இசைப் பயணத் தொடர் குறித்து, வாணி ஜெயராம் வழங்கிய முன்னுரை:
நான் இந்த, 'பீல்டு'க்கு வந்து, 50 வருஷம் ஆகுது. இத்தனை வருஷமா ஒவ்வொருத்தர் வீட்டிலேயும், அவங்க குடும்பத்துல ஒருத்தராவே என்னை நினைக்கிறாங்க. இது, இசை எனக்கு கொடுத்த மாபெரும் பரிசு.
என் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கிற அனைவரையும், 'தினமலர் - வாரமலர்' இதழ்ல வரப்போற இந்த தொடர் மூலமா, இத்தனை ஆண்டு கால இசைப் பயணத்தின் சுவாரஸ்யங்களை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாணி ஜெயராம் பிறந்த ஊர், வேலுார். அப்பா பெயர் துரைசாமி; அம்மா பத்மாவதி. அவரது அம்மாவுக்கு, அபார சங்கீத ஞானம் உண்டு. அந்த காலத்திலேயே வீணை வித்வான், ஸ்ரீரங்க ராமானுஜ ஐயங்காரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டவர். அவர்களுக்கு ஆறு பெண், மூன்று ஆண் என, மொத்தம் ஒன்பது குழந்தைகள். இதில், வாணி ஜெயராம், எட்டாவது குழந்தை.
அம்மாவுக்கு இருந்த அபார சங்கீத ஞானம் மற்றும் ஆர்வத்தால் தான், ஆறு சகோதரிகளும் பாட்டு கற்றுக் கொண்டனர். கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது, பெற்றோர் தான். அந்த காலத்திலேயே, 'வேலுார் சகோதரிகள்' என்று, அவரது மூத்த சகோதரிகள், கச்சேரி செய்துள்ளனர். ஆனால், திரை இசையில் தான் நாட்டம் கொண்டிருந்தார், வாணி ஜெயராம்.
வாணி பிறந்தபோது, அவருடைய அம்மாவுக்கு, 'இதுவும் பெண்ணாக பிறந்து விட்டதே...' என்று வருத்தம். அதனால், வேலுாரில் இருந்த ஒரு ஜோதிடரை பார்க்க, அவருடைய அப்பா சென்றிருக்கிறார்.
அவர், வாணியின் ஜாதகத்தை கணித்து, 'இந்த மாதிரி ஒரு குழந்தை பிறக்கிறதுக்கு நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். தேன் மாதிரி குரல் இருக்கப் போறது பாருங்க... சங்கீதத்தில், மிகப்பெரிய சாதனை பண்ணுவா, இந்த குழந்தை. அதனால, குழந்தைக்கு, 'கலைவாணி'ன்னு பெயர் வைங்கோ...' என்று கூறியுள்ளார். அதையேற்று, அப்படியே பெயர் சூட்டினர்.
குழந்தை கலைவாணி வளர வளர, அந்த ஜோதிடர் சொன்னது பலிக்க ஆரம்பித்தது. இரண்டரை வயதிலேயே, மிகவும் கடினமான ராகங்களில் அமைந்த பாடலின் முதல் வரியை, யாராவது பாடி முடிப்பதற்குள், அது என்ன ராகம் என்று, 'டக்'கென்று, உடனுக்குடன் மிக துல்லியமாக சொல்லியுள்ளார்.
கடலுார் ஸ்ரீனிவாச ஐயங்காரிடம், மூத்த சகோதரிகள் சங்கீதம் கற்றுக்கொள்ள, அவர்கள் பாடும்போது, அந்த ராகங்களை எல்லாம் உடனுக்குடன் சொன்னார், வாணி.
இவரின் அபார ஞானத்தை பார்த்து, 'இந்த குழந்தைக்கு இப்பவே இவ்வளவு ஞானம் இருக்கே... இவளுக்கும் சேர்த்தே, நான் பாட்டு சொல்லித் தரேன்...' என்று, அவரே முன் வந்தார். இதையடுத்து, ஐந்து வயது குழந்தையாயிருந்த கலைவாணியும், சகோதரிகளுடன் சேர்ந்து பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.
பாட்டு கற்கும் குழந்தைகள், முதலில், ஜண்டை வரிசை, சரளி வரிசை இப்படிதான் ஆரம்பிக்கும். ஆனால், ஐந்து வயதிலேயே அவர், மிகவும் கடினமான தீட்சிதர் கீர்த்தனைகளை, எடுத்த எடுப்பிலேயே கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார். நான்கு ஆண்டுகள் தான், குருவிடம் கற்றுக் கொண்டார்.
மெட்ராஸ் - இப்போது சென்னை. இசைத்துறையில் மேன்மேலும் கற்றுக் கொள்வதற்கும், முன்னேறுவதற்கும் இங்கு வாய்ப்புகள் அதிகமிருந்ததால், அவர்களின் குடும்பம் வேலுாரிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தது.
சென்னை வந்த பின், மயிலாப்பூர், லேடி சிவசாமி அய்யர் பள்ளியில், 5ம் வகுப்பு சேர்ந்தார், வாணி. சேர்ந்த சில நாட்களிலேயே, பள்ளியில் நடக்கும் எல்லாவிதமான போட்டிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், பிரபல சங்கீத வித்வான் ஜி.என்.பி.,யின் சிஷ்யர், டி.ஆர்.பாலசுப்ரமணியத்திடமும், அதன்பின், திருவனந்தபுரம், ஆர்.எஸ்.மணியிடமும், கர்நாடக சங்கீத பயிற்சியும் தொடர்ந்தது.
வாணி, 10 வயது சிறுமியாக இருந்தபோது, இசைக்கும், ரசிகர்களுக்கும் ஒரு பாலமாக இருந்த, 'அகில இந்திய வானொலி'யில், கர்நாடக சங்கீதத்திலும், மெல்லிசையிலும் ஒரு சேர, பல நிகழ்ச்சிகள் கொடுத்திருக்கிறார்.
அப்போது, அங்கு இசையமைப்பாளராக இருந்த, கர்நாடக இசை மேதை, பாலமுரளி கிருஷ்ணா, வாணியின் அப்பாவிடம், 'குழந்தை பிரமாதமா பாடறா, அவளுக்கு சங்கீதத்தில் பிரகாசமான எதிர்காலம் இருக்கு...' என்று, வாழ்த்து கூறியிருக்கிறார்.
பின்னாளில், வாணி ஜெயராம், திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியானவுடன், பால முரளி கிருஷ்ணாவுடன் திரைப்பட பாடல் பாடும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது, தன்னை பாலமுரளி கிருஷ்ணாவிடம் அறிமுகப்படுத்தி, தான் சிறுமியாக இருந்தபோது, 'ஆல் இந்தியா ரேடியோ'வில் நடந்த நிகழ்வை, அவருக்கு ஞாபகப்படுத்தினார்.
'என்னது, அந்த குழந்தை கலைவாணியா... இப்ப வாணி ஜெயராமா வந்து என் கூட பாடறா...' என்று, அவருக்கு சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
- தொடரும்.
ஸ்ரீவித்யா தேசிகன்