தாய்க்கு ஒரு தாலாட்டு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2021
00:00

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே
''வலது காலை எடுத்து வைச்சு வாம்மா,'' புது மருமகளிடம் கூறினாள், பர்வதம்மா.
சிரித்தபடி, ரேணுகா காலை எடுத்து வைக்க, தடுக்கி விழப்போனவளை, அவள் கணவன் ஷங்கர் பிடித்துக் கொண்டான்.
''பாத்துமா!''
''இல்ல அத்தை... எனக்கு இடது கை, கால் பழக்கம்; அதான் முதல்ல வருது.''
''பரவாயில்லை, மாத்திக்கலாம்... நல்லதுன்னா அதுக்கேத்த மாதிரி மாற்றிக் கொள்வதில் தப்பில்லை.''
சிரித்தபடி உள்ளே நுழைந்தாள், ரேணுகா.
''இந்த கால குழந்தைகளுக்கு, நல்லது, கெட்டது எல்லாத்தையுமே, திருமணத்துக்கு பின் தான் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கு,'' என்றாள், பர்வதம்மா.
கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் ஹெச்.ஆர்., ஆக பணிபுரிகிறாள், ரேணுகா. ஷங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.
பர்வதம்மா மறுப்பு ஏதும் சொல்லவில்லை. மகன் விரும்புகிறான், இடையில் இவள் தலையீடு எதற்கு? ஆனால், எல்லாவற்றிலும் இவளால் ஒதுங்க முடியவில்லை. ஒரு சாதாரண தலைவலி என்றால் கூட டாக்டரிடம் ஓடுகின்றனர். வயிற்று வலி என்றால் டாக்டர்.
கை பக்குவமாக, பல மருந்துகள் தெரியும், பர்வதம்மாவுக்கு.
தலைவலி என்றால், சுக்கு பற்று போடலாம். வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிற்றுப் போக்கு நிற்கும். சின்ன வெங்காயம் சாறு எடுத்து, வெறும் வயிற்றில் பருகினால், 'யூரினரி இன்பெக் ஷன்' வராது.
சுக்கு கஷாயம், மிளகு கஷாயம், லேகியம் எத்தனை இருக்கின்றன... இப்போதுதான், 'யு டியூப்'பில் பாட்டி வைத்தியம் பரபரப்பாகி விட்டது. வெண்ணெய் காய்ச்சுவதைக் கூட, வீடியோவாக போடுகின்றனர். என்ன உலகம்?
ஆனால், பர்வதம்மாவால் சும்மா இருக்கவும் முடியவில்லை. தன் தோழியரிடம் ரேணுகா பேசிக் கொண்டிருக்கும்போது, ஏதாவது மருத்துவம் பற்றி பேச்சு வந்தால், பர்வதம்மா தலையிட்டு பேசுவது இயல்பு.
ஆரம்பத்தில் முகம் சுளித்த ரேணுகா, ஒருநாள் ஷங்கரிடம், ''இத பாருங்க, உங்க அம்மாவை வாயைப் பொத்திக்கிட்டு சும்மா இருக்க சொல்லுங்க... சும்மா நொய் நொய்ன்னு பேசிக்கிட்டே இருக்காங்க... எல்லாத்துலயும் தலையிட்டு பேசுறாங்க, என், 'பிரண்ட்ஸ்' எல்லாம் சிரிக்கறாங்க...
''பாட்டி வைத்தியம், பேத்தி வைத்தியம், யார் கேட்டாங்க... தன் மரியாதையை காப்பாத்திக்க, அவங்களை சும்மா இருக்கச் சொல்லுங்க,'' என்று, கத்தி விட்டாள்.
''ரேணு... அம்மா, அந்த காலத்து மனுஷி... அவங்க வளர்ந்த விதம் அப்படி... நீ கொஞ்சம், 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கோ.''
''இதை பாருங்க... என் ஆபீஸ்லே வேற ஏக, 'டென்ஷன்!' அந்த வேலையோட இவங்களோட தொல்லை வேற... ஆபீஸிலே அரக்கப்பரக்க வேலை பார்த்துட்டு ஓடிட்டு இருக்கேன். லேகியம் சாப்பிடவும், கஷாயம் குடிக்கவும், நேரம் இல்லைங்க.
''ஒருநாள் ப்யூட்டி பார்லர் போய், தேவையானதை செய்து கொண்டு வந்து விட்டால் வேலை முடிந்தது. இந்த அத்தைக்கு வேற வேலை இல்ல. கிராமத்தில்தான் வீடு இருக்குல்ல... அத விட்டுட்டு, என்னமோ புது மருமகளுக்கு துணையா இருக்கணும்ன்னு நினைச்சு, என் கழுத்தை அறுக்கிறாங்க,'' என்றாள்.
வெளியே இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த, பர்வதம்மாவுக்கு வேதனையாக இருந்தது. உண்மை தான், துணையாக அருகிலேயே இருந்து, மருமகளுக்கு பாரம்பரியத்தை கற்றுக்கொடுக்க நினைத்தது,
தப்பு தான்.
ஏதாவது ஒரு கட்டணம் போட்டு, பாடங்கள் கற்றுக் கொடுத்தால் எல்லாரும், 'க்யூ'வில் காத்திருப்பர். எப்போதுமே, 'ஓசி'யில் கிடைப்பதற்கு மரியாதை இல்லை.
பர்வதம்மா அன்று கையில் பெட்டியுடன் கிளம்பியபோது, ''என்னம்மா இது திடீரென்று?'' கேட்டான், ஷங்கர்.
''இல்லப்பா, ஊருக்கு போய் நாள் ஆச்சு... அங்க, எனக்காக எல்லாரும் காத்துட்டு இருப்பாங்க... நான் கிளம்புறேன்,'' என்றாள்.
கேட்டுக் கொண்டிருந்த ரேணுகாவுக்கு, சிரிப்பு வந்தது.
''ஆமா, பெரிய கம்பெனி முதலாளி... இவங்க கையெழுத்துக்கு, 'பைல்' எல்லாம் காத்துட்டு இருக்கப் போகுது. என்னங்க நீங்க, அவங்க இங்க வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு... ஒரு தடவ ஊருக்கு போயிட்டு வரட்டுமே... அவங்களுக்கு ஒரு இட மாறுதல் இருக்கும் இல்லையா,'' என்றாள்.
'ஒரு பிள்ளை பெத்து என் கைல கொடு' என்று, கேட்க மாட்டாள். ஏனென்றால், இவளுக்கு தெரியும், ஐந்து ஆண்டு திட்டம், பத்து ஆண்டு திட்டம் என்று, ஏதாவது வைத்திருப்பர். புதிய திட்டங்கள் இருக்கும். நாம் எதற்கு குறுக்கே நிற்க வேண்டும் என்று நினைத்தாள், பர்வதம்மா.
பர்வதம்மா, கிராமம் போய் ஒரு ஆண்டு ஆனது.
இவளிடம் மொபைல்போன் இல்லாததால், மகனிடம் பேச முடியவில்லை. ஆனாலும், அவ்வப்போது கடிதம் போட்டுக் கொண்டிருந்தான். மாதம் ஒருமுறை மணியார்டர் வரும். தான் உண்டு, தன் கை வைத்தியம் உண்டு என்று, அங்கேயே தங்கி விட்டாள், பர்வதம்மா.
அன்று -
இவள் வீட்டு வாசலில் ஒரு டாக்சி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினான், ஷங்கர். மகனைக் கண்டதும் மகிழ்ச்சி பொங்க, ''வாப்பா,'' என்று வரவேற்றாள்.
''உன்னை கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கேன்,'' என்று, பாசமாக சொன்னான்.
''அப்படியாப்பா... ஏன், ரேணுகா, முழுகாம இருக்காளா?''
''இல்லம்மா, அவ முழுகினதால தான் கஷ்டம்.''
''என்னப்பா சொல்ற?''
''அது வந்தும்மா...''
அதற்குள், ஒரு அம்மா வந்தாள்.
''பெரியம்மா... மகனுக்கு வயத்துப்போக்கு... ஏதாவது மருந்து மாத்திரை குடு தாயி... டாக்டர்கிட்ட போனோம், ஒண்ணும் சரியாகலை... ரொம்ப சோர்ந்து போயிட்டான்.''
பர்வதம்மா உள்ளே போய், ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து வந்து, ''இதுல மருந்து பொடி கலந்து வச்சிருக்கேன்; தயிரில் கலந்து மூணு வேளை கொடு. வேற எதுவுமே கூடாது; தயிர் சாதம் மட்டும் கொடு. நாளைக்கு வந்து பாரு,'' என்றாள்.
வரிசையாக பர்வதம்மா சொல்ல, வந்தவள் தலையாட்டியபடியே, மருந்தை வாங்கி போனாள்.
''சரிப்பா... நீ சொல்ல வந்ததை சொல்லு.''
மறுபடியும் அவன் பேச ஆரம்பித்தபோது, ஒரு பெண் அழுதபடி ஓடி வர... அவளுடன் அவள் தாய்.
வலியால் துடித்தாள், அந்த பெண்.
''தேள் கொட்டிடுச்சு... நீதான்
ஏதாவது வைத்தியம் பண்ணணும் தாயி,'' என்றாள்.
பர்வதம்மா உள்ளே போய் ஒரு டம்ளரில் ஏதோ எடுத்து வந்து, ''இந்தா குடி... அங்க உட்காரு,'' என்று அந்த பெண்ணை உட்கார வைத்தாள்.
அந்த பெண், தன் சுண்டு விரலை காட்டினாள். தேள் கொட்டிய இடம்.
''நெறி கட்டி வலி தாங்க முடியல, விஷம் ஏறிக்கிட்டே இருக்கே,'' அழுதாள்.
''கொஞ்சம் வலி பொறுத்துக்க,'' கையிலே விபூதியுடன், கண்களை மூடி, நெறி ஏறிய இடத்தில் கை வைத்து ஏதோ ஜெபித்துக் கொண்டே இருந்தாள். அந்த நெறியை இறக்குவதற்காக மேலும் கீழுமாக அவள் கைகள் நடனம் ஆடின.
சற்று நேரத்தில் அழுதபடி வந்த அந்தப் பெண், சிரித்தபடி எழுந்தாள்.
அவள் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, ''இதிலே மருந்து இருக்கு; விபூதி இருக்கு; விபூதியை வாயில் போட்டுக்க. ராத்திரி துாங்கக் கூடாது; ஜாக்கிரதையா இரு... கொட்டுவாய் இடத்துல மட்டும் கொஞ்சம் லேசா வலிக்கும்.
''நீ, காலைல ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வச்சு, அதுல இந்த விரல வையி; வெஷம் விலகுவது நல்லாவே தெரியும். அதுக்கு அப்புறமா கையெல்லாம் கழுவிட்டு, நீ என்ன வேணா பண்ணலாம் புரியுதா?''
அவள் சிரித்தபடியே கிளம்பினாள்.
அவள் தாய் கொடுத்த பணத்தை வாங்க மறுத்தாள், பர்வதம்மா.
ஷங்கர் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்முன் ஏதோ ஒரு மாயாஜாலம் நடந்த மாதிரி, ஒரு விஸ்வரூப தரிசனம் கிடைத்த மாதிரி ஒரு உணர்வு.
''சொல்லுப்பா, என்னமோ சொல்ல வந்தியே... யாராவது அதுக்குள்ள வந்துரப் போறாங்க சொல்லுப்பா!''
''அது வந்து, நானும், ரேணுவும், 'டூர்' போனோம். போன இடத்தில, ஆத்துலே குளிச்சோம். திடீர்னு உடம்பெல்லாம் நீர் கொப்பளம் மாதிரி வந்திருச்சு... அதுமட்டுமில்லை, ஒரே அரிப்பு. அவளால துாங்கவே முடியலை. டாக்டர், 'ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்' எல்லார்கிட்டேயும் போனோம்.
''எல்லாரும் என்னவெல்லாமோ மருந்து, 'ஆயின்மென்ட்' எல்லாம் கொடுத்தாங்க, சரியாகல. ஒரு மாசமா, ரேணுகா ஆபீஸ் போகல; வீட்ல தான் இருக்கா.
''அவதான் சொன்னா, 'உடனே அத்தையை கூட்டிட்டு வாங்க... அவங்க ஏதாவது கை வைத்தியம் பண்ணி, என்னைக் குணப்படுத்திடுவாங்க... என்னால தாங்க முடியலைங்க'ன்னு அழறா... நீ தான்மா ஏதாவது பண்ணணும்... போலாமா?''
பர்வதம் உள்ளே போனாள். சற்று நேரத்தில், ஒரு பேப்பரில் ஏதோ எழுதி வந்தாள். ஒரு பொட்டலம் இருந்தது.
''இதோ பாருப்பா, இதுல மருந்து இருக்கு. இத உடம்பு முழுக்க பூசிக்கச் சொல்லு. புளியைத் தொடக் கூடாது. இந்த பேப்பரில், என்னென்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாதுன்னு எழுதி இருக்கேன்.
''அப்புறமா, வல்லாரைக் கீரை எடுத்துட்டு வரச்சொல்லி, நல்லா அரைச்சு, அதை கொப்பளம் வந்த இடத்திலே எல்லாம் பூசி, பத்துப்போடச் சொல்லு. காலையில், சாயங்காலம் இரண்டு நேரமும் மறக்காம போடணும்; 48 நாள் போடணும். அப்பத்தான் அதெல்லாம் காய்ந்து உதிர்ந்துவிடும்,'' என்றாள், பர்வதம்.
''இல்லம்மா, நீ நேர்ல வந்தா,'' சொன்னான், ஷங்கர்.
அதற்குள் ஒரு சிறுவன் கையில் ஸ்லேட்டுடன் வந்து, ''பெரியம்மா... வீட்டுப்பாடம் எழுதிட்டு வரச் சொன்னீங்கல்ல, எழுதிட்டு வந்திருக்கேன்... படிக்கட்டுமா?''
''படிப்பா!''
''மதியாதார் தலைவாசல் மிதிக்காதே,'' என படித்தான், பையன்.
''என்ன ஷங்கர், இன்னும் கிளம்பலையா?''
''அம்மா!''
''இல்லப்பா... எனக்கு வெளியில வேலை இருக்கு. இந்த பையன் சொன்னது தான் பதில், போயிட்டு வாப்பா,'' என்றாள்.
தன் பலம் தெரியாத யானை வேண்டுமானால் பிச்சை எடுக்கலாம். இவள் அப்படி செய்ய மாட்டாள்.
தலை குனிந்து வெளியேறினான், ஷங்கர்.

நீலாம்பரி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-செப்-202103:00:06 IST Report Abuse
D.Ambujavalli தோட்டத்து பச்சிலைக்கு என்றும் மதிப்பில்லை எங்கே, ஒரு மஞ்சள் கிழங்கினால் சருமம் பளபளக்கும் என்று சொன்னால் நையாண்டி செய்வார்கள் அதையே ‘இங்கிலாந்தில் முக, சருமப்பொலிவின் ரகசியம்’ என்று ஒரு கம்பெனிக்காரன் ஒரு ட்யூப் இருநூறு என்று விற்பான், வாங்கி ஈஷிக்கொள்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X