எங்கு போவது என்று தெரியாமல், கால் போன போக்கில், தள்ளாடியபடி நடந்த வேலுச்சாமி, தலையை துாக்கி சூரியனைப் பார்த்தார்.
'நடுப்பொழுது இருக்கும் போலிருக்கே...' என்று மனதுக்குள் சொல்லியப்படியே நடையை வேகப்படுத்தியவரின் மனது, மனைவி பொன்னுதாயியை நினைத்தது. பசி என்று சொல்வதற்கு முன், ஒரு கையில் சாப்பாடும், மறு கையில் தண்ணியுமாக எதிரில் நிற்பவள்.
வேலுச்சாமி ஒரு விவசாயி. வீடு, நிலம், கிணறு, தோப்பு என்று நன்றாக வாழ்ந்தவர். கள்ளம், கபடமில்லா மனிதர். இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள், மனைவி பொன்னுதாயி என்று சந்தோஷமாக வாழ்ந்தவர்.
இப்போது, மனைவி பொன்னுதாயும் இல்லை; அவரிடத்தில் நிலம், வீடு என்ற சொத்துகளும் இல்லை. பிள்ளைகளுக்கு கல்யாணம் முடித்தவுடன், மனைவி தடுத்தும் கேட்காமல், சொத்துகளை அவர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டார். ஆனால், 'தெரியாமல் கொடுத்து விட்டோமே...' என்று, இப்போது கவலைப்படுகிறார்.
பொன்னுதாயி இறந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தனர், பிள்ளைகள். நாளடைவில் இவரை வைத்து பராமரிக்க, நான், நீ என்று போட்டி போட, அங்கிருந்து வெளியேறி, இப்போது எங்கு போவது என்று தெரியாமல், நடந்து கொண்டிருந்தார், வேலுச்சாமி.
எங்கிருந்தோ ஆல மரத்தின், 'ஜில்'லென காற்று வீசியது. ஏதோ ஒரு ஊர் எல்லைக்கு வந்துவிட்டதை உணர்ந்து, இன்னும் வேகமாக நடையை போட்டார். ஆல மரத்தை சுற்றி பெரிய திண்ணை இருந்தது. அதில் அமர்ந்தார், வேலுச்சாமி.
அப்போது, காற்றில் பறந்து வந்த ஆல மரத்தின் இலை ஒன்று, அவர் தோள் மீது விழுந்தது. அந்த நொடி, அவருக்கு எதோ ஓர் இனம் புரியாத ஸ்பரிசத்தை கொடுத்தது.
இலையில், பொன்னுதாயின் முகம் சிரித்தபடி, 'அழாதய்யா... உனக்கு நான் இருக்கிறேன்...' என்று சொல்வது போல் இருந்தது.
தைரியமும், தன்னம்பிக்கையும் வந்தது.
திண்ணையில் சாய்ந்தவர், சற்று நேரத்தில் உறங்கிப் போனார்.
சூரியன் அஸ்தமிக்கும் நேரம், பேச்சு சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்தார். நாலு பேர், இவரையே பார்த்தவாறு வந்தமர்ந்தனர்.
''யாருய்யா நீ இங்க உக்காந்து இருக்க?'' என்று கேள்வி எழுப்பினார், ஒருவர். அவர் பெயர், சபாபதி.
''நா வெளியூருங்க. நடந்து வந்த களைப்புல கொஞ்சம் கண்ணசந்துட்டேன்.''
''சரி, நீ எங்கிருந்து வருகிறாய்... குடும்பமெல்லாம் இருக்கா...'' என்று, அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு, ஏதோ புரிந்தாற்போல, ''காசு இருக்கற வரைக்கும் நம் கூட இருக்கும் சொந்தம். ஒண்ணும் இல்லன்னு தெரிஞ்சதும், வெளியில நிறுத்திடுவாங்க... அட போப்பா... குடும்பம், சொந்தம் எல்லாம் வெறும் வேஷம்,'' என்று, வெறுத்து பேசினார், சபாபதி.
தங்களைப் போலவே வேலுச்சாமியும் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டவர் என்று தெரிந்ததும், அவரை தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
அப்போது, வேகமாக காற்று வீசியதில், ஆல மரத்தின் இலை, வேலுச்சாமியின் தோள் மீது மறுபடியும் வந்து அமர்ந்தது. மீண்டும் அதே ஸ்பரிசம், இலையில் பொன்னுதாயின் முகம்...
கண்கலங்கியபடி, உற்று நோக்கியவர், சட்டென்று துண்டை உதறி தோளில் போட்டவாறு, கட கடவென்று காற்றில் விழுந்து கிடந்த ஆல இலைகளை சேகரித்தார். கொஞ்ச துாரம் நடந்து, வயல் ஓரங்களில் நன்கு வளர்ந்திருந்த பூமர குச்சிகளை எடுத்து வந்தார்.
ஒவ்வொரு இலையாக அடுக்கி, பூமரகுச்சிகளை அதில் இணைத்து, தட்டு போன்ற வடிவத்தில் தைக்க ஆரம்பித்தார்.
பொழுது புலர்ந்தது. தான் தைத்திருந்த, 50 இலைகளை எடுத்து, நடக்க ஆரம்பித்தார். அப்போது, சில இளைஞர்கள் எதிரில் வந்தனர். இவர்களும் அந்த ஆல மரத்தின் நிழலில் பொழுது போக்குபவர்கள் தான்.
''என்ன பெருசு... எங்க கிளம்பிட்ட, அங்கு இருந்தவங்க உன்ன கிளப்பிட்டாங்களா,'' என்று, கேலி பேசினான், இளைஞர்களில் ஒருவன்.
''அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா,'' என்றபடியே, ''தம்பி, இங்கிருந்து டவுனுக்கு எவ்வளவு துாரம்,'' என்றார், வேலுச்சாமி.
''நாலு கல் துாரம்,'' என்றான், ஒருவன்.
வேக வேகமாக நடையை போட்டு, டவுனை அடைந்தார். அங்கிருந்த, சிறிய மளிகை கடைக்காரரிடம், ''ஐயா, நா வெளியூரு... கொஞ்சம் இலை தைச்சு எடுத்து வந்துருக்கேன். அதை எடுத்துக்கிட்டு காசு குடுத்தா நல்லாயிருக்கும்,'' என்று மிகவும் தனிந்த குரலில் சொன்னார், வேலுச்சாமி.
''என்னது, இலையா... எங்க காட்டு,'' என்று கேட்டார், உரிமையாளர்.
ஆலம் இலையில் தட்டு வடிவத்தில் அழகாக தைத்து இருந்ததை எடுத்து காட்டினார்.
''எங்கய்யா, இப்பவெல்லாம் பேப்பர்ல இலை வந்துடுச்சு... இதெல்லாம் யார் வாங்க போறாங்க... சரி சரி, குடுத்துட்டு போங்க; விற்பனை ஆகுதா பார்க்கலாம்... இதற்கு, 50 ரூபா தான் குடுப்பேன்,'' என்றார், கடை உரிமையாளர்.
''சரி, குடுங்கய்யா!''
'இந்த ஒரு பொழுது வயிறு நிறையும்...' என்று மனதில் நினைத்தவாறு, காசை பெற்று, பக்கத்து கடையில் நாலு இட்லி வாங்கி சாப்பிட்டார்.
சபாபதியும், மற்றவர்களும் அவர் நினைவில் வந்தனர். அவர்களுக்கும் கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி, வேகமாக நடந்து, ஆல மரத்தடிக்கு வந்தார்.
அதற்குள், அங்கிருந்தவர்கள் இவரை காணாமல் தேடிக் கொண்டிருந்தனர்.
அவரை பார்த்தவுடன், 'என்னய்யா... எங்க போயிட்டே...' என்று கேட்டனர்.
''பொழப்பு பார்த்துட்டு வருகிறேன்,'' என்றார், வேலுச்சாமி.
''என்னய்யா சொல்ற!'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டார், சபாபதி.
தான் வாங்கி வந்த தின்பண்டங்களை அவர்களிடம் கொடுத்தார், வேலுச்சாமி.
இலை தைத்து கடையில் போட்டு காசு வாங்கினது முதல், அவர்களுக்கு தின்பண்டம் வாங்கினது வரை சொன்னார்.
இதை கேட்டவுடன், வாயடைத்து போன அவர்களுக்கு, வேலுச்சாமி மேல் மதிப்பும், மரியாதையும் வந்தது. கண் கலங்கினார், சபாபதி.
வேலுச்சாமிக்கும் அவர்கள் மேல் பரிதாபம் கலந்த பாசம் எழுந்தது. காலை பொழுது சூரியன் மெதுவாக மேலே வந்து கொண்டிருந்தது. சல சலவென பேச்சு சத்தம் கேட்டு, கண் திறந்தார், வேலுச்சாமி.
''சீக்கிரமா போகணும் எழுந்திரிங்க... முருகா, நீ நேரா வடக்க போ... கோவிந்தா, நீ கிழக்க போ,'' என்று, கட்டளையிட்டு கொண்டிருந்தார், சபாபதி
இதை கவனித்த வேலுச்சாமி, மெல்ல எழுந்து, ''எங்க போறீங்க?'' என்று கேட்டார்.
''நாங்க எங்கப்பா போவோம்... எங்க தொழில், கை நீட்டி காசு கேட்பது... எங்களுக்கு என்ன உன்ன மாதிரி இலை தைக்க தெரியுமா,'' என்றார், சபாபதி.
''உங்க எல்லாருக்கும் இலை தைக்க, நான் சொல்லித் தரேன். நாம எல்லாரும் சேர்ந்தா நிறைய இலை தைக்கலாம்; காசு நிறைய வரும்; பங்கு பிரிச்சி எடுத்துக்கலாம். கடவுள் கொடுத்த கையும், காலும் இருக்கும்போது, பிச்சை வாங்கி சாப்பிடணுமா... வேண்டாம், உழைத்து சாப்பிடலாம்,'' என்றார்.
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து. ஒரு முடிவுக்கு வந்தவர்களாக, 'சரி... நீங்க சொல்ற மாதிரி நாங்க கேட்கறோம்; எங்களுக்கும் இலை தைக்க கற்று கொடுங்க...' என்றனர்.
ஆல மரத்தின் இலைகளையும், பூமரகுச்சிகளையும் சேகரித்தனர்.
எல்லாரையும் அமரச் செய்து, ஆலம் இலைகளை ஒவ்வொன்றாக அடுக்கி, குச்சிகளை வைத்து எப்படி கோர்க்க வேண்டும் என்பதை சொல்லி கொடுத்தார், வேலுச்சாமி.
அப்போது அங்கு வந்த இளைஞர்கள், 'பெரிசுங்க எல்லாம் ஒண்ணா உட்கார்ந்து என்ன பண்றீங்க?' என்று கேட்டு, கிண்டல் செய்தனர்.
''என்னப்பா செய்யிறது... எங்க பொழப்புக்கு ஏதாவது செய்யணும்ல. இந்த இலைகளை தைத்து, பக்கத்து டவுன் கடையில் கொடுத்து, காசு வாங்கி, அதில் எங்கள் வயிற்றுப் பசியை போக்கிகலாம்ன்னு இருக்கோம்,'' என்றார், வேலுச்சாமி.
இதை கேட்டதும், இளைஞர்கள் இவர்களை ஆச்சரியத்துடனும், அதேசமயம் கொஞ்சம் வெட்கத்துடனும் பார்த்தனர்.
'சரி, நாங்க எதாவது உதவி செய்யணுமா...' என்றனர்.
''தம்பிகளா... ஆல மரத்து கிளைகளை கொஞ்சம் ஒடித்து கொடுங்க,'' என்றார்.
'இதோ...' என்று மட மடவென்று இரண்டு கிளைகளை வெட்டி சாய்த்தனர்.
'நன்றி தம்பிகளா...' என்று சொல்லி, வேலையில் இறங்கினர்.
''சீக்கிரமா வேலைய பாருங்க... உச்சி பொழுதுக்குள்ள, 100 இலையாவது தைக்கணும்,'' என்று அவசரப்படுத்தினார், வேலுச்சாமி.
'இதோ முடிச்சிடறோம்...' என்று ஆர்வத்துடன் வேலை செய்தனர், மற்றவர்கள்.
அவர்கள் அழகாக இலை தைத்து இருப்பதை பார்த்து, ''ரொம்ப நல்லா தைத்து இருக்கீங்க,'' என்று அவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுத்தார், வேலுச்சாமி.
தைத்த இலைகளை எண்ணிய போது, 200க்கு மேல் இருந்தது.
''சரி வாங்க... கிளம்பலாம்,'' என கூறுகையில், டீயும், பன்னும் வாங்கி ஓடி வந்த இளைஞர்கள், 'பெரியவர்களே, இதை சாப்பிடுங்க...' என்றனர்.
'பெருசு' என்ற வார்த்தை போய், 'பெரியவரே' என்று மரியாதை வந்ததில், நெகிழ்ந்து போயினர்.
வேகமாக டீயும், பன்னும் சாப்பிட்டு, புது தெம்புடன் இலைக்கட்டை துாக்கி, டவுனை நோக்கி வேகமாக நடையை கட்டினர்.
'வேறு எதாவது பெரிய கடையாக பார்ப்போம். இலை நிறைய இருக்கிறது வாங்க வேண்டுமே...' என்று நினைத்து, நேற்று கொடுத்த மளிகை கடையை தாண்டி, அவர்களுடன் போக ஆரம்பித்தார், வேலுச்சாமி.
''ஐயா பெரியவரே,'' என்று உரக்க கூப்பிட்டார், கடை உரிமையாளர்.
சத்தம் கேட்டு திரும்பியவர், ''என்னங்க?'' என்றார்.
''எங்கய்யா, பார்த்தும் பார்க்காத மாதிரி போற?''
''ஏங்க?'' என்றார், வேலுச்சாமி.
''அட போப்பா, நீ கொண்டு வந்து கொடுத்த நேரமும், வித்த நேரமும் தெரியல... எல்லாரும், 'ரொம்ப நல்லா இருக்கு... அந்த தட்டு இலையை குடுங்க'ன்னு கேக்கறாங்க. இலை கட்டு எடுத்துட்டு வந்தீகளா?'' என்று கேட்டதும், வேலுச்சாமிக்கும், மற்றவர்களுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.
''எடுத்து வந்துருக்கோம்... 200க்கு மேல இருக்கும்,'' என்றார்.
''சரி சரி... கொடுங்க,'' என்று இலைக்கட்டை வாங்கி, அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே பணத்தை கொடுத்தார், கடை உரிமையாளர்.
பணத்தை வாங்கி, சபாபதியிடம் கொடுத்து, ''எல்லாருக்கும் பகிர்ந்து குடு,'' என்றார், வேலுச்சாமி.
சபாபதிக்கும் மற்றவர்களுக்கும் கண்களில் நீர் எட்டி பார்த்தது.
''ஐயா, நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாகுது,'' என்று சபாபதி கூறியதும், ஹோட்டலுக்கு சென்றனர். பல கதைகள் பேசி, சந்தோஷமாக சாப்பிட்டனர்.
அப்போது, வேலுச்சாமிக்கு அந்த இளைஞர்கள் ஞாபகம் வந்தது. அவர்களுக்கும் கொஞ்சம் தின்பண்டங்கள் வாங்கி, ஆல மரத்தடிக்கு வந்தனர்.
ஆலமரத்தடிக்கு அவர்கள் வருவதற்கும், அந்த இளைஞர்கள் வருவதற்கும் சரியாக இருந்தது.
''என்ன பெரியவரே... போனீங்களே என்னாச்சு,'' என்று கேட்டான், ஒருவன்.
''இந்தாங்கப்பா... முதல்ல இதப்பிடிங்க,'' என்று, தான் வாங்கி வந்த தின்பண்ட பையை அவர்களிடத்தில் கொடுத்த வேலுச்சாமி, ''நாங்க எடுத்துட்டு போன இலை கட்டுக்கு, எதிர்பார்த்ததை விட நல்ல விலை கிடைச்சது. சும்மா சாப்பிடுங்கப்பா,'' என்றார்.
''அடுத்து என்ன செய்ய போறீங்க... இலை தைத்து இங்கேயே இருக்க போறீங்களா,'' என்று கேட்டான், ஒருவன்.
''அதான் தம்பி எனக்கும் புரியல. இது, ஊருக்கு பொதுவான இடம்; நிரந்தரமா இங்கே தங்கி வேலை செய்யறது நல்லா இருக்காது,'' என்றார், வேலுச்சாமி.
''ஐயா, எங்களோட பழைய வீடு ஒண்ணு இருக்கு; நீங்க அங்க வந்து தங்கி வேலை பாருங்க... நா எங்கப்பாகிட்ட சொல்றேன்,'' என்று சொன்னான், பண்ணையார் மகன்.
''தம்பி, இதனாலே உனக்கு எதாவது பிரச்னை வரப்போகுது,'' என்றார், வேலுச்சாமி.
''ஐயா... இவன், இந்த ஊர் பண்ணையார் மகன்,'' என்றான், இன்னொருவன்.
எல்லாரும் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர்.
'சரிப்பா... ஏதோ நல்லது நடந்தா சரி...' என்று, நடந்து வந்த களைப்பு தீர, உறங்க சென்றனர்.
''சரிங்கய்யா... நா எங்கப்பாகிட்ட பேசுகிறேன்,'' என்று சொல்லிய பண்ணையார் மகனுடன், மற்ற இளைஞர்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
அதேசமயம், வயதானவர்களால் வேலை செய்து பிழைக்க முடியும்போது, நம்மால் ஏன் முடியாது என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
அடுத்த நாள் காலை வேலுச்சாமியும் மற்றவர்களும் எழுந்து, இலைகளை சேகரித்து தைக்க ஆரம்பித்தனர். அப்போது, இவர்களைப் பார்க்க ஓடி வந்தான், பண்ணையார் மகன்.
''ஐயா, இந்தாங்க சாவி. எங்கப்பாகிட்ட சொல்லிட்டேன்,'' என்று வேலுச்சாமி கையில் கொடுத்தான்.
'தம்பி, என்ன சொல்றதுன்னு தெரியல, ரொம்ப நன்றிப்பா...' என்று அவன் கைபிடித்து எல்லாரும் ஒரு சேர நன்றி கூறினர்.
அந்த வீட்டிற்கு சென்றதும், மட மடவென்று வீட்டை சுத்தம் செய்து, இலைகளை தைக்க ஆரம்பித்தனர். வீட்டின் முன் பகுதியை கடையாக மாற்றி, இலை தட்டுகள் விற்க ஆரம்பித்தனர்.
உள்ளூர், வெளியூர்களிலிருந்து வந்து இலை கட்டுகளை வாங்க ஆரம்பித்தனர், மொத்த வியாபாரிகள்.
வியாபாரம் நன்றாக சென்று கொண்டிருந்த வேளை, ஒரு முடிவெடுத்தார், வேலுச்சாமி.
மறுநாள், காலை பொழுது விடிந்தது. எல்லாரையும் கூப்பிட்டார்.
''சபாபதி, இந்தாப்பா... இனி, இந்த தொழிலுக்கு நீங்க தான் பொறுப்பு,'' என்றார், வேலுச்சாமி.
இதை சற்றும் எதிர்பார்க்காத சபாபதியும், மற்றவர்களும் திகைத்து போயினர்.
''ஏம்ப்பா திடீர்னு இந்த முடிவு... நாங்க எதாவது தவறு பண்ணமோ,'' என்று கேட்டார், சபாபதி.
''அடடா... இல்லப்பா, நம்மள மாதிரி நாட்டில் இன்னும் நிறைய பேர் இருக்காங்க. திறமை இருந்தும், அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. நான் அவர்களை தேடி போகிறேன். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்ய போகிறேன். என்னை தடுக்காதீர்கள்,'' என்றபடி அங்கிருந்து வெளியேறினார்.
அவருக்கு அடைக்கலம் கொடுத்த அந்த ஆல மர திண்ணையில் அமர்ந்தார். அது அந்த ஆல மரத்துக்கும் தெரிந்ததோ என்னவோ, காற்றும் குதுாகலமாக வீசியது.
மறுபடியும் மேலிருந்து பறந்து வந்து அவர் தோள் மீது விழுந்தது, ஆல இலை ஒன்று. அதை கையில் எடுத்து பார்த்தார். அது ஓர் முதிர்ந்த பழுத்த இலை. அதில், அதே பொன்னுதாயி மிகவும் சந்தோஷமாக சிரித்தபடி, 'கலங்காதேய்யா நான் இருக்கிறேன்...' என்று சொன்னாள்.
கீதா இளங்கோ
வயது: 51,
கல்வித்தகுதி: பி.ஏ.,
சமூக சேவகி மற்றும் எழுத்தாளர்
கதைக் கரு உருவான விதம்: இது, என் கற்பனையில் உருவான கதை. ஒருவரின் முன்னேற்றத்துக்கு உழைப்பும், முயற்சியும் இருந்தால், வயது ஒரு தடையாக இருக்காது என்பதை உணர்த்தும் வகையில் புனையப்பட்டது!