அன்புள்ள சகோதரி -
வயது: 65. ஓய்வு பெற்ற தலைமையாசிரியை. கடந்த, 30 ஆண்டுகளாக கதை, கவிதை மற்றும் தன்னம்பிக்கை கட்டுரைகளும் எழுதி வருகிறேன். என் கணவர், ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. வயது: 70.
எங்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி, கணவர் - குழந்தைகளுடன் ஹரியானா மற்றும் புனேயில் வசிக்கின்றனர். எனக்கு, பழைய தமிழ் பாடல்களும், சிவாஜி கணேசன் படங்களும் மிக பிடிக்கும்.
கடந்த ஆறு ஆண்டுகளாக முகநுாலில் இருக்கிறேன். முகநுால் மூலமாக எனக்கு, 5,000 தோழர் - தோழியர் இருக்கின்றனர். ஒரு நாளில் குறைந்தபட்சம், 10 பதிவுகளையாவது போட்டு விடுவேன்.
ஒரு நாளைக்கு ஒரு சிறுகதை வீதம், 100 நாளைக்கு, 100 கதைகள் போட்டேன். தினம், மதுரை மண் மணக்கும் சமையல் குறிப்பு மற்றும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கட்டுரை போட்டேன். தினம் ஒரு ஹைக்கூ கவிதை எழுதினேன்.
முதல், 'லைக்' கணவரிடமிருந்து வரும். அதையடுத்து இரு, 'லைக்'குகள், மகள்களிடமிருந்து வரும். ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்தபட்சம், 500 'லைக்'குகள் கட்டாயம் கிடைக்கும்.
'செட்டிநாட்டு சிக்கன் குழம்பு சமையல் குறிப்பு பிரமாதம். கருவாட்டுக் குழம்பு ரெசிபி பற்றி எழுதுங்கள் அம்மா!'
'அக்கா! 'டீனேஜ்' பெண்களுக்கு நீங்கள் கூறிய அறிவுரை சூப்பர். ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய அற்புத பதிவு உங்களுடையது... எப்படி அக்கா அறிவுரைகளை பூப்போல சொல்கிறீர்கள்?'
'தோழி! உங்கள் கதைகளை படிக்கும்போது, அமரர் லட்சுமி ஞாபகத்துக்கு வருகிறார். கன்கிராட்ஸ்!'
'தங்கச்சி! உன் 'ஹைக்கூ'களை படிக்கும்போது, என் நெஞ்சில் பட்டாம்பூச்சி பறக்கிறது...'
- இப்படி, 'கமென்ட்'டுகள் குவியும். இத்தனை பாராட்டுகளுக்கு நடுவே திருஷ்டி பொட்டாய் என் உடன்பிறந்த அண்ணனின், 'கமென்ட்' காணக் கிடைக்கும். அவர், இஸ்ரோவில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். என்னை விட இரண்டு வயது மூத்தவர். கேரளாவில் வசிக்கிறார்.
அவரின் சில. 'கமென்ட்'கள்...
'யாரார் கதை எழுதுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா... கதையா எழுதுகிறாய் குப்பை; அட்வைஸ் அம்புஜமா நீ, வளவளா கொழகொழ என்று அறிவுரைகளை அள்ளி கொட்டுற... அறிவுரை சொல்றதுக்கு ஒரு தகுதி வேணும்... அது உன்கிட்ட இல்ல...'
'ஏற்கனவே தின்னி பண்டாரங்களாக இருக்கும் மக்களை, சமையல் குறிப்பு எழுதி கெடுக்கறியா... ஸ்கூல் டீச்சரா இருந்ததுக்கு பதில் நீ, ஒரு ஹோட்டல் நடத்தியிருக்கலாம்...'
'நீ எழுதுறது கவிதையா, 'ட்ராஷ்!' முகநுாலை கெடுத்து குட்டி சுவராக்கணும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கியா... எல்லாம் அந்த மார்க்கு பயலை உதைக்கணும்...'
இன்னும் பலவிதமான அவதுாறு, 'கமென்ட்'டுகளை எழுதுவார். 'இன் பாக்ஸ்'ல் எழுதினாலாவது பரவாயில்லை, பொதுவில் எழுதுகிறார். உண்மையில் என் எழுத்தில், குற்றம் குறை இருந்தால், போனில் சொல்லலாமே... இத்தனைக்கும் எங்கள் வீட்டுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, நமட்டுச் சிரிப்புடன் வருவார். முகநுால், 'கமென்ட்' பற்றி மூச்சு விடமாட்டார். விருந்து சாப்பாட்டை ஒருகட்டு கட்டி, கிளம்பி விடுவார்.
சிறு வயதில் பாசமாக இருந்த அண்ணன் இப்போது ஏன் மாறிப் போனான்... அவன், 'கமென்ட்'டுகளை படித்துவிட்டு அழுகிறேன். கணவரும், தொலைவிலிருந்து மகள்களும் என்னை தேற்றுகின்றனர். அண்ணன் விஷயத்தை எப்படி கையாள்வது சகோதரி?
-இப்படிக்கு,
அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு -
சிறு வயதில், அண்ணன் - தங்கை உறவுக்கு இடையில், படிப்பு, பதவி, அதிகாரம் எதுவும், உங்களிருவரையும் இருவேறு உலகங்களாக பிரிக்கவில்லை. வெறும் இன்னாருடைய மகளாக நீங்களும், இன்னாருடைய மகனாக உங்கள் அண்ணனும் இருந்திருப்பீர்கள்.
'ஈகோ' இல்லாத பாசம், உங்களுக்குள் பெருகி ஓடியிருக்கும். ஆனால், உங்களது திருமண வாழ்க்கை, வெவ்வேறு திசையில் பிரித்து விட்டது.
உங்களுக்கு வயது: 65, அண்ணனுக்கு வயது: 67 என்றாலும், அண்ணன் தன்னை, எட்டு வயது சிறுவனாகவும், உங்களை ஆறு வயது சிறுமியாகவும் பாவிக்கிறார். படித்ததையோ ஆசிரியை பணிக்கு போனதையோ, திருமணமாகி இரண்டு மகள்களை பெற்றதையோ மிகப்பெரிய எழுத்தாளராக திகழ்வதையோ, அவர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. இது எல்லாவற்றுக்கும் மேலாக, ஆணாதிக்க திமிர் அவருக்கு.
முகநுாலில் வசைபாடும் அவர், நேரில் மவுனமாக இருக்கிறார். 'உன் முகநுால் கருத்துகளுக்கு மட்டுமே நான் எதிரி. அண்ணனாக நான், உன் வீட்டுக்கு வந்தால், தங்கையாக என்னை, நீ உபசரிக்க வேண்டும். அதுவேறு இது வேறு...' என, தன் துர்நடத்தைக்கு சப்பை கட்டு கட்டுகிறார்.
சிறுகதையை வாசிக்கும் சுகானுபவம் இருந்தால்தான், எழுத்தாளரை மதிக்கத் தோன்றும். வாசிக்கும் பழக்கம் இல்லாதவருக்கு, எழுத்தாளர் ஒரு காயலான் கடை பொருள்.
அறிவுரையை சொல்லும் விதமாய் சொன்னால், இளைய தலைமுறை அதை ஏற்று நடக்கும். அறிவுரைகளின் மீது உங்கள் அண்ணனுக்கு துளியும் நம்பிக்கை இல்லை போல் தோன்றுகிறது.
'முகநுாலில் எழுதுகிறாள், தங்கை. ஆயிரக்கணக்கானோர், 'லைக்' போடுகின்றனர், 'கமென்ட்' எழுதுகின்றனர். நம் பதிவுகளுக்கு, 10 'லைக்' கூட விழமாட்டேங்கிறது...' என்ற பொறாமை அண்ணனுக்கு உள்ளது.
பேசாமல் உங்கள் அண்ணனை, 'ப்ளாக்' செய்து விடுங்கள். அவர் உங்கள் பதிவுகளையோ, நீங்கள் அவரின் மோசமான, 'கமென்ட்'களையோ பார்க்கும் தர்ம சங்கடம் வேண்டவே வேண்டாம். வீட்டுக்கு அண்ணன் வந்தால், முகநுால் பற்றி எதுவும் பேசாமல் நமட்டு சிரிப்பு சிரித்தபடி விருந்து பரிமாறுங்கள்.
தொடர்ந்து எழுதி, துாள் கிளப்புங்கள் சகோதரி, வாழ்த்துகள்!
— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.