எங்கள் அண்ணன், அக்கம் பக்கத்து குடியிருப்புப் பகுதிகளில் பிரபலமானவன். நான் படிக்கும் கல்லுாரி, தங்கை விந்தியாவின் மேல் நிலைப்பள்ளி, பொள்ளாச்சியில் உள்ள பிற பள்ளிகள் இங்கெல்லாம் கூட அவனைப் பற்றி தெரியும்.
காதல் தொந்தரவு இளைஞர்கள், ஏவாள் கேலிப் பொறுக்கிகள், மாணவ காதலர்கள், கவர்ச்சி மற்றும் ஆபாச ஆடை பெண்கள் ஆகியோருக்கு, அவன் எதிர் நாயகன். ஆண்களின் தொந்தரவுகளால் பாதிக்கப்படும் பெண்களைப் பொறுத்தவரைக்கும் கதாநாயக சகோதரன். வயசுப் பெண்களின் பெற்றோர்களுக்கு, அவன் தத்தெடுக்காத பிள்ளை.
எங்கள் அண்ணனின் நடவடிக்கைகள், முரட்டுத்தனமாக இருக்கும். மாணவ - மாணவி ஜோடிகளை எங்கே பார்த்தாலும் அவனுக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிடும். முதுநிலை கல்லுாரி மாணவர்கள் என்றால், அவர்கள் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் தனக்குள்ளேயோ, உடனிருப்பவர்களிடமோ எரிச்சலாகப் புலம்புவதோடு விட்டு விடுவான்.
மேல் நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் சீருடையோடு தனியாக நின்று, கடலை வறுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விட மாட்டான். அவர்களிடம் சென்று, எந்த பள்ளி, எந்த வகுப்பு, முகவரி, பெற்றோர் பெயர், அவர்களது அலைபேசி எண் ஆகியவற்றை விசாரித்து, பள்ளிக்கும், பெற்றோருக்கும் தெரிவித்து விடுவான்.
அவர்களே அறியாதபடி, அவர்களின் சல்லாபப் பேச்சுகளை அலைபேசியில் பதிவு செய்தும், அவர்களைப் புகைப்படம், காணொளி எடுத்தும், ஆதாரத்துடன் அனுப்புவதும் உண்டு.
'ஏழாங் க்ளாஸ், எட்டாங் க்ளாஸ் புள்ளைக, 'லவ்ஸ்' உட்டுட்டிருக்குதுக. மொளைச்சு மூணு எலை விடறக்குள்ள, 'டூயட்' கேக்குது! பாத்துங்க ஸார், பெத்தவீகளுக்கு மானக்கேடு உண்டாக்கறதுமில்லாம, உங்க பள்ளிக்கொடத்துக்கும் கெட்ட பேரு வந்துரப்போகுது...'என, பள்ளித் தலைமையாசிரியர்களிடம் போனில் கூறுவான்.
'பள்ளிக்கொடத்துக்கு அனுப்புனா மட்டும் பத்தாது, உங்க பசங்க என்ன பண்ணுது, ஏது பண்ணுது, அதோட நெனப்பு எப்புடி, நடத்தை எப்புடிங்கறதயும் கெவுனிச்சுக்கணும்ங்க... இல்லாட்டி, நாளைக்கு அதுகளும் கெட்டு, உங்க குடும்ப மானத்தையும் கெடுத்துப் போடும்...' என்று, முகம் தெரியாத பெற்றோரிடமும் போனில் எச்சரிப்பான்.
'யாரோ எக்கேடோ கெட்டுப் போனா நமக்கென்னடா, அவுங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்... நீ எதுக்கு கண்டவங்களயும் பத்தி அவுங்க வீட்டுலயும், ஸ்கூல்லயும் புகார் சொல்லிட்டிருக்கற...' என்று, ஆரம்பத்தில் கேட்டாள், அம்மா.
'உன் மகன் கெடுதல் செஞ்சாத்தான் நீ வெசனப்படணும். அவன் நாலு குடும்பத்தோட மானம் காப்பாத்தற நல்ல காரியத்த செய்யறான். அதை எதுக்கு குத்தம் சொல்ற?
'ஊரான் புள்ளைய ஊட்டி வளத்தா, தம் புள்ளை தானே வளரும்கற மாதிரி, ஊரான் புள்ளைகள நல்ல வழிக்குக் கொண்டு வந்தா, நம்மூட்டுப் புள்ளைகளும் நல்ல வழில வளரும்...' என்பார், அப்பா.
ஆறாம் வகுப்பில் இரண்டு வருடம், ஏழாம் வகுப்பில் இரண்டு வருடம் என தோல்வியுற்று, எட்டாம் வகுப்பு காலாண்டுத் தேர்வோடு படிப்புக்கு விடைகொடுத்து, மெக்கானிக் வேலைக்கு எடுபிடியாகப் போனான், அண்ணன். இப்போது இரண்டு, நான்கு சக்கர மெக்கானிக் கடைக்கு முதலாளியாக இருக்கிறான்.
இரண்டு தங்கைகளின் முரட்டு அண்ணன் என்றால், திரைப்படத்தில் என்ன பிம்பம் வருமோ, கிட்டத்தட்ட அதே மாதிரிதான் இருப்பான். எங்களிடம் பாசம், செல்லம், கண்டிப்பும் காட்டுவான்; கேலி, கிண்டலும் செய்வான். நியாயமான ஆசைகளை மறுப்பதில்லை. ஆனால், அனாவசியமான எதையும் அனுமதிக்க மாட்டான்.
நான் கல்லுாரிக்கும், விந்தியா பள்ளிக்கும் சென்று வருவது பேருந்தில் தான். தாமதமாகி விட்டாலோ, குறிப்பிட்ட காரணங்கள் இருந்தாலோ மட்டும், பைக்கில் கொண்டு விடுவான். ஆனால், எங்களது பேருந்துகளில் திடீர் என இடையில், பரிசோதகர் மாதிரி ஏறி, நாங்களும், மற்ற மாணவ - மாணவியரும் எப்படி நடந்து கொள்கிறோம் என்று சோதனை செய்வான்.
கல்லுாரிக்கும், பள்ளிக்கும் வந்து ஆசிரிய - ஆசிரியைகளையும், தோழியரையும் சந்தித்து, எங்கள் படிப்பு, நடத்தை பற்றி விசாரிப்பான். இதனால்தான் அவனை எங்கள் ஆசிரியர்கள், தோழியர் எல்லாருக்கும் தெரிய வந்தது.
எங்கள் கல்லுாரியில் அவன் பிரபலம் ஆனதற்கு இன்னொரு முக்கிய காரணம், அங்கு நடந்த அவனது ஒரு அதிரடிச் செயல்.
அப்போது நான், கல்லுாரியில் சேர்ந்து ஐந்தாறு மாதங்களே இருக்கும் என்பதால், நெருங்கிய தோழியர் ஓரிருவருக்கு மட்டும் அண்ணனை தெரியும்.
ஒருநாள் மாலை, கல்லுாரி நிறுத்தத்தில், கிரீஸும், அழுக்கும் படிந்த பழைய சட்டையோடு நின்று கொண்டிருந்தான், அண்ணன்.
என்னைப் பார்த்தும், யாரோ மாதிரி இருந்தான். வழக்கம் போல சோதனை செய்ய வந்திருக்கிறான் என தெரிந்து, நானும், என் தோழியரோடு நின்று கொண்டிருந்தேன்.
பேருந்து நிழற்குடையில் கல்லுாரி மாணவ - மாணவியர் சிலர் அமர்ந்திருந்தனர். அதில், இரண்டாமாண்டு மாணவி ஒருத்தி, பக்கத்தில் இருந்த பையனோடு ஒட்டி உரசியும், அவனது தோள் மேல் கை போட்டு கொஞ்சி, தொடையில் தொட்டுத் தொட்டு பேசிபடி இருந்தாள்.
நிழற்குடையில் இருந்த பெரியவர்கள் இதைக்கண்டு முகம் சுளித்தனர். அண்ணன் அந்த ஜோடியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்து அந்தப் பையன், தர்ம சங்கடமாக நெளிந்து நகர்ந்தாலும், அந்தப் பெண், தன் சரச சல்லாபங்களை விடவில்லை.
அவளிடம் சென்று, 'ஏம்மா... அந்தத் தம்பிக்கு அது புடிக்கில போல. நீ ஏன் அவன தொந்தரவு பண்ற... பேசாம லாட்ஜுக்கு போயி நின்னீன்னா கஸ்டமருக, மாமா பசங்க தேடி வருவாங்கள்ல... உனக்கு அரிப்பும் தீந்த மாதிரி இருக்கும், காலேஜ் புள்ளைன்னா செமையா பணமும் கெடைக்கும்...' என்றான், அண்ணன்.
அதைக் கேட்க எனக்கே பயங்கர அதிர்ச்சியாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவன் என் அண்ணன் எனத் தெரிந்தால், மற்ற மாணாக்கர்கள் என்னைப் பற்றி என்ன சொல்வரோ என்று கவலைப்பட்டேன்.
பெருத்த அவமானமடைந்த அந்தப் பெண், வேகமாக எழுந்து, விலகிச் சென்றாள்.
'உன்ன மாதிரி பொண்ணுகளாலதான், ஒட்டு மொத்த காலேஜ் பொண்ணுகளுக்கும் கெட்ட பேரு...' என்று, அங்கிருந்த மற்ற மூத்த மாணவியர் அவளை திட்டினர்.
'அவரு வினோதினியோட அண்ணன்...' என, என் தோழி ஒருத்தி சொல்ல, அங்கிருந்த கல்லுாரி மாணாக்கர்கள் அனைவருமே அவனையும், என்னையும் பார்த்தனர். அண்ணன் அதைக் கண்டுகொள்ளாமல் பைக்கை கிளப்பி போய் விட்டான்.
மறுநாள், இந்த விஷயம், கல்லுாரி முழுக்க பரவி, இன்னும் அவமானமாகி, சில நாட்களுக்கு அந்த சல்லாப மாணவி கல்லுாரிக்கே வரவில்லை. அதன் பிறகு வந்தாலும், பையன்களோடு சேர்ந்து நிற்பதை பார்க்க முடியவில்லை.
இதேபோல், அவன் எதிர்வினை புரிந்த இரு சம்பவங்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன. இது, அம்மா சொல்லி நான் தெரிந்து கொண்டது...
அம்மாவும், அண்ணனும் பொள்ளாச்சி கடை வீதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில், ஓர் அப்பாவும், 22 - 23 வயது மகளும், ஆங்கிலத்தில் உரையாடியபடி, நடந்து வந்துள்ளனர். உயர் மத்திய வர்க்கம். பெண் அழகாக, 'லெக்கின்ஸ், டி - ஷர்ட்' போட்டு கொழுகொழுவென இருந்தாளாம். ஆனால், 'ப்ரா' போடாததால், மார்பு காம்பு துருத்தித் தெரிந்ததாம்.
அம்மாவும் அதை கவனித்துவிட, 'டே, பேசாம வா... போலீஸ் ஸ்டேஷன் வேற பக்கத்துல...' என்று முன்னெச்சரிக்கையாக தடுத்திருக்கிறாள்.
'நான் என்ன, 'ஈவ் டீசிங்'கா பண்ணப் போறேன்? நீ சும்மா இரு...' என, அம்மாவை அதட்டிவிட்டு, அவர்கள் நெருங்கியதும், 'ஒரு நிமிசம்... தமிழ் தெரியுமா? ஐட்டம் லோக்கல் பீஸா, வெளியூர் பீஸா... என்ன ரேட்டு?' என்று கேட்டானான்.
இருவரும் பதற்றமும், கோபமுமாகி காச்சு மூச்சென கத்தி, 'நாங்க அப்பாவும் - மகளும்...' என, சொல்லியிருக்கின்றனர்.
'பாத்தா, குடும்பம் மாதிரி தெரியலையே... இந்தப் புள்ள, கேஸு மாதிரியும், நீ, கஸ்டமரோ, மாமா மாதிரியும்தான தெரியறீங்க? அவ, 'ப்ரா' போடாம இப்புடி மார்பு காம்ப துருத்திக் காட்டீட்டு வர்றா, நீயும் அப்பான்னு சொல்லீட்டு அவ கூட ஜாலியா கடை வீதில வலம் வந்துட்டிருக்கற...
'துாத்... வெக்கமா இல்ல... ஏய்யா, மகள மார்க்கெட்டுல விக்க வந்தியாக்கும்? இல்ல, லாட்ஜுல விட்டுட்டு கமிஷன் வாங்கிட்டுப் போக வந்தியா? அப்பனாமா அப்பன், இந்த லட்சணத்துல இங்கிலிப்பீஷ் பேச்சுக்கு ஒண்ணும் கொறைச்சலில்ல...
'அவுசாரிகளாட்ட ட்ரஸ் பண்ணிட்டு வர வேண்டியது... அப்பறம் அங்க தொட்டான்னு கேஸ் குடுக்க வேண்டியது... பெத்த அப்பன் உனக்கு புத்தி வேண்டாம்?' என, வெளுத்து வாங்கினானான்.
வழிப் போக்கர்களும் வேடிக்கை பார்த்து நிற்க, குறுகலான அந்தக் கடை வீதியில் போக்குவரத்து நெரிசல் ஆகிவிட்டதாம்.
இன்னொரு சம்பவம்...
நாலைந்து ஆண்டுகளுக்கு முன், நான் மேல் நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், அம்மா, அண்ணனுடன், உறவினர் திருமணத்துக்காக கோயம்புத்துார் சென்றிருந்தோம்.
துடியலுார் நகரப் பேருந்தில் முன் பக்கம் நின்றுகொண்டிருந்த, 20 வயதுப் பெண், துப்பட்டா போடாமல், மெல்லிசான சுடிதார் அணிந்திருந்தாள். அதற்குள் அவள் போட்டிருந்த, 'ப்ரா' அப்பட்டமாக வெளியே தெரிந்து, பக்கத்தில் இருக்கற பெண்களை முகம் சுளிக்க வைத்தது. முன்புறம் இருந்த விடலைப் பையன்கள், ஆண்கள், கிழடுகள் கூட வெறித்துப் பார்த்து, 'ஜொள்' வழிந்தனர்.
இதை பார்த்த அண்ணன், அந்தப் பெண்ணிடம் சென்று, 'ஏம்மா கவர்ச்சி ராணி... சுத்தியிருக்கற ரசிகர்கள் சார்புல அடியேன் சொல்லிக்கறது என்னன்னா, 'ஸீ த்ரூல' தெரியற உன்னோட கருப்பு, 'ப்ரா' சூப்பர்! அதுலயும் அதோட பார்டர்ல, 'ப்ரில் டிஸைன்' இருக்குதே அற்புதம்...
'ஜட்டி எப்புடி, என்ன கலர்... அதுலயும் இதே மாறி, 'டிஸைன்' இருக்குதா... எங்க காமி பாக்கலாம்! பாட்டி, நீங்க கொஞ்சம் நகுந்துக்கங்க... அந்தப் பொண்ணு, ஜட்டியவும், 'ஸீ த்ரூல' காமிக்கட்டும். ஆம்பளைக நல்லாப் பாத்து ரசிச்சுக்கறம்...' என்றான்.
'நாக்கப் புடுங்கிக்கிற மாறி கேட்ட தம்பி...' என்றவள், 'ஏனம்முணி, உங்கூட்டுல அண்ணன், தம்பி, அய்யனாத்தா இல்லியா? இல்ல... அவிகளே தண்ணியத் தொளிச்சு தாட்டி உட்டாங்களா?' என, அர்ச்சனை பொழிந்தாள், அந்த பாட்டி.
'ட்ரஸ் போடறது மறைக்க வேண்டியத மறைக்கறக்கு தான். உடம்ப காட்டணும்ன்னா, அதையும் போடாம அம்மணக்குண்டியா வர வேண்டியதுதான?' என்று, மற்ற பெண்களும், 'பிலுபிலு'வென பிடித்துக் கொண்டனர்.
அவமானம் தாங்காமல் தலை குனிந்து, கூனிக் குறுகி, அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கி விட்டாள், அப்பெண்.
பெண்களின் ஒழுக்கத்துக்கு முதல் அடையாளம், அவர்களது ஆடை என்பது, அவனது சித்தாந்தம்.
'இழுத்துப் போத்திட்டு, குனிஞ்ச தலை நிமிராமப் போற பொம்பளைகள்லயும், ஒழுக்கம் கெட்டதுக இருக்கலாம். அது வேற விஷயம். ஆனா, எந்த உடையா இருந்தாலும் கவர்ச்சி காட்டணும்ன்னு ஆரம்பிச்சா, அது தப்பான வழில போறதுக்கோ, ஆம்பளைக தப்பா நடந்துக்கறதுக்கோ வாய்ப்பாயிரும்...' என்று சொல்வான்.
பாவாடை தாவணி, சேலை தவிர்த்து, நவீன ஆடைகளில் அவன் எங்களுக்கு அனுமதிப்பது சுடிதார் தான். அதிலும், சுடிதாரில் துப்பட்டாவை சரியானபடி போட வேண்டும். இடுப்பு பகுதி, இறுக்கமாக இருக்கக் கூடாது. 'ஜீன்ஸ், டி - ஷர்ட், லெக்கின்ஸ்' ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.
அண்ணனுக்கு படிப்பு குறைவென்றாலும் நாட்டு நடப்பு, ஊர், உலக நடப்பு தெரியும். போதுமான பொது அறிவும் இருக்கும். அவன் பேசுவதைக் கேட்பவர்கள், அவன் எட்டாவது மட்டுமே படித்தவன் என்றால், நம்பவே மாட்டார்கள்.
மொபைல்போன், இணையம், முகநுால் இவை யாவும், பெண்கள் கெட்டுப் போவதற்கு எளிதான வழிகள் என்பது, அவனுடைய கண்ணோட்டம். அவற்றின் தேவைகளையோ, நன்மைகளையோ அவன் மறுப்பதில்லை. அவற்றில் உள்ள அனாவசியங்கள், ஆபத்துகள் பற்றி தான் எச்சரிக்கை செய்வான்.
வீட்டில் கணினி, இணையம் இருக்கிறது. ஆனால், அது, ஹாலில் இருக்கும். அங்கேதான் அண்ணன் துாங்குவான். டைனிங் ஹாலில், 'டிவி' இருக்கும். இதிலேயே புரிந்திருக்குமே... இது எப்படிப்பட்ட ஏற்பாடு என்று! கண்காணிக்கிற கண்கள், உங்கள் பிடரிக்குப் பின்னாலேயே இருக்கும்போது, நீங்கள் எந்த தவறும் செய்ய மாட்டீர்கள்.
இது மட்டுமல்ல, எங்களின் ஒவ்வொரு விஷயத்திலுமே, இப்படி கண்ணும் கருத்துமாக இருப்பான், அண்ணன்.
- தொடரும்
ஷாராஜ்