உயிரோடு உறவாடு... (27)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2021
00:00

முன்கதை சுருக்கம்:
'வாட்ஸ் - ஆப்'பில் வந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரிஷி, தமிழ்செல்விக்கு போன் செய்தான். 'வேலையை ராஜினாமா செய்து விட்டேன். திருமணத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும்' என, அழைப்பு விடுத்தாள். இந்நிலையில், மேலும் பல படங்களுடன், மிரட்டல் செய்தியும், முனிராஜிடமிருந்து வந்தது. அங்கு வந்த மைத்ரேயி, அப்படங்களை பார்த்து அவனிடம் வினவினாள் -


ரிஷியால் மொபைலை, அவளிடமிருந்து பிடுங்க முடியவில்லை. மைத்ரேயி அத்தனை வலிமையோடு அதை பிடித்து, அவனிடமிருந்து ஒதுங்கிச் சென்று, அதை திரும்ப ஒருமுறை பார்த்தாள்.
ரிஷிக்குள் வெட்கம் பிடுங்கித் தின்னத் துவங்கியது.
''மைத்ரேயி... ப்ளீஸ்! அந்த கண்றாவியை பார்க்காதே... அவ்வளவும் மார்பிங், பித்தலாட்டம்...'' என்று, நரம்பு புடைக்க கத்தினான். ஆனால், அவள் அசரவில்லை. மாறாக கையை உயர்த்தி, அமைதியாக இரு என்பது போல் சைகை காட்டியவள், திரும்ப ஒருமுறை அதைப் பார்த்தாள்.
அதிலிருந்த அந்த அசிங்கமான படங்களை தன் மொபைல், 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு பகிர்ந்து கொண்டாள். பின், அந்த படங்களை, 'டெலீட்' செய்த நிலையில், மொபைலை திரும்ப ரிஷியிடம் தந்தாள். ரிஷிக்குள் திகைப்பு அதிகரித்தது.
''மைத்ரேயி, அதை இப்ப யாருக்கு, 'ஷேர்' பண்ணே?''
''என் மொபைலுக்கு தான்.''
''ஐய்யோ... எதுக்கு?''
''தயவுசெய்து, 'டென்ஷன்' ஆகாதே... உனக்கு, இது முதல் அனுபவம். ஆனா, எனக்கு அப்படியில்லை... என்னை இப்படி மிரட்டினவங்க எத்தனை பேர் தெரியுமா?''
அவள் பதில், அவனை நெட்டுக்குத்தலாய் தாக்கியது.
''என்ன மேன் பார்க்கறே... தனியா ஒரு அழகான பெண் இருக்கான்னு தெரிஞ்சா, அவளை கடத்தறது எப்படி? கற்பழிக்கிறது எப்படின்னு யோசித்ததெல்லாம் அந்தக் காலம்... இப்ப, 'மார்பிங்' படங்களை அனுப்பி பதற வெச்சு, காரியத்த சாதிக்கிறது தான், இந்தக் காலம்.''
''சரி, உன் மொபைலுக்கு இந்த படங்களை ஏன், 'ஷேர்' பண்ணிகிட்டே?''
''அது போகப் போக உனக்கு தெரியும். இப்ப நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல். இப்படி உன்னை மிரட்டுற அந்த நபர் யார்... ஏன் இப்படி மிரட்டுறான்... அவனுக்கும் உனக்கும் என்ன பிரச்னை?''
''இதையெல்லாம் நீ தெரிஞ்சு என்ன பண்ணப் போறே? நான் எங்க எம்.டி., மூலமா போலீஸ் கமிஷனரை பார்த்து, 'சைபர் க்ரைம்'ல புகார் கொடுக்கலாம்ன்னு இருக்கேன்.''
''உன்னை மிரட்டுற அந்த நபருக்கு, நீ இப்படி, 'சைபர் க்ரைம்' வரை போவேன்னு தெரியாதா... அவன் என்ன வாயில விரல் சூப்புர பாப்பாவா?''
''அவன் பாப்பா இல்ல... கிரிமினல்... சாதாரண கிரிமினல் கூட இல்ல, போலீஸ் தேடுற கிரிமினல்... குற்றங்களையே தொழிலா செய்யிறவன்.''
''அப்ப, உன் புகாருக்கு அவன் மட்டும் பயந்துடுவானா... அவன் வரைல பல வழக்குல ஒண்ணு, உன் வழக்கு.
''இப்படிப்பட்டவனை எல்லாம் சட்டத்தால பெருசா தண்டிக்க முடியாது... இவனை எல்லாம் இவன் பாணியில போய் தான் பிடிக்கணும்.''
''நீ என்ன சொல்றே மைத்ரேயி... எப்படி இந்த பிரச்னையை நீ சாதாரணமா நினைச்சு பேசறே... எனக்கு இப்ப எப்படி இருக்கு தெரியுமா? இந்த போட்டோக்களில், ஒரே ஒரு போட்டோ தமிழ்ச்செல்வி வீட்டை சேர்ந்தவங்க கண்ல பட்டாலும் அவ்வளவு தான்...
''அதுலயும், அந்த மாப்ளை சுகுமார் கண்ணுல பட்டா, கேக்கவே வேண்டாம். ஏற்கனவே, அவன் ஒரு கள் குடிச்ச குரங்கு. அந்த குரங்கை, தேள் கடிச்ச மாதிரி ஆயிடும். அப்புறம் எல்லாம் கெட்டுப் போய் சர்வ நாசமாயிடும்.''
''உண்மைதான் ரிஷி... உன்னோட இந்த பயம்தான் அவன் வரைல பலம்... நீ எவ்வளவு பயப்படறியோ, அவ்வளவு அவன் பலமாகறான். நீ எவ்வளவு அலட்சியப்படுத்தறியோ, அவன் அவ்வளவு பலமிழப்பான்... நீ என்ன செய்யப் போறே?''
''மைத்ரேயி... என்ன பேசறே நீ? இதை எப்படி என்னால அலட்சியப்படுத்த முடியும்... போலீசுக்கு போறத தவிர, எனக்கு வேற வழியே இல்லை. நான் என்ன சினிமா ஹீரோவா? அந்த வில்லன் முன்னால ஸ்டைலா போய் நின்னு அவனையும், அவன் ஆட்களையும் அடிச்சு துவம்சம் பண்ண? இது, நிஜ வாழ்க்கை.''
''அது எனக்கும் தெரியும் ரிஷி... இதுக்கு எதுக்கு நீ, சினிமா ஹீரோவாகணும்? கொஞ்சம், 'ஸ்மார்ட்டா' யோசிச்சா போதும்.''
''எப்படி?''
''அந்த நபர் யார்... உனக்கும், அவனுக்கும் என்ன பிரச்னை? இதை முதல்ல சொல்.''
சேனலில், ஜனாவிடம் துவங்கிய போட்டி பொறாமை, முனிராஜ் என்ற அடியாள் வரை நீண்டு, பின் ஜனா வேலையிழந்து வீட்டுக்கு போனது வரை சொல்லி முடித்தான், ரிஷி.
''ஓ... அப்ப இந்த ஜனா தான் உன் வில்லனா?''
''ஆமா... அவன் தான் இப்ப முனிராஜை துாண்டிவிட்டு, அவனை கேடயமா பிடிச்சுகிட்டு, இப்படி மிரட்டிகிட்டு இருக்கான். இவன் கால்ல நான் விழுந்து, 10 லட்ச ரூபா பணத்தையும் தந்தா, இவன் என்னை மன்னிப்பானாம்.''
''சரி... இதை அப்படியே என்கிட்ட விட்டுரு, ரிஷி. அதிகபட்சம் எனக்கு, எட்டு மணி நேரம் மட்டும் கொடு. இந்த காட்சி அப்படியே எப்படி மாறுதுன்னு மட்டும் பாரேன்.''
''இந்த விஷயத்துல உன்னால மட்டும் என்ன செய்ய முடியும் மைத்ரேயி... எனக்காக பணத்தை நீ கொடுத்து மன்னிப்பு கேட்க போறியா?''
''மன்னிப்பா... இவன்கிட்டயா?'' அலட்சியமாக கேட்டு சிரித்தாள், மைத்ரேயி.
''என்ன சிரிக்கறே... நீ பிரச்னையோட ஆழம் புரிஞ்சுதான் பேசறியா?''
''நல்லா புரிஞ்சுதான் பேசறேன். நான் தான் தொடக்கத்துலயே சொன்னேனே... உனக்கு, இது முதல் அனுபவம்ன்னு... ஆனா, எனக்கு இது அப்படியில்ல... இந்த, 'மார்பிங்'ல, இந்த சென்னை சிட்டியில யார் யார் கில்லாடிங்க... அவங்க எங்க இருக்காங்கறது எல்லாமே எனக்கு
அத்துபடி, ரிஷி.''
''அப்ப வா... அந்த தகவல்களையும் போலீசுக்கு தருவோம். அவங்களுக்கு வேலை இன்னமும் சுலபமாயிடும்ல?''
''ரிஷி... போலீசுக்கும் அவங்கள நல்லா தெரியும். ஒரு திருடனுக்கு தெரியாத இன்னொரு திருடன் கூட இருக்கலாம். ஆனா, போலீசுக்கு தெரியாத திருடனே இந்த சிட்டியில கிடையாது.''
''அப்படின்னா?''
''என்கிட்ட விட்டுடு பாஸ்... இது, இனி என் பொறுப்பு... தமிழ்ச்செல்வி கல்யாணமும் ஒரு குறையும் இல்லாம நல்லபடியா நடக்கும். நீ இப்ப உன் அம்மாவை பத்தி மட்டும் கவலைப்படு. உன், 'பிரியாரிட்டி' இப்ப அதுதான்; இது இல்லை.''
''எப்படி மைத்ரேயி... அப்படி என்ன செய்யப் போறே, நீ?''
''எல்லாம் நல்லபடியா முடியட்டும், அப்புறம் சொல்றேன்.''
''அப்ப போலீஸ்ல புகார்?''
''நான் பார்த்துக்கறேன்னுட்டேன்ல.''
''மைத்ரேயி... உன்னை நான் சந்திச்ச முதல் சந்திப்புல இருந்து இப்ப வரை, நீ எனக்கு பெரிய புதிராதான் இருக்கே. உன்ன மாதிரி ஒரு பெண் பாத்திரத்தை நான், என் வாழ்க்கைல பார்த்ததே இல்லை. பெரிய பெரிய விஷயங்கள சாதாரணமா கடக்கறே... உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியல.''
''ஆனா, நான் உன்னை புரிஞ்சுகிட்டேன், ரிஷி... உன்னை மட்டுமில்ல, தமிழ்ச்செல்வி, மாமி, அங்கிள் எல்லாரையும் நான் நல்லா புரிஞ்சுக்கிட்டிருக்கேன்.
''நான் ஒரு பெரிய பாவிங்கற எண்ணம், உன்னை சந்திக்கிறதுக்கு முந்தி வரை, என் வாழ்க்கைல இருந்தது. எப்ப உன்னை சந்திச்சேனோ, அப்பவே அது, நான் புண்ணியமும் பண்ணினவள்னு மாறிப் போச்சு. என்ன பார்க்கறே... நான் கூட சினிமா வசனம் மாதிரியே பேசறேனா?''
அவள் கேட்க, அவன் பதில் கூறத் தெரியாமல் பிரமிக்க, பின்னாலேயே வந்தாள், மாமி.
''என்ன ரெண்டு பேரும் அப்படி பேசிண்டிருக்கேள்... எப்பவும் எது பேசினாலும், அது கீழ உள்ள ஜன்னல் வழியா என் காதுல விழும். ஓ... இன்னும் நீ ஜன்னலையே திறக்கலையா... அதான் என் காதுல விழல போலிருக்கு,'' என்று சிரித்தாள், மாமி.
மாமி எதிரில் ஜன்னலை திறந்தபடி, ''ஒண்ணுமில்ல மாமி... அம்மா ஹெல்த் பத்தி தான் மைத்ரேயி கேட்டா. சொல்லிகிட்டிருந்தேன்,'' என்று சமாளித்தான், ரிஷி.
''அதை அப்படியே இவளோட கீழ வந்து, என்கிட்டயும் சொல்லியிருக்கலாம் இல்லையா... போகட்டும், நான் மைத்ரேயிகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கறேன். சரி... நீ, தமிழ்ச்செல்வி கல்யாணத்துக்கு எப்ப, எப்படி போகப் போறே... அத பத்தி யோசிச்சியா?'' பாயின்ட்டுக்கு
வந்தாள், மாமி.
''மாமி, நீங்க சொல்லிதான் எனக்கு, அவ கல்யாணம் பத்தியே தெரியும். அவளும் பேசினா; பத்திரிகை வரட்டும் மாமி, யோசிக்கலாம்.''
''பத்திரிகை வரட்டுமா? அடப்போடா பைத்தியக்காரா... வர்ற வெள்ளிக்கிழமை தான் முகூர்த்தம்; இதை விட்டா ஒரு மாசம் முகூர்த்தமே இல்ல.''
''என்ன மாமி சொல்றீங்க?''
''வெள்ளிக்கிழமை காலம்பற, 7:30 - 9:00 முகூர்த்தம். சாயந்தரமா ரிசப்ஷன். நான் இப்பதான் தமிழ்ச்செல்விக்கும் போன் பண்ணி கேட்டேன். அவளும், 'கன்பார்ம்' பண்ணிட்டா. நாம எல்லாரும் முதல் நாள் வியாழக்கிழமையே, 'ப்ளைட்'டை பிடிச்சு, மதுரைக்கு போயிடறோம்.
''மாமா எப்ப மதுரை போனாலும், ரெகுலரா தங்கற, எம்.ஆர்.இன்டர்நேஷனல்ல தங்கறோம். அந்த ஹோட்டல்ல இருந்து பார்த்தா, மீனாட்சியோட மேற்கு கோபுரம், வடக்கு கோபுரம்ன்னு எல்லாம் தெரியும். காலம்பற, 6:00 மணிக்கெல்லாம் கோவிலுக்கு நடந்தே போய், மீனாட்சியை தரிசனம் பண்றோம்.
''அப்படியே காமராஜர் சாலைல
இருக்கற கல்யாண மண்டபத்துக்கும்
போய் கல்யாணத்துல கலந்துக்கறோம்.
இது, என்னோட பிளான். என்ன சொல்றே நீ?''
உண்டியலைக் கவிழ்த்து காசுகளை கொட்டுவது போல, வார்த்தைகளை கொட்டியவளாக இருவரையும் பார்த்தாள், மாமி.
''சூப்பர் ப்ளான் மாமி! நான் மதுரை மீனாட்சியை தரிசனம் பண்ணினதே இல்ல; அப்படியே செஞ்சிடுவோம்! இப்பவே நான் என், 'லேப்டாப்'பில் டிக்கெட், 'புக்' பண்ணிடறேன். அப்படியே என்ன ஹோட்டல் அது... ஆங், எம்.ஆர்.இன்டர்நேஷனல்... அதுக்கும், 'புக்' பண்ணிடறேன். மாமி.
''நீங்க உங்க ஆதார் நம்பர், மாமா ஆதார் நம்பரை மட்டும் கொடுங்க. ரிஷி, நீயும் உன் நம்பரை கொடு. டிக்கெட், 'புக்' பண்ண இதெல்லாம் இப்ப வேணும். பை த பை, மாமி உங்க வயசென்ன,
45 இருக்குமா?''
மாமி அதைக் கேட்டு கண்களை ஒரு சுழற்று சுழற்றியவளாக, ''நான் அவ்வளவு இளமையாவாடி இருக்கேன். என் வயது: 54டி... அவருக்கு 60,'' என்று முடித்தாள்.
''நோ மாமி... பொய் சொல்றீங்க,'' என்று பதிலுக்கு சிரித்தாள், மைத்ரேயி.
ரிஷிக்கோ அவர்கள் வரையில் ஒரு சந்தோஷமான கல்யாண, 'மூட்' வந்து விட்டது, நன்கு புரிந்தது. ஆனால், அவர்களைப் போல அப்படி ஒரு சந்தோஷத்துக்குள் அவனால் மூழ்க முடியவில்லை. மைத்ரேயி என்ன செய்யப் போகிறாள் என்பதிலும் ஒரு சஸ்பென்ஸ்...
இந்த பிரச்னை சேதாரமில்லாம தீர்ந்து போகுமா... கல்யாணம் நல்லபடியா நடக்குமா?
அடுத்த இதழில் முடியும்

இந்திரா சவுந்தர்ராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X