நுரையீரல் மாற்றுக்கும் மாற்று தரும்! | நலம் | Health | tamil weekly supplements
நுரையீரல் மாற்றுக்கும் மாற்று தரும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
00:00

மற்ற வைரஸ் தொற்றுகளை விடவும் கொரோனா வைரஸ் தொற்று வேறுபட்டது. இது, நுரையீரலில் உள்ள, 'அல்வியோலே' எனப்படும் காற்று பரிமாற்றம் நடக்கும் சிற்றறைகளை அதிகம் தாக்குகிறது.
இதனாலேயே, ஆக்சிஜன் அளவு விரைவாகக் குறைகிறது; திசுக்கள் சேதமடைந்து தழும்பு உருவாகிறது. பாதிப்பு குறைவாக இருந்தால் நாளடைவில் சரியாகி விடும். 30 - 40 சதவீதம் நுரையீரலை பாதித்து இருந்தால், மூச்சு திணறல் ஏற்படுகிறது. தீவிரமாக வைரஸ் பாதித்த நான்கில் ஒருவருக்கு நுரையீரல் தழும்பு இருக்கிறது.

'ரெஸ்ட்'
பாதிப்பு சரியான பின், முழு ஓய்வில் இருப்பதால், நுரையீரல் பாதிப்பு வெளியில் தெரிவதில்லை. இரண்டு வாரங்களுக்கு பின், நடை பயிற்சி, தினசரி வேலைகளை செய்யத் துவங்கும் போது, மூச்சுத் திணறலை உணர்கின்றனர்.
வறட்டு இருமல், பேசும் போது இருமல் வரும். பாத்ரூம் போய்விட்டு வரும் போது கூட, சுவாசிக்க சிரமப்பட்டு அப்படியே உட்கார்ந்து கொள்வர். நுரையீரலில் ஏற்பட்ட தழும்பால் தான், மூச்சுத் திணறல் என்று தெரியாமல், வைரஸ் பாதித்ததால் ஏற்பட்ட பொதுவான அயர்ச்சி என்று நினைத்துக் கொள்கின்றனர். இதனால், இயல்பில் பஞ்சு போன்று இருக்கும் நுரையீரல், நாளடைவில் கடினமாகி விடுகிறது.
இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு, வைரஸ் தொற்று தீவிரமாக இருக்கும் நோயாளிகளுக்கு, சிகிச்சை துவங்கிய 2 - 3 வாரத்தில், 'ஆன்டி பைப்ராய்டிக் ஏஜென்ட்' என்ற சிகிச்சையை செய்தால், தழும்பு ஏற்படுவது குறைகிறது.

பாதிப்புக்குப் பின்...
ஓய்வாக இருக்கும் போது பல்ஸ் ஆக்சி மீட்டரால் பரிசோதித்தால், 90 சதவீதத்திற்கு மேல் ஆக்சிஜன் அளவைக் காட்டும். நுரையீரல் பாதிப்பு இருந்தால் நடை பயிற்சி செய்யும் போது விரைவாக குறைந்து மூச்சு திணறும்.
சி.டி., ஸ்கேன், நுரையீரல் திறன் செயல்பாடு, காற்றுப் பரிமாற்ற பரிசோதனைகள் செய்தால், நுரையீரலில் எந்த அளவு பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்து விடும். வயது, பாதிப்பின் அளவிற்கு ஏற்ப சுவாசப் பயிற்சி, மருந்துகள், பிசியோதெரபி, உடற்பயிற்சி ஆலோசனை தர பிரத்யேக மறுவாழ்வு மையத்தில் இரண்டு மாத சிகிச்சை எடுத்தால் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

உறுப்பு மாற்று
வேறு மையங்களில் சிகிச்சை பெற்று குணமான சிலருக்கு, நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் அளவு மிகவும் தீவிரமாக இருந்ததால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்து உள்ளனர். அவர்களில் சிலர் எங்களின் மறுவாழ்வு மையத்திற்கு வந்தனர்; அவர்களும் கூட குணமாகி விட்டனர். தற்போது அவர்களால் இயல்பாக நடக்க முடிகிறது. அந்த அளவுக்கு நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சையில் பலன் தெரிகிறது.

25 பங்கு
இரண்டாவது அலை முடிந்து விட்டாலும், அதன் தாக்கம் இன்னும் உள்ளது. நுரையீரலை 25 பாகமாக பிரித்து பாதிப்பை பரிசோதித்தால், 9 வரை லேசான பாதிப்பு, 15க்குள் இருந்தால் மிதமான பாதிப்பு, 17க்கு மேல் இருந்தால் தீவிர பாதிப்பு. சி.டி., ஸ்கேன் ரிப்போர்ட்டில் இது தெரியும்.
தீவிர தொற்று பாதித்தவர்கள், மூச்சு விடுவதில் சிரமம் உட்பட எந்த அறிகுறி தெரிந்தாலும், அதிகபட்ச கவனத்துடன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

டாக்டர் எம்.மணிமாறன்,
நுரையீரல் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
நுரையீரல் மறுவாழ்வு மையம்,
மியாட் மருத்துவமனை,
சென்னை. 93840 83062

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X