முன்னாள் சென்னைவாசியான, ராகவேந்திரன், தற்போது, பெங்களூரில் இருக்கிறார்.
42 வயதாகும் இவருக்கு, 14 வயதில் செய்யப்பட்ட தவறான மருத்துவ சிகிச்சையால் நடக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளானார்.
இதுபற்றிய விரிவான தகவல், கடந்த, ஜூன் 14, 2020, வாரமலர் இதழ், பா.கே.ப., பகுதியில் வெளியானது, பலருக்கும் நினைவிருக்கலாம்.
இயல்பாக நடக்க முடியாமல் போனாலும், வாழ்க்கையில் பெரிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உறுதியுடன், முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று, இசைக் கச்சேரிகளை செய்து வருகிறார். மேலும், தன் இரு குருவிடமும் கூடுதல் பயிற்சி பெற, பெங்களூருக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
ராகவேந்திரனின் பாடும் திறமையை அறிந்த, மறைந்த பாடகர் எஸ்.பி.பி., இவருக்கு தரமான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததால், தற்போது, ஓரளவு சுயமாக நடக்க முடிகிறது.
கடந்த, 2016ல் நடந்த ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை, 'டிவி'யில் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் அணிவகுத்து வந்த நாடுகளையும், அவர்கள் தாங்கிப்பிடித்து வந்த கொடிகளையும் பார்த்து, 'உலகில் இத்தனை நாடுகள் இருக்கிறதா...' என்று வியந்துள்ளார். அந்த நாட்டு கொடிகளின் நிஜத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
தன் ஆர்வத்தை தெரிவித்து, இந்தியாவில் உள்ள வெளிநாடு துாதரகங்களுக்கு கடிதம் எழுதி, அவர்கள் நாட்டு கொடியை அனுப்பி வைக்க கோரினார்.
இப்படி ஆரம்பித்தவர், இப்போது, 137 நாடுகளின் கொடிகளை சேகரித்து விட்டார். மீதமுள்ள, 60 நாடுகளின் தேசிய கொடிகளை, 2022ம் ஆண்டு இறுதிக்குள் சேகரித்து விட முயற்சி செய்து வருகிறார்.
'சுதந்திர தினத்தின்போது, குழந்தைகள் கையில் வைத்து சந்தோஷப்படுமே, அது போல, தற்காலிக தயாரிப்பு கொடிகளைத்தான் சிலர் வைத்திருப்பர். ஆனால், நான் இரு நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும்போது மேஜையில் கம்பீரமாக வைத்திருக்கும் ஒரிஜினல் துணி கொடியையே வைத்திருக்கிறேன்.
'என்னுடைய சேகரிப்பை பார்த்து, சில நாட்டு துாதரக அதிகாரிகள், அவர்கள் நாட்டு கொடியை என் வீடு தேடி வந்து கொடுத்து கவுரவித்தனர்.
'முதலில் கொடி கொடுக்க மறுத்த நாடுகள் கூட, பின்னாளில் என் சேகரிப்பையும், ஆர்வத்தையும் பார்த்து, விருப்பத்துடன் அனுப்பி வைத்தன. இந்த கொடிகள் ஒவ்வொன்றும், அந்தந்த நாட்டின் கவுரவத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து, நானும் அதற்குரிய மரியாதையுடன் வைத்துள்ளேன்.
'இந்த முயற்சிக்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஊக்கமும், உற்சாகமும் தருவதுடன், மிகவும் உதவியாகவும் இருக்கின்றனர்...' என்றார்.
உலக சாதனையாளர் பட்டியலில் விரைவில் ராகவேந்திரன் பெயரும் இடம்பெற வாழ்த்துவோம்!
அவரது மின்னஞ்சல் முகவரி: raghavendran24@rediffmail.com
எல். முருகராஜ்