வேட்டவலம் ஜமீன்தாருக்கு இரு மனைவியர். அவர்களில் ஒருவருக்கு, பிரம்மராட்சசம் பிடித்திருந்தது. திடீர் திடீரென்று அலறுவதும், அலங்கோலமாக ஓடுவதுமாக இருந்தார். மற்றொரு மனைவியோ, மகோதரம் எனும் வயிறு பெருத்து காணப்படும் நோயால் அவதிப்பட்டார்.
மனைவியரின் நோய்கள் தீர்வதற்காக, பல வழிகளிலும் முயன்றார், ஜமீன்தார்.
குறி பார்ப்பது, கோடாங்கி கேட்பது, மந்திரம், தந்திரம், -மருந்து என, ஏராளமாக செலவு செய்தார். கூடவே, ஆடு, -கோழிகளை பலியிடுவது, பொங்கல் படையலிடுவது என, வேண்டுதல் நிகழ்வுகளும் நடந்தன. ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.
கடைசியில், ஒரு மகானைப் பற்றி கேள்விப்பட்டு அழைத்தார்; அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார்.
மகானின் வருகைக்காக, ஜமீனுக்குட்பட்ட பகுதிகளையும், மாளிகையையும் நன்றாக அலங்கரித்தார். அவருக்காக இரண்டு அலங்கார நாற்காலிகளை போட்டு, 'நாம் நினைக்கும் இந்த நாற்காலியில் அவர் அமர்ந்தால், அவர் மகான் தான்...' என்று, ஒரு நாற்காலியை நினைத்தார், ஜமீன்தார்.
ஜமீன்தாரின் மாளிகை வாசலில், மகான் அடியெடுத்து வைத்தவுடன், பிரம்மராட்சசம் பிடித்த மனைவி, 'நான் போகிறேன்... நான் போகிறேன்...' என்று, இரு கைகளையும் நீட்டி, அலறி, மகானிடமிருந்து திருநீறு வாங்கி அணிந்து, அவரை வணங்கினாள்.
அவளைப் பிடித்திருந்த பிரம்மராட்சசம் மாயமாய் மறைந்தது.
ஜமீன்தாரின் முகம், மகிழ்ச்சியைக் காட்டியது. அதன்பின், மாளிகைக்குள் நுழைந்த மகான், ஜமீன்தார் நினைத்த நாற்காலியிலேயே அமர்ந்தார். ஜமீன்தாரின் உள்ளம், மகானின் திருவடியில் சரணடைந்தது.
மகானின் முன், மகோதரம் பிடித்திருந்த தன் இரண்டாவது மனைவியை நிறுத்தி, அவருடைய நோயையும் தீர்க்க வேண்டினார்.
தம் திருக்கரங்களால் மூன்று வேளை திருநீறு அளித்து, இரண்டாவது பெண்மணியின் நோயையும் தீர்த்தார், மகான்.
அந்த மகானின் அடியாராக மாறி, அவரின் அருள் உபதேசங்களை பின்பற்றத் தீர்மானித்தார், ஜமீன்தார்.
ஜமீன்தாரின் மனைவியர் இருவரின் தீராத நோய்களைத் தீர்த்து வைத்த அந்த மகான், ராமலிங்க சுவாமிகள் எனும் வள்ளலார். அருள் உபதேசங்கள்,- பாடல்கள் மூலம் மட்டுமல்ல; செயல்களாலும் அடியார்களின் இன்னல்கள் தீர்த்தவர், வள்ளலார்.
அதை அனுபவத்தில் கண்ட ஜமீன்தார், வள்ளலாரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். வணங்கியவருக்கு அருள் உபதேசம் செய்த வள்ளலார், பலியிடும் பழக்கத்தை நிறுத்தி, அனைத்து ஜீவராசிகளிடமும் அன்போடு நடக்க அறிவுறுத்தினார்.
நம் பாரத நாட்டில், காலங்கள் தோறும் பல மகான்கள் தோன்றி, கவலைகளை நீக்கி இருக்கின்றனர். அவர்களின் அருளாசியை வேண்டுவோம்; அல்லல்கள் நீக்குவோம்!
பி. என். பரசுராமன்