முரட்டு போராளியாகும், ஜெயம்ரவி!
இன்னமும் ஜெயம்ரவியை, 'சாக்லேட் பாய்' ஆக நினைத்தே கதை சொல்லி வருகின்றனர், இயக்குனர்கள். ஆனால் அவரோ, 'நான், 'சாக்லேட் பாயும்' இல்லை, 'சாப்ட்' ஆன நடிகரும் இல்லை. பார்க்கத்தான் நான் அப்படி தெரிவேன். எனக்குள் ஒரு முரட்டுத்தனமான நடிகன் இருக்கிறான். அந்த நடிகனுக்கு இனிமேல் கதை பண்ணுங்கள்...' என்று கூறுகிறார். மேலும், 'என் சினிமா கேரியரை, பொன்னியின் செல்வன் படத்துக்கு முன் -- பின் என, பிரிக்கப் போகிறேன். இனிமேல் படம் முழுக்க நடிகையரை சுற்றி சுற்றி வந்து, 'ரொமான்ஸ்' செய்வதை நிறுத்தி, சமூக போராளியாக, 'ஆக் ஷன்' கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன்...' என்றும் கோலிவுட் இயக்குனர்களுக்கு புதிய சேதி சொல்லியிருக்கிறார், ஜெயம்ரவி.
—சினிமா பொன்னையா
அசர வைத்த, நயன்தாரா!
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோதும், வீட்டில் பல வேலையாட்களை வைத்துக் கொள்வதில்லை, நயன்தாரா. சமையல் வேலைகளை தானே செய்பவர், தினமும் இரவு, வீட்டு பாத்திரங்களை கூட தானே கழுவி வைக்கிறார். அதையறிந்த சில சினிமா தோழியர், 'ஒரு வேலைக்காரி வைத்துக் கொள்ளக் கூடாதா... அவ்ளோ சிக்கனமா...' என்று, நயன்தாராவை கிண்டல் செய்துள்ளனர். அதற்கு, 'இது, சிக்கனம் கிடையாது. நீங்களெல்லாம், எடையை குறைக்க, 'ஜிம்'முக்கு செல்வீர்கள். ஆனால், என் வீட்டு வேலைகளை நானே செய்து, எடை கூடாமல் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறேன். 36 வயதிலும் நான் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணம்...' என்று சொல்லி, தன்னை கிண்டல் செய்த தோழியரை, சிந்திக்க வைத்துள்ளார். காரணம் இன்றி, காரியம் இல்லை!
— எலீசா
திணறடித்த, எமிஜாக்சன்!
குழந்தை பிறந்த பிறகும், சினிமாவில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார், லண்டன் நடிகை, எமிஜாக்சன். அதிலும் தாறுமாறான, 'போட்டோ ஷூட்'களை நடத்தி, 'சோஷியல் மீடியா'வை தெறிக்க விட்டு வருகிறார். அதைப்பார்த்து சில கோலிவுட் நடிகையர், 'குழந்தை பிறந்த பிறகும், இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டுமா?' என்று, அவரிடத்தில் கேட்டனர். 'குழந்தை இப்போது தான் பிறந்தது. ஆனால், 'கிளாமர்' என் கூடவே எப்போதோ பிறந்தது. இப்போது பிறந்த குழந்தைக்காக, என் கூடவே பிறந்த, 'கிளாமரை' தள்ளி வைக்க முடியுமா...' என்று, அதிரடி பதில் கொடுத்து, கேள்வி கேட்டவரை திணறடித்தார். கருடி கற்றவன் இடறி விழுந்தால், அதுவும் ஒரு வித்தை!
- எலீசா
ஆர்யா அதிர்ச்சி முடிவு!
ஆர்யாவைப் பொறுத்தவரை கதை பிடித்திருந்தால், புதுவரவு இயக்குனர்களின் படங்கள் என்றாலும் நடிக்க ஒப்புக் கொள்வார். ஆனால், அப்படி நடித்த பல படங்கள் தோல்வியடைந்தன. அதேசமயம் பிரபல இயக்குனர்களின் படங்கள் மட்டுமே, அவருக்கு வெற்றியை கொடுத்து வந்துள்ளன. அதனால், 'சார்பட்டா பரம்பரை படத்துக்கு பின், இனிமேல் மெகா இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன். புதியவர்களுக்கு, 'கால்ஷீட்' கொடுத்து, 'ரிஸ்க்' எடுக்க மாட்டேன்...' என முடிவெடுத்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவு காரணமாக, 'ஆர்யா எப்படியும், 'கால்ஷீட்' தருவார்...' என்று, சில ஆண்டுகளாக அவரை சுற்றி வந்த இளவட்ட இயக்குனர்கள் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
கோலிவுட்டில் போணியாகாமல் பாலிவுட்டுக்கு சென்ற, சுல்தான் நடிகை, அங்கு ஒரே நேரத்தில், இரண்டு மெகா படங்களை தட்டித் துாக்கி விட்டார். அதோடு, அனைவரிடத்திலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல், 'ஜாலி'யாக பழகும் அம்மணி, 'டேட்டிங்' செய்வதிலும், 'நம்பர் ஒன்'னாக இருந்து வருகிறார். குறிப்பாக, பாலிவுட்டில், 'டேட்டிங்' செல்லும் நடிகையருக்கே போட்டி போட்டு சிபாரிசு செய்வர் என்பதால், போன வேகத்திலேயே இந்த, 'டெக்னிக்'கை கையாளும், சுல்தான் நடிகை, 'மிட்நைட் பார்ட்டி'களில் அங்குள்ள மெகா நடிகையரையே ஓரங்கட்டும் அளவுக்கு, 'நறுக்' ஆட்டம் போட்டு, தெறிக்க விடுகிறார். இதனால், 'சுல்தான் நடிகை, கூடிய சீக்கிரமே பாலிவுட்டின் பரபரப்பு நடிகையாகி விடுவார்...' என்கின்றனர்.
'பெங்களூரிலிருந்து, நம்ம காலனிக்கு குடி வந்து ஒரு வருஷம் கூட ஆகல... அதற்குள், காலனி அசோசியேஷன் செகரட்டரி ஆகிட்டா. 'மெயின்டனென்ஸ்' சார்ஜையும் ஏத்திட்டா. வாட்ச்மேன் முதல், வீட்டு உரிமையாளர்கள் வரை அத்தனை பேரையும், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துட்டாளே...'
'மாமி... நீங்க யாரை சொல்றீங்க?'
'அதான்டி, ராஷ்மிகான்னு ஒரு பொண்ணு, 'எச்' பிளாக்கிற்கு வந்திருக்கிறாளே... அவதான் ஆப்பிள் கணக்கா செக்கச் செவேல்ன்னு பளபளன்னு இருக்கிறாள். கேட்கவா வேண்டும், நம்ம காலனி ஆண்கள், 'ஜொள்' வழிந்து, அவள் சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு இருக்காங்க...' என்று புலம்பினாள், அந்த காலனியை சேர்ந்த பெண்மணி ஒருவர்.
சினி துளிகள்!
* 'தெலுங்கில் நான் நடித்த, மிஸ்டர் காமரேட் படத்தை பார்த்துதான், ஹிந்தி பட வாய்ப்பு தேடி வந்தது...' என்கிறார், ராஷ்மிகா மந்தனா.
அவ்ளோதான்!