உயிரோடு உறவாடு... (24)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2021
00:00

முன்கதை சுருக்கம்: 'வாட்ஸ் - ஆப்'பில், காலில் கட்டுடன் அம்மா படுத்திருக்கும் படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரிஷி, மாமியிடம் கூறி ஊருக்கு புறப்பட்டான். இந்நிலையில், 24 மணி நேரத்திற்குள் வீட்டை காலி செய்யுமாறு, வீட்டு உரிமையாளர் கூறியதாக, மைத்ரேயி போன் செய்யவும், பஸ் புறப்படவும் சரியாக இருந்தது -

ரிஷிக்குள் உருவாகியிருந்த மைத்ரேயி என்ற அந்த புயல், அவனை ஸ்தம்பிக்க வைத்தது.

புறப்பட்ட பஸ் நல்ல வேகம்... போனில் அவனை பிடித்த மைத்ரேயி, அவன் மவுனத்தை உணர்ந்தவளாய், ''என்ன ரிஷி... நான் இப்படி சொல்லவும் என்ன செய்யிறதுன்னு தெரியலியா,'' என்று சற்று நிமிண்டி விட்டாள்.
''ஆமாம்... நானும் கிளம்பிட்டேன், என்ன செய்யிறதுன்னு தெரியலியே?''
''இல்ல, நீங்க வர எப்படியும் நாலைஞ்சு நாள் ஆகும் இல்லியா?''
''ஆகலாம்... இப்ப சொல்ல முடியாது!''
''அதுவரை இங்க தாக்குப்பிடிக்க முடியாது. வேணும்னா மாமியை பார்த்து, அவங்க சொன்ன அந்த, 'போர்ஷனு'க்கு குடி போயிடட்டுமா?''
''வரும்போது, 'இப்ப அவசியமில்ல'ன்னு சொல்லிட்டு வந்தேன். திரும்ப, மாமியை தான் கேட்கணும்.''
''ப்ளீஸ்... எனக்காக கொஞ்சம் கேட்டு சொல்ல முடியுமா?''
''கேட்கறேன்... ஆனா, இந்த, 'கேஷுவல் டிரெஸ், பீர் பாட்டில்' இதெல்லாம் இங்கே சரி வராது. மாமி ரொம்ப ஆச்சாரமானவங்க.''
''புரியுது ரிஷி... நானும் என்னை கொஞ்சம் மாத்திக்கலேன்னா கஷ்டம்ன்னு, இப்ப எனக்கு நல்லாவே புரியுது... நான் அங்க ஜாக்கிரதையா இருப்பேன்.''
''இப்ப கூட திருந்திட்டேன்னு உன்னால சொல்ல முடியலல்ல?''
ரிஷியின் கேள்வி, அவளை மவுனிக்க வைத்தது.
''சரி சரி... மாமிகிட்ட பேசிட்டு கூப்பிடறேன்,'' என்றவன், 'லைனை கட்' செய்து, மாமியை பிடித்து, விஷயத்தை சொன்னான்.
''தாராளமா வரச்சொல்,'' என்று முடித்துக் கொண்டாள், மாமி.
பஸ் தாம்பரம் கடந்திருந்தது. அதற்குள் தான், எத்தனை எத்தனை திருப்பங்கள். மாமி சொன்னதை மைத்ரேயியிடம் கூறவும், அவளிடம் ஒரே மகிழ்ச்சி.
''தேங்க்ஸ் ரிஷி... மிச்ச விஷயங்களை, நான் மாமிகிட்ட பேசிக்கறேன். மாமி நம்பரை மட்டும் கொஞ்சம் அனுப்பி வைங்க,'' என்றாள்.
நம்பரை, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பியதும், கண்கள் செருக மல்லாந்தான். பஸ்சுக்குள் எல்லாரும் மொபைலும், கண்ணுமாகவே இருந்தனர்.
பஸ்சிலும் ஒரு, 'டிவி' இருந்தது. முன்பெல்லாம் அதில் ஏதாவது ஒரு திரைப்படம் ஓடும். அதையே ஒரு அதிசயமாக நினைத்ததுண்டு. இன்றோ அந்த, 'டிவி' நிராகரிக்கப்பட்டிருந்தது. அது காட்டும் காட்சிகளை விட, அதிகமாக உள்ளங்கையிலேயே வைத்து பார்க்க முடிந்ததை, ஓடும் பஸ்சுக்குள் ஒருமுறை உணர்ந்தான், ரிஷி.

கோவைக்குள் நுழைந்து கொண்டிருந்தது, அந்த பஸ். கோவைக்கென்றே உள்ள பனிக்காற்று, ரிஷியின் முகத்தில் அறைந்து, அவனை எழுப்பிற்று. கண்களை கசக்கியபடி சொந்த ஊரை பார்க்கத் துவங்கினான். பக்கவாட்டில் விமான நிலைய சாலை கண்ணில் பட்டது. அடுத்த நொடி, அவன் மனமும் விமானம் போல மிதக்கத் துவங்கியது.
தாகமெடுத்து குடிக்கும் தண்ணீர், சூடான முதல் சோற்று உருண்டை, பால்ய நண்பன் சந்திப்பு, நெடிய பிரிவுக்கு பின் சொந்த ஊருக்கு வருவது என்கிற எல்லாமே, கலப்படமில்லாத சுகங்கள். ரிஷியின் மனமும் அந்த சுகத்தில் ஆழ்ந்து போனது.
சேனல், சென்னை, தமிழ், மாமி, மைத்ரேயி என்று எல்லாருமே, மன வானில் துார போய் விட்டனர்.
ஹாஸ்பிடலில், அம்மா எதிரே போய் நின்றபோது, ஹார்லிக்ஸ் ஆற்றி கொடுத்துக் கொண்டிருந்தார், மாமா. அம்மாவின் ஒரு கால், 'லெக் கிரேனில்' துாக்கி நிறுத்தப்பட்டு, பெரிய மாவுக் கட்டு போடப்பட்டிருந்தது.
முதுகு சுமையை இறக்காமல், ''அம்மா...'' என்று தலையருகே சென்று, தழைந்து கட்டிக் கொண்டான், ரிஷி.
''ரிஷி... வந்துட்டியா? வா வா...'' சிலிர்த்தாள், அம்மா.
''என்னம்மா இது... எப்படிம்மா ஆச்சு?'' சிணுங்கினான், ரிஷி.
''எல்லாம் நேரம்ப்பா... என்ன பண்ண சொல்றே?''
''என்ன நேரமோ... என்னையும் பந்தாடுதும்மா.''
''உனக்கென்னடா... அதான் உன் புரோகிராம் பெரிய, 'ஹிட்' ஆயிடுச்சே... ப்ரமோஷனும் கிடைச்சு, வேலையும் நிரந்தரமாயிடுச்சுல்ல?''
''ஆமாம்மா... ஆனா, என் டைரக் ஷன் கனவு சுக்குநுாறா உடைஞ்சு போயிடுச்சே... கே.வி.ஆனந்த் சார் மறைஞ்சுட்டாரேம்மா...''
''உண்மைதாண்டா... ஆனா, அதெல்லாம் நம் கையிலயா இருக்கு?''
''எல்லாத்துக்கும் சமாதானம் சொல்ல ஒரு பழமொழி இருக்கும்மா நம்மகிட்ட. மத்தபடி நடக்கறது தான் நடக்குது. ஆனா, எல்லாத்தையும் நாமே பண்றதா நினைச்சுக்கறோம்.''
''போனா போவுது நினைச்சுக்கங்கன்னு, அதை மட்டும் கடவுள் விட்டு வெச்சிருக்காருப்பா.''
அம்மாவும், பிள்ளையும் இப்படி தத்துவமாய் பேசுவதை கேட்ட மாமா, ''போதுமே... வந்ததும், வராததுமா இப்படியா தத்துவம் பேசுவீங்க,'' என்று இடையில் புகுந்து, கலைத்தார்.
''சாரி மாமா... உங்களை நான் மறந்துட்டேன். எப்படி இருக்கீங்க?'' என்று, அவர் பக்கம் திரும்பினான், ரிஷி.
''ஏதோ இருக்கேன் மாப்ளே...'' என்றார்.
அவனிடம் சற்று அதிர்ச்சி. ரிஷி என்று தான் கூப்பிடுவார்... மாப்பிள்ளை என்றழைத்து கேட்டதே இல்லை.
உடனே, ''என்ன மாமா, புதுசா மாப்ளைங்கறீங்க?'' என்று, கேட்டான்.
அவன் அப்படி உடனடியாக கேட்பான் என்று சற்றும் எதிர்பார்க்காதவர், ''அதுவா... எல்லாம் உங்கம்மா சொல்வா... அவ வாயால சொல்றதுதான் சரி...'' என்று, ரிஷியின் அம்மா சிவகாமியை பார்த்தார்.
''ஆமாண்டா... நீ, என் அண்ணனுக்கு மாப்ளையாகப் போறே... என்னை பார்க்கறேல்ல... நான் இனி அவ்வளவு தான்... பழையபடி நான் நடக்க முடிஞ்சா, அதுவே என் வரைல ரொம்ப பெரிய விஷயம். இப்படி ஒரு நிலையிலதானே, பக்க துணையும் தேவைப்படுது.''
சிவகாமி எங்கு வருகிறாள் என்பது, ரிஷிக்கு நன்றாக புரிந்தது. அதுவரை நிலவிய ஏகாந்தம், பரஸ்பரம் எல்லாமே மாறி, 'குபுகுபு'வென புகை சூழும் ஒரு இடத்தில் தான் நிற்பது போலெல்லாம் தோன்றத் துவங்கியது.
''அம்மா... என்னம்மா இது இப்படி திடீர்ன்னு...'' உச்சஸ்தாயியில் திருப்பி கேட்டான்.
''திடீர் திடீர்ன்னுதானே எல்லாமே நடக்குது.''
''என்னம்மா நீ... இப்பதாம்மா என் கேரியரை துவங்கியிருக்கேன். இதுலயே ரொம்ப துாரம் போக வேண்டியிருக்கும்மா...''
''போடா... நல்லா போ... கூட உன் பொண்டாட்டியையும் கூட்டிகிட்டு போ. இது, உனக்கு கல்யாண வயசுடா.''
''ஐய்யோ அதுக்கு இன்னும் காலம் இருக்கும்மா.''
''உனக்கு இப்ப வயசு, 26 ஆகுது. உங்கப்பாவுக்கு, 22லயே திருமணம் ஆயிடுச்சு. அப்ப எனக்கு, 20 வயசு தான்.''
''உங்க காலம் வேற, எங்க காலம் வேறம்மா.''
''மாப்ள... என் மகள் ரேவதியை உனக்கு பிடிக்கலியா... இல்ல, சென்னையில போன இடத்துல ஏதாவது, 'லவ்'வா? எதா இருந்தாலும் உடைச்சு சொல்லிடு மாப்ள... நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்; எனக்கு இந்த காலத்து பசங்கள பத்தி நல்லா தெரியும்.''
கார்னர் கட்டி, அவனை பிடிக்க பார்த்தார், மாமா.
''ஐயோ மாமா... எனக்கு அந்த நினைப்பே இல்லேங்கறேன்... பிடிக்கலையா, 'லவ்'வான்னு போட்டுத் தாக்கறீங்களே?''
''நுாத்துக்கு தொண்ணுாறு கல்யாணம், பொண்ணு - மாப்ள வரைல, அவங்க இப்படி சொல்லித்தான் மாப்ள நடந்துருக்கு. எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கன்னு, மாப்ளை - பொண்ணு அலையறதெல்லாம், 10 பர்சன்ட் தான்.''
''ரிஷி... உன் மாமா சொல்றதுதான் சரி... ரேவதி விஷயத்துல கூட நான்தான் கேட்டேன். கைல வெண்ணையை வெச்சுக்கிட்டு எதுக்கு நெய்க்கு அலையணும்?''
சிவகாமி அப்படி கேட்கவும், அவளை சற்று பரிதாபமாக பார்த்தான், ரிஷி.
மாமன் மகளான ரேவதி முகம் கூட அவன் மனதில் சரியான பதிவில் இல்லை. ரேவதி என்கிற பெயரை கேட்கும்போது மட்டும் லேசாய் ஞாபகத்தில் வந்து போவாள்.
''ஆமா, இது ரேவதிக்கு தெரியுமா... அவ சம்மதத்தை கேட்டீங்களா?'' என்று மனதுக்குள் அப்போது தோன்றிய ஒரு கேள்வியையும் மிக வேகமாய் கேட்டான்.
''என் பொண்ணு, நான் சொல்றதுக்கு மறு பேச்சு பேச மாட்டா மாப்ள...'' என்று மாமா சொன்ன பதிலில், ஒரு திமிறும், 'நீ எப்படி?' என்று கேட்பது போலவும் இருந்தது.
பதிலுக்கு மலங்க மலங்க விழித்தான். ஆஸ்பத்திரிக்குள்ள வந்து முழுசாய், 30 நிமிடம் கூட ஆகவில்லை... தான் மாப்பிள்ளை ஆகிவிட்ட வேகத்தை நினைத்து அதிரவும் செய்தது அவன் மனது.
''என்னடா யோசனை... சரின்னு சொல்லுடா... கல்யாணத்தை சீக்கிரமா பண்ணிட்டா எனக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும் பாரு...'' பரிதாபமான குரலில் பிடித்து இழுத்தாள், சிவகாமி.
'ஏம்மா, உனக்கு உதவிக்கு ஆள் வேணும்ன்னா ஒரு நர்ஸ் வெச்சுக்க... அதுக்காக எனக்கு கல்யாணம் பண்ணணுமா?' என்று கேட்க நினைத்தவன், அப்படியே அடக்கி, ''அம்மா... கொஞ்சம், 'டைம்' கொடும்மா எனக்கு... யோசிக்கறேன்,'' என்றான்.
''எவ்வளவு வேணா யோசி. ஆனா, இப்ப வேண்டாம்ன்னு மட்டும் சொல்லிடாதே,'' என்று அழுத்தம் கொடுத்தாள்.
அதன்பின், வீட்டு சாவியை வாங்கி, சாய்பாபா காலனியில் இருக்கும் வீட்டுக்கு வந்தான். குளித்து சற்று, 'ரிலாக்ஸ்' ஆனவன், தமிழ்ச்செல்விக்கு போன் செய்யலாமென்று, போனை கையிலெடுத்தான்.
கச்சிதமாக அப்போது கூப்பிட்டாள், மைத்ரேயி.
''சொல்லுங்க, மைத்ரேயி.''
''நான் மாமி வீட்டுக்கு குடி வந்துட்டேன், ரிஷி. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்...'' என்றாள்.
''வாவ்... இவ்வளவு வேகமாவா?''
''என்ன பெரிய வேகம்... பாத்திரமா, பண்டமா... ஒரு சூட்கேஸ், இரண்டு லெதர் பேக், ஒரு பிளாஸ்டிக் வாளி, ரெண்டு மக் - அதுக்குள்ள சோப்பு பாக்ஸ், டூத்பேஸ்ட் அண்ட் ப்ரஷ்... தட்ஸ் ஆல்,'' என்ற மைத்ரேயி குரலில், ஒரு புது தெம்பு.
''பன்டாஸ்ட்டிக்!''
''அதைவிட, 'பன்டாஸ்ட்டிக்' மாமியோட காபி, டிபன் ரிஷி... இப்படியெல்லாம் நான் சாப்பிட்டதே இல்லை.''
''அப்படியா... மாமிக்கு ரொம்ப ராசியான கை. அப்புறம், ரொம்ப, 'அட்வான்டேஜ்' எடுத்துக்காதீங்க... உங்க நல்லதுக்குதான் சொல்றேன்.''
''ரிஷி... எதுக்கு இந்த வாங்க போங்க... கால் மீ வா, போ...''
''என்ன திடீர்ன்னு...''
''இல்ல... இது கொஞ்சம் போலியா இருக்கு. நான் உங்கள மாதிரி நபர்களோட நெருங்கிப் பழக விரும்பறேன். நானே அதை, 'ஸ்டார்ட்' பண்ணிடறேன். ஆமாம், உன் அம்மா உடம்பு இப்ப எப்படி இருக்கு... நார்மலா இருக்காங்களா?''
ஒரு, 60 செகண்டுக்குள் ரிஷிக்குள் மிக சகஜமாக புகுந்து விட்டாள், மைத்ரேயி.
''யெஸ்... அம்மா, நார்மலா இருக்காங்க. பயப்பட எதுவுமில்ல. நடக்கதான் சில மாசமாகும்.''
''நான் கூட வேண்டிக்கிறேன்... 'கோவிலுக்கு போறேன். வர்றியா'ன்னாங்க, மாமி... என் வாழ்க்கையில முதல்முறையா கோவிலுக்கு போக போறேன். அங்க, உங்கம்மாவுக்காக, வேண்டிக்கிறேன், ரிஷி... பை!''
படபடவென பேசி, போனை வைத்து விட்டாள், மைத்ரேயி.
அவளை எண்ணி ஒரு வினாடி சிரித்தான், ரிஷி.
நிச்சயம் மாமி அவளை ஒழுங்குபடுத்தி விடுவாள் என்று நம்பியவன், தமிழ்ச்செல்வியை கூப்பிட்டு, ரேவதி பற்றி சொல்லி, ''தமிழ், உனக்கொரு சுகுமார்னா, எனக்கொரு ரேவதி... காலம் நம்ப ரெண்டு பேரையும் எப்படி வெச்சு செய்யுது பார்த்தியா?'' என்று கேட்கவும், பலமாக சிரித்தாள், தமிழ்ச்செல்வி.
''என்னப்பா இப்படி சிரிக்கறே?''
''இல்ல... எண்ணங்கள்ள தான், உனக்கும், எனக்கும் ஒத்துமைன்னா... கல்யாண விஷயத்துலயுமான்னு நினைச்சேன். சிரிப்பு தானா வந்துடுச்சு. நம்ப ரெண்டு பேர் அம்மாவும், 'டிவி' தொடர்ல வர்ற அம்மாக்கள் மாதிரியே பேசி, நம்பள, 'லாக்' பண்ணிட்டாங்க பார்த்தியா?''
''சரி... இப்ப நான் என்ன பண்ணட்டும்?''
''நான் உன்கிட்ட கேட்க நினைச்ச அதே கேள்விய, நீ என்கிட்ட கேட்கறியா?''
''உனக்குதான் நிச்சயமே முடிஞ்சிடுச்சே... இன்னும் என்ன?''
''என்னவா... உடனே ராஜினாமா பண்ணிட்டு, ஊருக்கு கிளம்பி வரச்சொல்லி, அப்பாகிட்டேர்ந்து போன்... அம்மாவுக்கு திரும்ப, 'சீரியஸ்'ன்னு ஒரு பொய்... அதனால, வர்ற முகூர்த்தத்துலயே கல்யாணம்ன்னு முடிவு. எப்படி இருக்கு இந்த அதிரடி?''
''எல்லாம் சுகுமாரோட வேலையா?''
''வேற யார்... நான் பேர் எடுக்கறதே அவருக்கு பிடிக்கல. உன்னை நினைச்சும் குழப்பம். எல்லாம் சேர்ந்து எனக்கு இப்படி ஒரு நெருக்கடி!''
தமிழ்ச்செல்வி சொன்னதை கேட்க, பரிதாபமாக இருந்தது, ரிஷிக்கு.
அப்போது, யாரோ வரும் சத்தம் கேட்டு, திரும்பினான்.
மாமன் மகள் ரேவதி தான் வந்து கொண்டிருந்தாள்.

தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X