அன்புள்ள அம்மா -
எனக்கு வயது: 35. திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. ஒன்பது வயதில் மகள், மூன்று வயதில் மகன் இருக்கின்றனர். பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார், கணவர்.
நான், நான்கு பட்டபடிப்புகள் படித்திருந்தும், கணவரின் விருப்பத்துக்காக, வேலைக்கு செல்லவில்லை. சம்பள பணத்தை அப்படியே என்னிடம் கொடுத்து விடுவார். தாம்பத்தியத்திலும் சிறு குறையும் இல்லை. குடி பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ, கணவரிடம் இல்லை.
கணவருக்கு மூன்று அண்ணன்கள், ஒரு அக்கா. மூத்த அண்ணனுக்கு வீடு கட்டிக்கொள்ள, 5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தார், கணவர். இரண்டாவது அண்ணனுக்கு, ரியல் எஸ்டேட் தொழில் துவங்க, 5 லட்சம் ரூபாய்; மூன்றாவது அண்ணனின் மருத்துவ செலவுக்கு, 3 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தார்.
அக்காளுக்கும், அவளது கணவருக்கும் பல்வேறு செலவுகளுக்காக, 8 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். இந்த எல்லா கடன்களும் என்னை திருமணம் செய்வதற்கு முன், கணவர் கொடுத்தவை. இது தவிர, என்னை திருமணம் செய்தபின், அவர்கள் மாதா மாதம் கேட்கும் சிறுசிறு பண உதவிகளையும் செய்து கொண்டிருந்தார்.
ஐதராபாத்தில் நான்கு ஆண்டுகள், மெக்ஸிகோவில் மூன்று ஆண்டுகள், அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். சென்ற ஆண்டு, 'கொரோனா' காரணமாக வேலையை இழந்து, இந்தியாவிற்கு திரும்பினோம்.
கடந்த, 10 ஆண்டுகளில், கணவரின் மூன்று அண்ணன்களும், அக்காளும் பொருளாதார நிலையில் மிகவும் உயர்ந்துள்ளனர். சொந்தமாக இரண்டு மூன்று வீடுகள் கட்டி, காரும் வாங்கி விட்டனர்.
கணவரிடம், 'உடன் பிறப்புகளுக்கு கொடுத்த மொத்த கடன், 30 லட்சம் ரூபாய். இப்போது, நமக்கு வேலை இல்லை. உங்கள் பூர்வீக சொத்தான நாலு வீடுகளை வாடகைக்கு விட்டு, வாடகையை அவர்கள் பிரித்துக் கொள்கின்றனர். நான்கில் ஒரு வீட்டை கேளுங்கள்; அங்கு போய் குடியேறுவோம்.
'வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க சொல்லுங்கள். திரும்ப நீங்கள் ஒரு வேலைக்கு போகும் வரை, நம் குடும்ப செலவுக்கு அந்த பணம் உதவும். வேலை கிடைக்கா விட்டால் அந்த பணத்தை முதலீடாக வைத்து, எதாவது ஒரு தொழில் துவங்கலாம்...' என்றேன்.
தன் உடன்பிறப்புகளிடம், 'நான் உங்களுக்கு கொடுத்த கடனை திருப்பி வாங்க விரும்பவில்லை. என் மனைவி நச்சரிப்பு தாங்காமல் தான் பணம் கேட்டு வந்தேன்...' என்றிருக்கிறார், கணவர்.
உடனே, அவர்கள் என்னிடம் வந்து, 'அண்ணன் தம்பிக்குள்ள சண்டையை மூட்டி விடுறியா... வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க மாட்டோம். என்ன செய்வாய்...' என, கேட்கின்றனர்.
திருமணமானதிலிருந்து, எந்த பிரச்னை என்றாலும் என்னை முன் நிறுத்தி, எனக்கு பின்னே ஒளிந்து கொள்வார், கணவர். அவர் அப்பாவியாகவும், என்னை கொடுங்கோலியாகவும் எதிராளிகளிடம் சித்தரிப்பார்.
கணவரை எப்படி திருத்துவது, கொடுத்த கடனை எப்படி திருப்பி வசூலிப்பது? வழி கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கணவர் போல் தான், பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர். பிரச்னைகளிலிருந்து தப்ப, மனைவியை பலியாடு ஆக்குவர்.
உன் கணவர் விஷயத்தில் நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* கணவரை, அவரது அண்ணன்கள், அக்காளிடம் அழைத்து போய் நிறுத்து. கொடுத்த கடனை திருப்பி தர வேண்டுமா, வேண்டாமா என்பதை, கணவரே தன் வாயால் கூறட்டும். 'கடனை திருப்பி தரவேண்டாம்' என, உன் கணவர் கூறி விட்டால் கொடுத்த பணத்தை தலை முழுகி விட்டு வா.
'கடனை திருப்பி கொடுங்கள் என, நான் தான் கூறினேன்...' என்று, உன் கணவர் ஆணித்தரமாக கூறி விட்டால், வாங்கிய கடனை திருப்பித் தரவேண்டிய கட்டாயத்துக்கு அண்ணன்களும், அக்காளும் ஆளாவர்.
கடனை முழுதும் திருப்பி தருவரா, எத்தனை தவணையில், எத்தனை நாட்களுக்குள் தருவர் என்பதை, கணவரே பேசி கொள்ளட்டும். 30 லட்சத்தில், 20 - 25 லட்சம் வந்தாலே லாபம் என்று நினைத்துக் கொள்
* கணவருக்கு வேலை கிடைக்கும் வரை, நான்கு வீடுகளில் ஒரு வீட்டை காலி செய்ய சொல்லி குடியேறுங்கள் அல்லது நான்கு வீட்டில் ஒரு வீட்டை, தன் பங்காக கணவர் எழுதி வாங்கட்டும்
* எந்த பிரச்னைக்கும் நியாயம் கேட்க, கணவர் உன்னை அனுப்பினால் ஒத்து கொள்ளாதே
* கணவர் விளையாடிய விளையாட்டை நீ விளையாடு. 'எங்க வீட்ல எல்லாமே அவர்தாங்க. அவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்வார்...' என, பந்தை அவர் பக்கம் தட்டிவிடு
* வீட்டின் வரவு - செலவு கணக்கை, கணவருடன் சேர்ந்து செய்யலாம். உன் அனுமதி இல்லாமல் அவரோ, அவர் அனுமதி இல்லாமல் நீயோ, யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. உறவினர்கள் யாராவது பெரிய தொகை கடன் கேட்டால், உங்களால் முடிந்த சிறிய தொகையை அன்பளிப்பாக கொடுத்து, ஒதுங்கி விடுங்கள்
* கணவனும், மனைவியும் பரஸ்பரம் நம்பிக்கையுள்ளவர்களாக மாறுங்கள். ஒருவரையொருவர் தற்காத்து கொள்ளும் கேடயமாக முன் நில்லுங்கள்
* மகனை கோழையாக வளர்க்காமல் சத்ரியனாக வளர். பெண்மையை போற்றும் குணாதிசயத்தை உருவேற்று
* நீயும் எதாவது ஒரு வேலைக்கு போ. குடும்ப பொருளாதாரம் சீர்பட, உன் சம்பளம் உதவும்
* கொடுத்த கடனை திருப்பி வாங்கிய பின்னும், கணவரின் அண்ணன்கள், அக்காளிடம் உறவுமுறை பேணு.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.