அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 செப்
2021
00:00

அன்புள்ள அம்மா -
பொருளாதாரத்தில், பி.ஹெச்டி., முடித்த திருமணமானவள். பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். எனக்கு, இரு மகள்கள்.
கணவர் அழகானவர், அறிவானவர், நகைச்சுவையாக பேசக் கூடியவர்; இளங்கலை வணிகவியல் படித்தவர்; டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நடத்துகிறார்.
நானும், கணவரும் சாலையில் நடந்து சென்றால், இளம் பெண்களின் கண்கள், கணவரை மொய்க்கும்-------. செல்ல, 'டாபர்மேன்' வளர்க்கிறார். நான் பார்க்க சுமாராக தான் இருப்பேன். ஆனால், என்னை திருமணம் செய்து கொண்ட பின்தான், வியாபாரம் செழுமையானது என்கிற காரணத்தால், என் மீது மிகவும் பாசமாய் இருப்பார்.
திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் எனக்கும், கணவருக்கும் வாய் சண்டை கூட வந்ததில்லை. இரு வீட்டு பெரியவர்களும் எங்கள் உல்லாச வாழ்வில் குறுக்கிட்டதில்லை. பங்களா போன்ற வீடு, கார், வீட்டு வேலை, தோட்ட வேலை செய்ய வேலையாட்கள்.
வாழ்க்கை குதுாகலமாக போய் கொண்டிருந்தபோது, விதி சதி செய்தது. கணவரின் பீரோவை சுத்தம் செய்தபோது, அவரின் பழைய டைரி கிடைத்தது. அதை படிக்கும்போது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
திருமணமாவதற்கு முன், என் பெயர் கொண்ட ஒரு பெண்ணை ஒரு தலையாய் காதலித்துள்ளார். கணவரின் காதலை அவள் உதாசீனபடுத்தி, வேறொருவரை திருமணம் செய்து போய் விட்டாள். அவள் நினைவை மறக்க முடியாமல், அவள் பெயருள்ள என்னை தேடி கண்டுபிடித்து, திருமணம் செய்துள்ளார்.
என்னை தேடி கண்டுபிடிப்பதற்கு முன், இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்துள்ளார், கணவர். காதலித்த சந்தோஷத்தோடு அவர்களை கை கழுவி விட்டார். அந்த இரு பெண்களின் பெயர்களை தான், என்னிரு மகள்களுக்கும் வைத்துள்ளார், என் அருமை புருஷர்.
டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை பார்த்த ஒரு பெண், என் கணவரை ஒரு தலையாக காதலித்துள்ளார். அவள், மஞ்சள் காமாலை நோயால் இறந்து விட்டாள். அவளது நினைவாக டிபார்ட்மென்ட்டல் ஸ்டோருக்கு, அவள் பெயரை சூட்டியுள்ளார்.
அதன்பின், என் மூத்த மகளின் ஆசிரியையுடன், கணவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டு உறவுக்கு பின், அந்த பெண் கனடாவுக்கு பறந்து விட்டாள். அவள் நினைவாக, தன் வளர்ப்பு நாய்க்கு, அந்த பெயரை வைத்துள்ளார், கணவர்.
படித்ததும், கொதித்து போனேன். கணவரிடம் இதுபற்றி கேட்டபோது, 'ஆயிரம் இன கவர்ச்சிகள் இருந்தாலும், என் அந்தபுரத்து மகாராணி நீதான்...' என்கிறார்.
டைரியில் சொல்லப்படாத காதலிகள் இன்னும் எத்தனை பேரோ... இவரை, மன்னிக்க மனம் மறுக்கிறது. மனைவி, மகள்கள், நாய் பெயர்களை கொஞ்சி கொஞ்சி அழைத்ததற்கு இப்போது தான் எனக்கு அர்த்தம் புரிகிறது.
இவரை விவாகரத்து செய்து, தண்டிக்கலாமா அம்மா?
நான் கல்லுாரி ஆசிரியையாக பணிபுரிகிறேன். பெற்றோருக்கு நான் ஒரே மகள். பெற்றோர் வழி சொத்துகளுக்கு குறைவில்லை. நானும், மகள்களும்,
இவர் துணை இல்லாமல் ராஜவாழ்வு வாழமுடியும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன், அம்மா!
- இப்படிக்கு,
அன்பு மகள்.

அன்பு மகளுக்கு -
திருமணத்துக்கு முன் சில ஆண்கள் இப்படிப்பட்ட கன்றுக்குட்டி காதலில் விழுவதுண்டு. வேலை, திருமணம் என்றானபின், அதையெல்லாம் பெரிதாக வாழ்க்கைக்குள் கொண்டு வர மாட்டார்கள்.
உன் கணவரும் அப்படியே காதலித்திருக்கிறார், காதலிக்கப் பட்டிருக்கிறார், தொடர்ந்தும் காதல் வயப்படுவார்.
காதலுக்கு உண்மையாக நடந்து கொள்ள விரும்புகிறார், கணவர். காதலின் நினைவுகளை போற்ற விரும்பி தன்னை சுற்றியுள்ள அன்புள்ளங்களுக்கு காதலிகளின் பெயர்களை சூட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும், தன் அன்புள்ளங்களை,
காதலியரின் பெயர்களால் அழைக்கும் போதும், காதல் தேவதைக்கு தீபாராதனை நடத்துகிறார்.
டைரியை எடுத்த இடத்தில் வைத்து விடு. ஆனால், தொடர்ந்து கணவரின் நடவடிக்கைகளை கவனி. கணவரின் மொபைலை ஆராய்ந்து, தேவையற்ற எண்கள் இருந்தால் அழித்துவிடு.
டிபார்ட்மென்டல் ஸ்டோரில் அழகான பெண்களை வேலைக்கு வைக்காதே. ஏற்கனவே இருந்தால், பொய் காரணம் கூறி, அவர்களை நீக்கு. குழந்தைகளை, பள்ளிக்கு நீ அழைத்து போய் விடு.
கணவருக்கும் உனக்கும் இடையே ஆன தாம்பத்தியம் முறையான இடைவெளியில் சீராக நடக்கும் வண்ணம் பார்த்துக்கொள்.
பகல் எல்லாம் சேவல் எங்கெல்லாம் சுற்றினாலும், அந்தி நேரத்தில் வீடு வந்து அடைகிறதா என பார்.
'நான் விரும்பின பெண்ணை விட, என்னை விரும்பின பெண்ணை விட, பரஸ்பரம் நேசித்த பெண்களை விட, தினம் காசுக்காக, புகழுக்காக, காமத்துக்காக வலிய வந்து மடியில் அமரும் பெண்களை விட, என் மனைவி மகத்தானவள்' என்ற எண்ணத்தை, கணவருக்குள் ஏற்படுத்து.
இருப்பை விட்டுக் கொடுக்காத சமரசம் தப்பேயில்லை, கண்ணம்மா. 40 வயதுக்கு மேல், இந்த சிங்கங்கள் பல்லும், நகங்களும் இழந்து, சைவத்துக்கு தாவி விடும்.
வாழ்த்துக்கள்!

-- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X