செங்கமலம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
செங்கமலம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 செப்
2021
00:00

கணவன் செந்துாரானிடம், ''ஏங்க, என்ன தான் சொல்ல வாறீங்க?'' கோபத்துடன் கேட்டாள், செங்கமலம்.
''பின்ன என்ன... இரண்டு குறுக்கம் நிலம்; அதுவும், புது பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில. அடிமாட்டு விலைக்கு வித்தாலும், 50 லட்சத்துக்கு போகும்தானே...
''கிராமத்தில வீடு, ஓலைக் குடிசை தான் என்றாலும், சுத்தி கிடக்கும் காலி மனை, எப்படியும் நாலு சென்ட்டாவது இருக்கும். இதையெல்லாம் எதுக்காக நான் விட்டுக் கொடுக்கணும்... நமக்கும் வாழ்க்கை இருக்கு; பிள்ளைகள் இருக்காங்கல்லா?'' பதிலுக்கு இரைந்தான், செந்துாரான்.
''உங்க முடிவு, பாகப்பிரிவினை நடந்தே தீரணும்... அப்படித்தானே?''
செங்கமலத்தின் கேள்வி, காதில் விழுந்தும் விழாதது மாதிரி இருந்தான், செந்துாரான்.
''நீங்க, உங்க அண்ணன்கிட்ட பேசிட வேண்டியது தானே?''
''அது சரிப்பட்டு வராது.''
''எப்பவுமே பெண்களை குற்றவாளியாக்கணும்னா, ஆண் சிங்கங்களுக்கு அலாதி பிரியம் தான்.''
''அப்படியில்ல... நீன்னா சரியா பேசுவ; நான் ஈவு, இரக்கம்ன்னு சொதப்பிடுவேன்.''
''எப்படிச் சொன்னாலும் பலியாடு, நான் தான். பாதிக்கு பாதின்னு பேசணுமா... நீக்குப் போக்கா இருக்கலாமா?''
''அவனும் கூடப் பிறந்தவன் தான். இத்தனை நாள் அம்மாவையும் தன்னோடு வெச்சு பாத்திருக்கான். கிடைச்ச வரைக்கும் லாபம். அதுக்கு தகுந்த மாதிரி பேசு,'' என, தன் எண்ணத்தை முழுமைப்படுத்தினான், செந்துாரான்.
''நான் பேசி முடிச்சப் பின்னால அதுல சொத்தை, இதுல பத்தைன்னு பேசக் கூடாது... அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வந்துடும்.''
செங்காளியப்பனும், செந்துாரானும் ஒரு தாய் வயிற்று உடன்பிறப்புகள். அப்பா ஆறுமுகச்சாமி முடக்குவாதத்தில் விழுந்ததும், குடும்பத்தையும், மேல்நிலைப் பள்ளி படிப்பை தொட்டிருந்த தம்பி செந்துாரானுக்காகவும், தன் படிப்பை தொலைத்து, ஏர் பிடிக்கத் துவங்கியவன், செங்காளியப்பன்.
அப்பா போய் சேர்ந்த பின், இத்தனை நாளும் அம்மாவின் வயிறும், மனமும் வாடாமலும், வதங்காமலும் பார்த்துக் கொண்டிருந்ததும், அவன் தான்.
பள்ளி, கல்லுாரி, அரசுப் பணியென்று, செந்துாரான் உருமாறிய போதெல்லாம், தேவையான பணத்தைக் கொண்டு வந்தது, செங்காளியப்பனின் தன்னலமற்ற உழைப்பு தான்.
அப்படிப்பட்ட அண்ணனிடமிருந்து தான் சொத்தை பிரித்து வாங்க வேண்டும் அல்லது அதற்கு சமமான பணத்தை வாங்க வேண்டுமென்று சொல்லி, உறுமிக் கொண்டிருக்கிறான், செந்துாரான்.
பொதுவாக, குடும்பத்தில் இதுபோன்ற சமயங்களில், பெண்கள் தான் பிரச்னைகளின் நாயகியராக இருப்பர்.
செங்கமலத்தைப் பொறுத்தவரையில், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவள். பணங்காசை விட, உறவுகள் உயிரோட்டமாக இருந்தால் தான், நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ற திடமான நம்பிக்கை அவளுக்கு உண்டு.
வாழும் வாழ்க்கை, எதிரிகளை உருவாக்குவதல்ல. ஏற்புடையதல்ல என்று சொல்ல நினைக்கும் இடத்திலும், இதமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அசைக்க முடியாத சித்தாந்தங்களுக்கு சொந்தக்காரி, செங்கமலம்.
ஊரடங்கு...
ஒரு விதத்தில் உதவி செய்யத்தான் செய்கிறது.
கிராமத்தில், செந்துாரானின் அம்மா வயது முதிர்வால் மரணமடைந்த செய்தி வந்ததும், செந்துாரானும், செங்கமலமும் தங்கள் அலுவலகங்களில், 15 நாள் விடுப்பு கேட்ட போது, எந்தவித மறுப்பும் இல்லாமல், அனுமதி கிடைத்தது.
ஏற்பாடு செய்திருந்த, 'பாஸ்ட் டிராக்' கார் வருவதற்கான இடைவெளியில் தான், செந்துாரான் - செங்கமலத்தின் உரையாடல் இப்படி நடந்து கொண்டிருந்தது.
அம்மாவின், 15வது நாள் காரியங்களுக்காக, அண்ணனும் - தம்பியும் சேர்ந்து, வீட்டை வெள்ளையடித்து சுத்தப்படுத்துவதும், சிதறி கிடக்கும் சாமான்களை எடுத்து ஒழுங்கு படுத்துவதுமான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
'பதினாறாவது நாள் காரியங்கள் முடிந்து, கோவிலுக்கு புறப்படும் முன்தான், இதுபற்றி, ஊர்க்காரர்களை வைத்து, அவர்கள் முன்னிலையில் நான் பேசுவேன். அதுவரைக்கும் நீங்கள் எதையும் வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது...' என்ற, செங்கமலத்தின் நிபந்தனைக்கு கட்டுப்பட்டு தான், அமைதியாக இருந்தான், செந்துாரான்.
கொல்லையில் நின்று, வீசும் இளங்காற்றின் வருடலையும், மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்த முல்லைப் பூக்களையும் ரசித்துக் கொண்டிருந்தாள், செங்கமலம்.
''ஏலத் தாயீ... கோவிலுக்கு போயிட்டு வந்துருவோமா?'' என்ற செங்கமலத்தின் ஓரகத்தி செவ்வந்தியின் குரல் கலைத்தது.
வீட்டின் முன் பெரியவரின் பிள்ளைகளும், செங்கமலத்தின் பிள்ளைகளும், கும்மாளமும், கூக்குரலுமாய் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
''பூசாரி சீக்கிரம் நடை சாத்திட்டு போயிடுவாரு... இன்னும் வௌக்கு முன்னால உட்கார வெச்சு, மாமன், மச்சான் உறவுகள் உரிமா கட்டுற வேலையெல்லாம் இருக்குல்ல,'' என்றாள், செவ்வந்தி.
செவ்வந்தியைப் பார்த்து சிரிப்பொன்றை உதிர்த்தபடி, ''சரி அக்கா... அத்தானும், மற்றவங்களும் ரெடியாயிட்டா, நாம போயிட்டு வந்துடலாம்,'' என்றாள், செங்கமலம்.
'இதுவரை, அமைதியாக கழிந்த நேரத்தில், இனிமேல் தான் பிரச்னைகள் உருவாக வேண்டுமா... அதையும் நான் தான் உருவாக்க வேண்டுமா?'என, நினைத்து கொண்டாள், செங்கமலம்.
அண்ணனிடமும், ஊர்க்காரர்கள் மத்தியிலும், தான் நல்ல பெயரை வாங்க, தன்னை ஏவுகணையாக்கத் துடிக்கும் கணவன் செந்துாரான் மீது எரிச்சல் வந்தது.
மச்சான் செங்காளியப்பனும், அவரது மனைவி செவ்வந்தியும், கள்ளம் கபடமற்று வெள்ளந்தியாய் பேசி, தகப்பன் இடத்திலிருந்து ஒட்டி உறவாடினர்.
பாம்பையும் சாகடிச்சு, கம்பையும் ஒடியாமல் எப்படி காப்பாற்றுவது என்ற சிந்தனைக் குழப்பத்துடன், அங்கிருந்து நகர்ந்தாள், செங்கமலம்.
கோவில் வழிபாடு முடிந்து, வீட்டு வௌக்கு முன் அமர்ந்து, ஊர் வழக்கப்படி, மைத்துனர் உறவு முறை கொண்டோர் வரிசையாக வந்து, அண்ணன் - தம்பி இருவருக்கும் தலையில் புதிய துண்டுகளை கட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு, 'உரிமா கட்டு' என்று பெயர்.
உறவை அடையாளப்படுத்தவும், அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வதாகவும் அந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.
மைத்துனர் முறை என்பதால், ஒவ்வொருவர் வாயிலும் எடக்கும், ஏடாகூடமான கேலியும் அந்த கிராமத்து உறவுகளின் சொற்களில் நிரம்பி வழிந்து, அந்த இடமே கலகலப்பாக இருந்தது.
அந்த நிலையிலும், விடாது கருப்பு என்பது போல், செந்துாரானின் பார்வை செங்கமலத்தை நோக்கியே இருந்தது.
'பாகப்பிரிவினைப் பற்றி எப்ப பேசப் போற?' என்ற கேள்வியும் அதில் தொக்கியிருப்பதை, அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
சடங்குகள் முடிந்ததும், உறவுகள் கிளம்ப முயன்றபோது, ''வந்தவங்க எல்லாரும் கை நனைச்சுட்டுப் போங்க; அப்படியேவா திரும்புவாங்க?'' என, தங்கள் வீடுகளுக்கு திரும்ப எத்தனித்த உறவுகளை வழிமறித்து, தடுத்து சொல்லிக் கொண்டிருந்தாள், செவ்வந்தி.
வந்திருந்தவர்கள் சாப்பாட்டிற்காக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த கூடத்தில் வந்தமர்ந்தனர்.
''இல்ல தாயீ... இதுக்கப்புறம் சொந்தக்காரங்களுக்குள்ள சொத்து பத்துன்னு, எதனாச்சும் லவ்வீகம் பேசுவீங்க... அந்த இடத்தில நாங்க எதுக்குன்னு தான்.''
''அட, நீங்க ஒண்ணு மாமா... ஒத்துமையான அண்ணன் - தம்பிக, ஓரகத்திகள்ன்னாலும் எங்களுக்குள்ள எந்த உரசலும் இல்லை; இனியும் வராது. ஒளிச்சு மறச்சு பேசுறதுக்கு என்ன இருக்கு?
''எங்களுக்கு இரண்டு; என் கொழுந்தனாருக்கு இரண்டு; இந்த நாலு பிள்ளைகளும் எங்க பிள்ளைகள் தான்,'' பெருந்தன்மையாய் சொன்னாள், செவ்வந்தி.
வாசல் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளில், செங்கமலத்தின் மகன் சின்னவன் விழுந்து, முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டதில், அவனது அழுகுரல் ஓங்கிக் கேட்டது.
ஆறு வயது நிரம்பியவனை, செவ்வந்தியின் எட்டு வயது மகள், தன் இடுப்பில் துாக்கி வைத்து, ''அழுவாதடா தம்பி... அக்கா ஊதி விடுதேன்; வலி போயிடும்,'' என, அவனது உடல் கனத்தை அந்த சின்னஞ் சிறுமியால் தாங்க முடியாது என்றாலும், எந்தவித முக வருத்தமும் இன்றி, துாக்கி சுமந்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.
''நாங்க பட்டணத்திலே இருப்பதால், வந்திருக்கும் உங்களைப் பற்றிய சரியான உறவு முறை எனக்கு சொல்ல தெரியல. அதனால, அப்பா ஸ்தானத்தில் வைத்து பேசுகிறேன்.
''பொதுவா இந்த நேரங்களில், இருக்கிற சொத்தை எப்படி பிரிப்பது... எது, எது யாருக்குன்னு தான் பேசுவாங்க... அந்த பிரிவினை, காலம் காலமா குடும்பமே பிரிந்து கிடக்கிற மாதிரியும் செஞ்சுரும்.
''பொதுவா, உடன்பிறந்த அண்ணன் - தம்பிகள வளர்ந்ததுக்கப்புறம், அண்ணன் தம்பிக என்கிற சொல் போயி, பங்காளிகள்னு தான் சொல்லுவாங்க... பாகப்பிரிவினைன்னு ஒண்ணு வந்ததுக்கப்புறம், அந்த பங்காளின்ற சொல் மறந்து, பகையாளி என்ற எண்ணம் தலை துாக்கிடும்.
''என் விருப்பம், யாரும் எங்களை பங்காளின்னும் சொல்ல வேண்டாம். எங்களுக்குள்ளயே நாங்க பகையாளியாகவும் ஒருத்தரை பார்க்க வேண்டாம் என்பது தான். என்னிக்கும் இந்த குடும்பம், எங்க குடும்பம் தான். நாங்க, அண்ணன் - தம்பி, அக்கா - தங்கச்சிங்கிற உறவாளிங்க தான்.
''ஊரிலிருந்து வரும்போது, இங்கே பாகப்பிரிவினை என்ற பேச்சு வந்தால், என் அத்தான்கிட்டயிருந்து ஒரே ஒரு ரூபாயை மட்டும் கேட்டு வாங்க வேண்டும். அது, இந்த சொத்துகளுக்கான பாகப்பிரிவினை நடந்ததற்கான அடையாளப் பணமாக இருக்கட்டும். அதுமட்டும் போதுமுன்னு சொல்ல நெனச்சேன். இப்ப, அதுவும் தப்புன்னு தெரிஞ்சுகிட்டேன்.
''பங்குக்குன்னு சொல்லி, ஒரு ரூபா வாங்கினா என்ன... ஒரு லட்சத்தை வாங்கினா என்ன... எல்லாம் பாகப்பிரிவினை தானே? எனக்கோ, என் கணவருக்கோ அப்படிப்பட்ட பிரிவினை தேவையில்லை.
''அதோ பாருங்க... பிள்ளை கீழ விழுந்திட்டான். அவனை துாக்கி சுமந்துகிட்டு நிக்கிறாளே, என் இன்னொரு பிள்ளை. இந்த அன்பும், பாசமும் தான் என்னிக்கும் வேண்டும்.
''பண்ட பாத்திரங்களை ஈசியா பங்கு வெச்சுரலாம். இதே மாதிரி பாசத்தை பங்கு வைக்கும் துணிவு, என்னிக்கும் எங்களுக்கு கிடையாது. ஆத்திர அவசரங்களுக்கு எங்களுக்குள்ள எதனாச்சும் தேவைன்னா, என் மச்சான் தந்து உதவுவாரு. அவருக்கு தேவைன்னா, நாங்க இருக்கோம்.
''நாங்க அங்க இருக்கோம். இவங்க இங்கே இருக்காங்க. அதனால, எங்களுக்குள்ள உரக்க பேசவோ, உரசல ஏற்படுத்தவோ எதுவும் இல்ல,'' என, செங்கமலம் பேசப் பேச, ஊரார் முகத்தில் ஆச்சர்யக்குறியும், செந்துாரானின் முகத்தில் தெரியும் ஏமாற்றத்தின் வடுக்களையும், அவள் கவனிக்க தவறவில்லை.
'ஊருக்கு திரும்பியதும், இரண்டொரு நாள் முகத்தை துாக்கி வைத்து, 'உர்'ரென்று திரிவான். தெரிந்தது தானே; இருக்கட்டும்.
'ஒரு பெண் என்ற அடிப்படையில், எத்தனையோ பிரச்னைகளை சமாளிக்கத் தெரிந்த எனக்கு, கணவனை சமாளிக்க முடியாமல் போய்விடுமா!
'என்ன தான் துள்ளிப் பார்த்தாலும், கட்டுக்கடங்காத காளை எங்கிருக்கு பார்த்துக்கலாம்...' என, தன் மனதுக்குள் அழுத்தமாகச் சொல்லிக் கொண்ட செங்கமலத்தின் முகத்தில், இளஞ்சிரிப்பொன்று பூத்தது.

ந. ஜெயபாலன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X