இமயமலையில் மிகப்பெரிய இலவ மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் சுற்றளவு, ஏறத்தாழ, 600 அடிகள்; பறவைகள், விலங்குகள், வழிப்போக்கர்கள், காட்டில் தவம் செய்வோர் என அனைவரும், அந்த மரத்தைச் சுற்றி தங்கி, ஓய்வெடுத்து-, உறங்கி பலனை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
அந்த இலவ மரத்தைப் பார்த்தார், நாரதர்.
மன மகிழ்ச்சியோடு அதை நெருங்கி, 'இலவ மரமே... அழகோ அழகு நீ... எத்தனை பேருக்கு நீ உதவுகிறாய்... அற்புதம்! என் மனதை இழுத்து விட்டாய். அது சரி, உன்னுடைய பெரும் கிளைகளையும், காய்களையும் காற்று முறிக்கவில்லையே; அது ஏன், வாயு பகவான் உனக்கு நண்பனா?' என, கேட்டார்.
இலவ மரத்திற்கு பெருமை தாங்கவில்லை.
'நாரதரே நம்மை பாராட்டி விட்டார். நாம் பெரீய்ய ஆள்தான்...' என எண்ணி, 'நாரதரே... வாயு பகவான் எனக்கு நண்பனில்லை. சொல்லப் போனால், அந்த வாயு பகவானுக்குத்தான் என்னைக் கண்டால் பயம். அவனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.
'என் சக்தியில், 18ல், ஒரு பங்கு கூட, வாயு பகவானுக்கு கிடையாது. காற்றை என் சக்தியால் அடக்கி வைத்திருக்கிறேன். ஆகையால் காற்றின் கோபம், என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் பயப்பட மாட்டேன்...' என்று, அகங்காரமாய் பதிலளித்தது.
'இலவ மரமே, அகங்காரம் உன் கண்ணை மறைத்து விட்டது. அதனால் தான் வாயு பகவானை, நீ இழிவாகப் பேசி விட்டாய். வாயு பகவான் இல்லையென்றால், எந்த ஜீவராசியும் உயிருடன் வாழ முடியாது. உன்னை விட உயர்ந்த பலமுள்ள மரங்கள் கூட, உன்னைப் போல் அகம்பாவமாகப் பேசியதில்லை. இப்போதே போய், வாயு பகவானிடம் சொல்கிறேன்...' என்றார், நாரதர்.
இலவ மரம், தன் வீம்பை விடவில்லை.
'சொல்லுங்கள்... வாயு பகவானால் என்னை ஒன்றும் செய்ய முடியாது...' என்றது.
வாயு பகவானிடம் நடந்ததை கூறினார், நாரதர். அதைக்கேட்ட வாயு பகவான், உடனே இலவ மரத்திடம் வந்து, 'வீம்பு பிடித்த மரமே... சிருஷ்டியின் போது, பிரம்மதேவர், ஒருமுறை உன் அடியில் அமர்ந்தார். அந்த மரியாதைக்காகவே உன்னை விட்டு வைத்திருக்கிறேன்...' என்று, அறிவுரை சொன்னார்.
அப்போதும், எகத்தாளமாக பேசியது, இலவ மரம்.
'என் சக்தியை நாளை காட்டுகிறேன்...' என்று சொல்லிச் சென்றார், வாயு பகவான்.
அவர் போனதும், 'என்ன இருந்தாலும், நாரதரிடம் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. வாயுவின் பலம் எங்கே, என் பலம் எங்கே? வாயு பகவான் வருவதற்குள் எதையாவது செய்து, சமாளிக்கப் பார்க்கிறேன்...' என்று சொல்லி, இலை, கிளைகளை தானாகவே கீழே தள்ளிவிட்டு, மொட்டை மரமாக நின்றது.
மறுநாள் காலை, சீற்றத்தோடு இலவ மரத்தை நெருங்கி, 'நான் உனக்கு செய்ய வேண்டிய சேதத்தை, நீயாகவே செய்து கொண்டு விட்டாய்...' என்றார், வாயு பகவான்.
இலவ மரம் வாயடங்கி இருந்தது. அகம்பாவமும், வீம்பும் என்ன செய்யும் என்பதை விளக்கும் இக்கதையை பாண்டவர்களுக்குச் சொன்னார், பீஷ்மர்.
பி. என். பரசுராமன்