சறுக்கலிலிருந்து மீண்டெழலாம்!
வங்கியில், வீடு மற்றும் தொழில் கடன் வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தார், சக ஊழியர் ஒருவர். வங்கியின் இப்பிரிவில், கடன் பெற்ற ஒருவர், திருப்பி செலுத்த தவறியதால், வாரா கடனாகி, நண்பர் மீது, நடவடிக்கை எடுத்து, அவரை பணியிலிருந்து நீக்கி விட்டனர்.
தன் மீது தவறில்லாத போதும், வங்கியின் நடவடிக்கையால் மிகவும் மனம் ஒடிந்து போனார்.
அவரிடம், தொழில் சார்ந்த கடன் பெற வழிமுறை தெரியாமல், பல குறு நிறுவனங்கள் இருப்பதை சுட்டி காட்டி, உங்களின் அறிவையும், முன் அனுபவத்தையும் முறையாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார், வங்கி உயர் அதிகாரி.
நண்பரும், வீட்டிலேயே ஒரு அறையை அலுவலகமாக மாற்றினார். பல நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் குறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு, வீடு மற்றும் தொழில் கடன் பெறவும், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கவும், அதற்கான வட்டி மானியம் அரசிடம் இருந்து பெறுவதற்கும் ஆலோசனை கூறி, உதவி வருகிறார்.
வங்கி நடைமுறைகள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி என்பதால், வேலை மிக எளிதாக முடிந்து, அவரது வாடிக்கையாளர்களும் திருப்தியாக செல்கின்றனர். அவருக்கும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. மேலும், கடன் பெற வங்கிகளுக்கு பரிந்துரைப்பதில், ஏஜென்ட் கமிஷனும் கூடுதலாக கிடைக்கிறது.
வேலை போனதும் புலம்பித் திரியாமல், தன் அனுபவ அறிவை பயன்படுத்தியதில், முன்பு பெற்ற சம்பளத்தை விட, கூடுதல் வருமானம் ஈட்டி வருகிறார்.
எந்த சந்தர்ப்பத்திலும் மனம் ஒடிந்து போகாமல் முறையாக சிந்தித்தால், வெற்றி நிச்சயம்.
ஆ.பூங்குழலி, சென்னை.
அர்த்தமுள்ள அழைப்பிதழ்!
திருமண அழைப்பிதழில், சொந்தங்கள் பெயர், படிப்பு, ஜாதி, பணிபுரியும் இடம் குறித்த விபரங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று, பலர் விரும்புவர். பல அழைப்பிதழ்களில் மணமகன் - மணமகள் வீட்டாரின் பெயர்களே ஒரு பக்கத்தை நிரப்பி விடும்.
என் உறவினரின் இல்ல திருமண அழைப்பிதழில் இடம்பெற்ற வாழ்த்து வாசகங்கள் வருமாறு:
நல்வழி காட்டிய - தாத்தா, பாட்டிகள்; அடையாளம் காட்டிய - அப்பா, அம்மா; அறவழி காட்டிய - ஆசான்கள்; பெருமைக்குரிய - பெரியப்பா, பெரியம்மாக்கள்; சிந்திக்க வைக்கும் - சித்தப்பா, சித்திகள்; மரியாதைக்குரிய - மாமா, மாமி; மதிப்பிற்குரிய - மாமா, அத்தைகள்.
அன்பு பாராட்டும் - அண்ணன், அண்ணிகள்; அரவணைக்கும் - சகோதர, சகோதரிகள்; பண்புள்ளம் படைத்த - சம்பந்திகள்; நெஞ்சம் நிறைந்த - சுற்றமும், உறவும்; உறவுகள் மேம்பட - மருமகன், மருமகள்கள்; நட்பு மாறாத - நண்பர்கள்.
மழலை பேசும் - குட்டீஸ்கள், பேரன் - பேத்திகள் என்று, உறவுகளை உள்ளன்போடும், பாசத்தோடும், நேசத்தோடும் அழைப்பு விடுத்திருந்தது, மனதை தொட்டது.
இனி, திருமண வீட்டினர், இதுபோல் தங்களின் அழைப்பிதழில் புதிய சிந்தனைகளை இடம்பெறச் செய்து, அசத்தலாமே!
— கல்வே கார்த்திக், புதுச்சேரி.
இப்படியும் உதவலாமே!
செவிலியராக பணிபுரியும் என் சகோதரியை காண, செவிலிய தோழியர் சிலர், வீட்டிற்கு வந்தனர். அனைவரது கைகளிலும் மஞ்சள் பை, 'வெயிட்'டாக இருந்தது.
சகோதரியுடன் அனைவரும் கிளம்ப தயாரானபோது, 'எங்கே...' என கேட்டேன்.
அனைவரும் முதியோர் இல்லம் செல்வதாக கூறவும், 'ஏன்?' என்றேன்.
'மாதா மாதம் முதியோர் இல்லம் சென்று, தலைவலி தைலம், காய்ச்சல், தலைவலி, கை கால் வலி மற்றும் மூட்டு வலிகளுக்கென முக்கியமான மருந்து மாத்திரைகளை கொடுத்து விட்டு வருவோம். இத்துடன், பழம், பிஸ்கட், ரொட்டி என, சில உணவு வகைகளும் உண்டு. ஏதோ எங்களால் இயன்ற சேவை...' என்றனர்.
'மருந்து, மாத்திரைகளெல்லாம் நீங்க வேலை செய்யும் இடத்தில் சுட்டதா...' என்றேன்.
'இல்லை... எங்களின் சேவை அறிந்து, சாம்பிள் வரும், மருந்து, டானிக் போன்றவற்றை கொடுப்பார், எங்கள் மருத்துவர். அத்துடன், நாங்களும் வாங்கி கொடுக்கிறோம்...' என்றனர்.
அவர்களிடம், 500 ரூபாய் கொடுத்து, 'என் சார்பிலும் ஏதாவது வாங்கிக் கொடுங்கள்...' என்று கூறி, அவர்களது பணியை பாராட்டி, வாழ்த்தினேன்.
- அ. ஆனந்தராம்குமார்,
துாத்துக்குடி.