குமரி மீட்ட கோமகன் டி.வி.ஆர்.,
அக்., 2, தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., பிறந்த தினம்
தெள்ளு தமிழ் துள்ளி வர
இதழ் பல கொண்டு
தினமும் பூத்திடும்
தினமலர் நாயகன்!
முக்கடலில் பூத்த முத்து
முத்தமிட போனதுவோ தத்து
கொடி காத்தான் குமரன் - இவனோ
குமரி மீட்ட கோமகன்!
படிப்பறிவு ஏதுமிலா
கும்மிருட்டு காலத்தில்
அடிமைகள் முகமலர
அறிவு தீபம் ஏற்றியவன்!
தரிசு நில பண்ணையார்கள்
தலை கனத்து திரிந்தபோதும்
தமிழ் ஜாதி தமிழர்
தலை நிமிர போராடியவன்!
கோவணம் கட்டியவனும்
குடுமி வைத்தவனும்
ஒதுங்கி பதுங்காமல்
ஒன்றாய் இணைத்தவன்!
குடுமி எடுத்து கிராமத்தில்
கிராப் வைத்த புது யுவன்
புகை வண்டியும், நுாலகமும்
எட்டி பார்த்ததும் இவனால் தான்!
தீண்டாமை எரிமலை
பனி போர்வை போர்த்தியது
நால்வகை வர்ணமும் - இவனால்
நானிலம் மீது ஓர் நிறமானது!
எதிர்க்கும் நிலை எதுவும்
ஏற்றம் தராது வளையும்
நாணல் போல் வாழ்ந்திட
அரசுடன் இணைந்து - அவன்
ஆற்றிய செயல்கள் ஏராளம்!
புகழும், பணமும் அது தரும்
போதையும் விரும்பும் உலகில்
தானும் உழைத்து
தரணியை உயர்த்திய
பெரும் கொடை வள்ளல்!
இறுமாப்பும், ஏளனமும்
இவனுக்கு எதிரி
எண்ணியதை முடிப்பதில்
ஏகலைவனுக்கு நண்பன்!
செய்ததை கண்டு மலைக்காதே
செய்வதை என்றும் மறவாதே
இகழ்வது ஒருநாள் ஓயும் - அதுவே
சமத்துவம் மலரும் காலம் என
தத்துவம் சொன்ன புத்தன்!
நாவறண்ட நாகர்கோவிலுக்கு
தித்திக்கும் முக்கடலின் நீர்
திட்டம் கொண்டு வந்த
கொஞ்சும் நாஞ்சில் நாடன்!
கால பெட்டகத்தை
தோண்டி திறந்தால்
வரலாறு வருடும் - அவனின்
தியாக வடுக்கள்!
பாரதி சேகர், சென்னை.