அன்புள்ள அம்மாவுக்கு -
என் வயது: 33. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. மனைவி வயது: 28; தாவரவியல் பட்டதாரி. எங்களுக்கு மூன்று வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் மகளும் உள்ளனர். நான், தனியார் கல்லுாரியில் கணக்காளராக பணிபுரிகிறேன்.
உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் என, பெரும்கூட்டம் உள்ளனர். மனைவி வழியில் உறவினர் கூட்டம் குறைவு. என் தரப்பு உறவினர்கள் அவ்வப்போது, எங்களது வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருப்பர்.
என் மனைவி சமையலில் கெட்டிக்காரி. அசைவம் சமைப்பதில் எக்ஸ்பர்ட். ஆனால், வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் சுணக்கம் காட்டுவாள். சாப்பாடு தட்டில் பழைய சோற்றை சுட வைத்து போட்டு, அதன்மேல், குளிர்சாதன பெட்டியில், 10 நாட்களுக்கு முன் வைத்த குழம்புகளை ஊற்றுவாள்.
இதை துாக்கி அதில், அதை துாக்கி இதில் போட்டு, பழையதையும், புதியதையும் கலப்பாள். ஆனால், பரிமாறும்போது மட்டும், கல்யாண விருந்து பரிமாறுவது போல, 'பில்ட் - அப்' கொடுப்பாள்.
'உன் பொண்டாட்டி தொல்பொருள் ஆராய்ச்சியாளராக பிறந்திருக்க வேண்டியவள். அரத பழசு அயிட்டங்களை பரிமாறி, எங்க வயித்தை கெடுக்கிறா. உன் வீட்டுக்கு வந்துட்டு போனாலே எங்களுக்கு வாந்தி பேதி கேரன்டி. என் வீட்டுக்கு விருந்தாளியா வராதீங்கன்னு உன் பொண்டாட்டி சொல்லாம சொல்றா...' என்பர், என் உறவுக்காரர்கள்.
மனைவியிடம் கேட்டால், 'நீங்க, மாதம் லட்ச ரூபாயா சம்பாதிக்கிறீங்க... விருந்தாளிகளுக்கு விருந்து சமைச்சு போட்டே, கடனாளி ஆகிடுவீங்க. நான், கடன்காரியாக விரும்பல... நான் பரிமாறுகிற சாப்பாடு பிடிக்கலேன்னா, அவங்க நம் வீட்டுக்கு வராம இருக்கட்டும். வக்கணையா சாப்பிடணும்ன்னு நாக்கை தொங்க போட்டுட்டு அலையாம, குடுக்கறதை சாப்பிடுங்க...' என்பாள்.
அவள் பக்க விருந்தாளி வந்தால், ஓரளவு உபசரிப்பாள்.
என் மனைவியை எப்படி திருத்துவது, அம்மா.
—இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு -
தமிழகத்தின், 90 சதவீத குடும்ப பெண்கள், குளிர்சாதன பெட்டிக்கு கொத்தடிமைகளாக இருக்கின்றனர்.
குளிர்சாதன பெட்டியில், 'லிஸ்டெரியா, ஈகோலை' போன்ற பாக்டீரியாக்கள், பல்கி பெருகுகின்றன. 'லிஸ்டெரியோசிஸ்' என்ற நோய், கர்ப்பிணிகளை தாக்குகிறது. அதனால் கருச்சிதைவு, பிரசவத்தில் குழந்தை மரணங்கள் சம்பவிக்கின்றன. இந்த நோய் முதியவர்களையும் பாதிக்கிறது.
உன் மனைவி விஷயத்தை பார்ப்போம்...
* மாதம் ஒருமுறை, உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியை முழுமையாக சுத்தம் செய். குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவு பொருட்களை, இரண்டு மணி நேரத்துக்குள் சாப்பிட பழகுங்கள். குளிர்சாதன பெட்டிக்குள், கார்பன் மோனாக்ஸைடு கசிகிறதா என, அடிக்கடி சோதித்து பார்
* குளிர்சாதன பெட்டியை, உன் மனைவி முறையாக பயன்படுத்தா விட்டால், அதை விற்று விடு. குழம்போ, கூட்டோ, பொரியலோ மறுநாள் மிஞ்சாமல் சமைக்க சொல். அன்றாடம் காலை வேலைக்கு போகும் முன், 'பிரஷ்' ஆக காய்கறிகளை வாங்கி போடு. மட்டனோ, சிக்கனோ, மீனோ, கால் கிலோவுக்கு மேல் வாங்காதே. பழைய உணவை சாப்பிடுவதால் வரும் மருத்துவ செலவு, பழைய உணவு சேமிப்பு மதிப்பை விட, பல மடங்கு அதிகம் என்பதை, மனைவிக்கு உணர்த்து
* விருந்தோம்பல் என்பது, தமிழர் பண்பாடு. மனைவி அல்லது கணவர் தரப்பு உறவினர்களோ, நண்பர்களோ வீட்டுக்கு வந்தால், அவர்களின் வயிறு குளிர உபசரிக்க வேண்டும்
* சிறப்பாக விருந்தோம்பல் செய்யும் உறவினர் வீடுகளுக்கு மனைவியை அழைத்துப்போய் காட்டு
* விருந்தினர் செலவு என, தனி தொகையை மாத பட்ஜெட்டில் ஒதுக்கு. அது, மாதம், 1,000 ரூபாயை தாண்டாமல் இருக்கட்டும்
* உன் தாய் அல்லது மாமியாரை, விருந்தோம்பலின் முக்கியதுவத்தை மனைவிக்கு சொல்லிக் கொடுக்க சொல். விருந்தோம்பலில் கெட்ட பெயர் ஏற்பட்டால், அது பல தலைமுறைகளுக்கு நீடிக்கும் என, எச்சரிக்கை செய்
* மனைவியுடன் மனம் விட்டு பேசு. புகுந்த மற்றும் பிறந்த வீட்டு உறவினர்களை சமமாக நடத்த, மனைவியை மனதால் பழக்கு.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.