எஸ். முருகேசன், திருத்தங்கல்: அமெரிக்காவிலும் பிச்சைக்காரர்கள் இருக்கின்றனரா?
இருக்கின்றனர். அவர்கள், 'ஐயா... அம்மா...' என, பிச்சை எடுக்க மாட்டார்கள்... பிடுங்கிக் கொள்வர்!
ஆர்.வரதகிருஷ்ணன், நெல்லிக்குப்பம்: குற்றச்செயலில் ஈடுபடும் காவலர்களை, உடனே ஆயுதப்படைக்கு மாற்றி விடுகின்றனரே... குற்றமிழைப்போரின் புகலிடமா, கூடாரமா ஆயுதப்படை?
அவர்களுக்கான சிறை சாலை அது. அங்கு கை நீட்ட வாய்ப்பில்லை; குற்றச் செயல்களில் ஈடுபட அதிகாரமில்லை! அதனாலேயே ஆயுதப்படையில் தள்ளப்படுகின்றனர்!
ச.சுப்புலட்சுமி, சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், 'ரெய்டு' - பழிவாங்கும் படலமா?
இல்லை! ஊழலில் திளைத்தவர்களை உள்ளே தள்ளும் நல் நடவடிக்கைகள் தான்!
க. சுவாதி, கோவை: வாரமலர் அட்டைப் படத்தில் வர என்ன செய்ய வேண்டும்?
சினிமா நடிகையாக வேண்டும் அல்லது சிறுவர்மலர் இதழில், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதிக்கு எழுதி, படம் அனுப்பினால், அட்டையில் வெளியாகும்!
* க. ராஜாராம், குஞ்சன்விளை, கன்னியாகுமரி: என் மனைவி, நான் எது சொன்னாலும் எதிர்த்து பேசுகிறாள்... அவளை ரெண்டு போடு போட்டால் என்னவென்று தோன்றுகிறதே...
தவறு! நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? அன்பா, பொறுமையா, 'குளுகுளு'ன்னு பேசி சமாளியுங்க ராஜாராம்!
கோ. குப்புசாமி, சங்கராபுரம்: தினமும் காகத்திற்கு உணவு வைப்பதுண்டா சார்?
ஓ! தினமும் நாலு துண்டு ரொட்டியை தண்ணீரில் நனைத்து பிசைந்து போடுவேன்... காலை, 6:30 மணிக்கு! அவை துணைக்கு, 'கா கா' என, மற்ற காக்கைகளை கூப்பிடுமே தவிர, பகிர்ந்து உண்ணாது; சுயநலமே அதிகம்!
* ஆர். கேசவன், பொட்டல்புதுார், தென்காசி: எனக்கு கசப்பான அனுபவம் எப்போதும் ஏற்படுகிறதே... ஏன்?
நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கி இருக்கிறீர்களா அல்லது கடன் கொடுத்திருக்கிறீர்களா... அப்போது, பெரும்பாலும் கசப்பான அனுபவம் தான் ஏற்படும்!
வே. குணசேகரன், கோவில்பட்டி: கிளியுடன் பெண்களை ஒப்பிட்டு வர்ணிக்கின்றனரே... ஏன்?
இருவரும் அழகாய் இருக்கின்றனரே... மேலும், இருவர் குரலும் இனிமை. இதற்கு மேலும் இருவரும் கூண்டில் தானே இருக்கின்றனர்!