பிளாஸ்டிக் தவிர்ப்போம்!
இன்னும் சில நாட்களில், முக்கிய பண்டிகையான நவராத்திரி ஆரம்பிக்க இருக்கிறது. கொலுவுக்கு வருவோருக்கு கொடுப்பதற்கு கடைக்கு போய், தேவையான எவர்சில்வர், பேன்சி பொருட்கள், ரவிக்கை துண்டு ஆகியவற்றை வாங்க ஆரம்பித்து விட்டனர், நம் சகோதரிகள்.
இச்சமயத்தில் நம் சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்:
தயவுசெய்து தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டாம்.
சிலர் கொடுத்தோம் என்ற பெயருக்கு, உபயோகப்படுத்த முடியாதவைகளை கொடுக்கின்றனர். கொட்டைப்பாக்கு அளவுக்கு ஒரு குங்குமம், மஞ்சள் டப்பா; உள்ளங்கை அளவுக்கு ஒரு கண்ணாடி; போதும் போதாமலும், 50 செ.மீ., ரவிக்கை துணி; தலையில் ரத்தம் வரவழைக்க கூடிய ஒரு சீப்பு ஆகியவற்றை தயவுசெய்து கொடுக்கவே கொடுக்காதீர்.
'மாஸ்க், சானிடைசர்' போன்றவற்றை, கொலுவுக்கு வருவோருக்கு கொடுங்கள்.
மேலும், சின்ன டவல்கள் மற்றும் சமையலறை பொருட்களை கொடுத்தால், உபயோகமாக இருக்கும்.
மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்!
கல்யாணி சேஷாத்திரி, சென்னை.
முயற்சி இருந்தால்...
என் மொபைல் போன் பழுதடைந்ததால், பஜாரில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட, 'சர்வீஸ் சென்டரு'க்கு சென்றேன். அங்கிருந்த இளம்பெண்ணிடம், 'போன் சர்வீஸ் செய்ய வேண்டும்; போன் பழுது பார்த்து தருபவர் இல்லையா...' என, கேட்டேன்.
'சார்... முதலாளியும் நானே, மெக்கானிக்கும் நானே...' என்றாள்.
அதை கேட்டு, 'அட, ஆச்சரியமா இருக்கே...' என்றேன்.
'சார்... ஆண்களால் தான் எல்லா வேலையும் செய்ய முடியுமா; எங்களாலும் முடியும். அதற்கு, அக்கறையும், மனதும் இருந்தால் போதும். மொபைல் போன் ஷோரூம் ஒன்றில் வரவேற்பாளராக இருந்தேன். ஷோரூமில், போன் சர்வீஸ் செய்பவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்தேன்.
'ஒவ்வொரு கம்பெனி போன்களிலும் ஏற்படும் குறைகளையும், அதை நிவர்த்தி செய்யும் முறைகளை பற்றியும் தெரிந்து கொண்டேன்.
'ஒரு கட்டத்தில், நாமும் மொபைல் போன் சர்வீசில் இறங்கலாமே என முடிவெடுத்து, வரவேற்பாளர் வேலைக்கு, 'குட் பை' சொன்னேன். தனியார் மொபைல் போன் பயிற்சி நிறுவனம் மூலம் முறையான பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.
'அந்த அக்கறைக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றிதான், இந்த மொபைல் போன் சர்வீஸ் சென்டர். தினசரி, 1,000 - 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். நிறைய பெண் வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர்...' என, பெருமையாக கூறினாள்.
வரவேற்பாளராக இருந்து, வாழ்க்கையை கடத்தாமல், தன் முயற்சியால் வெற்றி கண்ட அந்த பெண்ணை பாராட்டினேன்.
வாசகியரே... தன்னம்பிக்கையும், முயற்சியும் இருந்தால், கிணற்று தவளை நிலை மாறி, உயர்ந்த இடத்திற்கு செல்லலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை, கன்னியாகுமரி மாவட்டம்.
இப்படியும் ஒரு வியாபார யுக்தியா!
நான் தினமும் வேலைக்கு செல்லும் வழியில், பிளாட்பார காய்கறி கடையை பார்ப்பேன். நடுத்தர வயது ஆணும், பாட்டியும் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருப்பர்.
சிறிய கடை என்றாலும், தரமான, விதவிதமான காய்கறிகள் இருக்கும். மேலும், பெண்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். வேலை விட்டு திரும்பி வரும்போது, ஒரு காய் கூட மிஞ்சாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்திருக்கும்.
ஆவல் உந்த ஒருநாள், வண்டியை நிறுத்தி, அக்கடைக்கு சென்றேன்.
அங்குள்ள ஆண், வியாபாரத்தில் மும்முரமாய் இருக்க, வாடிக்கையாளர் வாங்கும் காய்கறிகளை எப்படி விதவிதமாக சமைக்கலாம் என்று, சமையல் குறிப்பு மற்றும் சமையல் நுணுக்கங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொண்டிருந்தார், பாட்டியம்மா.
எனக்கும் நிறைய சமையல், 'டிப்ஸ்' கிடைத்தது. நான் இதுவரை ஒதுக்கித் தள்ளிய பல காய்களை வாங்கி சமைத்து, வீட்டில் பாராட்டையும் பெற்றேன்.
இப்போது அக்கடையின் ரெகுலர் வாடிக்கையாளராகி விட்டேன். அவ்வப்போது, பாட்டியின் இலவச வைத்திய ஆலோசனைகளும் கிடைக்கிறது.
சமையல் பற்றி எத்தனை, 'யூ டியூப்' சேனல்கள், விளக்கினாலும், இந்த நேரடி ஆலோசனைக்கு ஈடு இணை ஆகாது. மேலும், இதுபோன்ற யுக்திகள் வியாபாரத்தை பெருகச் செய்யும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
அ. கலா, திருநெல்வேலி.