முன்கதை சுருக்கம்: பெற்றோரை இழந்தவன், விக்ரம். நண்பனும், பார்ட்னருமான ராஜேஷிடம், தான் நடத்தி வந்த, 'மெடிக்கல் ஷாப், மெஸ், டிபார்ட்மென்ட் ஸ்டோர்' பொறுப்பை ஒப்படைத்து, அம்பிகா என்ற பெண்ணை தேடி, மும்பை சென்றான். இந்நிலையில், மெட்ரோ ரயில் கூட்டத்தில், அம்பிகாவின் கை பட்டு, விக்ரமின் கண்ணாடி உடைந்து பிளாட்பாரத்தில் விழ, அடுத்த நாள், மன்னிப்பு கேட்க அவனை தேடி வந்தாள்-
பான்ட்ரா குர்லா காம்ப்ளக்ஸ், மும்பையின் வணிக மையம்...
கண்ணாடிகளாலான அடுக்கு மாடி கட்டடங்கள். அதில் ஒரு கட்டடத்தின், 10வது மாடியில் தான் அம்பிகாவின் அலுவலகம் இருந்தது.
சக ஊழியர்கள் மற்றும் வெளியிலிருந்து வந்த வாடிக்கையாளர்கள் அம்பிகாவை சந்தித்தபடி இருந்தனர். மதிய உணவிற்கு கூட போக முடியாத அளவிற்கு, 'பிசி'ஆக இருந்தாள்.
மணி, 4:00 ஆன போது, அம்பிகாவின் அறை கதவை தட்டி, ''காபி?'' என்றாள், நர்மதா.
ஆள்காட்டி விரலை மட்டும், 'ஒன் மினிட்' என்று ஜாடையில் காட்டி விட்டு, உடனடியாக அனுப்ப வேண்டிய இ - மெயில் ஒன்றை அனுப்பி விட்டு, கைகளை சொடக்கு போட்டு, 'லேப்டாப்'பை மூடி, நர்மதாவுடன் கிளம்பினாள்.
லேசான மழை பெய்திருந்த அடையாளம் காணப்பட்டது. ஆபீசுக்கு வெளியே சமோசா, வடா பாவ் கடையில் ஒரே கூட்டம்.
''இங்கே?''
''வேண்டாம். எங்கேயாவது உட்கார்ந்து சாப்பிடணும்.''
சாலையை கடந்து இருவரும், 'பிட்சா எக்ஸ்பிரஸ்'-குள் நுழைந்தனர். பணம் செலுத்தி விட்டு, 'டெலிவரி க்யூ'வில் நின்றாள், நர்மதா.
ஒரு மூலையில் சென்று உட்கார்ந்தாள், அம்பிகா. 'பிசி'யான மும்பை - பல கோடி கனவுகளை நனவாக்கும் நகரம், கண்ணாடி வழியே தெரிந்தது.
ஒரு தட்டு முழுவதும், 'கிங் சைஸ் பிட்சா'வுடன் வந்தாள், நர்மதா.
''பாவம் நர்மதா அவன்.''
''யாரு?''
''அன்னிக்கு ரயில்ல ஏறும் போது, என் கை பட்டு, ஒருத்தன் கண்ணாடி உடைஞ்சு போச்சுன்னு சொன்னேனே, அவன். எனக்கு அதே ஞாபகமா இருக்கு.''
''இரண்டு வாரத்துக்கு முன் நடந்ததையா இன்னும் நினைச்சிட்டு இருக்க? இதுக்கு நீ அப்பவே ஸாரி சொல்லியிருக்கலாம்.''
''அதுக்குள்ள தானியங்கி கதவு மூடியாச்சு.''
''விடு... கூட்டத்துல இதெல்லாம் சகஜம்.''
''இல்லை, நர்மதா. அவன் திட்டியிருந்தா கூட பரவாயில்ல. ஒண்ணுமே சொல்லல. என்ன நிமிர்ந்து கூட பாக்கல.''
''அது சரி. நீ ஒண்ணு பண்ணு. அடுத்த தடவை அவன பாத்தா, முதல்ல ஸாரி சொல்லு. அப்பறம் உடைஞ்ச கண்ணாடிக்கு பணம் குடுத்திடு, ஓ.கே., தானே?''
''போடி. இரண்டு கோடி பேர் இருக்கற மும்பைல, அவன் எங்க, என் கண்ணுல படப் போறான்?'' என்று, 'பிட்சா'வை கடித்துக் கொண்டே, வெளியே பார்த்தவளுக்கு ஆச்சரியம்.
எதிர் பிளாட்பாரத்தில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான், விக்ரம்.
''நர்மதா அங்கே பார். எதிர் பிளாட்பாரத்தில், நீல ஷர்ட் - கருப்பு பேன்ட், ஸ்டைலா அவன் தான்... அவன் தான்.''
''பார்த்தா பணக்கார பையன் மாதிரி இருக்கான். நீ, 'பிட்சா' சாப்பிடு. அவன் வேற கண்ணாடி வாங்கிப்பான்.''
''சும்மா இரு. நான் போய் ஸாரி சொல்லிட்டு வரேன்.''
''இரு அம்பி, நானும் வரேன்,'' என்று, மீதி, 'பிட்சா'வை வீணடிக்க விரும்பாமல் வாயில் அடைத்து, அம்பிகாவுடன் ஓடினாள், நர்மதா.
'ட்ராபிக்'கில், சாலையை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். சற்று நேரம் கழித்து எதிர் பக்கம் சென்றால், அங்கு விக்ரம் இல்லை.
''சே! அதுக்குள்ள போயிட்டான்,'' ஏமாற்றத்துடன் சலித்துக் கொண்டாள், அம்பிகா.
''அப்புறம் பாத்துக்கலாம் வா,'' என, 'பிட்சா'வை கடித்துக் கொண்டே கூறினாள், நர்மதா.
''இருடி,'' என, இரண்டு பக்கமும் தேடினாள், அம்பிகா.
அதே வரிசையில், 'குருதாஸ் ஆப்டிகல்சில்' இருந்து இறங்கி போனான், விக்ரம்.
''நர்மதா அங்கே பார்.''
''பாத்தேன். அவன் போற இடத்துக்கெல்லாம் என்னால் ஓட முடியாது. நீ போயிட்டு வா,'' என்று கிளம்பினாள், நர்மதா.
பலர் மீது வேக வேகமாக இடித்து ஓடும்போது, விக்ரம் ஒரு ஆட்டோவில் ஏறுவதையும், ஆட்டோ கிளம்புவதையும் பார்த்தாள், அம்பிகா.
''சார்! ஹலோ, எக்ஸ்க்யுஸ் மீ,'' என்று கத்தியும், அவன் காதில் விழவில்லை.
'வேறு கண்ணாடிக்கு, 'ஆர்டர்' குடுக்கத்தான் அவன், அந்த கண்ணாடி கடைக்கு போயிருக்க வேண்டும்...' என, நினைத்துக் கொண்டாள்.
குருதாஸ் ஆப்டிகல்-
கடையில் நடுத்தர வயது ஆணும், ஒரு பெண்ணும் இருந்தனர். அந்த ஆண், கோபமாக போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த பெண்ணிடம், ''இப்போ ஒருத்தர் வந்தாரே... நீல ஷர்ட் - கருப்பு பேன்ட்...'' என்றாள், அம்பிகா.
''ஆமா மேடம்!''
''அவர், புது கண்ணாடி வாங்கிட்டு போறாரா?''
''இல்ல, 'ஆர்டர்' குடுத்திருக்கார். நாளைக்கு காலைல வந்து வாங்கிக்கறேன்னு சொல்லிருக்கார், மேடம்!''
அப்பாடா என்றிருந்தது அம்பிகாவிற்கு...
''அவன் என் கஸின்!''
சின்ன பொய் சொன்னாள், அம்பிகா.
''காலைல நான் வந்து வாங்கிக்கறேன். எவ்வளவு பணம் தரணும்?''
''இல்லை மேடம். அப்படி தர முடியாது.''
''ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க. இந்த கண்ணாடியை நான் அவனுக்கு, 'கிப்ட்' பண்ணலாம்ன்னு இருக்கேன். அவன் வேண்டாம்ன்னு சொல்லுவான். அவனுக்கு தெரியாம, 'சர்ப்ரைஸ்' பண்ண பாக்குறேன். ப்ளீஸ்...''
அந்த பெண் தயங்கினாள்.
''இங்க பாரு மா. பேஸ் - 2ல, பி.கே.சி., பில்டிங்ல தான், என் ஆபிஸ். இது என்னோட கார்டு,'' என்றாள், அம்பிகா.
கடையில் இருந்த ஆள் இன்னும் போனில் பேசிக் கொண்டிருக்க, அந்த பெண் அரை மனதுடன் சரியென்றாள்.
''எவ்வளவு?''
''அதுவா, 925 ரூபாய் மேடம்!''
''கூகுள் பே?''
''இருக்கு மேடம்,'' என, 'ஸ்கேனரை' காட்டினாள்...
''எப்போ கிடைக்கும்?''
''காலைல, 10:00 மணிக்கு...''
''அவன் எப்போ வரேன்னு சொன்னான்.''
''ஆங்... 11:00 மணிக்கு மேடம்!''
''குட்... நான், 10:00 மணிக்கு வரேன்.''
''உன் பேர் என்ன?''
''ஷோபனா.''
சிரித்தபடி அவள் கன்னத்தை கிள்ளி விட்டு கிளம்பினாள், அம்பிகா.
பினாகி ஹோம் ஸ்டே, பான்ட்ராவில் சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் தங்கியிருந்தான், விக்ரம். அம்பிகாவுடன் பேசும் சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என யோசித்தபடி, டீ குடித்துக் கொண்டிருந்தான்.
மொபைல் ஒலித்தது; ராஜேஷ் லைனில் வந்தான்.
''நானே பேசணும்னு இருந்தேன், ராஜேஷ்.''
''சொல்லுடா! அம்பிகாவ பாத்தேன்னு சொன்ன. அப்புறம் என்ன ஆச்சு?''
''அவ ஆபிஸ் ஏரியால தான் சுத்தறேன். சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துட்டு இருக்கேன். ஏன்டா அதே ஆபிஸ் தானே அவ?''
''அதே தான். ஓகே. கூடிய சீக்கிரம் நல்ல செய்தி சொல்றேன்.''
சிறிது நேரம் பேசிவிட்டு, போனை, 'கட்' செய்தான்.
மறுபடியும் பெட்டியில் இருந்த அம்பிகா படத்தை எடுத்து, 'என் பிடிக்குள் இவள் வர வேண்டுமே... எப்படி?' என யோசித்தபடி, சிகரெட்டை பற்ற வைத்தான்.
வர்சோவாவில், பசிபிக் ரெசிடென்சி -
மேல் தட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு. அதில், இரண்டு படுக்கையறை வீட்டில் தான் வசிக்கிறாள், அம்பிகா. அவளுடன் பஞ்சாபி பெண் ரேஷ்மா தங்கியிருந்தாள்.
அம்பிகா சீக்கிரமாக குளித்து முடித்து தயாரானதும், ரேஷ்மாவுக்கு ஆச்சரியம்.
''அம்பிகா என்ன விசேஷம் இன்னிக்கு? சீக்கிரம் கிளம்பிட்ட?''
''நத்திங். ஆபீஸ்ல வேலை இருக்கு,'' என, மொபைலை, 'சார்ஜரில்' இருந்து எடுத்தாள்.
''இவ்வளவு சீக்கிரம் நீ கிளம்பி, நான் பார்த்ததில்லையே. நான் ஆபீசுக்கு கிளம்பின அப்புறம் தானே நீயே கிளம்புவ. என்ன விஷயம்... 'லவ்'வா?'' என்று கிண்டலாக கேட்டாள்.
''சுப் ரேஷ்மா! 'லவ்'வும் இல்லை, ஒண்ணும் இல்லை. எனக்கு வேலை இருக்கு,'' என்றாள்.
''உன்ன மாதிரி நிறைய பேரை பாத்திருக்கேன். அமைதியா இருப்பாங்க. திடீர்னு, 'லவ்' வரும். அப்படியே மாறிடுவாங்க. நான் கண்டிப்பா சொல்றேன். நீ, யாரையோ காதலிக்கிற?'' என, சிரித்தபடி கூறினான், ரேஷ்மா.
''ரேஷ்மா, நீ கிளம்பி போ ஆபிசுக்கு,'' என்றாள் அம்பிகா.
''ஓகே. ஆல் தி பெஸ்ட்,'' என்ற ரேஷ்மா, காதருகே வந்து, ''ஏதாவது, 'கிப்ட்' வாங்கிட்டு போ,'' என்று சொல்லி, அம்பிகாவின் தோளில் தட்டிக்கொடுத்து விட்டு கிளம்பினாள்.
கண்ணாடி முன் தலைவாரிக் கொண்டிருந்த, அம்பிகா யோசித்தாள்.
'தற்செயலாக ஒருத்தன் மீது கை இடித்ததில், அவன் கண்ணாடி உடைந்தது. நான் ஏன் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? கூட்டத்தில் எத்தனையோ பேரை இடிக்கிறோம். அதைப்பற்றி நினைப்பதில்லையே. ஆனால், இவனைப் பற்றி ஏன் நினைக்கிறேன்?
'யார் இவன்? அடிக்கடி அவன் ஞாபகம் வருகிறதே! தப்பு... புதுக்கண்ணாடியை அவனிடம் கொடுத்து விட்டு, ஸாரி சொல்லிட்டு வர போகிறேன். அவ்வளவு தானே?' என்று எழுந்தாள்.
'சரி... நான் எதுக்கு அவனுக்கு கண்ணாடி வாங்கி தரணும்? அவன் கேட்கவே இல்லையே! ஒரு வேளை ரேஷ்மா சொல்ற மாதிரி... இல்லை அதெல்லாம் ஒண்ணும் இல்லை...' குழப்பத்துடன் கதவை பூட்டி கிளம்பினாள்.
— தொடரும்.
கோபு பாபு