அன்புள்ள அம்மா -
வயது: 30. ஹோம் சயின்ஸ் படித்திருக்கிறேன். மிக அழகாக இருப்பேன். இனிமையான குரல் வளம். ஆயிரம் கனவுகளுடன் இருந்த எனக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரன் பார்த்து, திருமணம் செய்து வைத்தனர்.
கனத்த உடல்வாகு கொண்டவர், கணவர். தொப்பை கிடையாது; உணவு பிரியர். வாரம் ஒருமுறை குடிப்பார். தினம் இரண்டு சிகரெட் பிடிப்பார். எங்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
என்னை அன்பாய் பார்த்துக் கொள்கிறார், கணவர். ஆனால், அவரின் சில செய்கைகள் அருவருப்பை தருகின்றன. வயிறு முட்ட சாப்பிடுவார். சாப்பிட்டு விட்டு ஏழு ஊர்களுக்கு கேட்கும் வண்ணம் தொடர் ஏப்பமிடுவார். ஒவ்வொரு ஏப்பமும், கர்ணகொடூர சத்தத்தை கொண்டிருக்கும்.
ஒரு நாளில் இரண்டு, மூன்று முறை துர்நாற்றத்துடன் காற்று பிரிப்பார். சில சமயங்களில் அவருடன் துாங்கும்போது காற்று பிரிப்பார். நாற்றம் தாங்காது, எழுந்து அறையை விட்டு ஓடி விடுவேன். இது தவிர, அவரிடம் குறட்டை விடும் பழக்கமும் உள்ளது. அவரது குறட்டை சத்தம், இரு காது ஜவ்வுகளை கிழித்து விடும்.
'ஏப்பத்தை மெதுவாக விடக்கூடாதா...' எனக் கேட்டால், 'மெதுவாக விட்டால் நெஞ்சு அடைத்துக் கொள்ளும்...' என்கிறார்.
காற்று பிரிப்பதை தடுக்கவும், குறட்டை விடுவதை நிறுத்தவும், 'வாங்க, டாக்டரிடம் போவோம்...' என்றால், 'எல்லா ஆம்பிளைகளிடமும் உள்ள பழக்கம்
தானே...' என்கிறார்.
இவருடன் குடும்பம் நடத்துவது, சாக்கடையில் குடியிருப்பது போலுள்ளது. இவரிடமிருந்து விவாகரத்து பெற்று, மகனுடன் அம்மா வீட்டுக்கு போய் விடலாமா என யோசிக்கிறேன். தகுந்த ஆலோசனை கூறுங்கள் அம்மா.
- இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு -
முதலில் உன் கணவரின் குறட்டை விடும் பழக்கத்தை பற்றி பார்ப்போம்...
வாயின் உள்ளமைப்பு, சைனஸ் பிரச்னை, குடி பழக்கம், ஒவ்வாமை, ஜலதோஷம், அதிக எடை காரணமாக ஒருவர் குறட்டை விடக்கூடும்.
உன் கணவருக்கு குறட்டைக்கு இடையே மூச்சு நின்று போதல், காலை தலைவலி, கவனக்குறைவு, தொண்டை வலி, போதிய துாக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், மார்பு வலி இருந்தால், 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா' (ஓ.எஸ்.ஏ.,) நோய் இருப்பதாக அர்த்தம். இது, ஒரு பரம்பரை நோய்.
கணவரை எடை குறைக்கச் சொல். குடி பழக்கத்தை நிறுத்தி, சிகரெட்டை தவிர்க்க செய். படுக்கையில் ஒருக்களித்து படுக்கச்சொல். தலைக்கு இரண்டு தலையணை வைத்து துாங்க சொல். துாங்க போவதற்கு முன், மஞ்சள் துாள் கலந்த பாலை குடிக்க வை. உணவில் பெப்பர்மின்ட் இலை, வெங்காயம், ஆலிவ் எண்ணெய், தேன், மீன் இருக்கும்படி பார்த்துக்கொள்.
கணவரை வற்புறுத்தி, காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் அழைத்து போய், தகுந்த மருத்துவ ஆலோசனை பெறு.
அடுத்து, கணவரின் ஏப்பமிடும் பழக்கத்தை பற்றி பேசுவோம்....
திருப்திகரமாக சாப்பிட்டு விட்டதன் அடையாளமாக, ஏப்பத்தை கருதுகிறோம். அது தவறு. உன் கணவர் அவசர அவசரமாக உணவை விழுங்குபவராக இருந்தால், உணவுடன் காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகிறார். இதை, 'ஏரோபேஜியா' என்பர்.
அஜீரண கோளாறு, அல்சர், அசிடிட்டி, புற்றுநோய் ஆரம்பம் மற்றும் கல்லீரல் பித்தப்பை, கணைய கோளாறு காரணமாகவும் ஏப்பம் வரும்.
கணவரை வாயை மூடி, உணவை நிதானமாக மென்று விழுங்கச் சொல். உணவில் மசாலா, காரம், உப்பு, கொழுப்பு, புளிப்பு, எண்ணெய் குறைத்து சமையல் செய்; ஏப்பத்தை கட்டுப்படுத்த முடியும்.
கணவரின் மூன்றாவது பிரச்னையான காற்று பிரிதலை பார்ப்போம்...
முட்டைகோஸ், காலிப்ளவர் மற்றும் சர்க்கரை மிகுந்த உணவுகள், நொதிக்க வைத்த உணவுகள், நார்சத்து உணவுகளை தவிர்த்தல் நலம்.
புகைபிடித்தலை விடச்சொல். மலச்சிக்கலை தவிர்க்க, மருந்து எடுத்துக் கொள்ள சொல். வயிறு, குடல் மற்றும் எண்டோஸ்கோப்பி சிறப்பு மருத்துவரிடம், கணவரை அழைத்துச் சென்று, மருத்துவ ஆலோசனை பெறு.
மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு முன், கணவரை அழைத்து பேசு.
'நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள். நானும் உங்களை நேசிக்கிறேன். உங்களின் குறட்டை, ஏப்பம், காற்று பிரிதல், நம்மை நிரந்தரமாக பிரித்து விடுமோ என அஞ்சுகிறேன். நீங்கள் என்னுடன் ஒத்துழைத்தால், நாம் நுாறு ஆண்டுகள் சேர்ந்து வாழலாம்.
'எனக்காக குடி பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்துங்கள்; உங்களது தற்போதைய எடையை,
10 கிலோ குறையுங்கள்; உணவை அளவாக மென்று, அரை வயிறு சாப்பிடுங்கள்; கண்ட இடங்களில் ஏப்பமிடுவதையும், காற்று பிரிவதையும் கட்டுப்படுத்தி, சபை நாகரிகம் கற்றுக் கொள்ளுங்கள்...
'காது, மூக்கு, தொண்டை மருத்துவரையும், வயிறு, குடல், எண்டோஸ்கோப்பி மருத்துவரையும் பார்ப்பதோடு நில்லாமல், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவர் சொல்லும் ஆலோசனைகளை தவறாது கடைப்பிடியுங்கள்.
'உங்களுக்கு வயது: 35. தவறான பழக்க வழக்கங்களால், இளம் வயதில் மரணமடைந்து, என்னையும், உங்கள் மகனையும் நடுரோட்டில் நிறுத்தி விடாதீர்கள். எனக்கு நல்ல கணவனாகவும், மகனுக்கு
நல்ல தகப்பனாகவும் இருக்க
பாருங்கள்.
'என்னுடன், 100 சதவீதம் ஒத்துழைத்து, உங்களின் வாழ்க்கை முறையை தலைகீழாக புரட்டி போட்டு ஆரோக்கிய பாதைக்கு திரும்புங்கள்...' எனக் கூறு.
எதற்கெடுத்தாலும் விவாகரத்து பற்றி யோசிக்க கூடாது மகளே. ஒரு பெண் நினைத்தால், கணவர் மட்டுமல்ல, நாட்டையே திருத்தலாம்!
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.