ஆவாரம் பூ!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2021
00:00

ஐந்து ஆண்டுகளுக்குப் பின், அந்த ஊரில் மீண்டும் காலெடுத்து வைத்தான், நகுல்.
அந்த இடம், பாலக்காட்டுக்கு அருகே உள்ள ஒரு கிராமம். கேரளாவும் - தமிழகமும் கலக்கும் ஓரிடம்.
என்னும் நின்டே மொய்தீன் என்ற மலையாள திரைப்படத்தின் காட்சிகள் போல, எங்கும் பளிச்சிடும் கேரள கிராமத்தின் அழகு. சிதறிக் கிடக்கும் தென்னை மட்டைகள், வெயிலில் காயும் தேங்காய் கீற்றுகள்.
அந்த சிற்றுாரில் நாலைந்து வீதிகள் தான். பகவதி அம்மன் கோவிலும், அதன் காலடியில் ஓடும் புழையும், அந்த கிராமத்தின் தனி அழகு.

இந்த கிராமத்துக்கு தான், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை மேளாலராக பதவி ஏற்றான், நகுல்.
கிராமத்து வீடு ஒன்றையே வங்கியின் அலுவலகமாக மாற்றி, கேஷ் கவுண்டர், லாக்கர் போன்றவற்றை வைத்திருந்தனர். வங்கியின் மெயின் ஹாலை ஒட்டிய ஒரு சிறு அறையை தான், தற்காலிகமாக, இவனுக்கு தங்குவதற்கு தந்திருந்தனர். திருமணமாகாததால், தற்சமயம் இது போதும் என்று இவனும் விட்டு விட்டான்.
அந்த அறைக்குள் ஒரு பீரோ, ஒரு கட்டில், சுவற்றில் அமைந்த ஒரு ஷெல்ப். இது தான் இவன் சாம்ராஜ்யம்.
காலையில் காபி வாங்கி ப்ளாஸ்கில் வைத்து போய் விடுவான், வங்கி வாட்ச்மேன். இவன் நிதானமாக எழுந்து, பல் துலக்கி, காபி குடித்து, பேப்பர் பார்த்து, அருகிலிருக்கும் ஒரு கடையில், காலை சிற்றுண்டி சாப்பிட்டு, வேலைக்கு தயாராகி விடுவான். பிற்பகல் மெஸ்சிலிருந்து கேரியரில் சாப்பாடு. அலுவலகத்தில் டீ.
நாட்கள் ஓடின. விடுமுறை நாட்களில், பைக்கில் பாலக்காடு போய், கபிலவஸ்து ஹோட்டலில் சாப்பிட்டு, இரவுக்காக, சப்பாத்தியோ, இட்லியோ வாங்கி வந்து விடுவான்.
அன்று-
இவனைத் தேடி வாட்ச்மேன் வந்தான். அவனுடன் ஒரு கேரள பெண்.
'ஸாரே... அம்மா இல்லாத பொண்ணு... வேலை இல்லாம திண்டாடிட்டு இருக்கு. ஐயா சொன்னா, ஆபீஸ் மற்றும் உங்க அறையை பெருக்கி, மத்த வேலையும் நல்லா செய்யும். ஐயா, சரின்னு சொன்னா சமையல் கூட...'
இடைமறித்து, 'அதெல்லாம் வேண்டாம். நான் மெஸ்சிலே சாப்பிட்டுப்பேன்...'
வாட்ச்மேன் போய் விட்டான். அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்தான்.
தலை குனிந்து நின்றிருந்தாள்.
'என்ன பேரு?'
'என்டே பேரு, பாருக்குட்டி... பாருன்னு விளிச்சா மதி...'
'தமிழ் தெரியுமா?'
'குறைச்ச கூடி அறியாம் ஸாரே... ஞான் படிக்காம்...'
'சரி, நாளையிலே இருந்து வா. சீக்கிரம் வரவேண்டாம்; 8:00 மணிக்கு வந்தா போதும். சனி, ஞாயிறு வரவேண்டாம்...'
அவள் தலையாட்டி போய் விட்டாள்.
சில நாட்களில் இவன் அறையே மாறி இருந்தது. தரையெல்லாம் அத்தனை சுத்தம். கட்டிலின் பெட்ஷீட்கள் சுருக்கம் இன்றி இருந்தன. சுவற்றில் இருந்த அலமாரியில், குருவாயூரப்பன் படம், அதன்முன் ஒரு சிறு அகல் விளக்கு ஒளி வீசியது. ஊதுபத்தி மணக்க, அந்த அறையே தெய்வீகமாக திகழ்ந்தது.
தான் உண்டு, தன் வேலையுண்டு என்றிருந்தாள். அதிகம் பேச மாட்டாள்.
இவனுக்கு பேச ஆசையாக இருந்தாலும், மொழி தடுத்தது. தப்புத் தப்பாக ஏதாவது பேசி, அவள் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்கிற பயம்.
ஒரு நாள், 'ஸாரே... இவிட கழிக்கான் நல்ல பஷணங்கள் உண்டு... கொண்டு வரட்டே?'
'வேண்டாம்... எனக்கு தேங்காய் எண்ணெய் வாசனை பிடிக்காது...'
அவள் பேசாமல் போய் விட்டாள்.
'அம்மையும், அச்சனும் மரிச்சு...'
என்றாள், ஒருநாள்.
அன்று... கையில் ஒரு மஞ்சள் பூங்கொத்துடன் வந்தாள்.
'இது என்ன?' என்றான்.
'நாளை, விஷு கனி ஸாரே... ஆவாரம் பூ, கனி காணேனம் ஸாரே...' என்றாள்.
அப்போது தான் இவனுக்கு நினைவு வந்தது. நாளை, வங்கி விடுமுறை.
'நாளை ஞான் வராம் ஸாரே... ஞான் நேரத்துலே வந்து, கோலம் போட்டு, நிறைச்சு பணி உண்டு ஸாரே...' என்றாள்.
மறுநாள் காலை, 5:00 மணிக்கே எழுந்து விட்டான். அதற்குள், வாசலில் பூக்களால் பெரிய கோலம் ஒன்றை போட்டு முடித்திருந்தாள்.
இவன் கதவு திறந்ததும், கையில் ஏதோ தட்டுடன் வந்தவள், அலமாரியில் இருந்த குருவாயூரப்பன் படத்திற்கு, ஆவாரம் பூ, துளசி, அரளி பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை போட்டாள்.
சக்கை வரட்டி, அடை பிரதமன், பாயசம், புது துணிமணிகள் மற்றும் சில சில்லரை காசுகள் வைத்து, 'வேகம் குளிச்சு வரணும் ஸாரே... கனி காணேனம்... ஓணத்துக்கு தான் ஞங்கள் அத்தப்பூ கோலம் போடும்... இப்போழ் ஞான் போட்டு அடி பொளி... ஆக்ரோஷிக்கு ஸாரே...' என்றாள்.
இவனுக்கு பாதி புரிந்தது. சில மலையாள படங்களில் விஷு பாடல்கள் பார்த்திருக்கிறான்.
அவளின் நெற்றியில் சந்தன கீற்று, மெல்லிய ஜரிகையில், வெள்ளை நிற புடவை. சிவப்பு ரவிக்கை. தலை குளித்து, கோடாரி முடிச்சு போட்டிருந்தாள். ரவிவர்மாவின் ஓவியம் போல், முடியாத கேசம், திரவுபதியை நினைவூட்டியது.
குளிக்கப் போனான்.
பாருவின் மூலம் சில மலையாள வார்த்தைகளை கற்றிருந்தான்.
அப்போது தான் துடைக்கப்பட்ட அறையின் ஈரம் இன்னும் உலராமல் இருந்ததால், ஏதோ நினைத்தபடி வந்தவன், அதில் கால் வழுக்கி விழப்போனவனை, 'என்டே குருவாயூரப்பா...' என்றபடி தாங்கிக்கொண்டாள், பாரு.
மொழி இல்லாமலே பல வார்த்தைகளின் அர்த்தம், இருவருக்கும் புரிந்தது.
'எதுக்கு இத்தனை செலவு பண்றே...' என, என்ன செய்வதென்று தெரியாமலே, 500 ரூபாய் ஒன்றை எடுத்து, 'இந்தா...' என்றான்.
'இதெல்லாம் ஞான் இஷ்டப்பட்டு செய்தது. காசு வேண்டாம் ஸாரே...' என்ற, அவளது கண்களில் கண்ணீர்.
அவன் கால்களில் வீழ்ந்து அழுதவளை துாக்கி நிறுத்தி, கண்ணீர் துடைத்தான். பிரபஞ்சத்தின் அன்பையெல்லாம் அந்த கண்களில் கண்டான். கட்டி அணைத்தான். அவள் நெற்றியில் இருந்த சந்தன கீற்று, இப்போது இவன் நெற்றியில்.
சில மாதங்களில் இவனுக்கு மாற்றல் வந்தது. சிறிய ஊர், டெபாசிட் பிடிக்க முடியாமை. இவனை மீண்டும் சென்னைக்கே அழைத்து விட்டனர்.
கிளம்புமுன், பாருக்குட்டியைப் பார்க்க பாவமாக இருந்தது.
'ஸாரே... என்ட ஓரமை வருமோ?'
'என்ன பாரு, இப்படி கேட்டுட்டே... சென்னை போயிட்டு, அடுத்த மாசமே வருவேன். உன்னையும் கூட்டிட்டு போவேன்...'
கைப்பிடித்து சத்தியம் செய்தான்.
'ஞான் காத்திருக்கும் ஸாரே...'
தன் கழுத்தில் போட்டிருந்த மைனர் செயினை எடுத்து, அவள் கழுத்தில் போட்டு, விடை பெற்றான்.
காலம் ஓடியது. சென்னை வந்தவனை, 'டிரெயினிங்' என்று, டில்லி அனுப்பினர். அதன்பின், அசாம் மாகாணத்தின் ஏதோ ஒரு ஊரில் வேலை. நக்ஸலைட் பயத்துடன் வாழ்ந்து, அதே பயத்தில் திருமணம் முடிந்து, இவன் தமிழகம் திரும்பிய போது, ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன.
பாருக் குட்டியை இவன் மறக்கவில்லை. ஆனால், சந்திக்க முடியவில்லை.
தோட்டம் என்றால், அதில் சருகுகளும் இருக்குமல்லவா... இவன் நினைவுத் தோட்டத்தில் எத்தனையோ உதிர்ந்த சருகுகள். அதில் பாருவும் ஒன்றா?
ஐந்து ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அதே பாருக்குட்டியின் ஊர். இரண்டு தெருக்கள் இருந்த ஊர், பல வீதிகளாக உருமாறி, பகவதி அம்மன் கோவிலும், புழையும் தெரியாத அளவுக்கு அடுக்கு மாடிக் கட்டடங்கள், 'ஷாப்பிங் மால்'களாக ஊரே மாறி இருந்தது.
இவன் முன்பு பணிபுரிந்த அதே வங்கி. புது உரு பெற்று, தன் முகப்புத் தோற்றம் மாறி, 'ஏசி' மயமாக இருந்தது.
உடன் வந்த சபாடினேட், ''நீங்க உள்ளே போங்க ஸார்... என் ஒய்ப், ஆவாரம் பூ வாங்கிட்டு வரச்சொன்னா... மறந்துட்டேன், நாளை விஷு... வெறுங் கையோட போனா கொன்னுடுவா... பக்கத்திலே தான் மார்க்கெட், வாங்கி வந்துடறேன்... நாளைக்கு ஸாருக்கு எங்க வீட்டிலே தான் சாப்பாடு. கட்டாயம் வரணும்,'' என்றான்.
உள்ளே நுழைந்தான்.
நாளை விஷு... வங்கி லீவு...
'எந்தா ஸாரே வந்நோ... ஞான் காத்திருக்கும்...' பாரு கேட்ட மாதிரி ஒரு உணர்வு.
கட்டிலும், மெத்தையும், ஷெல்பில் அமைந்த பூஜை அறை படங்களும், இவன் வாழ்ந்த அந்த அறை அதிக மாற்றமில்லாமல் அப்படியே இருந்தது.
'கனி காணேனம் ஸாரே...'
பாருவா?
மொபைலில் கூப்பிட்டது, இவன் மனைவி.
''என்ன... நாளைக்கு விஷு. பங்குனியிலே தான் பால் காய்ச்சக் கூடாது. அதான் சித்திரை பொறக்கப் போறதே... இனிமே புது வீடு போகலாம்... நம், 'ப்ளாட்' எப்படி இருக்கு?''
''இன்னும் நான் பார்க்கலை.''
''சரி... சீக்கிரம் திரும்பி வாங்கோ.''
''உம்...''
மொபைலை அணைக்க முயன்றபோது, காலில் சுரீர் என்றொரு வலி, நெருப்புப்பட்ட வேதனை. குனிந்து பார்த்தான். இவன் பாதத்தில் இரண்டு ரத்தப் புள்ளிகள்.
வெளியே இருந்து வந்த சபாடினேட், ''ஐய்யய்யோ... இந்த அறையை ஏன் ஸார் திறந்தீங்க?'' என்றான்.
''ஏன்?'' திணறியபடி கேட்டான்.
''ரெண்டு வருஷத்துக்கு முன், இந்த அறையிலே ஒரு வேலக்காரப் பொண்ணு, தற்கொலை பண்ணிட்டா... அதனால், இதை திறக்கறதே இல்லை,'' என்றவன், திடீரென்று, ''ஸார்... பாம்பு ஸார்...'' என்று, பதறியவனின் கையிலிருந்த ஆவாரம் பூக்கள் கீழே விழுந்து அறையெங்கும் வர்ஷிக்க...
அணைக்கப்படாத மொபைல் போனிலிருந்து, 'கனி காணும் நேரம் கமல நேத்ரண்டே... நிறமேறும் மஞ்சத் துகில் சார்த்தி, கனகக் கிங்கிணி வளைகள் மோதிரம் அணிஞ்சு காணேனம் பகவானே...' என்ற பாடல் ஒலித்தது.
மெல்ல மரணித்து கொண்டிருந்தான், நகுல்.

ரேவதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
25-ஆக-202105:52:01 IST Report Abuse
Manian ஐயொட, இங்கன வெஷ ஸர்ப்பம் கடிக்கான்னுனே அறிஞிட்டில்லே இவ்ளோ பாருவக்கு வருமுன்னும் அறியில்லே அறியிங்ஙில் இவடேயும் ஒரு வாமன வீடு/அம்பலம் வச்சிருக்கும்- நகுல் மனதில் முனுமுனுத்தான் பாருவுக்கு மனசிலாகில்லா
Rate this:
Cancel
22-ஆக-202109:44:04 IST Report Abuse
Prasanna Krishnan Very cinematic
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X