தன் நெஞ்சே தன்னைச் சுடும்
சில கதைகளை எங்கே ஆரம்பிப்பது என்பதில் குழப்பம் இருக்கும். சிலவற்றில் முடிவு பற்றி தடுமாற்றம் இருக்கும். இந்த கதை கூட அப்படிப்பட்ட ஒரு கதை தான்.
அவனை நான் முதன் முதலாக சந்தித்தது, 'சைக்கியாட்டிரிஸ்ட் க்ளினிக்'கில். 'கவுன்சிலிங்'கிற்காக வந்திருந்தான். அவன் பெயர், கண்ணன்.
டாக்டர் கேள்வி கேட்பதற்கு பதிலாக, இவன், கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனை அனுப்பிவிட்டு என்னிடம், ''வினிதா... இது ஒரு புது மாதிரி கேஸ்...'' என்றார், டாக்டர்.
அதற்குள் ஒரு நிமிடம், என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். என் பெயர், வினிதா. டாக்டர் பூபதியிடம் உதவியாளராக பணிபுரிகிறேன். வயது: 35. இன்னும் திருமணமாகவில்லை. இருங்கள், அதற்குள் கற்பனையை ஓட விடாதீர்கள். டாக்டருக்கு வயது: 50. திருமணமாகி, 10 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். போதுமா?
சுய அறிமுகம் போதும். சரி, வாருங்கள்... கண்ணனை பற்றி பார்ப்போம். அவனுக்கு, வயது, 20க்குள் தான் இருக்கும். 'பேஷன்ட்' என்கிற மாதிரி, எந்த அடையாளமும் இல்லை. ஆனால், அவன் பேஷன்ட். மனச் சிதைவுக்கு ஆளாகியிருப்பதாக கூறினார், டாக்டர்.
இந்த, 20 வயதிற்குள் நிறைய படித்து, நிறைய யோசித்து, நிறைய ஊர் சுற்றி சித்தனானவன்.
'நான் சாமியாராகப் போகிறேன்...' என்று போனவனை, அவன் பெற்றோர் இழுத்து வந்து, 'கவுன்சிலிங்' செய்து, சரியாக்க பார்க்கின்றனர்.
நான் கண்ணனின் சிகிச்சைக்கு பொறுப்பேற்றேன்.
''இதோ பார் வினிதா... 'வயலன்ட்' ஆக மாட்டான், கண்ணன். அவனுள் நிறைய கேள்விகள், அதற்கு பதில் தேவை. பொறுமையாக நீ, அவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்,'' என்றார், டாக்டர் பூபதி.
''யெஸ் டாக்டர்,'' என்றேன்.
அன்று -
கண்ணனுடன், 'வாக்' சென்றேன்.
''மேடம், ஆகாயம் ரொம்ப அழகு இல்லை?''
''உம்...''
''ஆகாயமும் நீல நிறம், கடலும் நீல நிறம். ஆனா, ஆகாயம் உயரத்துலே இருக்கே... ஏன்?''
''கண்ணா... இது இயற்கை. கடல்லே இருந்த தண்ணீர் தான் மேகமா மாறி ஆகாயம் போகிறது. அதனால் தான் இதுவும் நீலமா இருக்கு.''
ஏதோ புத்திசாலித்தனமாக சொல்லிவிட்டோமென்ற நிம்மதி.
''அப்போ, பாற்கடலும் நீலமாத்தான் இருக்குமா?''
திகைத்தேன்.
''அது புராணம்; மகாவிஷ்ணு பள்ளிகொள்ளும் இடம். அது, வைகுண்டத்துலே இருக்கு. 'பாற்கடலின் மீது பாம்பணையின் மீது பள்ளி கொண்டாய் ரங்கநாதா'ன்னு ஒரு பாட்டு இருக்கு தெரியுமா?''
''வ்ரஜா நதி கூட இங்கே இல்லை தெரியுமா?''
''உனக்கெப்படி வ்ரஜா நதி பத்தி தெரியும்?''
''நான் நிறைய படிப்பேனே!''
'இவனிடம், இனி, ஜாக்கிரதையாக பேச வேண்டும். நானும் நிறைய படிக்க வேண்டும்...' என, நினைத்துக் கொண்டேன்.
''வானம்ங்கிறது என்ன மேடம்... வானவில்னா என்ன?''
''ஆகாயத்துலே மழை வரதுக்கு முன்னால, வானத்துலே தெரியற வண்ணக்கோலம் தான், வானவில். அது, நிறங்களின் அணிவகுப்பு!''
''வெள்ளையும் ஒரு நிறம் தானே... அது ஏன் அதுலே இல்லை?''
ஒரு கணம் நான் திகைத்தேன். கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டால், 'சும்மா இரு...' என்று, குழந்தைகளை திட்டுவது போல், இவனைத் திட்ட முடியாது. இவன், 'பேஷன்ட்' கண்ணனா அல்லது கீதோபதேச கண்ணனா?
''கண்ணா... வெள்ளைக்கு தனக்கென்று தனி நிறம் கிடையாது. அது எந்த நிறத்தோடு வேண்டுமானாலும் ஒத்துப்போகும். செம்மண் நிலத்தின் வழியே பாய்ந்தால், சிகப்பாக; களிமண் நிலம் வழியே வந்தால், அழுக்காக தெரியும்.''
''மனித மனமும் இப்படித்தானே மேடம்... சூழ்நிலை பொறுத்து மனம் மாறும் இல்லையா?''
''பிறப்பு வேறு, சூழ்நிலை வேறு. கொலைகாரன் மகன் கூட நல்லவனாகலாம், நல்லவன் கூட கொலைகாரனாக மாறலாம். பிறப்பிலே எல்லா உயிரும் ஒரே மாதிரி தான். ஆகாயத்திலிருந்து விழுகிற மழைத்துளி தான் முத்தாகிறது. அதுவே கடலில் வீழ்ந்தால் உப்பாகிறது.
''ஒரே மரத்தில் பூத்த இரு மலர்களில் ஒன்று, ஆண்டவன் காலடி சேருகிறது. இன்னொன்று, சவத்தின் மாலையாகிறது. அது விதி!''
ஏதோ பதில் சொல்லி விட்டேனே தவிர, என் மனம் ஏனோ தடுமாறியது.
இந்தக் கண்ணன் கீதோபதேசக் கண்ணனா? நான் அர்ஜுனனா? குருஷேத்திரம் காத்திருக்கிறதா?
இன்னொரு நாள், ''மேடம்... நதிகளை பெண்களுக்கு உவமையாகச் சொல்றாங்களே,'' என கேட்டான், கண்ணன்.
''ஆமாம் கண்ணா... பெண்களை போல் கனிவானது, நதி. தாய்மைக்கு நிகரானது. அதைத் தேடி வருபவர்களின் தாகத்தைத் தணிக்கிறது. மனிதன், விலங்குன்னு எந்த பாகுபாடும் கிடையாது.''
''அப்போ நதியிலே வெள்ளம் வந்தா... கடல்லே சுனாமி வந்தா... அதுக்கு பேர் கோபமா?''
''அது, இயற்கை சீற்றம். இயல்பானது.''
''அப்போ, கோபம் தப்பில்லை. மனிதனுக்கும் கோபம் வரலாம்.''
''வரலாம்... ஆனா, மனிதனுக்கு எல்லை உண்டு. அவன் கற்றவன். சரி... வீணா வேண்டாததை எல்லாம் யோசிக்காதே.''
நான் யோசித்தேன், கண்ணனுக்குள் ஏதோ ரகசியம் இருக்கிறது.
'அவன் வயலன்ட் ஆக மாட்டான்' என்ற டாக்டரின் கூற்று, ஒருநாள் பொய்த்து விடுமோ என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது. டாக்டரிடம் இதுபற்றி கூற வேண்டும்.
கண்ணனிடம் மாறுபட்ட இரு குணச்சித்திரங்கள் ஒளிந்திருப்பதாகத் தெரிந்தது. இது, 'ஸ்பிலிட் பர்சனாலிடியா?' இவன் காட்டு வெளியிடை, இருட்டில் வெளிச்சம் காட்ட வந்த வழி காட்டியா, மாறிப்போன வழியை சரியாக்கும் திசைகாட்டும் பலகையா... யார் இவன், இந்த முரண்பாடுகள் ஏன்? துரியோதனன், துஷ்டன். ஆனால், நட்பின் இலக்கணமாக இருந்தான்.
ராவணன், காமாந்தகாரகன். ஆனால், தன் தலையை பலி கொடுத்து, யாகம் செய்த சிவ பக்தன். எல்லா மனிதர்களிடமும் முரண்பாடுகள் ஒளிந்து தான் கிடக்கின்றன. இவனும் அப்படித் தானோ?
'மெடிக்கல் கான்பிரன்ஸ்'க்காக டாக்டர், டில்லி போக, எனக்கு இது பற்றி கூற நேரமே கிடைக்கவில்லை.
அன்று -
டாக்டர் திரும்பி வந்த செய்தி தெரிந்து, க்ளினிக் கிளம்பினேன். வழியில், 'ப்ளவர் ஷாப்' ஒன்றில், 'பொக்கே' வாங்கி கொண்டேன்.
க்ளினிக் வாசலில் ஏகக் கூட்டம். காவல் துறை வேன் காத்திருந்தது.
'ஏன், என்னவாயிற்று... கண்ணன் எங்கே?'
டாக்டர் பூபதியின் மனைவி அழுதுகொண்டே வர... காவல் துறை ஆட்கள் பின்னால் வர... டாக்டர் இறந்து போனாரா... நான் பிரமிப்புடன் பார்த்தேன்.
கைவிலங்கிட்ட டாக்டரை, காவல் துறை அழைத்து வந்தது.
என்ன நடக்கிறது இங்கே?
கதறியபடி கண்ணனின் பெற்றோர் வர...
''குணப்படுத்துவார்ன்னு தான் இங்கே கண்ணனை சேர்த்தோம்... இப்படி கொலை பண்ணுவார்ன்னு நினைக்கலையே!''
நான் திகைத்தேன். டாக்டர், கண்ணனை கொலை செய்தாரா...
கையிலிருந்த, 'பொக்கே'யை குப்பைத் தொட்டியில் போட்டேன்.
வழக்கு நடந்தது. தன்னை கொல்ல வந்த கண்ணனை தற்காப்புக்காக தாக்கியதாகவும், அதனால், அவன் மாண்டதாகவும் டாக்டர் தரப்பு வாதம் செய்தது.
இரண்டு முறை டாக்டரை பார்க்க சிறைச்சாலைக்கு சென்றேன். பார்க்க மறுத்து விட்டார்.
'பூமி நீல நிறம், ஆகாயமும் நீல நிறம்...' கண்ணன் என்னுள் பேசினான்.
கண்ணா, விஷம் கூட நீல நிறம் தான். அதைப் பருகியது யார்?
என் மனம் நிம்மதி இழந்து தவித்தது. க்ளினிக் சாவியை டாக்டரின் மனைவியிடம் ஒப்படைத்து, விடை பெற்றேன்.
என்னைச் சுற்றி கண்ணனின் கேள்விகள். எதற்கும் என்னிடம் விடையில்லை.
இவை எல்லாம் நடந்து முடிந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
அன்று -
கொரியர் தபால் வந்தது. எங்கிருந்து வந்திருக்கும் என்று பார்த்தேன்.
இது, டாக்டரின் கையெழுத்து தான். பரபரப்புடன் பிரித்தேன். அதில்:
அன்புள்ள வினிதா...
எனக்கு விடுதலையாம். சீக்கிரம் வெளியே வந்து விடுவேன். ஆனால், நான் வர விரும்பவில்லை. யாரையும் சந்திக்க விரும்பவில்லை. என் மனதின் பாரத்தை யாரிடமாவது சொல்ல ஆசைப்படுகிறேன். சாவதற்கு முன், என் சுமையை இறக்கி வைக்க வேண்டும்.
நான் மன்னிக்கப்பட வேண்டியவன் இல்லை; தண்டிக்கப்பட வேண்டியவன்.
ஆமாம், நான் தான் கண்ணனை கொலை செய்தேன்.
காரணம் புரிந்து கொள்ள, கறுப்பு வெள்ளை காலத்துக்கு வர வேண்டும்.
என் மாமாவின் பெண், தேவகி. வசதியாக வாழ்ந்தவர்கள். கடனால் சூறையாடப்பட்ட பின், ஏழையாக என் வீட்டிற்கு வந்தாள்.
ஆரம்பத்திலிருந்தே எனக்கும், தேவகிக்கும் என்று பெரியவர்கள் நிச்சயித்திருந்ததால், நாங்கள் சற்று அதிகமாகவே நெருங்கிப் பழகினோம். ஆனால், காலப்போக்கில் என் தாய் மனம் மாற, நான் ஊரிலில்லாத ஒருநாள், வெளியேற்றப்பட்டாள், தேவகி. நான் திரும்பி வந்து தேவகியை தேட, அனாதை ஆஸ்சிரமத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்று போட்டு தேவகி, மரணித்தாள்.
நான் போனபோது, அந்தக் குழந்தையையும் தத்து கொடுத்து விட்டனர். ரிஜிஸ்தரில் தந்தை பெயர், பூபதி என்கிற என் பெயர்.
புராண தேவகி மைந்தன் மாதிரி, என் மகனும், பிறந்த இடம் ஒன்றாக, வளர்ந்த இடம் ஒன்றாக...
நான் விரக்தியுடன் திருமணமே வேண்டாமென்று தான் இருந்தேன்.
தாயின் மரணப் படுக்கை, என் திருமணம், அதையடுத்து பெண் குழந்தை. மனைவியும், மகளும், என்னை தங்கள் தெய்வமென்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தான், 'பேஷன்ட்' ஆக, என்னிடம் வந்து சேர்ந்தான், கண்ணன்.
ஆரம்பத்தில் எனக்கும் தெரியவில்லை. ஆனால், 'கேஸ் ஹிஸ்டரி'க்காக கண்ணனின் பெற்றோர் தந்த, 'பைலை' படித்தபோது, கண்ணன் என் பிள்ளை என்று புரிந்தது. அவர்கள் தத்தெடுத்த பெற்றோர். ஆனால், கண்ணனுக்கு எப்படியோ உண்மை தெரிந்திருக்கிறது.
என்னை சந்திக்கவே, 'பேஷன்ட்'டாக இங்கு வந்ததும் தெரிந்தது. என்னிடம் நியாயம் கேட்டான். தன்னை மகனாக ஏற்க வேண்டினான். கையில் கத்தியை வைத்துக் கொண்டு பயமுறுத்தினான்.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் மனைவிக்கு நான் தெய்வம். ஊர் உலகத்திற்கு நான் ஒரு நேர்மையானவன். உனக்கு நான் நல்ல ஆசான். ஆனால், எனக்கு நானே விரோதி. மனமறிந்து நான் சொன்ன பொய். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.
என்னை மன்னித்து விடு... உன், 'பேஷன்ட்டை' நான் தான் கொன்றேன்.
டாக்டர் பூபதி.
இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் திகைத்தேன். அன்று மாலையே செய்தித்தாளில் ஒரு செய்தி. கொலை குற்றம் சாட்டப்பட்டு, அடுத்த வாரம் விடுதலையாகி வெளியே வர இருந்த டாக்டர் பூபதி, சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் புலன் விசாரணை செய்கின்றனர்.
என் எல்லா கேள்விகளுக்கும் விடையாக, கண்ணனே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான்.
'கண்ணா!' நான் அழுதேன். திக்குத் தெரியாத காட்டில் கண்ணனைத் தேடிய பாரதியாக, நான்.
மானவதி