ரோசனை சொன்னாரு.
அவருக்கு நன்றி சொன்னேன். நல்ல வேளையா ஜெயில்லேர்ந்து வெளி வந்தப்ப ஏதேதோ அத்தாட்சிப் பத்திரமெல்லாம் குடுத்தாங்க. அதையெல்லாம் நானும் பத்திரமா வச்சுருந்தேன். அதைக் காமிச்சு பென்சன் வாங்கலாம்ன்னு அவரு சொன்னதும், எனக்கு ஒரு நப்பாசை. அந்த அத்தாட்சிய எல்லாம் காப்பி எடுத்துக்கிட்டு வர்ற வாரம் போலாம்ன்னு முடிவு பண்ணினேன்.
ஆனா, பாருங்க, என் மனசை மாத்துற மாதிரி, அடுத்த நாளு தற்செயலா ஒண்ணு நடந்திச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க. ஆனா, உண்மைங்க... எங்கடைக்கு யாரோ ரெண்டு புது ஆளுங்க வந்தாங்க.
ஆளுக்கு ஒரு சோடா வாங்கிக் குடிச்சுக்கிட்டே, 'என்ன இருந்தாலும், எவனும் காமராஜ் மாதிரி வரமாட்டான்யா. சும்மானாச்சும் காமராஜ் ஆட்சியைக் கொண்டாருவோம், காமராஜ் ஆட்சியைக் கொண்டாருவோம்ன்னு பேசுறாங்க. அவரு, ஒரு தரம் தோத்துட்டாருல்ல...
'அப்ப ஒருத்தரு, அவராண்ட, 'அய்யா... நீங்க பிரசாரம் பண்ணினது பத்தலை. எம்புட்டோ நல்ல திட்டமெல்லாம் கொணாந்திருக்கீங்க. நல்லதெல்லாம் பண்ணியிருக்கீங்க. ஆனாலும், தேர்தல் பிரசாரத்துல அதைப் பத்தியெல்லாம் நீங்க சனங்களுக்கு எடுத்துச் சொல்லவே இல்லே. அதுதான் உங்க தோல்விக்கு காரணமாப் போயிருச்சு'ன்னாராம்.
'அதுக்கு அவரு, 'பெத்த தாய்க்குச் சோறு போட்டேன். அவங்களுக்குச் சேலை வாங்கிக் குடுத்தேன்னெல்லாம் ஒருத்தன் பீத்தலாமா... அது, மகனோட கடமை இல்லியா... அதையெல்லாம் சொல்லிக் காமிப்பாங்களா'ன்னு தன்னோட பாணியில பதில் சொன்னாராம்...' என்றார்.

இந்தப் பேச்சு, என் கண்ணைத் தொறந்திறுச்சு. ஒண்டிக்கட்டையான நான் பென்சனை வாங்காமயே காலந்தள்ளிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.
அடுத்த நாள் அந்தாளு வந்தாரு. 'என்ன அண்ணாச்சி, அந்த செர்ட்டிபிகேட்ட ரெண்டு, மூணு காப்பி எடுத்து வெச்சுக்குங்க. கலெக்டர் ஆபீஸ்ல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரோட நண்பர் சூபர்வைசரா இருக்காரு... நானும் கூட வாறேன்'னாரு.
'இல்லீங்க, வேணாம். யோசிச்சேன், அது சரியில்லேன்னு தோணிடிச்சு. நம் தாய் நாட்டுக்கு செய்யிறது, தாய்க்கு செய்யிற மாதிரிதானுங்களே... அதுக்குக் கூலி வாங்குற மாதிரி இருக்கும். எனக்கு அசிங்கமாயிருக்கு'ன்னேன்.
அவரு ஆச்சரியப்பட்டுப் போனாரு.
கடைக்கு வந்த யாரோ ரெண்டு பேர், காமராஜ் பத்திப் பேசிக்கிட்டதைக் கேட்டதால, எனக்கு அப்படி மனசு மாறிடிச்சுங்குற உண்மையை நான் சொல்லியிருக்கணும். ஆனா, அந்த பெருமையை நானே ஒரு பொய்யை சொல்லித் தேடிக்கிட்டேன்.
தயவு பண்ணி, பென்சன் வாங்குறவங்களை, நான் கொறைச்சுப் பேசிட்டதா யாரும் நெனைச்சுறாதீங்க. அதது அவங்கவங்க நெலைமையைப் பொறுத்த வெசயம். அது சரி, நான் அது மாதிரி பொய் சொன்னது, அப்படி ஒண்ணும் பெரிய தப்பு இல்லீங்க தானே?

ஜோதிர்லதா கிரிஜா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
15-ஆக-202114:38:22 IST Report Abuse
Girija பொண்டாட்டி அது வாம்? , தேச பற்றாம்? எதோ தள்ளுபடி யில் கட்டிக்கிட்ட மாதிரி என்ன கதை நடை ? தேசப்பற்றை காட்டி எழுதினால் சும்மா இருப்போம் என்ற நினைப்பா ? எப்படியோ ஒரு கதை எழுதணும் காசு பண்ணனும்.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
15-ஆக-202112:13:54 IST Report Abuse
Manian ஆனால், வாங்குற பெண்ஷன்லே 45% சதம் கட்டிங் தரணும், இல்லாட்டி அந்தக் கையும் குளோசுன்னு உள்ளூர் களக மாசே மருதப்பன் சொன்னதைக் கேட்டேன். நான் கையெளுத்து போட்டு பகுத்தறிவாளி காட்டுமிராண்டி தற்குறி தங்கப்பனும் , உள்ளூர் போலீசும் 40% மாமூல் தான்னு, கொடுக்காட்டி ,கொத்தடிமையா ஆந்திரா கொண்டா ரெட்டிக்கு வித்தா காந்தி வந்தா காப்பாத்தப் போறாறு? ஆள்ரவன் மாரினாலும் ஆளுமை மாறவில்லையேன்னு அளுதேன். அதனாலாயே பெண்ஷன் வேணாம்னேன். ஆந்திரா அடிமை ஜெயிலுக்கு போக இப்ப பள்ளியிலா படிக்குறேன்? இது தப்பு்ங்களா?
Rate this:
Cancel
Saravanan - Chennai,இந்தியா
15-ஆக-202111:07:48 IST Report Abuse
Saravanan இந்த கதையை படித்த பிறகு கண்ணீர் வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X