முன் வச்ச காலை பின் வைக்காத, கமல்ஹாசன்!
'அரசியலை கை கழுவி, மீண்டும் முழுநேர நடிகராக உருவெடுங்கள்...' என்று, கமலை, அவரது சினிமா நண்பர்கள் கேட்டனர். அதற்கு, 'சினிமாவில், இத்தனை காலமும் என்னை வாழ வைத்து வரும், தமிழ் மக்களுக்கு, பிரதிபலனாக, அரசியலுக்கு வந்து நன்மை செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால், அவர்கள், எனக்கு, தோல்வியை பரிசாக கொடுத்து விட்டனர். என்றாலும், முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேன். சினிமாவில் நடித்துக் கொண்டே, மக்கள் சேவை என்பதை, காலத்துக்கும் தொடருவேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
பூஜா ஹெக்டேவை பயமுறுத்திய, விஜய்!
விஜயுடன், 'டூயட்' பாட வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகையருக்கும் இருக்கும். ஆனபோதும், அவருடன் பாடல் காட்சிகளில் நடனமாட வேண்டும் என்றதும், அலறி விடுவர். அந்த அளவுக்கு அதிரடியான, மின்னல் வேகத்தில் நடனமாடக் கூடியவர், விஜய். தற்போது, விஜயுடன், பீஸ்ட் படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே, உஷாராகி விட்டார். விரைவில் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ள நிலையில், முன்கூட்டியே படத்தின் நடன மாஸ்டரை உஷார் பண்ணி, 'ரிகர்சலை' துவங்கிய பூஜா, 'விஜய்க்கு இணையாக ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களப்படுத்தி, இந்த ஒரே படத்தில், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தட்டித் துாக்கப் போகிறேன்...' என்று, 'சொடக்' போடுகிறார். கற்ற இடத்தில் வித்தையை காட்டும் கதை!
— எலீசா
'ரிஸ்க்' எடுக்கும், நயன்தாரா!
'ரொமான்ஸ், ஆக் ஷன், ஹாரர்' மற்றும் பக்தி என, மாறுபட்ட கதைகளில் நடித்து விட்ட, நயன்தாரா, அடுத்தபடியாக, ஒரு படத்தில், காமெடி கதையில் நடிக்கப் போகிறார். 'காமெடி என்பது சவாலான விஷயம் என்றபோதும், அப்படி நடித்து, 'ஸ்கோர்' பண்ணும்போது தான், 100 சதவிகிதம் ஒரு முழுமையான நடிகையாக முடியும். மேலும், ரசிகர்களைப் பொறுத்தவரை, காமெடி என்பது, சாதாரணமாக தெரிந்தாலும், எங்களைப் பொறுத்தவரை அதுதான் ரொம்ப, 'ரிஸ்க்'கானது. ஒருவரை எளிதாக அழ வைத்து விடலாம். ஆனால், சிரிக்க வைப்பது அத்தனை எளிதல்ல என்பதால், இந்த படத்திற்காக நிறைய, 'ஹோம் ஒர்க்' செய்து, என்னை தயார்ப்படுத்திக்கப் போகிறேன்...' என்கிறார். எருவும், தண்ணீரும் உண்டானால், எந்த நிலமும் விளையும்!
— எலீசா
'பஞ்ச் டயலாக்' அலறும், விஜய் ஆண்டனி!
சினிமா உலகைப் பொறுத்த வரை, 'பஞ்ச்' வசனம் பேசி, ரசிகர்களை அலற விட்டால் தான், 'ஸ்டார் ஹீரோ'கள் என்று, ஒப்புக்கொள்வர். ஆனால், விஜய் ஆண்டனியிடம், ரசிகர்களைப் பார்த்து பேசுவது போன்று, இயக்குனர்கள், 'பஞ்ச்' வசனம் பேச சொன்னால், 'அதெல்லாம் இப்போது வேண்டாம்...' என்று ஓட்டம் பிடிக்கிறார். காரணம், 'இன்னமும், ரசிகர்கள் என்னை முழுமையாக அங்கீகரிக்கவில்லை. அவர்களின் அபிமான, 'ஹீரோ' என்கிற நிலை உருவாகும்போது, 'பஞ்ச்' வசனம் பேசினால் தான், கை தட்டி, விசில் அடிப்பர். ஆனால், இப்போது பேசினால், 'வளருவற்கு முன்னே இந்த நடிகருக்கு ஆசையைப்பாரு' என்று கிண்டலடித்து, 'இமேஜை பஞ்சர்' பண்ணி விடுவர்...' என்கிறார்.
- சினிமா பொன்னையா
கறுப்புபூனை!
சந்திரமுகி நடிகை, கதையின் நாயகியாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்றபோதும், சில படங்கள், 'பிளாப்' ஆகி விட்டது. அதனால், தொடர்ந்து கதையின் நாயகியாக, 'ரிஸ்க்' எடுக்க வேண்டாம் என்று, முக்கியமான கேரக்டர்களில் நடிக்க தயாராகி விட்டார். இந்நிலையில், பாகுபலி நாயகனுடனான தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு, பேச்சு நடத்தினார், நடிகை. அதற்குள் குறுக்கால பாய்ந்து, அந்த வாய்ப்பை அபகரித்து விட்டார், நீலாம்பரி நடிகை. இதனால், 'செம டென்ஷன்' ஆன சந்திரமுகி, 'ஒரு கேரக்டர் ரோலுக்காக அவருடன் மோதி, தன், 'இமேஜை டேமேஜ்' செய்து கொள்ள வேண்டாம்' என்று, நீலாம்பரிக்கு சாபம் கொடுத்ததோடு, 'ஆப்' ஆகி விட்டார்.
'நம்ம கட்சி மகளிர் அணியினர், இரு பிரிவா பிரிஞ்சதுமில்லாம, ஜோதிகா, ரம்யா என, இரண்டு தலைவிகள் உருவாகிட்டாங்க. அவங்க அடிக்கிற லுாட்டியில் நம்ம நிம்மதியே போச்சு...'
'அப்படி என்ன செஞ்சுட்டாங்க?'
'தலைவர், எங்கு கூட்டத்துக்கு சென்றாலும், தன்னைத்தான் முன்னிலைப் படுத்தணும்ன்னு மல்லுக் கட்டிட்டு இருக்காங்க. சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், தான்தான் சீனியர் என்று, 'கெத்து' காட்டி, ஜோதிகாவ பின்னுக்கு தள்ளிட்டாங்க, ரம்யா. இவங்க போடுற குஸ்தியிலே, தலைவருக்கு தான் மண்டை குடைச்சல் அதிகமாயிடுச்சு...' என்று இரு தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.
சினி துளிகள்!
* பாகுபலி,'வெப்சீரியலை' தொடங்குவதாக, டைரக்டர் ராஜமவுலி அறிவித்தபோது, அதில் ராஜமாதா வேடத்தில் நடிக்க தன்னைத்தான் அழைப்பார் என்று எதிர்பார்த்திருந்தார், ரம்யா கிருஷ்ணன். ஆனால் ராஜமவுலியோ, நயன்தாராவை அந்த வேடத்துக்கு ஒப்பந்தம் செய்து, ரம்யா கிருஷ்ணனுக்கு பலத்த, 'ஷாக்' கொடுத்து விட்டார்.
* 'சென்டிமென்ட்' வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ள ஜோதிகா, உடன்பிறப்பே என்ற படத்தில், கிழக்கு சீமையிலே படத்தில் ராதிகா நடித்தது போன்று, பாசத்தில் உருகும் கிராமத்து தங்கை வேடத்தில் நடித்துள்ளார்.
இவ்ளோதான்!