உயிரோடு உறவாடு.. (28) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
உயிரோடு உறவாடு.. (28)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2021
00:00

முன்கதை சுருக்கம்: 'வாட்ஸ் - ஆப்'பில் வந்த மிரட்டல் மற்றும் புகைப்படங்களை பார்த்த மைத்ரேயி, இந்த பிரச்னையை தான் சரி செய்வதாக, ரிஷியிடம் கூறினாள். தமிழ்ச்செல்வியின் திருமணத்திற்கு மதுரை செல்ல, மாமா, மாமி, ரிஷி மற்றும் தனக்கு விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் அறையை, 'புக்' செய்ய முனைந்தாள்-

மதுரை விமான நிலையம்!
ரிஷி, மைத்ரேயி, மாமி மற்றும் மாமா என்று, நால்வரும் ஆளுக்கொரு ரோலர் சூட்கேசை உருட்டியபடி வெளியே வந்தபோது, ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது, ரிஷிக்கு.
வெளியே, 'இன்னோவா' காருடன், மாப்பிள்ளை சுகுமாரே காத்துக் கொண்டிருந்தான். அதே வேகத்தில் மற்ற மூவரையும் வரவேற்றவன், மைத்ரேயியிடம் மிக மரியாதையான ஒரு உடல் மொழியை காட்டி, ''நீங்க எல்லாரும், என் கல்யாணத்துக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம்,'' என்றான்.
ரிஷிக்குள் ஒரே மாயத் தட்டாமாலை!
ஐந்தாறு நாட்களாக நடக்கிற எல்லாமே நேர் மாறாகவே இருக்கிறது.
'பத்து லட்ச ரூபாய் பணத்துடன் வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று மிரட்டிய, முனிராஜிடமிருந்து அதன்பின் ஒரு மிரட்டலும் இல்லை. முனிராஜை பயன்படுத்தி, ஜனா தான் மிரட்டினார் என்பதால், ஜனாவிடமிருந்தும் எந்த மிரட்டலும் இல்லை என்று சொல்லலாம்.
மைத்ரேயி என்ன செய்தாளோ?
ஆனால், நடப்பதெல்லாம் நல்லதாகவே உள்ளது.
உச்சபட்சமாய் இங்கே சுகுமாரே ஏர்போர்ட்டுக்கு வந்திருப்பது தான் பெரிய ஆச்சரியம்.
காரில் அவன் முன் சீட்டில் அமர்ந்துகொள்ள, பின்னால் நான்கு பேரும் அடங்கினர். கார் புறப்பட்டது. காருக்குள் உற்சாகமாய் பேசினான், சுகுமார்.
''மைத்ரேயி மேடம், நீங்க திரும்பி ஏர்போர்ட் வர்ற வரை, இந்த கார் டிரைவரும் உங்க கூடவே இருப்பார். நீங்க, எங்க போகணும்னாலும் போகலாம். இவர் லோக்கல் டிரைவர்ங்கிறதால, இவருக்கு எல்லா இடங்களும் அத்துபடி.
''மீனாட்சியம்மன் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், நாயக்கர் மகால் இப்படி, நீங்க எங்க வேணா போகலாம். இவரே கூட்டிகிட்டு போயிடுவார்,'' என்று அவன் பேசப் பேச, ரிஷிக்கு நடப்பது கனவா, இல்லை நிஜம் தானா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
''ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் சுகுமார்... ஏர்போர்ட்டுக்கு நீங்களே வருவீங்கன்னு, நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்கதான் கல்யாண மாப்பிள்ளை, எவ்வளவோ வேலை இருக்கும். எங்களுக்காக இப்படியா எல்லாத்தையும் விட்டுட்டு வரணுமா?'' என்றாள், மைத்ரேயி.
''இருக்கட்டுங்க... இதாங்க மரியாதை! உங்க அந்தஸ்துக்கும், செல்வாக்குக்கும் முன்னால இதெல்லாம் சாதாரணங்க. அப்புறம், ஒரு சந்தோஷமான விஷயங்க!''
''என்ன?''
''இப்பதான் சுஜித் சார் போன் பண்ணாரு; கல்யாணத்துக்கு அவரும் வர்றாராம். 'எனக்காக எந்த ஏற்பாடும் பண்ண வேண்டாம். முகூர்த்த நேரத்துல நான் மண மேடை முன்னால இருப்பே'ன்னு, அவர் சொல்லவும், அப்படியே எனக்கு மூச்சே நின்னு போச்சுங்க. எங்க சார்பா நீங்கதான் சாருக்கு பத்திரிகை கொடுத்தீங்கன்னும் சொன்னாரு... ரொம்ப தேங்க்ஸ்ங்க!''
சுகுமார் இப்படி சொல்லவும், ரிஷிக்கும் சில வினாடிகள் மூச்சு நின்று போனது. மைத்ரேயி, சுஜித்தை சந்தித்து பத்திரிகை கொடுத்ததெல்லாம் அவனுக்கே புதிய செய்தி. அவன் அதிர்வோடு மைத்ரேயியை பார்க்க, அவள் ஒரு மென் சிரிப்போடு பார்த்தாள்.
''ஆமாமா... சுஜித்குமார் ஆத்துக்கு என்னையும் கூட கூட்டிண்டு போனா, மைத்ரேயி... அங்க தமிழ்ச்செல்வியை, 'ஸ்கைப்'ல கூப்பிட்டு, அவ வாயாலயும் சுஜித் சாரை கூப்பிட வெச்சு அமர்க்களப்படுத்திட்டா. அப்ப, அங்க எங்களுக்கு சுஜித் சார் மனைவி வெச்சு கொடுத்த புடவையை தான், நான் இப்ப கட்டிண்டிருக்கேன்,'' என்று, தான் கட்டியிருக்கும் புடவையை தொட்டுக் காண்பித்தாள், மாமி.
உடனே, திரும்பி மாமியை ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்தான், ரிஷி.
''என்ன ரிஷி... எல்லாம், 'சஸ்பென்சா'வே இருக்கா உனக்கு?''
''ஆமாம் மாமி... நீங்க சொல்லவே இல்லையே?''
''இதைவிட பெரிய, 'சஸ்பென்ஸ்'ல்லாம் இருக்கு... பார்க்கத்தானே போறே?'' என்று, அவன் காதோரம் அவனுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தாள், மாமி.
அதன்பின், ஹோட்டல் வந்து, அறைக்குள் அவர்கள் நுழைந்தனர். மாமா - மாமிக்கு ஒரு அறை. ரிஷி - மைத்ரேயிக்கு ஒரு அறை. ரிஷியின் அறைக்குள் மைத்ரேயி, தன் சூட்கேசுடன் நுழைந்து, கதவையும் தாழிட்டாள்.
''ஏய்... என்ன இது? நானும், அங்கிளும் இங்க இருக்கோம். நீயும், மாமியும் அந்த அறையில இருங்க,'' என்று படபடத்தான், ரிஷி.
''ஏன்... நானும், நீயும் இருக்கக் கூடாதா?'' கண்களை சிமிட்டியபடி கேட்டாள், மைத்ரேயி.
''மைத்ரேயி... என்ன இது? யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க!''
''இனிமே யாரும், எதையும் தப்பா நினைக்க மாட்டாங்க, ரிஷி. ஒரு பெரிய தப்பையே தாண்டியாச்சு. இதெல்லாம் ஒரு மேட்டரா?'' பொடி வைத்து பேசினாள், மைத்ரேயி.
''நானும் உன்கிட்ட கேட்டுகிட்டே இருக்கேன், அப்படி என்ன செய்தே... எப்படி இப்படி எல்லாம் நல்லா நடந்துகிட்டு இருக்கு? எனக்கு பெரிய ஆச்சரியமே, சுகுமார் ஏர்போர்ட்டுக்கு நேர்லயே வந்தது தான்,'' என்றான்.
''அது மட்டுமில்ல, இனி, தமிழ்ச்செல்வியோட கேரியர்லயும் தலையிட மாட்டார், சுகுமார். தமிழ், தன் ராஜினாமா கடிதத்தை திருப்பி வாங்கிகிட்டு வேலைல தொடரப் போறா,'' என்றாள், மைத்ரேயி.
''என்ன மைத்ரேயி சொல்றே... இதெல்லாம் எப்படி உனக்கு சாத்தியமாச்சு. முனிராஜுக்கு அவன் கேட்ட பணத்தை கொடுத்து, அவனை, 'ஆப்' பண்ணிட்டியா? இந்த சுகுமார்கிட்டயும் அப்படி என்ன சொன்னே... உங்க செல்வாக்கு அந்தஸ்துன்னு ஒரேயடியா பொங்கி வழியறான்?''
ரிஷியை சற்று கோபமாய் பார்த்தாள், மைத்ரேயி.
''என்னப்பா... நான் எதாவது தப்பா கேட்டுட்டேனா?'' மென்குரலில் திருப்பிக் கேட்டான்.
''பணத்தை கொடுத்து, முனிராஜை, 'ஆப்' பண்ணியான்னு கேட்டியே... இப்படி நீ கேட்கலாமா?''
''அப்ப என்னதான் செய்தே... போலீசுக்கு கீலீசுக்கு போய்...''
''அப்படி போயிட்டா பயப்படறவங்களா அவங்க?''
''வேற என்னதான் செய்தே?''
''சொல்றேன்... எனக்கு ஒரு விஷயத்துல, மனசுல பெரிய நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைக்கு பேர் என்ன தெரியுமா?''
''நம்பிக்கைக்கு பேரா... என்ன சொல்ற நீ?''
''ஆமாம்... அந்த நம்பிக்கைக்கு பேர், சகுந்தலா! இவங்க யாரோ இல்ல. உன்னோட வில்லன் ஜனாவோட மனைவி. இவங்களுக்கு கல்யாண வயசுல ஒரு பொண்ணும் இருக்கா. அந்த பொண்ணு பேர், ப்ரியதர்ஷினி. இவளும் என்னோட இன்னொரு நம்பிக்கை.
''இந்த சகுந்தலாவுக்கும், ஜனாவுக்கும், அவங்க உனக்கு அனுப்பின மாதிரியே ஒரு, 'மார்பிங்' புகைப்படத்தை அனுப்பி வெச்சேன். அதுல நீயும், அந்த ப்ரியதர்ஷினியும் தான் அரை நிர்வாணமா இருந்தீங்க!''
''வாட்?'' ரிஷிக்கு கண்கள் தெறித்து விடும் அளவு விரிந்தது.
''அலறாதே... எல்லாமே போலி... 'போட்டோ ஷாப்' பித்தலாட்டம். என்ன செய்ய, வைரத்தை வைரத்தால தானே அறுக்க முடியும்? உன் படத்தை எவன், 'போட்டோ ஷாப்'ல தலையை மாத்தி வெச்சு கைவரிசையை காமிச்சானோ, அவனையே நேர்ல போய் பிடிச்சேன். அவன், நான் வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை.
''என்னையும் தான் இந்த மாதிரி வதைச்சிருக்காங்களே... அந்த அனுபவம் என்னை இங்கெல்லாம் தைரியமா நடக்க வெச்சுது. 'போட்டோ ஷாப்'ல கூலிக்கு மாரடிச்சவன் முன், நான் போய் நிற்கவும், என் கால்லயே விழுந்துட்டான்.
''அப்புறமா அவனை வெச்சே, ஜனாவோட மகளையும், உன்னையும் இணைச்சு, அவங்களுக்கு அனுப்பின புகைப்படம், ஜனா குடும்பத்துல ஒரு புயலையே உருவாக்கிச்சு. கச்சிதமா ஜனா வீட்டுக்கே போய், அவர் மனைவி முன்னால நின்னு, நடந்ததை எல்லாம் சொன்னேன்.
''உங்களுக்கு அனுப்பினதை பார்த்து, 'உங்களுக்கு வலிச்ச மாதிரிதானே ரிஷிக்கும், தமிழ்ச்செல்விக்கும் இருந்திருக்கும்'ன்னு கேட்டேன். இங்கெல்லாம் என் கூட மாமியையும் கூட்டிகிட்டு போனேன்.
''அந்தம்மா, அதாவது, ஜனா மனைவி, என் எதிர்லயே அவர் முகத்துல காரி துப்பி, 'நீயெல்லாம் ஒரு மனுஷனா'ன்னு கேட்டாங்க. இதுக்கப்புறமும் ஜனா திருந்தலேன்னா, அவங்க விட்டுடுவாங்களா என்ன?
''நான் ஒரு எச்சரிக்கையை மட்டும் செய்தேன். நீ விளையாடுற அதே விளையாட்டை நானும் ஆடினா, நீ தாங்க மாட்டேன்னேன்... ஜனா, அங்கேயே என் கால்ல விழுந்துட்டாரு!''
அதோடு நிறுத்தி, அருகிலிருந்த வாட்டர் ஜக்கிலிருந்து தண்ணீரை சரித்து குடித்தாள், மைத்ரேயி.
உறைந்து போயிருந்தான், ரிஷி. அவனிடம் பேச்சே இல்லை. அவனுக்குள், மைத்ரேயி விஸ்வரூபம் எடுத்திருந்தாள்.
'என்ன பெண் இவள்... எவ்வளவு தைரியம்... எத்தனை தெளிவு...'
அவளையே பார்த்தபடி இருந்தான், ரிஷி.
அவளே அவனை கலைக்கலானாள்.
''என்ன ரிஷி... ஏதோ சீரியல் பார்க்கற மாதிரி இருக்குதா... நான் சொன்ன அவ்வளவும் சத்தியம். எனக்கு வேற வழியும் தெரியல... ஐ ஆம் சாரி!''
அவனும் கலைந்தான்.
''இல்ல மைத்ரேயி... எல்லாம் சரி, ஆனா, ஜனா சார் பொண்ணை என்னோட, 'லிங்க்' பண்ணி... ச்சே... என்னால ஜீரணிக்கவே முடியல, மைத்ரேயி. இது... ஒரு நாய் நம்மள கடிச்சா, அதை பதிலுக்கு திருப்பி கடிப்போமா? நீயே சொல்லு,'' என்று சற்று சினந்தான்.
''கடிக்கணும் ரிஷி, இனிமே கடிக்கணும். காலம் மாறிப் போச்சு. இந்த மாதிரி பழமொழியை நினைக்கக் கூட கூடாது. ஒரு வாழ்க்கை தான்... அதுல எல்லாமே ஒரு தடவை தான்... அதை அரக்கத்தனங்களால மட்டும் இழந்துடவே கூடாது,'' என்று அசராமல் பதிலளித்தாள், மைத்ரேயி.
''சரி... இங்க சுகுமார் எப்படி இப்படி மாறினாரு?''
''அதை மட்டும், நான் கல்யாணம் முடிஞ்ச பிறகு சொல்றேனே.''
''ஏன்... இப்ப சொன்னா, என்னாயிடும்?''
''ப்ளீஸ்... கல்யாணம் முடியட்டுமே?'' திரும்பவும் இழுத்தாள்.
அவனும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை.
கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. நல்ல கூட்டம். சொன்னபடியே கச்சிதமாய் சுஜித்குமாரும் முகூர்த்த வேளையில் ஆஜராகவும், ஒரே பரபரப்பு.
சுஜித், மனைவியோடு வந்தது மட்டுமின்றி, ஒரு மணி நேரத்துக்கு மேல் மண்டபத்தில் இருந்து, எல்லாருடனும் புகைப்படங்கள் எடுத்து, அமர்க்களப்படுத்தி விட்டார். மேடையில், 'மைக்' முன்னால் பேசவும் செய்தார்.
அப்போது, 'ரிஷி விரைவில் இயக்குனராவார். அவர் படத்தில் நானே கதாநாயகனாகவும் நடிப்பேன்...' என்று சொன்னது தான், உச்சக்கட்டம்!
ரிஷிக்கு, கண்கள் பனித்து விட்டது. மண மேடையில் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வியும் பனித்த விழிகளுடன் ரிஷியை பார்த்து, கட்டை விரலைக் காட்டி, 'ஆல் த பெஸ்ட்' என்று சொல்லாமல் சொன்னாள். அவள் சொல்வதைப் பார்த்து, மாப்பிள்ளை சுகுமாரும் சொன்னான்.
அப்படியே ஆகாயத்தில் மிதக்கலானான், ரிஷி. அவன் வாழ்வில் எவ்வளவோ திருப்பங்கள்... இது, திருப்பங்களுக்கே திருப்பமாகி விட்டது.
எல்லாமே கனவாகி விடுமோ என்று சற்று பயப்படக்கூட செய்து கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
விருந்து சாப்பாடு, கோவில் குளம் என்றெல்லாம் சுற்றி, சென்னை செல்வதற்காக திரும்ப ஏர்போர்ட்டுக்கு வந்து விமானத்திற்காக காத்திருந்தனர். அப்போது தான், மைத்ரேயி கல்யாணத்திற்கு பிறகு சொல்வதாக சொன்ன அந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.
அவளோடு சற்று தனியே ஒதுங்கியவன், ''மைத்ரேயி... கல்யாணம் முடிஞ்சிடிச்சு. இப்ப சொல்லு, சுகுமாரை எப்படி சமாளிச்சே... அவர் எப்படி இவ்வளவு, 'ஸ்மூத்'தா மாறினாரு?''
கேள்வி கேட்ட ரிஷி முன் மைத்ரேயி, முதல் தடவையாக அவன் உணரும்படியாக, சற்று வெட்கமுடன் அவனைப் பார்த்தாள்.
''வெட்கப்படறியா?''
''ம்!''
''நீயா... நம்ப முடியல.''
''இது நிஜம் ரிஷி... நடிப்பில்ல.''
''என் கேள்விக்கு, முதல்ல பதில் சொல்... அப்படி என்ன சொன்னே?''
''சொன்னா என்ன தப்பா நினைக்க மாட்டியே.''
''நீ முதல்ல சொல்... அப்புறம் அது தப்பா, சரியான்னு நான் யோசிக்கறேன்.''
''இல்ல... அது ஒரு பொய்யின்னு கூட வெச்சுக்கயேன்.''
''நீ முதல்ல சொல்லு.''
''அது வந்து...''
''இப்ப சொல்லப் போறியா இல்லையா?''
''ஒண்ணுமில்ல... நாம ரெண்டு பேரும் பல வருஷமா காதலிக்கறதா சொன்னேன். கூடிய சீக்கிரம் கல்யாணம்ன்னும் சொன்னேன். அப்படியே, ஜனா ஒரு, 'ப்ராடு'ங்கறதையும் புரிய வெச்சேன்.''
தயக்கமாய் மென்று மென்று தான் துப்பினாள், மைத்ரேயி. ஆனால், ரிஷி துளி கூட தாமதிக்கவில்லை. அது விமான நிலையம் என்பதையும் மறந்து, அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
மாமியும் - மாமாவும் அந்த காட்சியை பார்த்து, தங்கள் கண்களில் திரண்ட ஆனந்தக் கண்ணீரை சுண்டி விட்டுக் கொண்டனர்.
உயிர்கள் உறவாகி உறவாடத் துவங்கி விட்டன!
-— முற்றும் —
இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய, 'உயிரோடு உறவாடு!' தொடரை, தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தார், புத்தகமாக வெளியிட்டுள்ளனர். புத்தகம் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய, டோல் ப்ரீ எண்: 1800 425 7700

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X