* வி. பாஸ்கர், பாபநாசம், நெல்லை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமா, 73 சதவீதம் சொத்து சேர்த்து விட்டாராமே...
விபரம் தெரியாத அமைச்சராக இருந்திருக்கிறார்... அமைச்சராக இருக்கும்போதே, 300 சதவீதம் அல்லவா சேர்த்திருக்க வேண்டும்!
கோ. குப்புசாமி, சங்கராபுரம்: நுாறு நாள் வேலை திட்டத்தால் என்ன பயன்?
அந்த திட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், மரத்தடியில் நன்கு ஓய்வு எடுப்பது தான் பலன்; ஒரு வேலையும் செய்வதில்லை... விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை! வீணாய்ப் போன திட்டம்!
எஸ். சங்கீதா, குஞ்சன்விளை, கன்னியாகுமரி: என் தோழி என்னை நேசிக்கிறாள். அதை, எப்படி எடுத்துக் கொள்வது?
பிறரால் நேசிக்கப்படுவது, வாழ்வின் மாபெரும் மகிழ்ச்சி!
நெல்லை குரலோன், சென்னை: பத்திரிகைகளில், 'இம்பிரின்ட்' என்றால் என்ன?
ஒவ்வொரு நாளிதழ்களிலும், ஏதாவது ஒரு பக்கத்தின் கீழ்புறம், அப்பத்திரிகையை வெளியிடுபவர், அச்சிடுபவர், அச்சகம், ஆசிரியர் பெயருடன், அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டிருக்கும்; இதுவே, ஆங்கிலத்தில், 'இம்பிரின்ட்' என்று அழைக்கப்படுகிறது!
கே. கோபாலன், சென்னை: நண்பர்கள் பலர், என்னைப் புகழ்கின்றனரே... நான் என்ன செய்ய...
அவர்களுக்கு வேண்டிய மற்றும் ஆகக் கூடிய காரியங்கள் உங்களால் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் போலும்; உஷாராக இருங்கள்!
* ஆர். ராஜகோபால், துாத்துக்குடி: அந்துமணி... என் வயது 55... அரசு பணியில் இருக்கிறேன்! 'ரிட்டயர்' ஆகாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். என்ன செய்ய வேண்டும்?
உடனே, சினிமா நடிகர் ஆகி விடுங்கள் அல்லது அரசியல் கட்சியில் சேர்ந்து விடுங்கள். இந்த இரண்டு துறைகளில் மட்டுமே, 'ரிட்டயர்மென்ட்' கிடையாது!
எஸ். மோகன், சிவகாசி: நதி நீர் இணைப்பு சாத்தியமா?
சாத்தியமே... மத்திய அரசு மனது வைத்தால்!
கு. அருணாச்சலம், தென்காசி:அடுத்த ஆண்டாவது, தமிழகத்தில், 'நீட்' தேர்வு ரத்தாகுமா?
ஏன் நீங்கள், 'நீட்' தேர்வு எழுதப் போகிறீர்களா? உங்களுக்கு இப்போது, 60 வயதிற்கு மேல் இருக்கும்... உங்களது, 80வது வயதில், திறமையான டாக்டர்களின் சிகிச்சை வேண்டாமா? அதற்காகத் தான், 'நீட்' தேர்வு!