அதிமேதாவி அங்குராசு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
00:00

மகிழும் சொல் ரயில்!
வாகனங்கள் இல்லாத உலகை நினைத்து பார்க்க முடியாது.
வேகமான வாழ்வின் உயிர்நாடி, போக்குவரத்துக்கு பயன்படும் வாகனங்கள்.
தரைவழி போக்குவரத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது ரயில் தான். கார், பஸ் எல்லாம் பின்னால் வந்தவை. ரயில் இன்ஜின் கண்டுபிடிப்பதற்கு முன்பே தண்டவாளங்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன.
மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்தில், விறகும், நிலக்கரியும் முக்கிய எரிபொருட்கள். சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டி எடுத்து தொழிற்சாலைகளுக்கு அனுப்ப, இரும்பு தண்டவாளங்களை பயன்படுத்தினர்.
தண்டவாளத்தில் நிலக்கரி ஏற்றிய வேகன்களை பொருத்தி, குதிரைகள் உதவியுடன் இழுத்து சென்றனர்.
இந்த வேளையில் தான் குதிரைக்கு பதிலாக, நீராவி இன்ஜின் பிறப்பெடுத்தது.
நிலக்கரி சுரங்கம் மற்றும் தொழிற்சாலை முதலாளிகள் முன், முதல் நீராவி இன்ஜினை, கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்சன் ஓட்டினார். அது, 'குபுகுபு' என புகையை கக்கியபடி மணிக்கு, 47 கி.மீ., வேகத்தில் தண்டவாளத்தில் ஓடியது.
உடனடியாக இதுபோல், எட்டு இன்ஜின்கள் தயாரிக்க, ஆர்டர் கிடைத்தது. இரவு- பகல் கண் விழித்து, கடுமையாக உழைத்து, அவற்றை உருவாக்கினார் ஸ்டீவன்சன்.
அவை, ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, மான்செஸ்டர் நகரில் இருந்து, லிவர்பூல் நகருக்கு முதன்முதலாக, செப்.,15, 1830ல் வெள்ளோட்டம் விடப்பட்டன.
குதிரை வீரன் ஒருவன் கொடி தாங்கி, ரயில் பாதையில் யாரும் குறுக்கிடாமல் எச்சரித்தபடி முன் செல்ல, பின்னால், ஐந்து நீராவி இன்ஜின்களின் வெள்ளோட்டம் நடந்தது. இதை, 50 ஆயிரம் பேர் ஆர்வமுடன் பார்த்தனர்.
இந்த வெள்ளோட்டத்தில் ஒரு சோகம் நடந்தது. அந்த இன்ஜினை கண்டுபிடிக்க துணையாக இருந்தவர் ஜார்ஜ் ஸ்டீவன்சனின் நண்பர் ஹஸ்கிசன். இவர் வெள்ளோட்டம் போன இன்ஜின் ஒன்றில் இருந்து இறங்க முற்பட்டார்; எதிர்பாராத விதமாக அது மோதி, பரிதாபமாக உயிரிழந்தார்.
ரயில் என்பது மகிழும் சொற்களில் ஒன்றாக இன்று உள்ளது.

பிரகாசிக்கும் விண்மீன்!
பழங்காலத்தில் அறிவியல் மீது நம்பிக்கை கொஞ்சமும் கிடையாது. மூட நம்பிக்கை, அதிகாரம், மதம் என தடைகளே தாண்டவமாடின. அந்த காலத்தில் விண்வெளியை ஆராய்ந்து, விடியலை ஏற்படுத்தினார் அறிவியல் அறிஞர் கலீலியோ கலிலி.
ஐரோப்பிய நாடான இத்தாலி பைசா நகரில், பிப்., 15, 1564ல் பிறந்தார் கலீலியோ. இத்தாலி, புளோரன்ஸ் நகரில் குருகுல வழியில் கல்வி பயின்றார். கல்லுாரி படிப்பை பைசாநகர் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
கல்லுாரி படிப்பின் போது, தொலைநோக்கி ஒன்றை வடிவமைத்தார். அதை பயன்படுத்தி வானத்தை ஆராய்ந்து, வியப்பான செய்திகளை தெரிவித்தார். வானில் கண்ட ஆச்சர்ய காட்சிகள், விண்வெளியை உற்று நோக்க துாண்டின. அதன்படி முயன்று, பல உண்மைகளை கண்டறிந்தார்.
நிலாவில், மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் கண்டார். அத்துடன், கோள்கள் சுற்றிக் கொண்டிருப்பதையும், பூமி, சூரியனை சுற்றி வருவதையும் கண்டறிந்தார்.
அதுவரை, 'எல்லாமே, பூமியை சுற்றுகின்றன' என நம்பியது உலகம். மத சார்புள்ளவர்களும் இந்த கருத்தையே பரப்பினர். இதற்கு மாறாக புத்தகம் எழுதி வெளியிட்டார் கலீலியோ.
இது, மதத் தலைவர்களுக்கு கோபத்தை வரவழைத்தது.
கத்தோலிக் திருச்சபை அவரை விசாரித்தது. மத நம்பிக்கைகளுக்கு, விரோதமாக பேசுவதாக குற்றம் சாட்டி, 'எல்லாமே பூமியை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன; பூமியே நிலையானது' என, ஏற்க கட்டாயப்படுத்தியது. அதற்கு மறுத்ததால், வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
ஊசல் விதி, அலைக்கோட்பாடு, சூரியமைய கோட்பாடு, வியாழன் கிரகத்தின் நான்கு துணைக் கோள்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்தார் கலீலியோ. அவரது ஆராய்ச்சியை பின்தொடர்ந்து, பல உண்மைகளை அறிந்தனர் பின் தோன்றிய அறிஞர்கள்.
விண்வெளி அறிவியலில் என்றும் பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்குகிறார் கலீலியோ.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X