சுமார் மூஞ்சி சுந்தரி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
சுமார் மூஞ்சி சுந்தரி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:00

அட, சுமார் மூஞ்சி குமாரு கேள்விப்பட்டிருக்கோம்... இதென்ன, 'சுமார் மூஞ்சி சுந்தரி'ன்னு நீங்க நினைக்கிறது, எனக்கு புரியுது. என்னைப் பற்றி நானே எழுதறதுக்கு கொஞ்சம் கூச்சமாதான் இருக்கு. இருந்தாலும், படிக்கிற உங்களுக்கு, கண்டிப்பா சுவாரசியமா இருக்கும்; அதுக்கு நான் உத்திரவாதம்!
எனக்கு, 60 வயசாச்சு. ஆனா, 60 உடம்புக்குத்தாங்க, மனசுக்கு, 20 கூட இன்னும் ஆகலை. யாராவது, 'சரிங்கம்மா' என்றோ அல்லது குழந்தைகள், 'பாட்டி' என்றோ சொல்லும்போது தான், வயசு ஞாபகம் வருகிறது.

அதனால் தான், நான் ஆசையோடு விளையாடும் பக்கத்து வீட்டு, மூன்று வயசு, ரஞ்சித் குட்டியிடம் கூட, என்னை பாட்டி என்று அழைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டேன். அவன், என்னை, சுந்தரிம்மான்னு தான் கூப்பிடுவான்.
எப்போதும் எங்கள் வீடுதான் கதியென்று இருப்பான். எத்தனை நேரம் தான் வீட்டுக்காரரோடு பழங்கதை பேசுவது. எனக்கு அவனால் கொஞ்சம் பொழுது போகும்.
என்ன செய்வது, நம் பேரக்குழந்தையோட தான், கூடவே இருக்க முடியலை. அந்த ஆதங்கத்தை இப்படி தீர்த்துக்க வேண்டியிருக்கு. அவனோட அம்மாவும் சின்ன பொண்ணு, அவனை வைச்சுட்டு கஷ்டப்படுதேன்னு, அவளுக்கு வேலையா இருக்கற நேரம், 'கொண்டு வந்து விடும்மா'ன்னு நான் தான் சொன்னேன்.
சரி சரி... என் கதைக்கு வரேன். என் மகள், சிறு வயதில், 'அம்மா, உன் சின்ன வயசு கதை சொல்லும்மா...' என்று நச்சரிப்பாள். அப்பல்லாம் தோணாத கதை இப்ப தோணுது. ஏன்னா, சும்மாக்கிடக்கிற புத்தி, கண்டதையும் நினைக்கும் பாருங்க.
முதல்ல என்னை பற்றி சொல்லிடறேன். அதான், தலைப்புலயே சொல்லிட்டேனே... என் பெயர், சுந்தரி. கொஞ்சம் சுமாராக தான் இருப்பேன். உயரம், 5 அடிக்கு குறைச்சல்; நிறமோ, மாநிறத்துக்கும் குறைச்சல்.
இப்படி எல்லாமே குறைச்சலா இருந்தாலும், வாழ்க்கையிலே எதுவும் குறைச்சலா இருக்கிறதா, நான் நினைச்சதே இல்லேங்க.
எங்க அம்மா - அப்பாவுக்கு, ஐந்து பெண் குழந்தைங்க. நான், நாலாவது. என்னை தவிர்த்து, அத்தனை பேரும் கலராவும், உயரமாவும் இருப்பாங்க.
'இவங்க, நம்ம சுபாக்கா மாதிரி...' என்று, கொள்ளுப் பாட்டியை மேற்கோள் காட்டியதிலிருந்து, என் தோற்றத்துக்கான காரணம் தெரிந்து கொண்டேன். எங்க அம்மா - அப்பா, ஆசையா, சுந்தரின்னு பேரு வைச்சிருந்தாலும், சொந்தக்காரங்க என்னை கூப்பிறது என்னவோ, 'ஏய் கருப்பி... ஏய் குட்டச்சி'ன்னு தான்.
அதையெல்லாம் ஒரு அவமானமா நினைக்காத காலம் அது.
ஆனா ஒண்ணு... படிப்புல நான், படு சுட்டி. ஐந்து பேர்ல, நான் மட்டும் தான் அந்த காலத்துலயே, காலேஜுக்கே போகாம, அரசு வேலை கிடைச்சு போனேன். வேலை கிடைச்ச கொஞ்ச நாள்ல, என் பாட்டி, என்னை பார்த்து, 'என்னடி, ஆபிசுக்குள்ளயே உட்கார்ந்து வேலை செஞ்சு, உன் கருப்பெல்லாம் உதிர்ந்து போச்சு போல இருக்கே'ன்னாங்க. சத்தியமா நொந்து போயிட்டேன்.
அட, கலராயிட்டேன்னு சொல்ல அவங்களுக்கு தெரியல.
அழகாயிருந்த அக்காவுக்கெல்லாம் அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்யாணமாக, எனக்கு மட்டும், ஆறு ஆண்டு இடைவெளி... குணம் தான் முக்கியம் என்றாலும், முதல்ல பார்க்கும்போது, அழகுதானே அவசியமாகிறது. அரசு வேலை செய்வதை பார்த்தாவது வரன் அமையாதா என்று, அம்மாவும் - அப்பாவும் தேட ஆரம்பித்தனர்.
சொந்தக்கார அத்தை ஒருவர், 'ஏண்ணே... உனக்கோ பையனில்லை; இவளுக்கோ வரன் அமையலை... பேசாம இவளை வீட்டோட உனக்கு துணையா வைச்சுட்டு, அடுத்தவளுக்கு பாரேன்...' என, அக்கறையாய் வந்து உபதேசம் செய்தார்.
ஒரு வழியா, ஒரு வரன் அமைஞ்சது. ஆனால், என்னை விட ஒன்னறை பங்கு உயரம், மாப்பிள்ளை. பனை மரத்துக்கு கீழே பன்னிக்குட்டி நின்னாப்புல.
எங்க மாமா ஒருத்தர், என்னை விட ரொம்ப உயரம்ன்னு காமிக்க, என் பக்கத்துல வந்து ஒரு ஸ்டூலை போட்டு அது மேலே ஏறி நின்னு, ஒரு சிரிப்பு சிரித்தார். எனக்கு பெரிசா கோவமெல்லாம் வரலே. ஏன்னா, இதே மாமா, தன் மகனுக்கு பொண்ணு பார்த்துட்டு வந்து, 'பொண்ணு, சுமாரா இருக்கா, நம்ம சுந்தரி மாதிரி...' என்றார்.
ஒருமுறை, இரண்டு முறை இல்லை. யாரிடமும் இதைப் பற்றி பேசினாலும், இந்த வசனம் கண்டிப்பாக இருக்கும். நானும் பொறுக்கமாட்டாமல் ஒருநாள் சிரித்தபடியே, 'மாமா... ஒண்ணு, சுந்தரி மாதிரின்னு சொல்லுங்க. இல்ல, சுமாரா இருக்கான்னு சொல்லுங்க. இரண்டையும் சேர்த்து ஏன் மாமா சொல்றீங்க'ன்னு கேட்டேன்.
'அட, உண்மையைத்தானே சொல்றேன்...' என்று, அவர் பதில் கூற, ஏன்டா கேட்டோம் என்றாகி விட்டது.

பெரிய அதிசயம். மாப்பிள்ளை வீட்ல, 'சரி'ன்னு சொல்லிட்டாங்க. 'உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா'ன்னு யாரும் கேட்கலை. ஆனா, வந்த மாப்பிள்ளை, 'பொண்ணோட சம்மதம் கேட்டு சொல்லுங்க'ன்னு சொன்னதுக்கப்புறம், வேற வழியில்லாம கேட்டாங்க.
என்னோட சம்மதத்தை கேக்கணும்ன்னு தோணிச்சு பாருங்க, அந்த குணத்துக்காகவே நான், 'சரி'ன்னு சொன்னேன். அப்ப எனக்கு தெரியாது, உண்மையாவே நான் அதிர்ஷ்டசாலின்னு.
கல்யாணத்துக்கு வந்தவங்க பாதி பேர், 'என்ன பொருத்தமில்லாத ஜோடி இது'ன்னு வாயால சொல்லலைன்னாலும், அவங்க முகமே காட்டிக் கொடுத்தது.
இதோ... போன மே மாசத்தோட, திருமணமாகி, 32 வருஷம் முடிஞ்சுது. ஜோடிப் பொருத்தத்தோட இருக்கறவங்களை விட, நல்லாதான் போயிட்டிருக்கு வாழ்க்கை.
'நீயா நானா'வில், கோபிநாத் என்னென்னமோ தலைப்பில பேசறாங்களே... 'ஜோடிப் பொருத்தம் இல்லாம சந்தோஷமா வாழ முடியும்'ன்னு பேசறதுக்கு கூப்பிட்டா, நாம போகலாம்ன்னு நினைப்பேன்.
இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து, அதுகளை நல்ல விதமா வளர்த்தி, படிக்க வைச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. இப்ப நினைச்சாக் கூட இந்த ஞாபகம் எல்லாம் வந்தா, சிரிக்கத் தோணுது.
சொந்த ஊரிலிருந்து மாற்றல் வாங்கி, இங்க வந்தபோது, கூட வேலை பார்த்தவர்கள் முதலில் அதிகம் பழக்கமில்லை.
ஆனால், 'ரிட்டையர்மென்ட் மீட்டிங்'கில், 'சுந்தரி, வந்த புதுசுல, பார்த்தா ரொம்ப பட்டிக்காடு மாதிரி இருப்பாங்க. ஆனா, பழகப் பழகதான் அவங்க மனசும், அறிவும் ரொம்ப பெரிசுன்னு புரிஞ்சுது. இப்பல்லாம் எங்களுக்கு எந்த உதவி, ஆலோசனைன்னாலும் உடனே ஞாபகம் வருவது, சுந்தரி மேடம் தான்...' என, ஆள் மாத்தி ஆள் புகழ்ந்தனர்.
அதிலும் சில பேர், தப்புன்னு தெரியாமலே நான் குண்டாக இருப்பதையும் சுட்டிக் காட்டினர்.
எந்த ஒரு பெண்ணுக்கும், தன்னை பற்றி சொன்னால் கூட பொறுத்துக் கொள்வாள். ஆனால், தன் குழந்தைகளை பற்றி சொன்னால், கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும் இல்லையா?
அப்படித்தான், என் பெண்ணின் முதல் பிறந்தநாளுக்கு உதவிக்கு வருவதாக சொல்லி, மூன்று நாட்கள் முன்னாடியே வந்து தங்கியிருந்தார், என் சின்ன மாமியார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு, அக்காக்கள், அம்மா - அப்பா வந்து, நல்லபடியாக விழா முடிந்து, எல்லாரும் சென்றாகி விட்டது.
அடுத்த நாள், மாலையில், 'நம்ம சுந்தரி வீட்டுல எல்லாரும் நல்ல அழகு... இவ மட்டும் தான் கொஞ்சம் சுமாரா போயிட்டா...' என்று சொல்ல, 'அட, விடுங்க சித்தி... கல்யாணமாகி இரண்டு வருஷம் முடிஞ்சுது. இப்பத்தான் புதுசா பார்க்கறீங்களா...' என்று, முதல் முறையாக வாயை திறந்தார், என் கணவர்.
'அட, அதுக்கில்லப்பா... சும்மா பேச்சுக்கு சொன்னேன். இப்ப குழந்தையும் அவ ஜாடையால்ல இருக்கு. முத்தின முகமா தெரியல...' என, விடாமல் சொல்லவும், வந்த அழுகையை அடக்கி, அறைக்குள் சென்று விட்டேன்.
வந்த வேலையெல்லாம் முடிந்தாற்போல கிளம்பி விட்டார், சின்ன மாமியார்.
இரவு, வீங்கிக் கிடந்த என் முகத்தை பார்த்த வீட்டுக்காரர், 'விடும்மா... அவங்க குணம் தெரிஞ்சதுதானே... இதை பெரிசா எடுத்துக்காதே...' என்றார்.
'என்னைப் பத்தி என்னவேணா சொல்லட்டும்... ஆனா, குழந்தை... இப்பதான் ஒரு வயசு ஆகுது. அது முகத்துல என்ன குறையை கண்டாங்க... அதான், என்னால தாங்க முடியல...' என்றேன்.
'நமக்குள்ள ஏதாவது பிரச்னை ஆனா, அதை வைத்து, பஞ்சாயத்து பண்றது போல, நாம பெரிய ஆள் ஆகலாம்ன்னு பார்த்திருப்பாங்க... அம்மாவோ, நீயோ, ஒருத்தரை பத்தி ஒருத்தர் ஏதாவது குறை சொன்னாலாவது, ஏதாவது பொழுது போயிருக்கும். அதுக்கும் நீங்க இடங்கொடுக்கல... உன்கிட்ட எதுவும் செல்லுபடி ஆகலை...'
'அதுக்காக... அவங்க பொண்ண பத்தி நான் ஏதாவது சொல்றேனா?'
'சுந்தரி... ப்ளீஸ்... நீ, நீயாவே இரு. எந்த நேரத்திலும் உன் குணத்தை மாத்திக்காதே...' என்று, சமாதானப்படுத்தினார், கணவர்.
எந்த பெண்ணுக்காக இவ்வளவு துாரம் மனம் வருந்தினேனோ, அவளுக்கு, 12 வயதிருக்கும்.
வழித்து வாரிய தலையும், பாவாடை சட்டையுமாக இருந்த என் பள்ளி வயது புகைப்படங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர், மகள்கள் இருவரும்.
'இந்த சட்டை என்னுதே இல்லடி... என் ப்ரெண்ட் சங்கரியோடது. என்கிட்ட நல்ல சட்டையா இல்லைன்னு, 'இதைப் போட்டுட்டு வா'ன்னு அவளோட சட்டையை தந்தா. அதெல்லாம் ஒரு காலம்...' என்று, சிலாகித்து சொல்லிக் கொண்டிருக்கும்போது, 'ஏம்மா... நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே...' என்றாள், சின்னவள்.
'ரொம்பத்தான் பயம். சொல்லுடி...' என்றேன்.
'இல்ல... நீ இப்பக்கூட கொஞ்சம் கெத்தா இருக்கே... அப்ப ரொம்ப சுமாரா இருந்திருக்கியே... உன்னை யாருமே, 'சைட்' அடிச்சிருக்க மாட்டாங்கல்ல...' என்று கேட்டு, ஓடி விட்டாள்.
அமைதியாக நான் சிரிக்க, உடனே பெரியவளுக்கும் தைரியம் வர, 'ஆமாம்மா... கொஞ்ச நாள் முன்ன, நீயும், அப்பாவும் சண்டை போட்டுகிட்டு, ஒரு வாரம் பேசாம இருந்தீங்கல்ல. அப்போ கூட எனக்கு பயமா இருந்தது. சினிமால காட்டற மாதிரி பிரிஞ்சிடுவீங்களோன்னு...
'அதைவிட என்ன தெரியுமா, அப்பல்லாம் அப்பா, ஒரே நியூஸ் சேனலை பார்த்துட்டு இருப்பார். அந்த, 'நியூஸ் ரீடர்' கொஞ்சம் அழகா வேற இருந்தாங்களா... நான் ரொம்ப பயந்துட்டேம்மா...' என்று சிரித்தபடி கூறினாள்.
'ஏண்டி... உங்க ரெண்டு பேருக்கும் பொழுது போகலையா... வர வர என்ன பேசறோம்... யார்கிட்ட பேசறோம்ங்கற மரியாதையே இல்ல...' என்றபடி எழுந்து விட்டேன்.
சொல்லி விட்டனரே தவிர, அம்மாவை காயப்படுத்தி விட்டோமா என்ற வருத்தம் இருந்திருக்கும் போல. கொஞ்ச நேரத்தில் வந்து, 'அம்மா... சாரிம்மா... சும்மா ஜோக்குக்கு தான் சொன்னோம்... ரொம்ப, 'பீல்' பண்றியா...' என்று, கேட்டனர்.
'ஆமான்னா என்ன பண்ண போற... இல்லைன்னா என்ன பண்ண போற... எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. நான் வாழ்ந்த, வாழற வாழ்க்கை, எனக்கு ரொம்ப சந்தோஷம்; திருப்தி. இது கிடைக்காதவங்க எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா... போ...' என்று, முற்றுப்புள்ளி வைத்தேன்.

இப்ப இந்த கதையெல்லாம் ஏன் ஞாபகத்துக்கு வந்ததுன்னு கேட்கலையே நீங்க... நேத்திக்கு, பக்கத்து வீட்டு ரஞ்சித்தோட பாட்டியும், தாத்தாவும் ஊர்லருந்து வந்தாங்க.
என்னை பார்த்துட்டு, 'நீங்க, ரொம்ப உதவியா இருப்பீங்கன்னு பொண்ணு சொல்லுவா... எங்க பேரன் உங்ககிட்ட நல்லா ஒட்டிக்குவான்னு சொல்லுவா... ஏதோ நீங்கள்லாம் இருக்கிற தைரியம் தான் எங்களுக்கு...' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஓடி வந்தான், ரஞ்சித்.
'குட்டி... சொன்னா கேளு'ன்னு கத்தியபடியே பின்னால் வந்தாள், அவன் அம்மா.
ஏதோ பிடிவாதம் பிடித்து வந்திருக்கிறான் என்பது புரிய, 'ரஞ்சித் போ... அம்மா சொல்றதை கேளு...' என்றேன்.
தன்னிடம் வந்தவனை வாரி அணைத்த அவன் அம்மா, 'செல்லக்குட்டி...' என்று கொஞ்சியபடி, 'உனக்கு அம்மாவைப் பிடிக்குமா... அப்பாவைப் பிடிக்குமா...' என்ற, உலக மகா கேள்வியை கேட்டாள்.
அவனோ, 'எனக்கு, சுந்தரிம்மா தான் பிடிக்கும்...' என்று கத்தியபடி, என் மடி மேல் ஏறிக்கொண்டான்.
வியந்து போய், 'பாருடா... ஏன்டா, சுந்தரிம்மா பிடிக்கும்...' என்று, தாத்தா - பாட்டி கேட்க...
சற்றும் தயங்காமல், 'ஏன்னா, அவங்க தான் அழகா இருக்காங்க...' என்றான்.
டக்கென்று கண்ணீர் தெறித்தது, என் கண்களிலிருந்து.

க.சுபஸ்ரீ
வயது: 49
படிப்பு: பி.எஸ்சி., - எம்.ஏ., - பி.எட்.,
பணி: அரசு பள்ளி, கணித ஆசிரியர்
ஆர்வமுள்ள துறைகள்:
வாசிப்பு, எழுத்து மற்றும் வீட்டுத் தோட்டம் அமைத்தல், சிறுகதை மற்றும் கட்டுரை போட்டிகளில், பல பரிசுகளை பெற்றுள்ளார்.
கதைக் கரு உருவான விதம்:
சமூகத்தில் நிலவி வரும், புறத்தோற்றங்கள் குறித்த நம்பிக்கைகள், அதன் காரணமாக மனித மனங்களைப் புரிந்து கொள்ளாதவர்களின் செயல்களால், பாதிப்புக்கு உள்ளானவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் புனையப்பட்ட கதை. நிஜமும், நிழலும் கலந்த படைப்பு.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X