அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா! (1)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:00

அம்பாள் சன்னிதி-
''இன்னிக்கு எனக்கு பிறந்தநாள்.''
''அப்படியா, என்ன வயசு?''
''முப்பது. அர்ச்சனை செய்யணும்.''
''பேர், நட்சத்திரம் சொல்லுங்கோ?''
''விக்ரம், -பரணி நட்சத்திரம், மேஷ ராசி.''
அர்ச்சனை தட்டை அர்ச்சகரிடம் நீட்டினான். தட்டை வாங்கிக் கொண்ட அர்ச்சகர், மந்திரம் சொன்னபடி உள்ளே போனார்.
கண்ணை மூடி பயபக்தியாக, விக்ரம் நின்றிருந்தானே தவிர, அவன் எண்ணம் முழுதும் உடனடியாக ராஜேஷை சந்தித்து, அந்த முக்கியமான கவரை வாங்க வேண்டும் என்பதிலேயே இருந்தது.
அர்ச்சகர் மணி அடித்து, தீபாராதனை காட்டினார்.
திட்டமிட்டபடி எல்லாம் நடக்க வேண்டும் என்பது தான், இப்போது அவனது பிரார்த்தனை.
''எல்லாம் நல்லபடியா நடக்கும்,'' என, பிரசாதம் தந்தார், அர்ச்சகர்.
''தாங்க்ஸ்!''
''கல்யாணம் ஆயிடுத்தா?''
''இன்னும் இல்ல.''
''நல்ல பொண்ணா சீக்கிரம் கிடைப்பா.''
''அதுக்கு முன்னாடி நிறைய வேலை இருக்கு, சாமி. அம்பாளுக்கு தெரியும். வரேன்,'' என்று, கோவிலை விட்டு வெளியே வந்து கோபுரத்தை கும்பிட்டான்.
'அம்மா! நீ கூடவே இருக்கணும்' என, வேண்டியபடி, அதிக கூட்டம் இல்லாத கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து நமஸ்கரித்த பின், தன் பைக் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
'சின்ன வயதில் எத்தனை முறை அப்பாவுடன் இந்த கோவிலுக்கு வந்திருக்கிறேன்?' என, நினைத்துப் பார்த்தான்.
'அப்பா... அம்மா ஏன் நம்ம கூட கோவிலுக்கு வரல?'
'அம்மா சாமிகிட்ட இருக்காங்க கண்ணா...'
'அத்தை?'
'அத்தையும் சாமி கிட்ட போயிட்டாங்க...'
'நீயும் சாமி கிட்ட போயிடுவியா?'
ஒருநாள், அப்பாவும் போய் விட்டார்.
பைக்கில் ஏறி புறப்பட்டான், விக்ரம். மிதமான வெயில் மனதிற்கு இதமாக இருந்தது. ராஜேஷுக்கு போன் செய்தான்.
''காத்திட்டு இருக்கேன், விக்ரம்; வா.''
''ஆன் தி வே,'' என்றவனின், பைக் வேகம் கூடியது.

கொஞ்ச நாள் சொந்த ஊரில் இருக்க போவதில்லை. சம்பந்தமே இல்லாத இடங்களுக்கு போக போகிறான். திரும்பி வரும் வரை, பார்ட்னர் ராஜேஷிடம், 'மெடிக்கல் ஷாப், மெஸ், டிபார்ட்மென்ட் ஸ்டோர்' எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள சொல்லி இருக்கிறான்.
தார் ரோடு, மண் ரோடு என, அரைமணி நேர பயணத்திற்கு பின், நீடாமங்கலத்தில் ராஜேஷ் இருக்கும் இடத்தை வந்தடைந்தான்.
ராஜேஷுக்கும் ஏறக்குறைய விக்ரம் வயது தான் இருக்கும்; சற்று உயரம் கம்மி. பிசினஸ் பார்ட்னர்; நம்பிக்கையான நண்பன்.
ஜாக்கிரதையாக ஒரு பெரிய பிரவுன் கவரை விக்ரமிடம் தந்தான், ராஜேஷ்.
''நான் கேட்ட எல்லா விபரமும் இருக்கா?''
''பக்காவா இருக்கு.''
''போட்டோ?''
''இருக்கு.''
''தாங்க்ஸ் டா,'' என, ராஜேஷைத் தட்டிக் கொடுத்தான்.
''என்னிக்கு விக்ரம் கிளம்பற?''
''சண்டே நைட். வெள்ளிக்கிழமை, சுகந்தி அத்தையோட நினைவு நாள். ஆஸ்ரமத்துல அன்னதானம், முதியோர் இல்லத்துக்கு துணி எடுத்துக் குடுக்கணும். இத்தனை வருஷம் தவறாம செஞ்சுக்கிட்டு வரேனே! மிஸ் பண்ண முடியாது.''
''கரெக்ட்!''
இருவரும் சிகரெட்டை பற்ற வைத்து கொண்டனர்.
''விக்ரம், முதல்ல யார்?'' என்றான், ராஜேஷ்.
வானத்தை பார்த்து புகை ஊதிய படி, ''அம்பிகா -- மும்பை,'' என்றான், விக்ரம்.

மும்பை -
மழை பெய்து கொண்டிருந்தது. சாலையில், காரில் செல்பவர்களும், குடை, 'ரெயின் கோட்' என, முன்னெச்சரிக்கையுடன் கிளம்பியவர்களும் கவலைப்படாமல் போய்க் கொண்டிருந்தனர். மற்றவர்கள், ரோட்டின் இரு பக்கமும் கடை வாசல்களிலும், மரத்தடிகளிலும் முகத்தில் வழியும் மழை நீரை துடைத்து, மழை நிற்பதற்காக ஒதுங்கி காத்திருந்தனர்.
நீலம், மஞ்சள், பச்சை என, பல வண்ண தார்பாலினால் பொருட்களை மூடிவிட்டு நின்றிருந்தனர், சாலையோர வியாபாரிகள்.
'சர்வோதயா மெடிக்கல்ஸ்' வாசலில் நின்றிருந்த ஏழு பேருடன், அம்பிகாவும் நின்றிருந்தாள். தலையை துப்பட்டாவால் மூடிக்கொண்டிருந்தாலும், நிறைய நனைந்திருந்தாள். கடையின், 'ஆஸ்பெஸ்டாஸ்' கூரையிலிருந்து மழைநீர், அவள் இடது தோளில் விழுந்து கொண்டிருந்தது.
இடது கையில் பிடித்திருந்த பிளாஸ்டிக் பைலுக்குள், முக்கியமான ஆபிஸ் பேப்பர்ஸ் இருந்ததால், துப்பட்டாவின் மற்றொரு பகுதியை எடுத்து, இடது கையோடு சேர்த்து, பைலை மூடிக்கொண்டாள்.
'சே! மழை எப்ப நிக்கும்?' என, யோசித்தாள்.

அம்பிகா. 25 வயது. பளிச்சென்ற கலர். நல்ல உயரம். அவளை யார் பார்த்தாலும் பாலிவுட் நடிகை என்றோ, விளம்பர பட மாடல் என்றோ நினைப்பர்.
ஆங்காங்கே நின்றிருந்த இளைஞர்கள் சிலர், மேலே நிமிர்ந்து மேகமூட்டத்தை ஒரு முறையும், ஓரக்கண்ணால் அம்பிகாவை இரு முறையும் பார்த்து மகிழ்ந்து கொண்டனர்.
கொஞ்ச நேரத்தில் சாலை வெள்ளக்காடாக காட்சியளித்தது.
ஆபீசுக்கு நேரமாகிறது. போனை எடுத்து, 'ஆப்'பில், ஆட்டோவோ, டாக்ஸியோ, 'புக்' செய்ய முடியாத அளவிற்கு மழை விடுவதாக இல்லை. நனைந்தாலும் பரவாயில்லை என நடக்க ஆரம்பித்தாள், அம்பிகா.
கொஞ்ச துாரத்தில் கையை காட்டி, காலியாக வந்த ஆட்டோவை நிறுத்தினாள்.
''வர்சோவா மெட்ரோ ஸ்டேஷன்?''
''க்யா? கோவா ஸ்டேஷன்?''
அடிக்கும் மழையில் டிரைவருக்கு சரியாக கேட்கவில்லை.
''வர்சோவா! வர்சோவா மெட்ரோ ஸ்டேஷன்,'' மீண்டும் ஒரு முறை அழுத்தமாக கூறினாள், அம்பிகா.
''அச்சா! ஜாவ் மேடம்!''
மொத்தமாக நனைந்து ஆட்டோவில் ஏறினாள். டிரைவர் இருபக்கமும் தார்பாலின் தொங்கவிட்டார். அதிலிருந்தே மழைநீர் உள்ளே வந்து கொண்டிருந்தது.
அம்பிகாவின் மொபைல் ஒலித்தது.
முடிந்த வரை கையிலிருந்த ஈரத்தை, துப்பட்டாவால் துடைத்து, 'ஹேண்ட் பேக்'கில் இருந்து மொபைலை எடுத்தாள்.
''ஹலோ!''
''அம்பி! நர்மதா பேசறேன். எங்க இருக்க?''
''நல்ல மழைல மாட்டிக்கிட்டேன். இப்போ தான் ஆட்டோல வர்சோவா மெட்ரோ ஸ்டேஷனுக்கு வந்துகிட்டிருக்கேன்.''
''ஓலா கிடைக்கலியா?''
''போன எடுக்க கூட முடியல; அவ்வளவு மழை.''
''சரி ஓகே! கேர்புல்லா வா.''
''நர்மதா, நீ கிளம்பிட்டியா?''
''பாதி துாரம் வந்துட்டேன். ஏன்?''
''புல்லா நனைஞ்சிட்டேன். வேற, 'ட்ரெஸ்' வேணும்.''
''ஹ்ம்ம். சரி நான், 'ரெடி' பண்றேன். கூல் ஓகே!''
தன் பங்குக்கு, 'ரியர் வியூ' கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து, அம்பிகாவை பார்த்துக் கொண்டான், ஆட்டோ டிரைவர்.

மெட்ரோ ஸ்டேஷன் படிக்கட்டுகள் ஈரமாக இருந்தன.
'ஏர்போர்ட் ரோட்' மெட்ரோவிற்கு டோக்கன் வாங்கி, பிளாட்பாரத்தில் வந்து நின்றாள், அம்பிகா.
மழை நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது பரவாயில்லை என பலர் நினைப்பது, அங்கிருந்த கூட்டத்திலிருந்தே தெரிந்தது. அனைவரும் மொபைலில் பேசியும், அடிக்கடி ரயில் வரும் நேரத்தை, 'டிஜிட்டல் டிஸ்ப்ளே'யில் பார்ப்பதுமாக இருந்தனர்.
மணி, 10:15. எப்படியும் ஏர்போர்ட் அருகே, புதிய ப்ராஜெக்டின் முதலீட்டாளர்களை சந்தித்து விட்டு, தன் அலுவலகம் உள்ள, 'பான்ட்ரா குர்லா காம்ப்ளக்ஸ்' - பி.கே.சி., எனும் வர்த்தக - வணிக பகுதியை அடைய, குறைந்தபட்சம், இரண்டு மணி நேரம் ஆகிவிடும். இனியாவது காலை, 7:30 மணிக்குள் கிளம்பி விட வேண்டும் என, அம்பிகா நினைத்துக் கொண்டிருக்கையில், ரயில் வருவதற்கான அறிவிப்பு வந்தது.
பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் பரபரத்து தயாராயினர்.
அம்பிகா நின்றிருந்த இடத்திற்கு சற்று பின்னால் தள்ளி, 'ட்ரிம்'மாக, 'பார்மல் டிரெஸ்'சில், 'செமி ரிம்லெஸ்' கண்ணாடி அணிந்து, தலையை மேலே துாக்கி வாரி, அவளையே கவனித்துக் கொண்டிருந்தான், விக்ரம்.
தன் பாக்கெட்டில் இருந்து அம்பிகாவின் புகைப்படத்தை எடுத்து ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான்; அவளே தான்!
அம்பிகா ரயிலில் ஏறும் முன், அவள் பின்னால் வந்து நின்றான். அவள் வலது கையால் பையை, 'அட்ஜஸ்ட்' செய்து கொண்ட போது, அவளது முழங்கை, விக்ரம் முகத்தில் இடித்து, அவன் கண்ணாடி பிளாட்பாரத்தில் விழுந்தது.
மக்கள் கூட்டம் ரயிலில் ஏறுவதிலும், இறங்குவதிலும் பரபரப்பாக இருந்த நேரத்தில், அம்பிகாவும் ஏறினாள். கதவுகள் மூடிக்கொண்டன. ரயில் புறப்பட்டது.
ரயிலின் கண்ணாடி வழியே பார்த்த போது, கீழே விழுந்த தன் கண்ணாடியை விக்ரம் எடுத்து கொண்டிருப்பது தெரிந்தது. அவனை திரும்பி பார்த்து, 'ஸாரி' சொல்லக்கூட முடியாமல் போனதை நினைத்து சின்ன குற்ற உணர்வுடன், 'ஏர்போர்ட் ரோட்' நோக்கி போய்க் கொண்டிருந்தாள், அம்பிகா.
ரயிலின் வேகத்தில், அவள் பார்வையில் இருந்து மறைந்தான், அவன்.
'ரயில் பயணத்தில் தொடங்க வேண்டிய கதை! சரி பரவாயில்லை, கண்ணாடி உடைந்ததை வைத்து தொடங்குவோம்...' என நினைத்தபடி, ஸ்டேஷனை விட்டு வெளியேறினான், விக்ரம்.
பத்து நாள் ஆகியும், 'எங்கேயாவது அவன் கண்ணில் படுகிறானா? ஸாரி சொல்லலாம்...' என, அம்பிகா தேடிய போதும், அவனைக் காணவில்லை. அவன் ஞாபகம் மட்டும் அவளுக்கு தினமும் வந்து கொண்டே இருந்தது.
தொடரும்.
கோபு பாபு

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202114:15:42 IST Report Abuse
bala கையால் பையை சரி செய்யும்போது பின்னால் நின்றவர் முகத்தில் இடிக்குமா? அந்தப் பெண் ஏழடி உயரமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
Rate this:
Cancel
Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ
26-செப்-202110:41:45 IST Report Abuse
Govindaswamy Nagarajan இருவரும் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டனர்= வானஇதைப்பார்த்து புகை ஊதியபடி === ஆரம்பமே சரி இல்லை === தெய்வ பக்தி === பிறர்க்கு தொண்டு செய்வது === சிகரெட் பிடிப்பது === மோசமான கதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X