துாக்கத்திலிருந்து விழித்தார், சண்முகம். மணி, 5:00. இருட்டு இன்னும் விலகவில்லை. துாக்கத்தில் மறந்திருந்த வேதனைகள், விடிந்ததும், அவர் நினைவில் வந்தது. இறந்த மனைவியை நினைத்தது, மனம். மனைவி இருந்த வரை, ராஜ வாழ்க்கை வாழ்ந்திருப்பது, அவள் போன பின் தான் தெரிகிறது.
தேவையறிந்து காபி, சாப்பாடு என, அவருக்குப் பிடித்த மாதிரி நேரத்துக்கு வரும். எப்போதும் அவரருகில் இருந்து எதையாவது பேசி, அவர் பொழுதுகளை நிறைவு செய்வாள்.
பெருமூச்சு அவரிடம் வெளிப்பட்டது.
இப்போது அவர் வாசம், மகன் வீட்டில். கடந்த ஆறு மாதங்களாக இங்கு தான் இருக்கிறார். மகன் வீட்டிலேயே அந்நியன் போல வாழ்ந்து வருவது அவருக்கு புரியவே செய்தது.
காலையில் காபி, வேலைக்காரி எடுத்து வந்து தருவாள். குழந்தைகள் ஸ்கூலுக்கு கிளம்ப, கணவன் ஆபீஸ் போன பின், 'டேபிளில் சாப்பாடு இருக்கு சாப்பிடுங்க...' ஒற்றை வரியில் சொல்லிச் சென்று விடுவாள், மருமகள்.
அதற்கு பின், அவர் குளித்து, சாப்பிட்டு, பொழுதைக் கழிக்க வெளியே எங்கேயாவது போய் வரும்போது, அவருக்கான மதிய சாப்பாடு தயாராக டேபிளில் இருக்கும்.
போனில் யாருடனாவது அரட்டையடித்தபடி இருப்பாள், மருமகள். அவர் கண்களில் பட்டால், 'சாப்பிட்டீங்களா மாமா...' ஒரு சின்ன விசாரிப்பு. இல்லாவிட்டால், அதுவும் இல்லை.
மாலை பிள்ளைகள் வீடு திரும்ப, மகன் வந்தவுடன், ஒரே கூச்சல் கும்மாளத்துடன் அவர்கள் பேசி, சிரிப்பது அறையில் இருக்கும் அவர் காதில் விழும்.
பேரப்பிள்ளைகள் எப்பவாவது அறைக்குள் தலையை நீட்டி, 'தாத்தா...' என்று கூப்பிட்டு செல்வர்.
'ஹோம் ஒர்க்' செய்ய, சாப்பிட என்று, அவர்கள் துாங்கிய பின், 'அப்பாவுக்கு சாப்பாடு வை... நாம் அப்புறம் சாப்பிடலாம்...' என, மகன் சொல்ல, இரவு சாப்பாடு மட்டும் பரிமாறுவாள், மருமகள்.
ஹாலில் உட்கார்ந்திருக்கும் மகனை, அவர், கடந்து செல்லும்போது ஒரு பார்வை பார்ப்பான். அவ்வளவு தான். பேச்சு குறைந்து விட்டது. எப்போதாவது அத்தி பூத்தாற்போல ஏதாவது பேசுவான்.
அவருக்கும் இந்த குடும்பத்துக்கும் தொடர்பு எதுவுமில்லை. வாழ்க்கையே வெறுமையாக தோன்றியது.
''ஹலோ சண்முகம், எப்படியிருக்கே?''
ஒரு ஆண்டுக்கு பின், நண்பன் வேதாசலம் குரல். அவர் கண்களில் கண்ணீர்.
''வேதா, எப்படி இருக்கே... ஒரு வருஷமா எங்கேப்பா போனே... உன் மொபைல்போனும், 'ஸ்விட்ச் ஆப்'பில் இருந்துச்சு. உனக்கு விஷயம் தெரியுமா, மனைவி என்னை விட்டு போயிட்டாப்பா... ஆறு மாசமாச்சு,'' என்றார்.
''என்னப்பா சொல்ற?''
''விதி... என்னை தனிமைப்படுத்திடுச்சு... இப்ப, ஆறு மாசமா மகன் வீட்டில் தான் இருக்கேன். வாழ்க்கையே வெறுத்துப் போச்சுப்பா... நீ எப்படியிருக்க?''
சிறிது மவுனத்திற்குப் பின், ''என்னால், பிள்ளை வீட்டில் சண்டை,
சச்சரவு... சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பிட்டேன். இப்ப, ஒரு வருஷமா காசியில், கடவுளைக் கும்பிட்டு, இங்க இருப்பவர்களோடு பொழுதுபோகுது. உன் நம்பர் மனப்பாடமாக தெரியும். ரொம்ப நாளாச்சேன்னு மனசு கேட்காமல், என்னோடு இருப்பவரிடம் மொபைல்-போன் வாங்கி, இப்ப உன்கிட்ட பேசறேன்.''
''என்னப்பா சொல்ற... வீட்டை விட்டு வந்துட்டியா... உன் மகன் தேடலையா?''
''அட போப்பா... அவங்க ஏன் என்னைத் தேடணும். நிம்மதியா இருக்கட்டும். இங்க பாரு சண்முகம், உனக்கும் இப்படியொரு எண்ணம் இருந்தால் சொல்லு... பிடிக்காத வாழ்க்கையை ஏன் கஷ்டப்பட்டு வாழணும்... புறப்பட்டு வந்துடு... நம் காலங்கள், இனி காசியில் போகட்டும். உசிர் இருக்கும் வரை, இப்படியே வாழ்ந்துடுவோம்.''
''வேதா... எனக்கும் இந்த வாழ்க்கையில் வெறுமை தான் தெரியுது. நீ சொல்றதைப் பார்த்தால், எனக்கும் உன்னைப் போல வீட்டை விட்டு புறப்படலாம்ன்னு தான் தோணுது. அப்படியொரு எண்ணம், என் மனதில் உறுதியானால், நிச்சயம் இந்த நம்பருக்கு போன் பண்ணிட்டு கிளம்பிடறேன்.''
''கட்டாயம் வா, சண்முகம். இங்கே நம்மை போல, மனசு வெறுத்து வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க.''
இரண்டு நாட்களாக, வேதாசலம் சொன்னதே மனதில் ஓடியது.
மகன் - மருமகள், முகம் கொடுத்து பேசுவதில்லை. எதற்கு இந்த வாழ்க்கை. அவர்களுக்கு பாரமில்லாமல் கிளம்பிடலாம்.
ஒரு சின்ன பையில், நாலு, 'செட்' துணிகளை எடுத்து வைத்தார். கையில், 4,000 ரூபாய் இருந்தது. போதும், புறப்பட்டு விடலாம்.
வேதாசலம் பேசிய அந்த நம்பருக்கு காலையில் போன் செய்து, மருமகள் துாங்கும் நேரத்தில், மதியம் புறப்பட்டு விடவேண்டும்.
'மனதில் நிம்மதி இல்லை. நான் போகிறேன். என்னைத் தேட வேண்டாம்...' ஒரு துண்டு சீட்டில் எழுதி வைத்து, கிளம்பி விடலாம்.
இரவு மணி, 9:00-
மகன் இன்னும் வரவில்லை என, மருமகள் கவலையுடன் வாசலுக்கும் உள்ளுக்கும் நடப்பதை பார்த்தார். இவருக்கும் துாக்கம் வரவில்லை. மகன் வந்தால் அவன் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்த்து விடலாம். அறையை விட்டு வெளியே வந்து, வாசலில் உட்கார்ந்தார்.
மணி, 10:00.
உள்ளே வந்தான், மகன். வாசலில் உட்கார்ந்திருந்த அப்பாவை பார்த்து, ''நீங்க இன்னும் துாங்கலையா-... ஏன் பனியில் உட்கார்ந்திருக்கீங்க... உள்ளே போங்க,'' என்றான்.
வேகமாக வெளியே வந்தாள், மருமகள்.
''என்னங்க, ஏன் இவ்வளவு லேட்... உங்க மொபைல்-போனும், 'ஸ்விட்ச் ஆப்'பில் இருந்துச்சு... என்னாச்சு?''
''உள்ளே வா சொல்றேன்.''
சண்முகம் எழுந்து, தன் அறைக்குள் நுழைய, மருமகளிடம், மகன் பேசுவது காதில் விழுந்தது.
''நான் இன்னைக்கு ஆபீஸ் போகும்போது, அருண்கிட்டேயிருந்து போன் வந்துச்சு... அப்படியே போயிட்டேன்.''
''ஏன்... ஏன்னாச்சு?''
''அவன் அப்பா, சொல்லாமல், கொள்ளாமல் வீட்டை விட்டு போயிட்டாராம்.''
''அட கடவுளே... அப்புறம்.''
காதை கூர்மையாக்கி, அவர்கள் பேசுவதைக் கேட்டார்.
''அப்புறம் என்ன... பதற்றமா போன் பண்ணினான். உடனே போனேன். இரண்டு பேரும் தேடாத இடம் இல்லை. தப்பா ஏதாவது முடிவுக்கு வந்திருப்பாரோன்னு பயம். காபி கூட குடிக்காமல், அவர் போற இடமெல்லாம் போய் தேடினோம்.
''கடைசியில், அவன் நாலு வருஷம் முன் குடியிருந்த பழைய வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில், இரவு, ௮:00 மணிக்கு பார்த்தோம்; வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டோம்,'' என்றான்.
''வீட்டை விட்டு போற அளவுக்கு என்னங்க பிரச்னை?''
''பிரச்னை என்ன வேணாலும் இருக்கட்டும். இந்த மனுஷனுக்கு அறிவு வேண்டாம். பிள்ளை மேல் கோபம், மனஸ்தாபம் இருந்தாலும், வீட்டை விட்டு போவது எவ்வளவு தப்பான விஷயம் தெரியுமா. இவ்வளவு துாரம் பிள்ளையை பெத்து, வளர்த்து ஆளாக்கி என்ன பிரயோசனம்.
''கடைசியில் தீராத பழியை அல்லவா பிள்ளைகள் தலையில் சுமத்திடறாங்க... 'உங்கப்பா வீட்டை விட்டு போயிட்டாரா'ன்னு... மத்தவங்க கேள்விக்கு பதில் சொல்றதை விட, 'ஐயோ, பெத்து வளர்த்தவரை, இப்படி தொலைச்சுட்டு நிற்கிறோமே... பிள்ளையிருந்தும் எங்கோ அனாதையா திரிஞ்சு உயிர்விட போறாரே'ன்னு, மனசு ஒவ்வொரு நொடியும் நினைக்கும்போது... அந்த வலி, மண்டையை போடற வரைக்கும் மறையாது.
''இது, ஏன் வயசானவங்களுக்கு புரிய மாட்டேங்குது... நம் வீட்டை எடுத்துக்க... நமக்கிருக்கிற நுாறு பிரச்னைகள், கஷ்டங்களை சமாளிக்கவே நேரம் சரியா இருக்கு. அப்பாகிட்ட நான் கூட சரியா பேசுறதில்லை. நம் கண் முன்னே நல்லபடியா நடமாடிட்டு இருக்காருன்னு நிம்மதியா இருக்கேன். அதுக்காக, நமக்கு அவர் மேல் அக்கறை இல்லைன்னு சொல்ல முடியுமா?
''அவங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டாங்க... இப்ப நம் பிரச்னைகளை நாம் சமாளிச்சு வாழ்ந்துட்டு இருக்கோம். அதை அவங்க புரிஞ்சுக்கணும். அருணுக்கு பிசினசில் சில ப்ராப்ளம், அந்த டென்ஷனில், அவர், டாக்டர்கிட்டே போகணும்ன்னு சொன்னதை காதில் வாங்காமல் அசட்டையா இருந்திருக்கான்.
''அதுக்காக, கோவிச்சுக்கிட்டு கிளம்பிட்டாரு. நல்லவேளை, கண்டுபிடிச்சுட்டோம்.
எனக்கே ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு... சரி, அப்பா சாப்பிட்டாரா... பிள்ளைகள் துாங்கியாச்சா?''
''சாப்பிட்டார்... நீங்க, ரொம்ப சோர்வாக இருக்கீங்க... கை, கால் அலம்பிட்டு வாங்க, சாப்பிடலாம்,'' என்றாள்.
அவள் உள்ளே போக, சண்முகம் படுத்திருக்கும் அறைக்குள் எட்டிப் பார்த்தான்.
''என்னப்பா... இன்னும் ஏன் கட்டிலில் உட்கார்ந்திருக்கீங்க... படுங்கப்பா... மணி, 11:00 ஆகப் போகுது.''
அவன் குரலில் தெரியும் அக்கறை... கண்களில் தெரியும் அன்பு... இந்த பாசம், அன்பும் உண்மை. அவர் மனம் நெகிழ்ந்தது. பையிலிருந்த துணிகளை எடுத்து
மீண்டும் அலமாரியில் வைத்தார்.
'கஷ்டமோ, நஷ்டமோ இருக்கும் வரை, இவர்களுடன் இருந்துவிட்டுப் போகிறேன். மகனுக்கு தீராத பழியை ஏற்படுத்தி தரமாட்டேன். கண் முன் என் உறவுகள் இருக்கின்றனர் என்ற நிம்மதி மட்டும் எனக்கு போதும்...' என்று, மனம் நினைக்க, இவ்வளவு நாள் மனதில் அழுத்திய பாரம் தொலைந்து போக... படுக்கையில் சாய்ந்தார், சண்முகம்.
பரிமளா ராஜேந்திரன்