வெற்றி நிச்சயம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2021
00:00

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

கவலையில் ஆழ்ந்திருந்தான், கலையரசன்.
இந்த ஆண்டாவது நாடகக் கலை விழாவில், தன் நாடகம் முதல் பரிசு பெறுமா?
கடந்த சில ஆண்டுகளாக தவறாமல் நாடகக் கலை விழாவின் போட்டிகளில் கலந்துகொண்டு, முதல் பரிசுக்காக காத்திருக்கிறான்.
சமூகம், சரித்திரம், குடும்பம் மற்றும் 'த்ரில்'லர் என்று, எல்லா வகைகளிலும் நாடகங்கள் போட்டுச் சலித்து விட்டான். வெற்றி தேவதை மட்டும் அருகில் வர மறுக்கிறாள்.
கடுமையாக உழைத்தான். தினம் தினம் ஒத்திகை. பின்னணி இசை, கொடுக்கப்பட வேண்டிய இடங்களில் சரியாக அவை இருக்கவேண்டும் என்பதற்காக, தனி ஒத்திகை. அனைவரும் வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற கட்டளை. எல்லாம் சரி... வெற்றி எங்கே? இந்த நேரத்தில் தான், கலையரசனின் நண்பன் குணா வந்தான்.
''கலை... இப்படி குருட்டுத்தனமா வேலை பார்க்காதே... அததுக்கு ஒரு வழி இருக்கு, மச்சி...''
''குறுக்கு வழி எனக்குப் பிடிக்காது.''
''நான் சொல்றது நேர் வழி. அதாவது, விளம்பரம். இந்தக் காலத்தில் விளம்பரம் தான் முக்கியம். சினிமா வெளியாகி மறுநாளே, 'வெற்றிகரமான இரண்டாவது வாரம்'ன்னு சொல்றாங்க; விளம்பரம் தர்றாங்க... 'டிவி'யிலே நாலு பேர் உக்காந்து அதைப்பத்திப் பேசறாங்க...''
''அதுக்கெல்லாம் என்னால முடியாதுப்பா.''
''உன்னைப் பத்தி நீயே சொல்லிக்கக் கூடாது; மத்தவங்க சொல்லணும்.''
''அதுக்கு என்ன பண்றது... நாடக வசனம் மாதிரி எழுதித் தர முடியுமா?''
''ஒண்ணும் பண்ண வேண்டாம்... உன் நாடகம் நடக்கற அன்னிக்கு, 40 பேரை பணம் கொடுத்து, நாடக அரங்குக்கு வரச் சொல்வோம்... காட்சிக்கு காட்சி, அவங்க கை தட்டணும். நடுவர்கள் அசந்துடுவாங்க... முதல் பரிசு உனக்கு தான்; வெற்றி நிச்சயம். இதை நான் பாத்துக்கறேன்; நாடகத்தை நீ பார்த்துக்கோ,'' என்று சொல்லி, போய் விட்டான், குணா.
ஒரு வேளை, குணா சொல்வது நிஜமோ? தகுதிகளை விட விளம்பரத்துக்கு தான் முக்கியத்துவமோ?
சரக்கு எப்படி இருந்தாலும் , சந்தைக்கு வந்துவிட்டால் விளம்பரம் தேவையோ?
மும்முரமாக தன் பணியில் ஈடுபட்டான், கலையரசன்.
அன்று -
நாடக விழாவின் கடைசி நாள். கலையரசன் நாடகம் அரங்கேறும் நாள்.
நாடகம் முடிந்தவுடன், அனைத்து நாடகங்களுக்கும் மதிப்பெண்கள் போட்ட நடுவர்கள் கலந்தாலோசித்து, ஒரு மணி நேரத்தில் முடிவுகளை அறிவிப்பர். போட்டியில் கலந்து கொண்ட நாடகக் குழு நண்பர்கள், ஆங்காங்கே கூட்டம் கூட்டடமாக காத்திருப்பர். கேன்டீனில், பஜ்ஜி, போண்டா வியாபாரம் களை கட்டும்.
கலையரசன் நாடகம் ஆரம்பமானது. ஆரம்பித்து முதல் காட்சி முடிந்ததுமே, ஏக கைத் தட்டல்கள்; பிரமித்துப் போனான். தொடர்ந்து கரவொலிகளால் அரங்கமே அதிர்ந்தது; உற்சாகமானான், கலையரசன்.
'குணா, தான் சொன்னதைச் செய்து காட்டி விட்டான். நன்றி நண்பா...' என, மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
நாடகம் முடிந்தது. கனவு கண்டபடி, நாடக அரங்கின் ஒரு ஓரமாக காத்திருந்தான்.
இப்போது, முடிவுகளை நீதிபதிகள் அறிவிப்பர் என, ஒலிபெருக்கியில் கூறினர்.
முதல் வரிசைக்கு ஓடினான், கலையரசன்.
'முதல் பரிசு, கலையரசனின், 'வெற்றி நிச்சயம்' என்ற நாடகம். நடுவர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் அறிவிக்கிறோம்...' என்றனர்.
'இது கனவல்ல நிஜம். எத்தனை நாளைய கனவு. குணா சொன்ன உத்தி புரியாமல் இத்தனை நாட்கள் இருந்து விட்டேனே...' என, நினைத்துக் கொண்டான்.
அனைவரும் கை தட்ட, பிரமிப்புடன் மேடை ஏறினான், கலையரசன்.
பரிசுக் கோப்பை, பொன்னாடைகளுடன், கண்களில் நீர் மல்க, கை தட்டலோடு, மேடையை விட்டு இறங்கியபோது, கலையரசனின் மொபைல் சிணுங்கியது.
குணா தான் அழைக்கிறான். வாழ்த்து சொல்லக் கூப்பிட்டிருப்பான்.
கலையரசன் பேசுவதற்குள், ''கலை, மன்னிச்சுடுடா... என் அம்மாவுக்கு உடம்பு உஷ்ணம் அதிகமாகி, நான் கிராமம் போய், 10 நாளாச்சு... ரொம்ப சீரியசாகி மருத்துவமனையில் சேர்த்தேன்.
''ஆஸ்பத்திரிக்கும், வீட்டுக்குமாக அல்லாடி, இப்பதான், 'டிஸ்சார்ஜ்' பண்ணினாங்க. உன் நாடகம் என்னிக்கு, கவலைப்படாதே அடுத்த ஆண்டு பார்த்துக்கலாம்...'' என்றான், குணா.
பிரமித்தான், கலையரசன்.
'எனக்கு கிடைத்த வெற்றி, உண்மையான வெற்றி. கிடைத்த கை தட்டல்கள், என் திறமைக்காக கொடுக்கப்பட்ட உண்மையான அங்கீகாரங்கள்.
'உண்மையான உழைப்பிற்கும், ஈடுபாட்டிற்கும் வெற்றி நிச்சயம். பயிற்சியும், முயற்சியும் இருந்தால், வெற்றிக் கோப்பை நம் வசம். குறுக்கு வழிகள் தேவையில்லை. வியர்வைக் குளியலில் தான் வெற்றி வசப்படும்.
'முயற்சி தோற்கலாம். ஆனால், முயலாமல் தோற்றுவிடக் கூடாது. புரிகிறது, வெற்றிக்கு வெறும் விரல்கள் போதாது; உழைப்பு என்ற ரேகைகள் தேவை...' என, நினைத்தபடி, பெருமிதத்துடன் கையிலிருந்த வெற்றிக் கோப்பையை முத்தமிட்டான். 'ப்ளாஷ்' பளிச்சிடுகிறது. நாளை, நாளிதழ்களில் இந்தப் படம் வெளியாகும்.
வெற்றியின் உண்மை ரகசியத்தை குணாவும் புரிந்துகொள்வான்.

மோகனப்ரியா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahalingam - கூடுவாஞ்சேரி 603202,இந்தியா
20-செப்-202109:12:15 IST Report Abuse
mahalingam வெற்றிக்கு தேவை உழைப்பும் முயற்சியும்தான் என்பதை மனதில் பதியும்படி சொல்லியுள்ளார் மோகனப்பிரியா. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X